Thursday, July 27, 2017

பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு 30.07.2017



* (பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு 30.07.2017) *





*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*



 *முன்னுரை*


அன்புடையீர்,

இன்று பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு. புதையலையும், நல்முத்தயையும் தேடிக் கண்டுபிடிக்க இறைஇயேசுவின் அழைப்பை ஏற்று நம் ஆலயம் வந்துள்ள இறைமக்களை இனிதே வரவேற்கிறோம்.

இன்றைய நற்செய்தியில் மூன்று உவமைகளைக் காண்கிறோம். புதையல், முத்து, மீன்கள் நிறைந்த வலை என்ற இம்மூன்று உவமைகளையும் இறையரசுக்கு ஒப்புமைப்படுத்துகிறார் இயேசு. புதையல், முத்து, வலை என்ற மூன்று உருவகங்களும் பல்வேறு சிந்தனைகளை மனதில் எழுப்புகின்றன. நன்னெறிகளுக்கு எதிராக, உத்தரவின்றி நுழையும் எதிர்மறை எண்ணங்களையும், கருத்துக்களையும், இறையரசு என்ற சிப்பி, அழகிய முத்தாக மாற்றும் வலிமை பெற்றது என்பதை, நாம் முத்து உவமையிலிருந்து கற்றுக் கொள்கிறோம்

உள்ளார்ந்த உண்மை மதிப்பை உணர்ந்தால், அதற்காக எதையும் இழக்க நாம் துணிவு கொள்வோம். பெரும்பாலான நேரங்களில் நம்மிடம் புதைந்துள்ள, நம் குடும்பங்களில் புதைந்துள்ள மதிப்புக்களை உணராமல், நாம் வாழ்ந்து வருகிறோம். நம் கண்முன்னே முத்துக்களும், புதையல்களும் அடிக்கடித் தோன்றினாலும், அவற்றைக் காணும் பக்குவம் இல்லாமல், நாம் குழம்பி நிற்கிறோம்.

இதன் மூலம் நாம் அறிவது என்ன என்றால், கடவுளின் ஞானம் இறையரசிற்காக இந்தச் செல்வத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று நமக்கு வழிகாட்டும். எது உண்மையான மதிப்புள்ள பொருள், செயல் என்று நம்மால் கண்டு பிடிக்க முடியும். அதன் மூலம் இறைவன் தரும் புதையலாம் இறையரசைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் மன்றாடுவோம்.



*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


தாவீதின் மகன் சாலமோன் கடவுளிடம் இஸ்ரயேல் மக்களுக்கு நல்லாட்சி செய்ய நல்ல ஞானத்தை மட்டுமே தனக்கு வரமாகக் கேட்டார். கடவுளும் அவர் கேட்டதை உடனே அருளியது
, மட்டுமல்லாமல் இவ்வுலக்கைச் சார்ந்த எதையும் கேட்கவில்லை என்பதால் இனி அவரைப்போல எவரும் இருக்கவே முடியாது ஆசிகூறினார். உண்மையான ஞானம் இறைவனைப் புரியவும், அறிந்துக் கொள்ளவும் செய்கிறது. எது தேவை, எது தேவையில்லை என்று தெளிவாக்குகிறது. எதைத் தேட வேண்டும், எதை விலக்க வேண்டும் என்ற அறிவுறுத்துகின்ற இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


மனிதன் எவ்வளவு தான் பொருள் கொண்டிருந்தாலும் விண்ணரசில் செல்வத்தைச் சேர்த்து வைக்க மறந்து விடக்கூடாது. கடவுளின் அன்புக்கு உரியவராகும் போது ஆவியானவரின் ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்கின்றது. தான் அழைத்தவரைத் தனக்கு ஏற்புடையவராகித் தம் மாட்சிமையில் பங்கு கொள்ளச் செய்வார் என்பதைப் பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தின் மூலம் தெளிவுப்படுத்துகின்றார். இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.



பதிலுரைப்பாடல்

பல்லவி: உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
திபா 119: 57,72. 76-77. 127-128. 129-130

ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன். நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. பல்லவி

எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். பல்லவி

பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். பல்லவி

உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன். உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. 
 

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் அல்லேலூயா!


*மன்றாட்டுகள்*


1. இறையரசு எனும் புதையலைத் தந்த எம் இறைவா! உம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும், நல்லாட்சி செய்யத் தேவையான ஞானத்தைக் கொடுத்து, எம்மை அரிய நல்முத்தாம் இறையரசில் கொண்டு சேர்க்க தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.



2. அமைதியின் இறைவா! இவ்வுலகில் அமைதி ஆட்சி செய்யவேண்டுமெனில், ஆட்சியில் இருப்போர், அமைதி பெறவேண்டும். அமைதியின் சக்தியை உணரும் அறிவுத்திறன் பெறவேண்டும்.. மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருளும். எங்கள் தலைவர்கள் உண்மையான ஞானம் பெறவேண்டும் என்று மனமுருகி இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

.



3. வானாளாவிய இரக்கம் கொண்ட எம் இறைவா! எம் கிறிஸ்துவ வாழ்வு, மிகுதியான செல்வத்தைக் கொண்டுள்ளது, எம்மிடம் ஒன்றுக்கும் உதவாத பொருள்களை அகற்றி விட்டு, விலை மதிப்புள்ள பொருளளாகிய இறையரசிற்குத் தயார் படுத்தவும், குடும்பத்தினர் அனைவரும் உண்மையான மதிப்பை அறிந்திடவும் ஞானத்தையும், இறைப்பற்றையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



4. . விசுவசிப்போருக்கு வாழ்வாகிய எம் இறைவா! பூமியில் நிலவும் மிக உயர்ந்த அழுத்தம், மிக அதிகமான வெப்பநிலை ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வைரமாக மாறிடும் நிலக்கரிபோல் எம் இளையோர்கள் இவ்வுலகம் தரும் அழுத்ததாலும், வெப்பத்தாலும் திட்டப்பட்டு உம் மணிமுடியில் மின்னிடும் வைரமாய்த் திகழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.









Tuesday, July 18, 2017

பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு 23.07.2017

* (பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு 23.07.2017) *

*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


சாலமோனின் ஞானம். 12:13, 16-19

உரோமையர் 8: 26 -27
மத்தேயு 13: 24-43


 *முன்னுரை*


அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு. நல்ல விதைகளாய்ப் பலன் தரும் சீடர்களாய் மானிட மகனின் அருளாசி வேண்டி இவ்வாலயத்திற்கு வருகை வந்துள்ள உங்கள் அனைவரையும் நூற்றூக்கு நூறு பலம் தரும் அன்பர்களாய் மாறிட மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
மீண்டும் உவமைகளின் மூலம் பேசும் இறைமகன் தன் வயலில் நல்ல கோதுமைக் கதிர்கள் வளர வேண்டுமென்றால், தன்னைச் சுற்றியுள்ள வயல்களிலும் நல்ல கதிர்கள் வளர வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்வுலகில் பலன் தரும் கதிர்களாய் வாழ்ந்திட நம்மை மீண்டுமாய் அழைக்கின்றார். அதற்கான செயல் திட்டங்களாக உள்ளவை (1) நம் விசுவாசத்தை இன்னும் உறுதியோடு வளர்த்தல் , (2) மற்றவர்களின் மன மாற்றத்திற்கு அழைத்தல். (3) உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்துச் சமூகத்தை மாற்றுதல். இன்றைய நற்செய்தியில், இயேசுவும் உவமைகள் மூலம் இதே மூன்று குறிக்கோளை நமக்குப் போதிக்கிறார்.
வெறுப்பு, வன்முறை என்ற களைகள் சூழ்ந்திருக்கும் இவ்வுலகில், நாம் நம்பிக்கையைத் தளரவிடாமல், அன்பு, அமைதி, ஒப்புரவு, மன்னிப்பு என்ற நற்கதிர்களை வளர்க்கும் வரத்தை இத்திருப்பலியில் அமைதியின் இளவரசனாம் இயேசுவிடம் வேண்டுவோம்.



*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


கடவுள் நீதியுள்ளவர் என்றும், எல்லார் மீதும் இரக்கம் உள்ளவராய் இருக்கிறார் என்றும், சரியான தீர்ப்பு வழங்குவார் என்றும் எடுத்துரைக்கிறது. எனவே நீதிமான்கள் மனிதநேயம் கொண்டு மக்களை நடத்த வேண்டும், என்றும் கடவுள் மன்னிப்புக் கேட்டும் எவருக்கும் தவறாமல் மன்னிப்பு வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ள சாலமோனின் ஞானநூலிருந்து எடுக்கப்பட இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை* 


தெளிவான கண்ணோட்டத்தை உரோமைக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தூயஆவியின் செயலைப் பற்றித் தெளிவாக அவர்கள் புரிந்துக் கொள்ளவும் எழுதுகிறார் திருத்தூதர் பவுல். தூய ஆவியானவர் நமக்குப் புதுவாழ்வைத் தருகின்றார். எனவே நம்பிக்கைக் கொள்வோர், பாவம், சாவு இவற்றிலிருந்து விடுதலைப் பெறுகின்றனர். மேலும் நம் ஒவ்வொருவருக்காகவும் தூய ஆவியார் கடவுளிடம் பரிந்துப் பேசுகிறார். தூய ஆவியைப் பெறுவதன் மூலம்தான் நாம் கடவுளின் பிள்ளைகளாக மாற முடியும் என உரோமை மக்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.



*பதிலுரைப்பாடல்*

திபா 86: 5-6. 9-10. 15-16
பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர். 


என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். -பல்லவி

என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! -பல்லவி
என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள்மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். -பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே,  உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1. ஞானத்தின் தொடக்கமே எம் இறைவா! உம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும், தம் சொல்லாலும், செயலாலும் உண்மைக்குச் சான்று பகர,  திருப்பலியில் தன்னை மறைத்து இறைமக்களுக்கு மறுகிறிஸ்துவாகப் பிரதிபலிக்கவும், எடுத்துக்காட்டான வாழ்வு வாழவும் தேவையான ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. படைப்பின் நாயகனே எம் இறைவா! இவ்வுலகம் உம் இறைவெளிப்பாடு என்பதனை நாங்கள் அனைவரும் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவிப் புரியவும், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழவும், அன்பு, மகிழ்ச்சி. பரிவு இவை இன்று மனிதசமுதாயத்தில் நலிவடையாமல் பிறருக்கு உதவிபுரியவும் எடுத்துக்காட்டான வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. குழந்தைகள் விண்ணரசின் சொந்தங்கள் என்று மொழிந்த எம் இறைவா, எம் குழந்தைகள், இளமையில் அதிகமாக உம்மைத் தேடவும்., உம் வர்த்தைகளை வாழ்வாக்கி, தம் சொல்லாலும் திருஅவைக்கும், மனிதகுலச் சமுதாயத்திற்கும். சான்றுப் பகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்..

4. . இளைஞனே எழுந்திரு, எழுந்து ஒளி வீசு என்றவரே! எம் இறைவா! இவ்வலகத் தலைவர்கள் தங்கள் வாழ்வால் எடுத்துக்காட்டான வாழ்வை, பெரும்பாலும் அவர்களால் கொடுக்க முடிவதில்லை. நீரோ, உம் சொல்லும், செயலும் விண்ணகத் தந்தையோடு இணைந்திருந்தது போல, எம் இளையோர் அனைவரும் உம் வார்த்தையை வாழ்வாக்கி, உப்பாக உலகிற்கு ஒளியாகத் திகழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. குடும்பங்களின் தலைவரே எம் இறைவா! இன்றைய நவீன வாழ்விலொன்றுக் கூடிச் செபிக்கவும், உரையாடவும், உறவுகளை மேம்படுத்தவும், மதிக்கவும் நாங்கள் மறந்திருக்கின்றோம். நீர் கொடுத்த இந்த உறவுகள் உண்மையான, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை வழங்கிடவும், குடும்பங்களில் கூடிச் செபிக்கவும், இறை அழைத்தலை அதிகமாக ஊக்குவிக்கவும், எம் குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாறிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்..

www.anbinmadal.org


Thursday, July 13, 2017

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 16.07.2017

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 16.07.2017




*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

எசாயா 55:10-11
உரோமையர் 8: 18-23 
மத்தேயு 13: 1-23

 *முன்னுரை*

அன்புடையீர்,
பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு. நற்செய்தியாளர் மத்தேயு தொகுத்துள்ள உவமைகளிலேயே புகழ்பெற்ற 'விதை விதைப்பவர் உவமையை இன்று கேட்க அழைக்கப்பட்டுள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
கடவுளைப் புரிந்துகொள்வதற்குத் தலைசிறந்த வழி, கதைகள் என்பதை உலகின் எல்லா மதங்களும் உணர்ந்துள்ளன. கதைகளுக்கு உள்ள ஆற்றலை நன்கு உணர்ந்தவர் இயேசு. எனவே, அவர் கடவுளையும், அவரது அரசையும் அவர் கதைகள், மற்றும் உவமைகள் வழியே அறிமுகப்படுத்தினார்.
புகழ்பெற்ற உவமை என்று சொல்லும்போது, கூடவே ஓர் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது. உவமைகள் தானே, கதைகள் தானே என்று ஓர் அலட்சிய மனநிலை நமக்குள் தோன்றும் ஆபத்து உண்டு. நமது அலட்சியப் போக்கை உணர்ந்தவர்போல, 'விதை விதைப்பவர் உவமை'யின் இறுதியில் இயேசு ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்: "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்ற வார்த்தைகளுடன் அவர் தன் உவமையை நிறைவு செய்கிறார்.
விதை விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம், தங்கு தடையேதுமின்றி இறைவார்த்தையை விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம். இறைவார்த்தையை நம் வாய்மொழியாக விதைப்பதைவிட, நமது வாழ்வின் வழியே விதைப்பதில் ஆற்றலோடு செயலாற்றுவோம். உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இறைவன் இந்த நற்பணியில் நமக்கு இன்றைய திருப்பலி வழியாகத் துணைப் புரிவாராக!

*வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*


மழையும் பனியும் நிலத்தை நனத்து எல்லோருக்கும் பலன் தராமல் திரும்பப் போவதில்லை. அதைப் போலவே நாம் என்னதான் தடைகள் விதித்தாலும், இறைவார்த்தை, தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் திட்டவட்டமாகக் கூறுகிறார். அதுவும், இவ்வார்த்தைகளை இறைவனே நேரடியாகச் சொல்வதுபோல் இன்றைய முதல் வாசகத்தில் ஒலிப்பதை கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*

பவுலடியார் இரண்டாம் வாசகத்தில், துன்புறுவதும் அழிவதும், உருவாக்கத்தின் ஒரு பாகம் என்று சொல்கிறார். விதைகள் மண்ணில் விழுந்து மடிந்துத் தான் புதிய செடியாக மாறுகிறது. மீட்பு, துன்பத்திலும், மரணத்திலும் இருந்து வருகிறது. கடவுள் நமக்குத் தூயஆவியின் வழியாக மீட்பைத் தருகின்றார். நாம் நம்மையே இந்தத் திட்டத்திற்கு உட்படுத்திக் கொண்டு, கடவுளிடம் வேண்டி, நம்மை வளர்த்துக் கொண்டால் தான், நாம் முழுமையாகப் பலன் தருவோம். இக்கருத்துகளை மனதில் இருத்திஇவ் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*பதிலுரைப்பாடல்*

பல்லவி: நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன.
திருப்பாடல்: 65:9.9-10.11-12.13 


மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது பல்லவி
நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிரு துவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர் பல்லவி
ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி
புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங் களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! பல்லவி


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*

1. அருள் வளங்களின் ஊற்றாகிய எம் இறைவா! விதைகளைத் தெளிப்பது, இறைவார்த்தையைச் சுமந்து செல்பவரின் கடமை என்பதை திருஅவையிலுள்ள அனைவரும் உணர்ந்து உம் வார்த்தைகளை வாழ்வாக்கிடவும் இதை அடுத்தவர்களுக்கு அறிவிக்கின்ற உம் மகன் இயேசுவின் சீடர்களாய் உழைத்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. மகத்துவமிக்க எம் இறைவா! இறைவார்த்தையை விதைப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக, சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் நிலைவாழ்வுக்கான விளைச்சல்! என்ற கருத்துகளை எங்கள் குடும்பங்களில் செயல்படுத்த உம் ஆவியின் அருள்வரங்களைப் பொழிந்திட இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா, உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களைக் கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்துச் சுயநலமற்ற சேவைகளில் ஈடுபடவும், மக்களின் குறைத்தீர்த்த நல்லாட்சித் தந்திடவும் வேண்டிய வரத்தைத் தர உம்மை மன்றாடுகிறோம்..

4. . ஆற்றல் மிக்க எம் இறைவா! எம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களை நல்ல விளைநிலங்களாக மாற்றி நூறுமடங்கு பலன்களை அளிக்குமாறு செய்து தங்கள் குடும்பத்திற்கும், இச்சமுதாயத்திற்கு ஏற்றமிகு நல்வாழ்வையும், இறைமகன் இயேசுவின் வார்த்தைகளை விதைப்பவர்களாகவும் இவ்வுலகில் வலம் வரத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org



Wednesday, July 5, 2017

பொதுக்காலம் ஆண்டின் 14அம் ஞாயிறு 09.07.2017)





*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


செக்கரியா 9:9-10
உரோமையர் 8:9,11-13
மத்தேயு 11: 25-30



 *முன்னுரை*

அன்புடையீர்,
பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு. இயேசுவின் எளிய நுகத்தை ஏற்று  அவரின் திருவடியில் இளைப்பாற வந்துள்ள இறைமக்களே சோர்வை நீக்கி புத்துயிர் பெற மகிழ்வுடன் இத்திருப்பலியில் பங்கேற்க வரவேற்கிறோம்.
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருபவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாற்றுதல் தருவேன் என்று நம்மை அழைக்கின்றார். ஆம் நம் வாழ்வில் எத்தனை சுமைகளை சுமக்கவேண்டியதாய் இருக்கின்றது. கடன்தொல்லைகள், உடல்நலக்குறைவு, பிள்ளைகளின் படிப்பு, வேலைவாய்ப்புகள், திருமணங்கள், சமுதாய மாற்றங்கள், போராட்டங்கள், அரசியல் மாற்றங்கள் என எத்தனை கவலைகளும், அச்சங்களும் நம்மை ஆடிப்படைக்கின்றன. 
இன்றைய நற்செய்தி வாசகங்கள் உலகம் தேடுகின்ற நீதியையும், வெற்றியையும் அமைதியையும் இளைப்பாற்றியையும் ஆண்டவர் இயேசு எப்படி தருகிறார் என்று எடுத்துக் கூறுகிறது. கிறிஸ்துவின் ஆவியின் வழியில் வாழ முன் வருகின்றவர்கள் இயேசு வாக்களித்த இளைப்பாற்றியை அடைவர் என்பதே இதற்கு சான்று. என் நுகம் அழுத்தாது என் சுமை எளிதாயுள்ளது என வாஞ்சையோடு நம் ஒவ்வொருரையும் அழைக்கின்றார். ஏனென்றால் இயேசு ஒருவரால் மட்டுமே இதய அமைதியை, எளிய வாழ்வை, தூயஆவியின் நிறைவை எல்லாச் சூழல்களிலும் நமக்குத் தர முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இத்திருப்பலியில் இறைஇயேசுவின் அன்பில் இணைந்திடுவோம்.



*வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*

பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த இஸ்ரேயேல் மக்களோடு வந்தவர்களில் ஒருவர் தான் செக்கரியா. நாடு திரும்பிய மக்கள் முன்னால் காட்சி அளித்ததெல்லாம், எழுந்து நிற்க முடியாமல் விழுந்துக் கிடந்த அவர்களது நாகரிகமும், நகரங்களும். அவர்களது பெருமையின் சின்னமாக விளங்க வேண்டிய எருசலேம் ஆலயம், வறுமையின் சின்னமாகக் காட்சியளித்தது.  மக்களின் மனதை அவநம்பிக்கையும் அச்சமும் ஆட்கொண்டன. அந்த நேரத்தில் தான் இறைவாக்கினர் செக்கரியா இஸ்ரயேல் மக்களைப் பார்த்து ”மக்களே, உங்களுக்கு நீதியையும், வெற்றியையும், சமாதானத்தையும் அளிக்க அரசர் ஒருவர் வருவார் என்றார். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

*இரண்டாம் வாசக முன்னுரை*

ஊனியல்பு, தீய ஆவி நம்மிடம் இருக்கும்போது நமக்குத் துன்பம் துன்பமாகத் தோன்றுகிறது. தூயஆவி நம்மிடையே குடிகொள்ளும்போது துன்பம் நீங்கும். சுமை சுகமாகும். ஆதலால் ஒவ்வொருவரும் தூய ஆவியின் வரங்களைப் பெற்றுச் செயல்படவேண்டும் என இன்றைய இரண்டாவது வாசகத்தின் மூலம் உரோமை நகர மக்களைப் பார்த்து அனைவரும் கிறிஸ்துவுக்குள் இணைந்த வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார். நமது தனிப்பட்ட முயற்சியால் செய்ய முடியாத, அசாத்தியமான காரியங்களைக்கூடச் செய்வதற்கான ஆற்றலை இந்தத் தூய ஆவி தருகிறார் என நமக்கு முன்னுரைக்கும் திருத்தூதர் பவுலடியாரின் இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்.

*பதிலுரைப்பாடல்*

பல்லவி: என் கடவுளே, என் அரசே!. உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்
திருப்பாடல்: 145: 1-2, 8-9, 10-11, 13-14


என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.  நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். -பல்லவி

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.  ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். -பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.  அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.  தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். -பல்லவி



*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.


*மன்றாட்டுகள்*

1. மாசின்மையின் ஊற்றாகிய இறைவா! திருஅவையிலுள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் யாவரும் சாந்தமும், மனத்தாழ்ச்சியும் கொண்டவர்களாகவும், தூயஆவியில் வழிநடத்தப்பட்டு உம் மகன் இயேசுவின் சீடர்களாய் இந்நானிலத்தில் அனைத்து மக்களையும் உம்பால் அழைத்துவரும் மக்களாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. பேரின்பப் பரம்பொருளே! எம் இறைவா! நாள்தோரும் நாங்கள் சந்திக்கும் அவலங்களால் ஏற்படும் கவலைகள், மனசோர்வுகள், இயலாமையால் ஏற்படும் தோல்விகள், கோபங்கள் இவைகளால் எங்கள் குடும்பங்களில் உலாவும் பதட்டமான வாழவில் விடுதலைத் தரக்கூடியவர் நீர் ஒருவரே என்று உணர்ந்து எம் பாரத்தை உம்மில் இறக்கிவைக்கவும், அன்பின் நுகமாகிய எளிமையான சுகத்தை அடைந்திடத் தேவையான வரங்களைப் பொழிந்திட இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. . மாசின்மையின் ஊற்றாகிய இறைவா! எம் சமுதாயத்தில் நாங்கள் இழந்த வரும் சகிப்புதன்மை, மனிதநேயம், அமைதி ஆகியவற்றை மீண்டும் நாங்கள் பெற்று மகிழ்ச்சியான, எளிமையான, தூய்மையான வாழக்கை வாழ்ந்திடத் தேவையான உம் ஆசீரை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

4. . பேரின்பப் பரம்பொருளே! எம் இறைவா! எம் இளைய தலைமுறையினர் இவ்வுலகக் கவர்ச்சியால் தங்களை இழந்து, தங்கள் வாழ்வையும், தமக்கு அடுத்திருப்பவர்களையும் ஒரு சுமையாகக் கருதி அல்லல் படும்போது அவர்களுக்குத் தூயஆவியின் வழிகாட்டுதலும், நேரியவழியையும் அமைத்துத் தந்துத் தங்கள் வாழ்வைச் சுகமான சுமையான வாழ்வாக வாழ்ந்திடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org