Tuesday, December 27, 2022

 புத்தாண்டு ஞாயிறுத் திருப்பலி 01-01-2023

 புத்தாண்டு ஞாயிறுத் திருப்பலி

அன்னை மரியாள் இறைவனின் தாய்

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1. எண்ணிக்கை6:22-27
2. கலாத்தியர் 4:4-7
3. லூக்கா 2:16-21

 திருப்பலி முன்னுரை

அன்பு இறைமக்களே!
புத்துணர்வும் புத்தாடை மகிழ்ச்சியும் உள்ளமெல்லாம் பூரிப்பில் புலர்ந்திடும் புதிய ஆண்டின் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள அன்பர்களுக்கு மூவொரு பெருவிழாகளைக் கொண்ட இன்று இத்திருஅவை அன்புடன் வரவேற்கின்றது.
பாலன் பிறந்து எட்டாம் நாள் இயேசு என்று பெயரிட்ட நன்னாள், அன்னை மரியாள் இறைவனின் தாய் என்ற சிறப்பான நன்னாள், புத்தாண்டின் முதல் நாளென மூன்று பெருவிழாகள் இறைவனின் நன்மைத்தனத்தையும் அவருக்குள்ள பேரிரக்கத்தையும் நமக்கு மீண்டும் எடுத்துரைக்கிறது.
ஒரு புதிய ஆண்டையை நமக்காகக் கொடுத்த இறைவன் அதைச் சிறப்பிக்க இருபெரும் கொடைகளையும் தந்துள்ளார். எல்லாபெயர்களுக்கும் மேலான வல்லமையுள்ள இயேசுவின் திருநாமம். மற்றொன்றுக் கரிசனை அன்புடன் என்றும் நம்மை அரவணைத்துக்கொள்ளும் தாய் மரியாளின் உடனிருப்பு. இவ்விரு மாபெரும் சக்திகள் போதாத இந்த உலகை எதிர்கொள்ள…
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!
இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்:
நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
இன்று முதல் வாசகத்திலிருந்து தொடங்கும் இரையாசீராக வரும் வார்த்தைகளின் மூலம் உலகின் ஒளியாம் இயேசுவின் திருஒளியில் ஒளிர்ந்த இடையர்களின் உள்ளத்தைப் போல நம் உள்ளங்களும் ஒளிர்வதாக! இறைஇயேசு தன் தாயாம் அன்னை மரியாளை நமக்குத் தாயாகத் தந்ததின் மூலம் எல்லா இறையாசீர்கள் ஒட்டுமொத்தமாகத் தரும் அமைதி நம் அனைவரின் உள்ளங்களில் நிறைவாய்ப் பொழிவதாக!
ஆண்டின் முதல் நாளில் அன்னை மரியாவைப் போல இயேசுவை அனைவருக்கும் வெளிப்படுத்தி இந்தப் புதிய ஆண்டில் நிறை அமைதியைப் பெறுக்கொள்ளத் திருப்பலிக் கொண்டாடங்களில் முழு உள்ளத்தோடு செபிப்போமாக! வாரீர்!

 வாசக முன்னுரை

 முதல் வாசகம்

 புலந்திருக்கும் புதிய ஆண்டின் முதல் வாசகம் எண்ணிக்கை நூலிலிருந்து வரும் பழைய ஏற்பாட்டுக் குருமரபினரின் வாழ்த்துடன் தொடங்க நம் திருச்சபை அழைக்கின்றது. இவ்வார்த்தைகளில் மூன்று வகை ஆசீர்களை உள்ளன. ஒன்று கடவுளை ஆண்டவர் என்று திரும்பத் திரும்ப அழைப்பதால் வரும் ஆசீர்!  இரண்டு அவரது முகத்தின் திருவுருவின் காட்சி ஓர் ஆசீர்! மூன்று நிறைஒளி ஆசீர்!  அருளும், அத்திருமுகத்தில் ஒளிரும் சமாதானமும் வெளிப்படும் அவரது திருப்பார்வை ஒளிரும் இடத்தில் அவரது திருமுகத்திலிருந்து வெளியாகும் ஒளியில் நிலைத்திருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இனிதே கேட்டு இறையாசீர் பெறுவாம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
திருப்பாடல் 67: 1-2, 4, 5,7
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். பல்லவி

 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி

 இரண்டாம் வாசகம்

கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வரும் இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கடவுளின் பேரிரக்கத்தைப் புடமிட்டுக் காட்டுகின்றார். காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். தன் ஏற்றுக்கொண்ட மக்களின் மீட்புக்காகத் தன் ஒரே மகனை அனுப்புகின்றார். இவ்வாறு அன்பு செய்யும் கடவுளுக்கு நாம் திரும்பச் செய்யும் நன்றிக் கடன் என்ன? என்பதைச் சிந்திக்கத் தூண்டும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. மாட்சியையும் மேன்மையையும் எங்களுக்கு முடியாகச் சூட்டியுள்ள எம்தந்தையே இறைவா! புதிய ஆண்டில் நுழையும் திருஅவைக்கு நிறைவாக அன்பு, அமைதி, ஆசீர்களைப் பொழிந்து எம்திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் உமது அமைதியின் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், அதனைக் காணும் அனைவரும் கிறிஸ்துவின் நித்திய ஒளியை இவ்வுலகிற்குச் சாட்சியாகப் பகர்வதற்கு வேண்டிய அருளைப் பொழியுமாறு இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

2 உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகிய எம் இறைவா! இவ்வாண்டு உலகில் நிலவும் வன்முறைகள், தீவிரவாதம், மொழிபோர், இனப்படுகொலைகள், ஆயுதப்போர்கள் இவைகள் மறைந்திடவும், மனித வாழ்வு தழைக்கத் தன்னிலை உணர்ந்து வலிமை மிகுந்த நாடுகள், ஏழைநாடுகளிடம் அகிம்சை வழியில் நீதியோடும், நேர்மையோடும் நடந்து கொள்ளவும், உதவிக்கரம் நீட்டிட தேவையான மாற்றங்களை ஏற்படவேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

3.எம்மைத் தேடிவந்த அன்பே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இப்புதிய ஆண்டில் உமது திருமுகத்தில் ஒளி என்றும் இருக்கச் செய்தருளும். எங்களின் வாழ்வாதரங்கள் சிறப்பாக அமையவும், எம் இல்லங்களில் நடைபெற வேண்டிய நல்ல காரியங்கள் எந்தக் குறைகளுமின்றி நடைபெறவும், அதன் வழியாகக் குடும்ப உறவுகள் வலுவடைந்து, அன்பும், மகிழ்ச்சியும், அமைதியும் நிறைவாய், நிலையாகப் பெற்று உம் சாட்சிகளாக இச்சமுகத்தில் உலாவர உம் அருட்கொடைகளைப் பொழிய வேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

4. எம்பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா! உம் நீதியின் ஒளி ஏழை எளியறோர், வறுமையில் வாடுவோர், தனிமையில் தவிப்போர், ஆதரவற்றோர், நாடு இழந்தோர், புலம்பெயர்ந்தோர் ஆகிய அனைவருக்கும், உம் ஒளியின் நிழலில் இளைப்பாறுதல் அடைந்திட, உம் அன்பின் ஒளியில், அகில உலகம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைஇயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

5. அற்புதங்கள் நிறைந்த இயற்கையை எமக்காய் படைத்த எம் இறைவா, உம் படைப்பின் மகிமையை உணராமல் புதிய முயற்சி, அறிவியல் வளர்ச்சிகள், சமூக முன்னேற்றம் என்ற போர்வையில் இயற்கைக்கு எதிராக நாங்கள் அறிந்தும், அறியாமல் செய்த அனைத்துத் தவறுகளையும் மன்னித்துப் படைப்பின் மேன்மை உணர்ந்து, இயற்கையோடு நாங்கள் ஒன்றித்து வாழத் தேவையான ஞானத்தைப் பொழிந்து நல்வழி நடந்திட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

6. நெருக்கடியான வேளையில் நீர் எமக்கு அரணும் அடைக்கலமுமாயிருந்த எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி. எங்களால் ஏற்பட்ட அனைத்துத் தவறுகளையும் மன்னித்து, எங்களுக்கு மீண்டும் ஒரு மறுவாழ்வுப் பெற்றிடப் புதிய ஆண்டை ஆசீராகக் கொடுத்து, அனைத்து மானுடம் அமைதி, மனமகிழ்வு, அன்பின் அடையாளமாகவும் எல்லோரும் எல்லாமும் பெற்றுச் சமத்துவம் தழைத்தோங்கிட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...


www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, December 19, 2022

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா 25-12-2022

 கிறிஸ்து பிறப்புப் பெருவிழா-
இரவில் திருப்பலி



இன்றைய நாளில் நடைபெறும் மூன்று திருப்பலிகளுக்கான வாசகக்குறிப்புகள், முன்னுரைகள் மற்றும் மன்றாட்டுகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கவனமாக தேவையான திருப்பலிக்கானவற்றைத் தேர்வு செய்துக்கொள்ளவும்.

இரவுத் திருப்பலி வாசகங்கள்

I. எசாயா 9:2-7
II. தீத்து 2:11-14
III. லூக்கா 2:1-14

திருப்பலி முன்னுரை:

நமக்காக ஒரு பாலன் பிறந்துள்ளார்,
இருள் சூழ்ந்த பனிப் பெய்யும் இரவு உள்ளத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் உவகையும் பொங்கிடும் இவ்வேளையில் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
திருவருகைக்காலத்தில் நான்கு வாரங்களாக இயேசுவின் பிறப்பு விழாவிற்கு நம்மையே நாம் தயாரித்து வந்துள்ள இந்நேரத்தில் இப்பிறப்பு நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கும் கருத்து அன்பின் பகிர்தலே! எளிமையான இடத்தில் மீட்பராம் கிறிஸ்து ஏன் பிறந்தார்? இயேசு கிறிஸ்து, தான் மீட்க வந்த மக்களுடன் நிரந்தரமாகத் தங்க வந்தக் காரணத்தினால் அவர் விடுதியில் பிறக்கவில்லை, தொழுவத்தில் பிறந்தார். தீவனத்தொட்டி என்பது கால்நடைகள் தீனிப் பெற இருக்கும் சிறு தொட்டி. ஆனால் அஃது தரும் சிந்தனையாவது, இயேசுகிறிஸ்து உலகின் உணவாக வந்தார் என்றும், உலக மக்கள் அனைவரும் உணவுப் பெற, குறிப்பாக ஆன்மீக ஊட்டம் பெற உலகில் பிறந்தவர் தீனத்தொட்டியில் கிடத்தப்பட்டார் போன்ற பல சீரிய ஆழ்ந்தக் கருத்துகளை லூக்கா இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார். ஆகத் தன்னையே இவ்வுலகமக்களுக்குப் பகிர்ந்தளித்த இறைமகனுக்கு நம் பகிர்வு என்ன?
துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருக்கும் குழந்தையின் அரசத்துவத் தன்மையையும், உலகின் உணவாக விளங்கும் மீட்பர் தன்மையையும் உணர்ந்து இன்று நமக்கு அடுத்திருப்பவர்களுடன் அன்பைப் பகிர்ந்து அனைவருடன் நல்லுறவை வளர்த்து இறைசாட்சியாக வாழ்வதுதான் பாலன் இயேசுவுக்கு நமது நன்றியாக அமையும். இன்றைய கொண்டாடங்களில் இயேசுவை மையமாக இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு நம்பிக்கை, அன்பு, அமைதி, மகிழ்ச்சி இவற்றால் இயேசுவின் வருகையில் நிறைவாழ்வடைய இத்திருப்பலியில் கலந்திடுவோம்.
நமக்கு ஒரு பாலன் பிறந்துள்ளார். வாரும் ஆராதிப்போம்!

வாசக முன்னுரை-

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் காண இறைவன் தரும் எல்லா நலன்களையும் எடுத்துரைக்கின்றார். பேரொளியைக் காணச் செய்து மகிழ்ச்சியுறச் செய்தார். அவர்களின் சுமைகளை நீக்கினார். அவர்களை ஆட்சி செய்ய ”வியத்தகு ஆலோசகர், அமைதியின் அரசரைக் கொடுத்துத் தன் மக்களுக்கு நிலையான, நீதியோடும். நேர்மையோடும் கூடிய ஆட்சியை உறுதிப்படுத்தினார் என்று மகிழ்ந்து எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2a. 2b-3. 11-12. 13 (பல்லவி: லூக் 2: 11)
பல்லவி: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். - பல்லவி
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். - பல்லவி
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். - பல்லவி
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்மைத் தேடிவந்த இயேசுவின் அருளால் நாம் இவ்வுலக வாழ்வின் நாட்டங்களிலிருந்து விடுபடவும், எல்லா நெறிகேடுகளிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்தி நம் அனைவரையும் தமக்குறியவராய் மாற்றத் தம்மையே ஒப்படைத்தத் தியாகத்தை வியந்து கூறும் திருத்தூதர் பவுலடியாரின்  வார்த்தைகளைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்திருக்கிறார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.

1. எங்கள் வாழ்வின் மீட்பராக இயேசு கிறிஸ்து கொடுத்த எம் இறைவா! விண்ணகம், மண்ணகத்தை நோக்கி அடியெடுத்து வைத்த 2023ஆம் ஆண்டில் உலகமாந்தர்கள் அனைவருக்கும் நலமும், அமைதியும், மகிழ்ச்சியையும் அளித்து ஒரே மந்தையாய் உம் திருஅவையின் வழிநடத்தும் அனைத்துத் தலைவர்களுக்கும் எமது அருட்பொழிவை நிறைவாய் பொழிந்துப் பாதுகாத்து வழி நடத்திச் செல்லத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.

2. ஏழ்மையில் இனிமைக் காணும் நாயகனே எம் இறைவா! இவ்வருடத்தின் இறுதிநாள்களில் இருக்கும் எங்களைக் கடும் வெயில், வறட்சி, புயல், பெரும்மழை போன்ற பல்வேறு இயற்கைசீற்றங்கள் அனைத்திலிருந்து எங்கள் அனைவரையும் காத்து, பராமரித்து, உம் அன்பில் நிலைத்து நிற்க, உம் பணியைத் தொடர்ந்து ஆற்றிடத் தேவையான அருளைப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. குணப்படுத்தும் வள்ளலே எம் இறைவர்! இன்று உருவாகும் அநேக புதிய நோய்கள், அந்த நோய்களின் நிமித்தம் பாதிக்கப்பட்ட எம்முதியோர்கள், சிறுவர் சிறுமிகள், அநாதைகள், கைவிடப்பட்டவர்கள் இவர்கள் அனைவரும், உம் அன்பின் கரம் கொண்டு ஆசீர்வதித்துப் பாதுகாத்து வரும் புதிய ஆண்டில் உடல், உள்ள, ஆன்மீக நலம் பெற்று உம் சாட்சிகளாய் வாழ வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. விடுதலையும் வாழ்வுக் கொடுக்க இறங்கி வந்த எம் இறைவா இன்று இவ்வுலகில் உம் பிறப்பிற்காகவும், புதிய ஆண்டில் நல்வரவிற்காகவும் காத்திருக்கும் அனைத்து மாந்தருக்கும் பழமையைக் களைந்துப் புதிய சிந்தனைகள் நல்லெண்ணங்கள், ஒருவர் மற்றவருக்கு உதவக்கூடிய பிறரன்புச் சிந்தனைகளைப் பொழிந்து நல்லுலகம் காணவும், உமது பிறப்பின் வழியாக ஏழை எளியவர்கள் வாழ்வு வளம் பெறத் தேவையாக அருள் வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5.திருக்குடும்ப நாயகனே என் இறைவா! இன்றைய உலகம் பல்வேறு அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்நாட்களில் குடும்பங்களில் ஏற்படும் உறவின் விரிசல்களிலிருந்து விடுபட்டு, மனிதர்கள், மனிதர்களோடு பேசக்கூடிய நிலைமாறிக் கைப்பேசி, தொலைதொடர்புச் சாதனங்கள் இவை தான் இன்று முக்கியமானவை என்ற சிந்தனைகளோடு நில்லாமல் இவற்றைக் கடந்து, இவையெல்லாம் நம்வாழ்வின் ஓர் அங்கம் தான் என்ற உண்மை நிலையை உய்துணர்ந்து வாழ உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மூன்று திருப்பலிகளுக்கும் பொதுவானது.

விடியற்காலத் திருப்பலி

இன்றைய வாசகங்கள்

I. எசாயா 62:11-12
II. தீத்து 3:4-7
III. லூக்கா 2:15-20

திருப்பலி முன்னுரை:

விடியற்காலையில் பனிகொட்டும் இவ்வேளையில் (வாடைக்காற்று வீசும் இளம்காலை பொழுதில்) இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!
இன்று நமக்கோர் பாலன் பிறந்துள்ளார். கடவுளின் இரக்கப்பெருக்கின் கொடையாக நமக்கு மீட்பு என்றும் வெற்றி பரிசுக் கிடைத்துள்ளது. மனிதர்களின் மீட்புக்காக, நலனுக்காக, தன்னையே வழங்கவந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், நம்மையே அடுத்தவருக்கு வழங்கும் வழிகளை நாம் இயேசுவே கற்றுத்தந்துள்ளார். அவரின் செயல்களின் என்றும் மிஞ்சி நிற்பது கடவுளின் பேரிரக்கமும், நன்மைத்தனமும், மனிதநேயமும் ஆகும். ஆம் இந்நாள்களில் மனிதநேயத்தின் மற்றோரு பரிமாணமான அன்பின் பகிர்வை அடுத்திருக்கும் வறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் உறவின் வாழ்த்துகள் மூலமும், உதவிகள் மூலமும் வெளிப்படுத்துவோம். உண்மையில் இன்று நம் உள்ளங்களில் வந்து பாலன் இயேசு பிறப்பதற்கு இந்நற்செயல்கள் வழிவகுக்கும்.!
இறைமகனின் அன்பின் பகிர்வாம் இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இடையர்கள் போல் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துப் பாடி உளமார கலந்து கொண்டு இறைமகன் பாலன் இயேசுவின் அருளைப் பெற்றிடுவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா கடவுளின் அளவற்ற அன்பைப் பற்றிப் பெருமையுடன் மகிழ்ந்து அறிக்கையிடும் செய்திகளைக் காணலாம். ஆண்டவரின் வெற்றிப் பரிசாக மீட்பு வருகின்றது. நீயோ, தேடிக்கண்டுபிக்கப்பட்டவள் என்றும் இனி கைவிடப்படாத நகர் என்றுரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 97: 1,6. 11-12
பல்லவி: பேரொளி இன்று நம்மேல் ஒளிரும்; ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்துள்ளார்.
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். - பல்லவி
நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:-

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசு கொணர்ந்த புதுபிறப்பாலும் தூயஆவியாலும் நிறைவாய் அளிக்கவிருக்கும் நிலைவாழ்வை உரிமை பேறாகப் பெற்றுக் கொள்ளப்போவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மூன்று திருப்பலிகளுக்கும் பொதுவானது.

பகல் திருப்பலி

இன்றைய வாசகங்கள்

I. எசாயா 52:7-10
II. எபிரேயர் 1:1-6
III.லூக்கா 2:15-20

திருப்பலி முன்னுரை:

விடியற்காலையில் வாடைக்காற்று வீசும் இளம்காலை பொழுதில் இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!
இன்று நமக்கோர் பாலன் பிறந்துள்ளார். கடவுளின் இரக்கப்பெருக்கின் கொடையாக நமக்கு மீட்பு என்றும் வெற்றி பரிசுக் கிடைத்துள்ளது. மனிதர்களின் மீட்புக்காக, நலனுக்காக, தன்னையே வழங்கவந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், நம்மையே அடுத்தவருக்கு வழங்கும் வழிகளை நாம் இயேசுவே கற்றுத்தந்துள்ளார். அவரின் செயல்களின் என்றும் மிஞ்சி நிற்பது கடவுளின் பேரிரக்கமும், நன்மைத்தனமும், மனிதநேயமும் ஆகும். ஆம் இந்நாள்களில் மனிதநேயத்தின் மற்றோரு பரிமாணமான அன்பின் பகிர்வை அடுத்திருக்கும் வறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் உறவின் வாழ்த்துகள் மூலமும், உதவிகள் மூலமும் வெளிப்படுத்துவோம். உண்மையில் இன்று நம் உள்ளங்களில் வந்து பாலன் இயேசு பிறப்பதற்கு இந்நற்செயல்கள் வழிவகுக்கும்!
இறைமகனின் அன்பின் பகிர்வாம் இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இடையர்கள் போல் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துப் பாடி உளமார கலந்து கொண்டு இறைமகன் பாலன் இயேசுவின் அருளைப் பெற்றிடுவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா ஆண்டவரின் வாக்களித்த மீட்பு - மெசியா இவற்றைப் பற்றிப் பெரும் மகிழ்ச்சியுடன் செய்த பதிவுகளைக் காணலாம். ஆண்டவரின் செய்தியை அறிவிக்கவருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்தணை அழகாய் இருக்கின்றன என்று வருணிக்கும் எசாயா இடையர்களை எண்ணிதான் இப்படி சொல்லிருப்பரோ!  ”ஆண்டவர் வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். பிறஇனத்தரும் இதைக் காண்பர்.” எசாயாவின் மசிழ்ச்சியை நாமும் நாம் உள்ளத்தில் பகிர்ந்துகொள்வோம்.

பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3a. 3cd-4. 5-6
பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
 
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசுவின் பெருமை அருமைகளை எடுத்துரைக்கின்றார். இறைவாக்கினர்கள் மூலம் பேசி வந்த கடவுள்  தன் மகன் மூலம் நம்மிடம் பேசியுள்ளதையும், அவர் தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். வானத்தூதர்களை விட மேன்மையானவர். என்று அவரின் மாட்சிமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மூன்று திருப்பலிகளுக்கும் பொதுவானது.

💌 வாட்ஸ்ஆப் வாழ்த்து மடல்கள் 💌
உங்கள் நண்பர்களுக்கான வாழ்த்துமடல்கள் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்புதற்காக...
whatsapp-greetings in Tamil


மறவாமல் அன்பின் மடலின் கிறிஸ்மஸ் மலரை பார்வையிட அன்புடன் அழைக்கிறோம்.


அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துகள்! 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, December 12, 2022

 திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு 18/12/2022

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 7:10-14
உரோமையர் 1:1-7
மத்தேயு1:18-24

திருப்பலி முன்னுரை

இன்று இயேசுவின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு -அமைதியின் ஞாயிறு. இறைவனின் ஆசீரை நாடி அவரின் இல்லம் வந்துள்ள இறைமக்களே! இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க அன்புடன் வரவேற்கிறோம்.

திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிற்றில் நாம் ஏற்றும் மெழுகுதிரி 'அமைதி' என்ற மதிப்பீட்டைக் குறிக்கிறது. இயேசுவின் வாழ்க்கை 'அமைதி' என்ற வார்த்தையில் தொடங்கி, அதே வார்த்தையில் நிறைவு பெறுவதாக இரக்கத்தின் நற்செய்தியாளர் லூக்கா எழுதுகின்றார். இயேசுவின் பிறப்புச் செய்தி இடையர்களுக்கு அமைதியின் செய்தியாக வழங்கப்படுகிறது. தான் விண்ணேற்பு அடையும் முன் இயேசு தன் சீடர்களுக்குத் தன் அமைதியை விட்டுச் செல்கின்றார்.

இயேசு யார் யாரைச் சந்தித்தாரோ அவர்களின் வாழ்வில் உடல் நலம் பொங்கியது. உள்ள அமைதிப் பொங்கியது. உயிர்ப்புப் பொங்கியது. உன்னத வாழ்வு பொங்கியது. இதே இயேசு நம்மையும் சந்திக்க வருகிறார். நாம் தயாராக உள்ளோமா?

'நமக்காக, நம்மோடு அவர்' என்பதே அவரின் வாக்குறுதி. எனவே அவர் தரும் அமைதியான நிலைவாழ்வை நோக்கிப் பயணிக்க, அவரைச் சந்திக்கத் தேவையான வரங்களை வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். தேடுவோம் - நம் தேடலும், தேடுபொருளும் மெசியாவானால் அமைதி என்றும் நம்மில் நிலைப் பெறுமே!

 வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் யூதா நாட்டைப் போர் மேகம் சூழ்ந்திருக்கும் நேரத்தில் ஆகாசு அரசன் அமைதி இழந்தச் சூழலை வாசிக்கின்றோம். வெளியிலிருந்து வந்த பகைவர்களால் தன் அமைதியை இழந்தார் ஆகாசு. ஆண்டவரிடம் அடையாளம் கேட்கத் தயங்கிய ஆகாசுக்கு 'இம்மானுவேல்' எசாயா மூலம் அடையாளம் தரப்படுகிறது. கடவுள் நம்மோடு என்றால் நம் செயல்கள் கடவுளுக்குரிய செயல்களாக இருக்க வேண்டும். இதனை மனதில் கொண்டு இவ்வார்த்தைகளை அமைதியுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்: மாட்சிமிகு மன்னர் இவரே.
திருப்பாடல்: 24:1-2. 3-4. 5-6
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை: நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்கள்மீது அதற்கு அடித்தளமிட்டார்: ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே. பல்லவி

ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்: பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்: பல்லவி

இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்: தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளின் அருளும் அமைதியும் உரித்தாகுக என்று உரோமை வாழ்மக்களை வாழ்த்திடும் திருத்தூதர் பவுல் இறைமகன் இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு அனைத்து இனத்தவரையும் இயேசுகிறிஸ்துக்கு உரியவர்களாய் இருக்க அழைக்கவிடுக்கிறார். இறைவாக்கினர் வழியாக நற்செய்தியைத் தருவதாகத் திருமறை நூலில் வாக்களித்திருந்தார் இறைவன். அந்த நற்செய்தியே மீட்ராம் இயேசுகிறிஸ்து என்பதை உணர்ந்து அமைதியுடன் இவ்விரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல், அதாவது ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ எனப் பெயரிடுவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. என் இதய தெய்வமே! அமைதியின் இறைவா! உமது வருகையை எதிர்நோக்கியுள்ள உம் திருஅவையில் நீர் தரும் அமைதியைத் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் பெற்று மகிழவும், அந்த அமைதியை இவ்வுலகம் பெற்றிட அனைவரும் இணைந்துச் செயல்பட உமது உடனிருப்பையும், சேவைமனப்பான்மையையும் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நேர்மையின் சிகரமே எம் இறைவா!  எம்குடும்பங்களில் அனைவரும் 'யோசேப்பு போல் நேர்மையாளராய், வெளியே இருந்து கொடுக்கப்பட்ட சட்டத்தையும் தாண்டிய மனச்சான்றின் சட்டத்தையும், சக மனிதரின் மாண்பையும் உயர்வாக நினைக்கின்ற நல்ல இதயத்தையும், சுயநலமற்று உறவுகளைப் போற்றிட வளர்த்திட வேண்டிய நல்வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. என்றும் காக்கின்ற எம் இறைவா! இத்திருவருகைக்காலத்தில் எம் இளையோர் சட்டங்களையும் தாண்டித் தங்கள் மனச்சான்றுக்கும், பிறரது மாண்புக்கும் மதிப்புக் கொடுத்து, அதன்படி நலமும் வளமும் அருளும் உம்முடைய உண்மை ஊழியர்களாய் எம்சமுதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை நீக்கி உழைத்திடும் சேனையாய் மாறிட வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எந்நாளும் எங்களோடு இருக்கும் இறைவா! உலகெங்கும் திக்கற்றவர்களாய் பல்வேறு காரணங்களால் தவிக்கும் உம் மக்களைக் கண்ணேக்கியருளும். அவர்களின் தேவைகள் நிறைவுப் பெற்றவும், வரவிருக்கும் கிறிஸ்மஸ் கொண்டாடங்களில் நிறைவான மன அமைதியைப் பெற்றுத் தாங்கள் இருக்குமிடத்தில் முழுஅங்கிகாரம் பெற்று உம் சாட்சிகளாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



www.anbinmadal.org
 
Print Friendly and PDF

Monday, December 5, 2022

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு 11/12/2022

 திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 35:1-6,10
யாக்கோபு 5:7-10
மத்தேயு 11:2-11

திருப்பலி முன்னுரை

இன்று இயேசுவின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு - மகிழ்ச்சியின் ஞாயிறு. இறைவனின் ஆசீரை நாடி அவரின் இல்லம் வந்துள்ள இறைமக்களே! இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க அன்புடன் வரவேற்கிறோம்.
மீண்டும் இறைவாக்கினர் எசாயா அகமகிழ்ந்து பூரித்துக் கூறுவதாவது பாழ்நிலங்கள் புத்துயிர் பெற்றுப் பூத்துக் குலுங்கும். ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் காண்பார்கள். மக்கள் அனைவரும் நலமும் வளமான வாழ்வும் பெற்றுப் பெரும் மகிழ்ச்சியில் சீனோனுக்கு வருவார்கள். துன்பமும் துயரமும் பறந்தோடும் என்றார்.
பயிரிடுபவரைப் போலக் காலம் கனியும் வரை பொறுமையோடு காத்திருங்கள். தண்டனைத்தீர்ப்பு ஆளாகாதவாறு உங்களைக் காத்துகொள்ளுங்கள் என்று திருத்தூதர் யாக்கோபு நமக்கு அறிவுரை வழங்குகிறார்.
இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவான் மெசியாவைக் கண்டு கொண்டதின் மகிழ்ச்சியில் தம் சீடர்களை உறுதிசெய்ய அனுப்பிவைக்கின்றார். இறைவாக்கினரை விட மேலானவர் என்றும் மனிதராய் பிறந்தவர்களில் மிகப் பெரியவர் என்றும் தன் முன்னோடிக்குப் புகழ்மாலைச் சூட்டுகிறார். ஆம் அன்பர்களே யோவாயைப் போல் மெசியாவைக் கண்டுணர்ந்துக் கரடுமுரடான பாதையை வெற்றிகரமாகக் கடந்து அவர்தரும் நிலைவாழ்வை மகிழ்ச்சியோடு நோக்கிப் பயணிக்க அவரின் உடனிருப்பை தேடி, வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். தேடுவோம் - நம் தேடலும், தேடுபொருளும் மெசியாவானால் மகிழ்ச்சியே!

மகிழ்ச்சி 

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

எசாயா நூலிருந்த எடுக்கப்பட்டுள்ள இந்த வாசகம் அடிமைத்தனத்தலிருந்து விடுபட்டுத் திரும்பும் இஸ்ரயேலரின் மனநிலையைப் பிரதிப்பலிக்கின்றது. யாவே கடவுள் பாழ்நிலங்களைச் சோலையாக மாற்றுகிறார். நலிவுற்றோரைப் புதுபலன் பெற்றவைத்துப் பயணிக்க வைக்கிறார். மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர். பெரும் மகிழ்ச்சியால் அவர்கள் முகம் மலர்ந்திருக்கும். மெசியாவை நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்கும் எசாயாவின் இவ்வார்த்தைகளை மகிழ்ச்சியுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

 ஆண்டவரே, எங்களை மீட்க வந்தருளும்.
திருப்பாடல் 146: 7,8,9,-10

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.  பதிலுரை

 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். பதிலுரை

ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா! பதிலுரை


இரண்டாம் வாசக முன்னுரை

பயிர்செய்வோர் எப்படிப் பொறுமைக் காத்துக் காலம் கனியும் வரை காத்திருந்து தன் உழைப்பின் பயனைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைவாரோ, அதைபோல் நாம் ஆண்டவரின் வருகைக்கு நம் உள்ளங்களை உறுதிபடுத்திக்கொள்ள அறிவுரைக் கூறும் திருத்தூதர் யாக்கோபு, ”நடுவர்கள் வந்து விட்டார்கள். எனவே நிலைவாழ்வைக் காத்துக்கொள்ள நம்பிக்கையோடு பயணியுங்கள்” என்று விடுக்கும் மகிழ்சிசியின் அழைப்பைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


நற்செய்திக்கு முன்  வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அனைத்தையும் 'கடந்தவர்.' இருந்தாலும் எம் 'உள் உறைபவரான கடவுளே'! மெசியாவின் வருகையின்போது ஒரு தலைகீழ் மாற்றம் உருவாகிறது. அல்லது ஒரு புதிய பிறப்பு உண்டாகிறது. . இப்படியாக, மாற்றம், புதிய பிறப்பு, நிறைவு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்துக் கொள்ளவும், உமது வருகையை எதிர்நோக்கியுள்ள உம் திருஅவைக்குத் தேவையான ஞானத்தையும், உம் வழிகாட்டுதலையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பொறுமையின் சிகரமே எம் இறைவா! உழைப்பின் பயனைஅடையப் பொறுமையையும், துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தையும், எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கி இறுதியில் நிலைவாழ்வு என்றும் மகிழ்ச்சியைப் பெற்றிட, இந்த வருகைக் கால்த்தில் எங்களை நாங்கள் உமது வருகைக்காகத் தயாரிக்க, பகைமை மறந்து உறவுகளைப் புதுப்பிக்கத் தேவையான உம் ஆசீர் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா, மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்வது என் உள்மன வேலைதான் என்பதை உணர்ந்து எம் இளைய சமுதாயம் அந்த மகிழ்ச்சியைப் பெற்றிடத் தங்கள் பொறமை, கோபம், வெறுப்புகள், பொய்மை, சுயநலம் ஆகியவற்றை விடுத்துப் புதிய உருவெடுக்கவும், அவர்களின் உள்மனம்காயங்கள் மறைந்திடவும் வேண்டியாருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உமது நலன்களால் நிரப்பிடும் எம் இறைவா! இத்திருவருகைக்காலத்தில் மகிழ்ச்சி. பொறுமையாக வரும். நிலைத்து நிற்கும். மகிழ்ச்சி ஆழமானது. அஃது உள்ளம் சார்ந்தது. நம் புலன்களுக்குப் புலப்படாத அவரில் இருப்பதுதான் மகிழ்ச்சி என்பதை உலகமக்கள் அனைவரும் உணர்ந்துக் கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாடி எங்கள் தயாரிக்க வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF