Wednesday, August 29, 2018

ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு

 ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.இணைச்சட்டம் 4:1-2, 6-82.  
யாக்கோபு 1:17-18,21-22, 273.   
மாற்கு 7:1-8, 14-15, 21-23

திருப்பலி முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க ஆலயத்தில் கூடியிருக்கும் இறைமக்களே!  இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள். பெயரளவில் மட்டும் வாழாமல் உள்ளத்தில் தூய்மை பெற இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது.

கடவுள் தந்த சட்டங்களின் உள்ளார்ந்த அர்த்தங்களை மறந்துவிட்டு அவற்றை சடங்களாக மாற்றினர் இஸ்ரயேல் மக்கள். கடவுளின் பார்வையில் மாசற்றவர்களாகவும், தேவையிலிருப்போருக்கு உதவிடவும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்து கொள்ளவும் திருத்தூதர் யாக்கோபு நம்மை அழைக்கிறார்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா! என்ற தமிழ் புலவரின் வார்த்தைகளையே இறைமகன் இயேசுவும் வாழ்வுதரும் வார்த்தைகளாக நமக்கு இன்று தருகிறர். உள்ளத்திலுள்ள எண்ணங்களே வார்த்தைகளாக வெளியே வருகின்றன.  சட்டங்கள் மனிதனை புனிதனாக மாற்றத்தான். மனிதநேயம் வளர்வதற்க்கும், அர்த்தமுள்ள வாழ்வுக்கு அடித்தளம் உருவாக்குவதற்கும், உள்ளத்தில் தூய்மை பெற்று அதைச் செயலில் வெளிப்படுத்துகின்ற உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழ வரம் வேண்டி இத்திருப்பலி கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்..


வாசகமுன்னுரை:முதல் வாசக முன்னுரை:


முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் நெடும் பணயம் செய்து கானான் நாட்டிற்கு வந்த போது மோசே கடவுளின் சட்டங்களை தொகுத்து வழங்கிய பேருரைகளிருந்து தம் மக்களுக்கு கடவுளின் சட்டங்களை பின்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார். அதுவே  மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும் என்ற வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கடவுளிடம் இருந்தே நல்லவைகள் வருகின்றன. அவர் நல்லவர். சினமற்ற வாழ்வு மேலானது. பொதுநலம் கொண்டு அடுத்தவர்களின் வாழ்வு சிறக்க உழைப்பதே இறைவனுக்கு ஏற்புடையது என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப் பாடல்

திபா 15: 2-3. 3-4. 5

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; 3ய தம் நாவினால் புறங்கூறார். -பல்லவி

தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். -பல்லவி

தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! " தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார் " அல்லேலூயா. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.


உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கும் அன்பு இறைவா! எம் திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் சுயநலமறந்து மனித நேயத்திலும், ஞானத்திலும், அறிவாற்றலில் சிறந்து விளங்க வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா, உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களை கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்து சுயநலமற்ற சேவைகளில் ஈடுபட வேண்டிய வரத்தை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா! எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்து கடவுளின் பார்வையில் மாசற்றதுமான சமயவாழ்வு வாழவும், உலகத்தால் கறைபடாதபடி தம்மை காத்துக் கொள்ள வேண்டிய வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

எல்லாரும் எல்லாம் பெற விரும்பும் அன்பு இறைவா! இச்சமுதாயத்தால் கைவிடப்பட்டு வாடும் அநாதைகள், கைம்பெண்கள் அவர்களின் குடும்பங்கள் சமுதாயத்தில் ஏற்றம் பெற வேண்டியும் அவர்களுக்காய் தன்னலமற்ற சேவை செய்யும் நல் உள்ளகளுக்காகவும் அதற்கானப் பொருளாதர உதவிகள் பெற்றிடவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அனைவரையும் ஆதரிக்கும் எம் இறைவா! இயற்கைப் பேரிடர் காரணமாக அல்லப்படும் எம் மக்களை உம் கரங்களில் ஒப்படைக்கின்றோம். அவர்களுக்கு ஆறுதலும், தேற்றவும் தர, நாங்கள் எடுக்கும் முயற்சிகள் தகுந்த நேரத்தில் கிடைக்கப் பெற்று, புதுவாழ்வு தொடங்க, நிறைவாய் உமதருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..   www.anbinmadal.org

Tuesday, August 21, 2018

ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்

யோசுவா 24:1-2, 15-18
எபேசியர். 5:21-32
யோவான். 6:60-69திருப்பலிமுன்னுரை ஆண்டின் பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இயேசுவின் இனிய நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.

இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் வழியே நமக்கு உணர்த்தப்படும் ஒரு மனிதத் திறமை... அதுதான், முடிவெடுக்கும் திறமை. மனிதக் குலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்தத் திறமையை நமக்கு நினைவுறுத்துவது... இன்றைய வாசகங்களில், யோசுவா, மற்றும் புனித பேதுரு ஆகியோர் கூறும் இரு கூற்றுகள்:

"நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்று யோசுவா சொல்கிறார்.ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" என்ற புகழ்பெற்ற வார்த்தைகளைப் பதிலாகச் சொல்கிறார், சீமோன் பேதுரு. உறுதிகொண்ட நெஞ்சுடன் இருவர் எடுத்த முடிவைப் பறைசாற்றும் கூற்றுகள் இவை.

சீடர்கள் வாழ்ந்துவந்த அந்தப் பாதுகாப்பான வாழ்வை விட, இயேசுவுடன் வாழ்ந்தப் பாதுகாப்பற்ற வாழ்வு அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பைக் கொடுத்தது. இந்த உணர்வுகளைத்தான் பேதுருவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. பேதுருவும், ஏனைய சீடர்களும், இயேசுவுடன் தங்குவதற்கு எடுத்த அந்த முடிவு, சக்திமிகுந்த சாட்சிகளாக இன்றும் வாழ்கின்றனர்.

யோசுவாவைப் போல, பேதுருவைப் போல இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்து நம் வாழ்வின் முடிவுகள் அமைய இறையருளை இறைஞ்சுவோம்.


வாசக முன்னுரைமுதல் வாசக முன்னுரை


இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இனத்தெய்வங்களையும் வழிபட்டு, இருமனத்தோராய் திகழ்ந்தனர். இந்நிலையில் யோசுவா அம்மக்களிடம், "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்" என்று திட்டவட்டமாகக் கூறினார். இதைக் கேட்ட மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கேட்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை


திருத்தூதர் பவுலடியார் இன்றைய வாசகத்தில் எபேசிய மக்களிடம் கிறிஸ்துவையும், திருஅவையையும் கணவன் மனைவியுடன் ஒப்பிட்டு, எவ்வாறு நாம் அன்பு செய்ய வேண்டுமென்று கற்றுக் கொடுக்கின்றார்.
இயேசு கிறிஸ்துவும் திருஅவைப் போல இனிதே வாழ்ந்திடக் கணவன் மனைவியர்க்கு விடுக்கும் அழைப்பைக் கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 15-16. 17-18. 19-20. 21-22


பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். -பல்லவி

நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். -பல்லவி

நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. -பல்லவி

தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; ஆண்டவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.


1.அன்பின் இறைவா! எம் திருஅவையிலுள்ள அனைவரும் முழுமனதுடனும், உறுதியுடனும் ஒருவரை ஒருவர் அன்புச் செய்யவும், அவர்கள் எடுக்கும் முடிவுகளைத் திறம்படச் செய்து இறை இயேசுவின் அன்புச் சீடர்களாகச் சான்றுப் பகரும் வாழ்க்கை வாழத் தேவையான அருள் வளங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.

2.அன்பின் இறைவா! மனிதக் குலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள முடிவெடுக்கும் இந்தத் திறமையை எமக்கு நினைவுறுத்திய யோசுவாவைப் போல, பேதுருவைப் போல எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்து அதனை வெற்றிகரமாகச் செயலாக்க வேண்டிய ஞானத்தையும், நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

3.அன்பின் இறைவா! வாழ்வின் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் இளையோர்களை இப்போது உம் திருபாதத்திற்குக் கொணர்ந்துள்ளோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்துத் தம் வாழ்வின் முடிவுகள் நிலைவாழ்விற்கு வழி வகுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

4.அன்பின் இறைவா! இச்சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமையில் வாடும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகளால் விரட்டப்பட்ட பெற்றோர்கள்! நல்ல உடல்நலனையும், உள்ள அமைதியையும், பாதுகாப்பையும், அன்பையும் பெற்று மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதிநாட்கள் வரை வாழ இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

5.அன்பின் இறைவா! பெரும் மழையால் இன்னலுக்கு உள்ளாகி உடமைகளையும், உறவுகளையும் இழந்துத் தவிக்கும் கேரள மக்களைக் கண்நோக்கியரும். அவர்கள் விரைவில் தங்களின் வாழ்வை நலமுடனும் வளமுடனும் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.                                                          www.anbinmadal.org

Wednesday, August 15, 2018

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் வாரம்

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் வாரம்


இன்றைய வாசகங்கள்:


நீதிமொழிகள் 9: 1-6
எபேசியர் 5: 15-20
யோவான் 6: 51-58

திருப்பலி முன்னுரை:


ஒவ்வோர் ஆண்டும், இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்துவரும் ஞாயிறை, இந்தியத் திருஅவை, ‘நீதி ஞாயிறு’ எனக் கடைபிடித்து வருகிறது. ஆகஸ்ட் 19, இஞ்ஞாயிறன்று, நீதி ஞாயிறைக் கடைபிடிக்கும் வேளையில், நீதிதேவன் இயேசுவின் பெயரால் நல்வாழ்த்துகள்!
நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில், அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெளி மாற்றங்கள் நிகழ்ந்தால், அஃது எந்தப் பயனும் அளிக்காது.
வாழ்வின் பிரச்சனைகளுக்கு மேலோட்டமான, எளிதானத் தீர்வுகளைத் தேடிவந்த இஸ்ரயேல் மக்களிடம் "உலக மீட்புக்காக, சமுதாய மாற்றத்திற்காக நான் என்னையே உங்கள் உணவாக்குகிறேன். என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகி, என் தியாக வாழ்வில் நீங்களும் பங்கேற்றால், நீங்கள் எதிர்பார்க்கும் சமபந்தி ஒவ்வொரு நாளும் நடக்கும், ஒவ்வொருவருக்கும் வாழ்வு நிறைவாகும், ஒவ்வொருவரும் நிறைவுற்றதுபோக, மீதமும் இருக்கும்" என்ற உண்மையை இயேசு சென்ற வாரமும், இந்த வாரமும் சொல்கிறார்.
சமுதாய மாற்றங்களை, நீதி நிறைந்த சமுதாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மிடமும் இந்த மாற்றங்களை உருவாக்க, உன் சதையை, இரத்தத்தை நீ இழக்க வேண்டியிருக்கலாம்... என்ற சவால்களை இயேசு இன்று நம்முன் வைக்கிறார். இயேசுவின் எதிர்பார்ப்புகள் நம்மில் நிகழ நீதி ஞாயிறு, நம் உள்ளங்களில் ஒளிவீசிட இறைவனை இறைஞ்சுவோம்.

வாசக முன்னுரை:முதல் வாசக முன்னுரை:


ஞானம் இறைவனின் கொடை. கடவுளை அன்பு செய்வோர் ஞானத்தைக் கொடையாகப் பெறுவர். அந்த இறை ஞானத்தைச் சுவைத்து மகிழ, பேதமை நீங்கிப் பேரின்ப வாழ்வு வாழ நம்மை அழைக்கும் நீதிமொழிகள் நூலிலிருந்து வரும் முதல் வாசகத்தை கவனமுடன் கேட்டு இறைஞானத்தைப் பெற்றிடுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


இரண்டாம் வாசகத்திலும், தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு, ஆண்டவரின் திருவுளத்திற்கேற்ப நாம் வாழ்வும், இந்த பொல்லாத நாட்களில் ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்துடன் வாழவும், இசையுடன் ஆண்டவரைப் போற்றி நன்றி செலுத்தி வாழவும் நம்மை அழைக்கிறார் புனித பவுல். 


பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 9-10. 11-12. 13-14

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. -பல்லவி

வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? -பல்லவி

அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு! தீமையை விட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.இன்று நீதியின் ஞாயறைக் கொண்டாடும் எம் திருஅவை நீதிக்குச் சாட்சியாகவும், இயேசுவின் வார்த்தையின்படி அக இருள் அகற்றி ஞான ஒளி எங்கும் ஏற்றிட தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.வாழ்நாள் முழுவதும் நிரந்தர மகிழ்ச்சியைத் தேடும் எங்களுக்கு இயேசுவின் உடலும் இரத்தமும் எங்கள் உள்ளத்திற்கும், உடலுக்கும் அரும்மருந்தாக மட்டுமல்லாமல், நிறை வாழ்வைத் தரும் என்பதனை உணர்ந்திட இறை ஞானத்தைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.சூழ்நிலையின் கைதிகளாகி துயரக் கடலில் வீழ்ந்து, நிலை வாழ்வைத் தேடும் நமக்குத் தேவையான நல்ல வழியை நற்கருணை ஆண்டவர் காட்டுகின்றார் என்பதனை உணர்ந்து, எம் இளைய சமுதாயம் உம்மை நாடிவர தேவையான இறைஅச்சத்தையும், ஞானத்தையும் வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.தம் வாழ்வில் வறுமை, நோய் நோக்காடு, உறவின் முறிவுகள், விரிசல்கள். பிசகுகள், மனஇறுக்கங்கள், பாவங்கள், பலவீனங்கள் போன்றவற்றால் வாழ்விழந்த  எளியோரை கரம் தூக்கிவிட எமக்கு நல்மனதினையும், அவர்தம் வாழ்வு ஏற்றம் பெறவும் உமது அருளைப் பொழிந்தட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.காலத்தை முற்றும் பயன்படுத்தி உமது நற்செய்திக்குச் சான்று பகரும் வகையில் நாங்கள் வாழவும், பிறரை அவ்வாறு வாழ நாங்கள் தூண்டும் நற்சாட்சிகளாய் வாழவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


Tuesday, August 7, 2018

ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் வாரம்

ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் வாரம்
இன்றைய வாசகங்கள்

1 அரசர்கள் 19: 4-8
எபேசியர் 4: 30 - 5: 2
யோவான் 6: 41-51

திருப்பலி முன்னுரை:

ஆண்டின் பொதுக்காலம் 19ம் ஞாயிறு நற்கருணை விருந்தில் பங்கெடுக்க வந்துள்ள இறை இயேசுவின் நண்பர்களே உங்கள் அனைவருக்கும் இயேசுவின் திருப்பெயரால் இனிய நல்வாழ்த்துகள்.

பிறப்பு என்று என்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று இருந்தே தீரும் என்பது இயற்கையின் நியதி. காலத்தின் கட்டாயம். இதற்கு யாரும் விதிவிலக்குப் பெற முடியாது. ஆனால் நம்மைச் சாகாமைக்குஇட்டுச் செல்லும் வழியையும் அந்த வழியில் உதவும் உணவையும் பற்றி இன்றைய வாசகங்கள் பேசுகின்றன.

இயேசுவை நாம் உண்டால் மட்டும் போதாது. நாம் இயேசுவாக மாற வேண்டும். என்னை உண்போர் என்னால் வாழ்வர் என்ற வார்த்தை அந்த உண்மையை உணர்த்துகிறது. வாழ்வது நானல்ல. இயேசுவே என்னில் வாழ்கிறார் என்று கூற வேண்டும். எனவே இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு, அவர் தந்த அருள்வாக்கைக் கடைப்பிடித்து, அவரது திருவுடலை உண்டு, சாகா வரம் பெற்றவர்களாக நாம் வாழ்வோம். அதற்காக இத்திருப்பலியில் இறைவனிடம் மன்றாடுவோம்.


வாசக முன்னுரைமுதல் வாசக முன்னுரை


போலி தெய்வங்களோடும் அவற்றை வழிபடும் மனிதரோடும் மேற்கொள்ளும் போராட்டம் நீண்டது என்றும், அப்போராட்டத்திலிருந்து தப்பித்துச் செல்லாமல், அதைத் துணிவுடன் சந்திக்க, இறைவன் நமக்குத் தேவையான சக்தியை, தன் வானதூதர் வழியாக, உணவாக வழங்குவார் என்று இறைவாக்கினர் எலியாவின் வழியாக இன்றைய முதல் வாசகம் சொல்லித் தருகிறது.

இரண்டாம் வாசக முன்னுரை


மீட்பு நாளை முன்னிட்டு நாம் மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக இருக்கும் தூயஆவியாரை வருவிக்காதீர்கள். தீமை அனைத்தையும் விட்டுவிடுங்கள். நன்மை செய்து பரிவு காட்டுங்கள். இறைஇயேசுவைப் போல் அன்பு கொண்டு வாழுங்கள் என்ற திருத்தூதர் பவுலடியார் எபேசியருக்கு எழுதிய  திருமுகத்தின் வழியாக விடுக்கும் அழைப்பைக் கவனமுடன் கேட்போம். அதனை வாழ்வாக்குவோம்.

பதிலுரைப் பாடல்


திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி

ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். -பல்லவி

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.தோழமையின் நாயகனே எம் இறைவா! எம் திருத்தந்தைத் தொடங்கிப் பொதுநிலையினர் வரை அனைவரும் கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டு அவருடைய வார்த்தையின்படி நடந்து அவருடைய திருவுடலை உண்டு நிலைவாழ்வு பெற்றுக்கொள்ளத் தேவையான இறைப்பற்றுதலும்,
ஆவியாரின் துண்டுதலும் பெற வேண்டிய அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்களை நீதியுடன் வழிநடத்தும் வெற்றி வேந்தனே! இன்றைய சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் நீங்கிச் சோம்பித் திரியாமல் எங்கள்
கடின உழைப்பின் மூலம் குடும்பங்களின் வாழ்வு மலரவும், ஒவ்வொரு குடும்பமும் மனுகுலத்தின் புதையல் என்பதை உணர்ந்து, உம்
பணியாளராக வாழ வேண்டிய வரங்களைத் தரும்படியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3.இன்றைய நவீன காலத்தில் உலகில் ஏற்படும் நவீன மாற்றத்திற்குத் தங்களையே இழந்துக் கலாச்சாரச் சீர்கேடுகள், சமூகத்திற்கு எதிரான தீய சிந்தனைகள் இளமையில் இறைபிரசன்னத்தை உணராமல் எதிர்கால வாழ்வை இழந்த எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும்
கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைப் பின்பற்றி வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.உம் பேரன்பால் உறவுகளைப் பேணிக்காக்கும் உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் உமது விழுமியங்களை உணர்ந்துப் பணி செய்யவே என்ற உன்னத நோக்கத்தை வாழ்வில் கடைபிடித்து மக்களின் நல்வாழ்வில் சுயநலமின்றிக் கவனம் செலுத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

5. வாழ்வை வெற்றியாக்கும் விண்ணகத் தந்தையே! மனிதருடைய வழியோ சுயநலத்தின் வழி. ஆனால் கடவுளின் வழியோ பொறுமையின் வழி, தாழ்ச்சியின் வழி என்பதை அறிந்து அடுத்தவன் வாழ்ந்தால் தானும் வாழ முடியும் என்ற நல்லெண்ணத்தை எம் இளையோரின் உள்ளத்தில் பதிவு செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.