Tuesday, March 26, 2019

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு

 தவக்காலத்தின் நான்காம் ஞாயிறுஇன்றைய நற்செய்தி வாசகங்கள்:

 

யோசுவா 5:9,10-12
2 கொரிந்தியர் 5:17-21
லூக்கா 15:1-3, 11-32


திருப்பலி முன்னுரை:


இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் நான்காம் ஞாயிறுத் திருப்பலியைக் கொண்டாட வந்துள்ள அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
முதல் வாசகத்தில் மகிழ்ச்சி / பாஸ்காக் கொண்டாட்டமாகவும், இரண்டாம் வாசகத்தில் ஒப்புரவாகவும், / நற்செய்தி வாசகத்தில் இல்லம் திரும்புவதாகவும் / முன்வைக்கப்பட்டுள்ளது. என்னை நோக்கி நான் திரும்பினாலே,/ இறைவனை நோக்கிய, /

பிறரை நோக்கிய திருப்பம் சாத்தியமாகிவிடும். ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு அன்புடன், நட்புடனும் வாழ முற்படும் போதுதான் நாம் நம் மனமாற்றத்தின் நிறைவைக் காண்கிறோம்.

இழந்த உறவை மீண்டும் சரிசெய்யவே இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். காரசாரமான நம் வார்த்தைகள் எத்தனை உறவுகளை முறித்திருக்கின்றன எனச் சிந்திப்போம். முறிந்த உறவுகள் மீண்டும் இணையும்போது அங்கே இறைவனின் பிரசன்னமும் தோன்றுகிறது. ஏனென்றால் அன்பு எங்கே உள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் என்பதை உணர்ந்திடுவோம். இந்தத் தவக்காலம் நம்மில் வீழ்ந்துக் கிடக்கும் சுயநலம், பாவம் போன்ற ஆன்ம அழுக்குகளை அப்புறப்படுத்த அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. நம்மிலே மனமாற்றம் காணவும், அடுத்தவரின் மனமாற்றத்தை ஏற்று மகிழும் நல்ல உள்ளத்தை நமக்குத் தர வேண்டியும் இத்திருப்பலியில் முழுமனதோடு பங்கேற்போம்.


வாசக முன்னுரை:முதல் வாசக முன்னுரை:


மோசேயின் தலைமையில் எகிப்து நாட்டை விட்டுப் புறப்பட்ட இஸ்ரயேல் மக்கள், யோசுவாவைப் படைத்தலைவராகக் கொண்டு யோர்தானைக் கடக்கின்றனர். பாலும். தேனும் பொழியும் கானான் நாட்டில் அவர்கள் கால் பதித்தவுடன் கில்காலில், எரிகோ சமவெளியில் இஸ்ரயேலர் கொண்டாடும் இரண்டாம் பாஸ்காத் தான் வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர்கள் கொண்டாடும் முதல் பாஸ்கா. இந்த மகிழ்ச்சியில் நாம் இன்றைய முதல் வாசகத்தை வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


திருத்தூதர் பணி என்பது ஒப்புரவாக்கும் பணி என்று கொரிந்து நகரத் திருச்சபைக்கு மனம் திறக்கும் பவுலடியார், அந்த ஒப்புரவு என்றால் என்ன? அந்த ஒப்புரவுப் பணியில் மக்கள் மற்றும் தன் பங்கேற்பு என்ன? என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். 'தடைபட்ட உறவு மீண்டும் சரிசெய்யப்படுவதே ஒப்புரவு. கடவுள் தன் கொடையாக ஒப்புரவை நமக்கு வழங்கினாலும், அந்த ஒப்புரவிற்கு நம்மையே நாம்தான் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். ஒப்புரவை அன்றாடம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். திருத்தூதர் கூறும் இந்த அறிவுரையைச் சீரியமுறையில் மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப் பாடல்:


திபா 34: 1-2. 3-4. 5-6

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். –பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:


நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்' என்று அவரிடம் சொல்வேன்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:அன்புத் தந்தையே எம் இறைவா! திருஅவை என்பது அருட்பணியாளரும், பொது நிலையினரும் இணைந்த செயல்பாடுகளே. இவை திருஅவையில் நிலவிட, திருத்தந்தை முதல் பொதுநிலையினர்கள் வரை உம் இறைஇரக்கத்தின் கருணையினால் நல்ல மாற்றங்கள் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அரசர்கெல்லாம் அரசரான எம் இறைவா எம் நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதாரச் சீர்கேடுகள் ஆட்சியாளர்களின் தவறான வழி நடத்துதல் இவற்றிலிருந்து வேறுபட்டுப் புதிய சிந்தனைகளும் தூய ஆவியின் வழி நடத்துதால், நல்ல தலைவர்களை உருவாக்கித் தந்திட வரம் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் அரசுதேர்வுகளை எழுதிவரும் அனைத்து மாணவ மாணவியர்களை உம் பாதத்தில் வைக்கின்றோம். அவர்கள் பயம், கவலை, மறதி போன்ற தீயசக்திகளிடமிருந்து விடுவித்து, ஞானத்தோடு செயல்பட, எதிர்காலத்தின் கனவுகள் நினைவாகிட உம் ஆவியின் வல்லமையைப் பொழிந்திட வேண்டுமென்ற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பு இறைவா! உலகிற்கு, உப்பாக ஒளியாக விளங்கிட, எம் குடும்பங்களை அர்ப்பணிக்கின்றோம். இன்று குடும்ப உறவுகளில் நிலவும் பிரச்சினைகள், வேறுபாடுகள், தனிகுடும்ப வாழ்வு, பெற்றோர்களால் தனித்து விடப்படுதல் போன்ற இவைகளிலிருந்து அனைத்தும் மாற்றம், பெற்று ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு மன்னித்து வாழக்கூடிய நல்ல மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் மனமாற்றத்தை வாஞ்சையுடன் எதிர்பார்க்கும் இறைவா! அடுத்தவரின் மனமாற்றத்தை ஏற்று மகிழும் பரந்த மனப்பான்மையும், உமது அன்பு, கருணை, மன்னிப்பு, அரவணைக்கும் பண்பு, மனமாற்றத்தில் மகிழ்ச்சி, பிறர் சுதந்திரத்தை மதித்தல் ஆகிய பண்புகளை எமதாக்கிக் கொள்ள அருள் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org

Wednesday, March 20, 2019

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


விடுதலைப் பயணம் 3:1-8, 13-15
1கொரிந்தியர். 10:1-6,10-12:17-4:1
லூக்கா 13:-1-9

திருப்பலி முன்னுரை:


இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்பு வாழ்த்துக்கள்! நம் கடவுள் இரக்கத்தின் கடவுள். தண்டனையின் இறைவன் அல்ல. மாறாக மன்னிப்பின் இறைவன். எனவே பிறர் வழியாக இறைவன் நம் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அலட்சியம் செய்யாமல் அக்கறையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் பாவிகள் மனம் திரும்புவதை விரும்புகிறார். அதற்காகக் காத்திருக்கிறார்.

இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட அதே வாய்ப்பு இன்று நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை நாம் விட்டுவிடக்கூடாது. அத்திமரத்திற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் போன்று, இன்றும் நம் ஆண்டவர் நமக்குத் தருவதை நன்கு பயன்படுத்திக்கொள்வோம். ஆண்டவரின் இரக்கத்தை உணர்ந்தவர்களாக அவர் கொடுக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அவர் எதிர்பார்க்கிற பலனைத் தருபவர்களாக வாழ உறுதி எடுப்போம். அப்போது தான் இந்தத் தவக்காலம் நமக்கு இரக்கத்தின் காலமாக, மன்னிப்பின் காலமாக அமையும். அதற்காக இன்றைய திருப்பலி வழிப்பாட்டில் வரம் வேண்டிப் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல்வாசகத்தில் வித்தியாசமான கடவுளை அஃதாவது உணர்வு உள்ள, மக்களின் துயர்கண்டுத் துடிக்கிற கடவுளைக் காட்டுகிறது. மோசே கடவுளின் வெளிப்பாட்டைக் காண்கிறார். இறைவனின் குறுக்கீட்டால் அவரின் பணி மாற்றம் அடைகிறது. மேலும் அவர் இனி தனக்கென வாழப் போவதில்லை ஒட்டுமொத்த இஸ்ரயேலரின் குடும்பங்களுக்காக. கடவுளுக்கும், மோசேக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் இறைவனின் வெளிப்பாடும், அழைத்தலும் அமைந்துள்ள முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


'கிறிஸ்துவே அப்பாறை!' எனக் கிறிஸ்துவின் மேன்மையை முன்வைக்கின்றார் திருத்தூதர் பவுலடிகளார். இரக்கம் நிறைந்த கடவுளின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற நற்கனித் தராவிட்டால் இஸ்ரயேல் மக்களுக்கு நேரிட்ட அதே அழிவு நமக்கும் நேரிடும் என்று எச்சரிக்கின்றார். 'எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடிப் பார்த்துக்கொள்ளட்டும்!' என்று கூறும் இந்தப் பவுலடிகளாரின் அறிவுரைக்குக் கவனமுடன் செவிய்மெடுப்போம்

பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 6-7. 8,11

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி

ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். -பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. -பல்லவி
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

அன்புத் தந்தையே! எம் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், பொது நிலையினர் ஆகிய அனைவரும் இறைஇயேசுவின் பணிவாழ்வைத் தங்கள் சொல்லாலும், செயலாலும் அனைத்து மாந்தருக்கும் வேறுபாடின்றி, இறைவனின் இரக்கத்தை அனைத்து மாந்தருக்கும் சான்றுப் பகர வேண்டுகென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நலாலோசனைக் கர்த்தரே! எம் நாட்டில் நிலவும் அரசியல், பண்பாடு, மொழி, இனவேறுபாடுகள் வேரறுக்கப்பட்டு உம் மதிப்பீடுகளான நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் சேர்ந்த நல்ல ஆட்சி அமைக்கத் தேவையான நல்ல தலைவர்களை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

நல் ஆயனே! எம் இறைவா! இன்றைய உலகில் நிலவும் இளையோர்க்கு எதிராக எழுப்பப்படும் கலாசாரச் சீர்கேடுகள், மாயகவர்ச்சிகள், பாலியல் வன்முறைகள் இவை அனைத்திலிருந்து எம் இளையோரைப் பாதுகாத்து உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளை அறிந்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணையின் தெய்வமே! எம் இறைவா! சமூகத்தில் தனக்கு யாருமே இல்லை என்று தனித்து விடப்பட்ட விதவைகள் அனாதைகள், கைவிடப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட உம் பாடுகளின் வழியாக அவர்கள் தங்களைப் புதுப்பித்த உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

ஞானத்தின் இருப்பிடமே இறைவா! தங்கள் கல்வியாண்டு இறுதித் தேர்வு எழுதிக் கொண்டிருக்க எங்கள் பிள்ளைகள் உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் சிறப்பாகவும், விவேகத்துடன் செயல்பட்டு, தங்கள் உழைப்பின் வெற்றிக் கனியைச் சுவைத்திடவும், அவுர்களின் அடுத்தக் கல்வியாண்டுச் சிறப்புடன் அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

www.anbinmadal.org

Wednesday, March 13, 2019

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு

 தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறுஇன்றைய நற்செய்தி வாசகங்கள்.


தொடக்க நூல் 15:5-12,17-18
பிலிப்பியர். 3:17-4:1
லூக்கா 9:28-36திருப்பலி முன்னுரை:


இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்!. புயலுக்குப்பின் அமைதி, இரவுக்குப்பின் பகல், துன்பத்திற்குப் பின் மகிழ்ச்சி என்பதைப்போல் இயேசுவின் பாடுகளுக்குப்பின் மகிமை உண்டு என்ற ஆழ்ந்தப் பொருள் நிறைந்த நம்பிக்கையை நாம் மனதினில் பதிவு செய்கிறது இன்றைய வாசகங்கள். மலையின் மேல் ஏறி ஓர் ஆன்மீகதேடலைத் தேடுவதை நம் நாட்டில் எப்பொழுதும் காணலாம். அன்று இஸ்ரயேல் மக்கள் மத்தியிலும் இந்த நிகழ்வுகள் உண்டு என்பதை விவிலியத்தில் காணலாம். தாபோர் மலையில் திருத்தூதர்கள் அடைந்த ஆன்மீக தெய்வீக நிகழ்வின் மகிழ்ச்சி என்றும் நம்மில் நிறைந்திருக்கட்டும்..

மகிழ்ச்சியான தாபோர் மலைக்கும் துன்பமான கெத்சமணித் தோட்டத்திற்கும் அதே சீடர்களை அழைத்துச் செல்கிறார். அதுபோல அன்றாட வாழ்வில் பல மகிழ்ச்சியான ஆறுதலான நேரங்களில் இறைவன் நம்மை உறுதிப்படுத்துகிறார். சந்திக்கவிருக்கும் துன்பங்களைத் தாங்கும் சக்தியைத் தருகிறார். ஆனால் நாம் அதைப் பலமுறை கண்டுகொள்வது கிடையாது. துன்பங்கள் மட்டுமே நமக்குப் பெருஞ்சுமையாக இருக்கிறது. எந்நாளும், எந்நேரமும் நம்மை வழிநடத்தும் இயேசுவின் பிரசன்னத்தில் வாழ்வோம். காற்றில் ஆடும் நாணலைப் போல் நாமும் இயேசுவோடு இணைந்திருந்தால் அச்சம் என்பது இல்லை நம் வாழ்வில்! எனவே இன்பத் துன்பங்களை ஏற்றுக் கொண்டு இயேசுவோடு இரண்டறக் கலந்து வாழ வேண்டி அருள் வரங்கள் இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.

வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:

 புதியநாட்டைப் பெற்ற ஆபிராமுடன்  இறைவன் செய்யும் இந்த உடன்படிக்கையில் மூன்று நிகழ்வுகள் உள்ளன. வாக்குறுதி, அடையாளம், கீழ்ப்படிதல். விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்ற வாக்குறுதி. உடன்படிக்கையின் அடையாளமாக இரண்டு பாறைகளின்மேல் ஆண்டவரின் கட்டளைப்படி ஆபிராம் விலங்குகளை வெட்டி வைக்கின்றார். 'ஆபிராம் ஆண்டவர் மீது நம்பிக்கைக் கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்'. இதுதான் ஆபிராமின் கீழ்ப்படிதல். இவ்வாறு  கடவுளின் உடன்படிக்கையையும், ஆபிராமின் கொண்ட நம்பிக்கையையும் எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


இன்றைய இரண்டாவது வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார் என்று அவரின் அன்பைப் பதிவு செய்கின்றார்.நாம் நமது தன்னல வாழ்வுக்குள் இறந்துப் புதைக்கப்பட்டால் தான் வேற்றுரு பெற்றுக் கிறிஸ்துவைப் போல உயிர்த்தெழமுடியும். தன் மக்கள் மீது அவருக்குள்ள அன்பை உச்சிமுகர்ந்துக் கொண்டாடும் அவர் "ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்" என்று திருத்தூதர் பவுலடியார் திருமடலில் பதிவுச் செய்த அறிவுரைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 27: 1,7-8,9-13-14


பல்லவி: ஆண்டவரே என் ஒளி். அவரே என் மீட்பு.
ஆண்டவரே என் ஒளி். அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்க அடைக்கலம். யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? -பல்லவி

ஆண்டவரே நான் மன்றாடும்போது என் குலரைக் கேட்டருளும். என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். ”புறப்படு அவரது முகத்தை நாடு” என்றது என் உள்ளம்: ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன். -பல்லவி

உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதேயும். -பல்லவி

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.-பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

 

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது "என் அன்பார்ந்த மைந்தர் இவரே! இவருக்கு செவிசாயுங்கள்"


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.உடன்படிக்கையின் நாயகனே! எம் இறைவா! இத் தவக்காலத்தில் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் இறைமகன் இயேசுவை உறுதியாகப் பற்றிக்கொண்டு அவர் வழியில் செல்லவும், எதிர்வரும் வாழ்வியல் நிகழ்வுகள் எப்படி இருந்தாலும் எம்பெருமான் இயேசுவின் காலடிகளே எம் சுவை என்று பற்றி நிற்பவர்களுக்கு எல்லா நாளுமே உருமாற்றம்தான்! என்பதை உணர்ந்து இத்தவக்காலத்தைப் பயன்படுத்த வேண்டி வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்களை வளமான உமது நிறைவாழ்வுக்கு இட்டுச் செல்லும் இறைவா! எங்கள் குடும்பங்கள் பவுலடியார் கூறிப்படித் திருத்தூதர்களைப் போல் வாழ்ந்திடவும், விண்ணகதே எமது தாய் நாடு, அங்கிருந்து வரும் இறைமகன் இயேசுவிற்காகக் காத்திருக்கவும், மாட்சிமைக்குரிய அவரின் உடல் போன்று உருமாற்றம் பெற்றிடவும் வேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. நிலையான நாடு விண்ணகமே என்ற உணர்த்திய எம் இறைவா! அரசியல் தலைவர்கள் இவ்வுலகச் சொத்துக்களையும் புகழையும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு மக்களின் நலன்கள் காக்கும் தன்னலமற்ற போக்கைக் கடைப்பிடிக்கவும், நாட்டில் நடைப்பெறவிருக்கும் தேர்தல் சிறப்பாக நடைபெற்று இந்திய நாட்டின் பன்மைத் தன்மையும், மனித உரிமைகளையும் பாதுகாக்கும் தகுதியான தலைவர்களைத் தேர்வு செய்ய நல்ல ஞானத்தையும் மக்கள் உள்ளத்தில் பொழிந்து மக்களுக்கு நல்லதோரு எதிர்கலத்தையும் வளமான வாழ்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அருட்செல்வங்களின் நாயகனே! எம் இறைவா! இப்பொழுது எம் தமிழகத்தில் அரசுத் தேர்வு எழுதும் எல்லா மாணவ, மாணவிகள் அனைவரும் தேவையாக உடல், உள்ளச் சுகமும், தேர்விற்குத் தேவையான ஞானத்தையும் மனத் தைரியத்தையும் கொடுத்து, பெற்றோர்களின் அன்பும், தேற்றவும் பெற்றுத் தங்களின் எதிர்கால வாழ்வில் வெற்றிப் பெறவும், அதன் மூலம் புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5, ஏழைகளுக்கு இறங்குபவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கின்றான் என்று கூறிய எம் இறைவா! உலகமுழுவதும் உணவின்றி, உடையின்றி, வாழ்வை இழந்து உம்மையே நம்பி இருக்கும் ஏழைகள், அநாதைகள், கைவிடப்பட்டவர்கள், வறுமையில் வாடுவோர் தனிமையில் தவிப்போர் போன்ற இவர்களின் தேவைகளைச் சந்தித்து, தங்கள் அன்பையும், அரவணைப்பையும் பகிர்ந்தளிக்கத் தேவையாக நல்ல மனப்பக்குவத்தை எமக்கு இத்தவக்காலத்தில் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


                       www.anbinmadal.org

Wednesday, March 6, 2019

தவக்காலம் முதல் ஞாயிறு - ஆண்டு-3

தவக்காலம் முதல் ஞாயிறு - ஆண்டு-3

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


இணைச் சட்டம் 26:4-10
உரோமையர் 10:8-13
லூக்கா 4:1-13திருப்பலியின் முன்னுரை:


இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் முதல் ஞாயிறு திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் வரவு நல்வரவு ஆகுக. வருடம் ஒரு முறை, திருஅவை இயேசுவின் பாடுகளை மனதில் சிந்தித்து நம்மை மனமாற்றத்திற்கு மீண்டுமாய் அழைக்கிறது. 


இறை மனித உறவை புதுப்பிக்கும் காலம். இருகிப்போன இதயங்கள் அன்பில் மீண்டும் துளிர்க்கும் காலம். ஆணவமும், சுயநலங்களும் களையப்பட்டுப் புதிய வாழ்வுப் பெற அழைக்கப்படும் காலம். நாற்பது நாட்கள் என்ற காலக்கட்டம் விவிலியத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பின்னிப்பிணைந்துள்ளதை நாம் காணலாம். இந்த நாற்பது நாட்களின் முடிவில் கிடைத்த வெற்றி அனுபவங்களை நாமும் பெற்று மகிழ அழைக்கப்படுகிறோம்.


எதற்காக இயேசு 'எங்களுக்குச் சோதனைகள் வேண்டாம்' என்று கற்பிப்பதற்குப் பதில் 'எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்' என்று இறைவேண்டலைக் கற்பிக்கின்றார். நன்மையும், அன்பும் உருவான எல்லாம் வல்லக் கடவுள் ஏன் தீமையை அனுமதிக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாம் நம் உள்ளத்தில் எழக்கூடியவை. இந்தக் கேள்விகளுக்குப் பதிலாக வருபவை அல்ல இயேசுவின் சோதனைகள். இதை ஒரு பாலைவன நிகழ்வாக மட்டும் பார்க்காமல் நம் உள்ளத்தில் நிகழும் நன்மைக்கும் - தீமைக்கும் எதிரான போராட்டமாகவும் பார்க்கலாம்.


சாத்தனின் போராட்டங்களை வென்று வெற்றிப் பெறுவோம். இவற்றிக்குத் தேவையான இறையருளையும் சாத்தனை வெல்ல உறுதியான மனத்திடத்தையும் வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.


 

வாசகமுன்னுரை:

 

முதல் வாசக முன்னுரை:-


இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்கள் இறைவன் தமக்குச் செய்த உதவிகளை நினைத்து துணை நின்ந கடவுளுக்கு  நன்றிக் கடன் செலுத்துவதைக் காட்டுகிறது. நாடோடிகளாக புலம் பெயர்ந்த மக்கள் தாங்கள் சந்தித்த துன்பங்களின் மத்தியிலும், சிறுமைகளின் போதும் வலிய கரத்தாலும் ஒங்கிய புயத்தாலும் இறைவன் தங்களை காத்ததை நினைத்துக் கண்ணீர் சிந்தி நன்றி செலுத்துகின்றனர்.  இவ்வாறு இஸ்ராயேல் மக்கள் இறையருளைப் பெற்ற நிகழ்வுகளை எடுத்துரைக்கும் முதல் வாசகமான இணைச்சட்டம் நூல் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.இரண்டாம் வாசக முன்னுரை:-  


 நம்பிக்கை ஒற்றை வாக்கியம்தான்: 'இயேசுவே ஆண்டவர்.' பழைய ஏற்பாட்டில் இறைவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவித்து, பாலும், தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்துச் சென்றார். புதிய ஏற்பாட்டு இறைவன் பாவம் என்னும் அடிமைத்தனம் விடுத்து, மக்களை புதிய வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். இயேசுவில் கடவுள் இன்னும் அதிகம் நெருங்கி வருகின்றார் மனுக்குலத்தோடு. இயேசுவின் வருகை மனிதர்நடுவில் உள்ள அனைத்து பிரிவுகளையும் அழித்துவிடுகிறது. இவற்றை உணர்த்தும்  திருத்தூதர் பவுலடியார் திருமடலில் பதிவுச் செய்த இறைவார்த்தைகளை நம்பிக்கையுடன் செவிமெடுப்போம்.பதிலுரைப் பாடல்

 

திபா 91: 1-2. 10-11. 12-13. 14-15

பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும், ஆண்டவரே.


உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். -பல்லவி

தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். -பல்லவி
உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன் பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். -பல்லவி

அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்;அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்;அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்'. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல. மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும்  வாழ்வர்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. எங்களுக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாக இருப்பவரே! எம் இறைவா! தவக்காலத்தைத் தொடங்கியுள்ள உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் என எல்லோரும் நீர் அளித்த அருட்சாதனங்களின் மேன்தைகளை உணர்ந்து, அதன் வழியாக உமது இறையரசை அடைய வேண்டிய மனமாற்றத்தையும், அதற்கான தவவாழ்க்கையை மேற்கொள்ளத் திறந்த மனதையும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்களை உமது உரிமை சொத்தாகத் தேர்ந்து கொண்ட இறைவா! எங்கள் குடும்பங்கள் தன்னலம் மறந்து உம்மைப் போல் அடுத்தவர்களின் வாழ்வு மலர உளமாற உழைக்கவும், உமது நற்செயல்களை எங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வாழவும், மற்றவர்களையும் உமது இறையரசில் அழைத்து வர நற்சாட்சிகளாக மாறவும் வேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உள்ளத்து உண்மையை விரும்பும் எம் இறைவா! அரசியல் தலைவர்களின் விருப்பு வெறுப்புகளக்குப் பலியாகி தங்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும், சொந்தங்களையும், சொத்துக்களையும் இழந்து அநாதையாகவும், அகதிகளாகவும் நிற்கும் அபலை மக்களுக்காக உம்மை வேண்டுகிறோம். அவர்கள் இழந்ததை மீண்டும் பெற்று அமைதியிலும், அன்பிலும், வளமையிலும், உடல்நலத்திலும் சிறப்புற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அருட்கொடைகளை வாரிவழங்கிடும் எம் இறைவா! இயற்கை என்னும் பெரும்கொடையை எங்களுக்குக் கொடையாக, இலவசமாகக் கொடுத்ததை, நாங்கள் சரியான முறையில் கையளும் திறமையின்றி, சுயநலவாதிகளின் தவறான வழிகாட்டுதலால் எல்லா இயற்கைச் செல்வங்களை இழந்து எங்களுக்கு நாங்களே இழைத்த தவறுகளுக்காக வருந்தும் இத்தருணத்தில் எங்களை மன்னித்து, எங்கள் வருங்காலத் தலைமுறையினருக்கு உமது இயற்கைக் கொடைகளை நல்லமுறையில் வழங்கிட வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. திருஅவையின் வருங்காலத் தூண்களை வழிநடத்தும் எம் இறைவா! இளையோர்பால் திருஅவைக் கொண்டிருக்கும் நம்பிக்கைளை அவர்கள் புரிந்துகொள்ளவும், கிறிஸ்துவ நம்பிக்கை வழியில் இளையோரது பங்கேற்பையும் பங்களிப்பையும் திருஅவைக்கும், சமூகத்திற்கும் செய்து நற்செய்திப் பணியாற்றுபவர்களாக இளையோர் திகழ்ந்திடவும், தங்கள் தேர்வுகளைச் சிறப்பான மறையில் எழுதி வெற்றிப் பெறவும் ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.visit anbinmadal.org