Thursday, June 29, 2017

பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு 02.07.2017

* (பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு 02.07.2017) *


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

2 அரசர் 4:8-11,14-16அ
உரோமையர் 6:3-4,8-11
மத்தேயு 10: 37-42

 *முன்னுரை*

அன்புடையீர்,
பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறைக் கொண்டாட இறை அழைப்பை ஏற்று நம் ஆலயத்தில் ஒருமனதோராய் ஒன்றிணைந்து வந்துள்ள இயேசுவின் சீடர்களாகிய உங்களை அன்புடன் இத்திருப்பலிக்கு வரவேற்கிறோம்.
கடந்த சில வாரங்களாக இயேசுவின் சீடராக வாழ, மாற விரும்புவோருக்கு இயேசு அளித்த அறிவுரைகளையும் ஆறுதல்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் அதன் வெகுமதிளைப்பற்றியும் திருத்தூதர் மத்தேயு எடுத்துரைக்கின்றார். இயேசு கூறுவது கடுமையாயாக் தோன்றினாலும் அதற்கான பரிசின் சிறப்பைப் பதிவுச் செய்கிறார். தன் சீடர்களை ஏற்றுக்கொள்பவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்கிறார்கள். இயேசுவை ஏற்றுக்கொள்பவர்கள் தந்தையாம் கடவுளையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்கான கைம்மாறு பெறாமல் போகார் என்பதே ஆகும்.
இன்றைய நற்செய்தி கிறிஸ்தவ வாழ்க்கையில் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இயேசுவின் பெயரில் ஒருவரை வரவேற்பது என்பது இயேசுவையே நாம் வரவேற்பது போல் ஆகும். எனவே நம் அன்றாட வாழ்வில் செய்தியைக் கொண்டு வருகின்ற தூதரை ஏற்பதுவும் மற்றும் இறையன்பின் சாட்சிகளாக வாழ்வதும் நமது கடமையாகும். இந்த விருந்தோம்பல் அளவில் சிறிதாக இருந்தாலும் அதற்கும் கைம்மாறு நம் இறைவன் தருவார் என்று அவர் அளித்த நம்பிக்கையான வார்த்தைகளை உள்ளத்தில் பதிவு செய்து இத்திருப்பலியில் இறைஇயேசுவில் இணைந்திடுவோம்.

*வாசகமுன்னுரை**முதல் வாசக முன்னுரை*

இன்றைய முதல் வாசகம், எலிசாவின் காலத்தில் நடைப்பெற்ற நிகழ்வுகளை எடுத்துரைக்கிறது. சூனேம் என்ற நகரின் வசதிபடைத்த பெண் இறைவாக்கினருக்குப் பொருளாதார வகையில் உறுதுணையாக இருக்கிறார். ஆனால், இவருக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை. அவரின் கைம்மாறுக் கருதாத உதவியைக் கண்டு அவருக்குக் குழந்தைப் பேற்றினை அளிக்கிறார். ஆனால் அக்குழந்தையைத்தான் சிறிதுக் காலத்தில் இறந்தபோது உயிருடன் எலிசா எழுப்புகிறார். இந்த நிகழ்வுகளை நாம் 2 அரச 4-ஆம் அதிகாரத்தில் வரும் இந்நிகழ்வைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*

இன்றைய இரண்டாவது வாசகத்தின் மூலம் கிறிஸ்துவின் வழியாகவே நாம் நிறைவாழ்வை அடைய முடியும் என்பதைப் பவுலடியார் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார் மனிதகுலம் முழுவதும் பாவத்திற்கு அடிமைப்பட்டுள்ளது. எனவே, எல்லாருக்குமே மீட்பு தேவை. புதிய வாழ்வு என்பது பழைய வாழ்வைப் போன்றதல்ல மாறாகத் தூய ஆவியின் கனிகளை, கொடைகளை அடிப்படையாகக் கொண்டது எனவே, உரோமை நகர மக்களைப் பார்த்து அனைவரும் கிறிஸ்துவுக்குள் இணைந்த வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார்.இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்..

*பதிலுரைப்பாடல்*

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
திருப்பாடல்: 89: 1-2, 15-16, 17-18

ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி

விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். பல்லவி

ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது. நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர். பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்”.  அல்லேலூயா

*மன்றாட்டுகள்*

1. உலகைப் படைத்தாளும் இறைவா! திருஅவையிலுள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் இறைஊழியர்களையும் மதித்து நடக்கவும், அவர்களுக்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்யதோடு மட்டுமல்லாமல் அவர்களை அனுதினமும் எங்கள் செபத்திலும், பொருளாதாரத்திலும் தாங்கி அவர்கள் அனைவரோடும் இணைந்து வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம் பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா! இறைப்பணி என்பது சவால்கள் நிறைந்த்து. தங்களின் பணிவாழ்வைச் சிறுவட்டத்திற்கு அடைக்கிவிடாமல் அனைவரையும் அன்பால் ஏற்று வாழவும். தமக்குக் கிடைக்கும் ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் கண்டு மலைத்துவிடாமல் தொடர்ந்து துணிந்துத் தம் பணிவாழ்க்கையில் வெற்றிவாகைப் பெற்றிட உம் இறைபணியாளர்களுக்குத் தேவையான வரங்களைப் பொழிந்திட இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. பொறுமையின் சிகரமே எம் இறைவா! உழைப்பின் பயனை அடையப் பொறுமையையும், துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தையும், கிறிஸ்துவ வாழ்வு என்பது சவால்களை உள்ளடக்கியது என்பதை எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உணர்ந்து வாழ்ந்திடவும், இறுதியில் நிலைவாழ்வு என்னும் மகிழ்ச்சியைப் பெற்றிடத் தேவையான உம் ஆசீரை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

4. பரிவன்புமிக்கத் தந்தையே எம் இறைவா! எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும், தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.www.anbinmadal.org


Thursday, June 22, 2017

பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு 25.06.2017

* (பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு 25.06.2017) *

*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

எரேமியா 20:10-13
உரோமையர் 5:12-15
மத்தேயு 10:26-33

 *முன்னுரை*

அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு. சிட்டுக் குருவிகளை விட மேலான விலையேறப்பெற்றவர்களாகிய இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்
இன்றைய நற்செய்திகளில் ஆழமாக நம் இதயங்களில் பதிவு செய்யப்படும் செய்தி எதுவென்றால் அஞ்சாதீர்கள். இறைவனிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள். அவர் நமக்கு அடைக்கலமும், ஆற்றலுமாய் உள்ளார். இடுக்கண் வரும் நேரங்களில் அவர் நமக்கு உற்றத் துணையாக இருப்பார் என்பதே!. திருப்பாடல் 23யில் கூறியது போல அவர் நல்லாயன். பசும்புல் தரையில் சேர்ப்பார். காரிருல் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் எனக்குப் பயதே இல்லை என்பதை உணர்ந்தோம் என்றால் நாம் தைரியம் பெறவோம். ஏனெனில் நம் ஆண்டவர் கண்ணுக்கு நாம் விலையேறப்பட்டவர்கள் மதிப்புக்குரியவர்கள். எனவே இறைவனின் மாறா அன்பில் சந்தேகமின்றி நம்பிக்கைக் கொள்வோம். அச்சம் மனிதனைக் கோழையாக்குகின்றது. அன்பு மனிதனை மனிதனாக்குகிறது. எனவே அச்சத்திலிருந்து விடுபட்டு இறைவனின் அன்புக் கலந்திட இத்திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.


*வாசகமுன்னுரை*

 

*முதல் வாசக முன்னுரை*

இன்றைய முதல் வாசகத்தில், இறைவனின் செய்தியை எரேமியா, அரசனிடம் எடுத்துரைத்தபோது அரசனோ அச்செய்திக்குச் செவிமடுப்பதற்குப் பதிலாக எரேமியாவை தேசத்துரோகி என முத்திரைக் குத்தி, துன்புறுத்த ஆரம்பித்தான். ஆனால் இந்தக் கொடூரமான பிரச்சனைகள் மத்தியில் எரேமியா ஓடி ஒளிந்தாரா? இல்லை. உறுதியான மனநிலையோடு எதிர்க்கொண்டார். இதே நம்பிக்கையில் நாமும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் உரோமையருக்கு வலியுறுத்துவதாவது ஒரு மனிதன் வழியாகப் பாவம் இவ்வுலகிற்கு வந்தது. ஒருவர் செய்தக் குற்றத்தால் பலரும் இறந்தனர். கடவுளின் அருளாலும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாகக் கிடைத்தது என்பதே! இக்கருத்தை நம் மனதில் பதிவு செய்யக் கவனமுடன் கேட்டுக் கேட்போம்..

*பதிலுரைப்பாடல்*

பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.
திருப்பாடல்: 69: 7-9, 13, 16, 32-34

ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி

ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும் பல்லவி

எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. வானமும் வையமும்; கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்”.  அல்லேலூயா..

*மன்றாட்டுகள்*


1. மகத்துவமிக்க இறைவன்! இன்றைய உலகில் உமது திருஅவை எதிர்க்கொள்ளும் எல்லா எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்திக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் இயேசுவின் விழுமியங்களையும், இறைசார்புதன்மைகளையும் பின்பற்றி வாழ்ந்திடத் தேவையான மனவலிமையும், துன்பங்களை வெல்லும் உறுதியும் பெற்று வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா! திகிலான இவ்வுலகில் தினமும் அஞ்சாதீர்கள் என்று எங்களைத் திடப்படுத்தி, எங்கள் குடும்பங்கள் அனைத்தும் கிறிஸ்துவின் அருள்கொடைகளால் நிலைத்துநின்றுச் சவால்களை வென்று வெற்றிவீரர்களாய், இயேசுவின் அன்புச் சீடர்களாய் இவ்வுலகில் வலம் எமக்கு உம் ஆற்றலைத் தர வேண்டும்மென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. மகத்துவமிக்க இறைவன்! இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் ஒளியும் மீட்புமான இறைவா! இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின் அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Thursday, June 15, 2017

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா (18.06.2017)
*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


இணைச் சட்டம் 8:2-3, 14ஆ-16அ
1 கொரிந்தியர் 10:16-17
யோவான்  6:51-58

 *முன்னுரை*

அன்புடையீர்,
இன்று திருச்சபைக் கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாட அன்புடன் அழைத்து வந்துள்ளது.  நமக்கு இயேசு கிறிஸ்து வழங்கியுள்ள அன்புக்கொடை தான் அவரது திருவுடலும், இரத்தமும் என்பதை உணர்ந்து இத்திருப்பலியில் பங்கேற்போம்.
அன்பைப் பல ஆயிரம் வழிகளில் நாம் உணர்த்தலாம். அந்த வழிகளிலேயே மிகவும் சிறந்தது, நாம் அன்புக் கொண்டவருடன் தங்கி இருப்பது. பரிசுகள் தருவது, வார்த்தைகளில் சொல்வது, செயல்களில் காட்டுவது என்று பல வடிவங்களில் அன்பு வெளிப்பட்டாலும், பிறருடன், பிறருக்காக முழுமையாகப் பிரசன்னமாகி இருப்பதே அன்பு. இந்த முழுமையான பிரசன்னம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் தொடர முடிந்தால், அது அன்பின் உச்சம்.
எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம் உடலோடு கலந்து ஒன்றாகிவிடும். நம் இரத்தமாக, தசையாக, எலும்பாக,  நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படைக் குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை உணர்ந்திடுவோம். இந்த எளிய உணவில், நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவில் இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை.
உறவுகளின் உச்சக்கட்ட, இறுதிக்கட்ட வெளிப்பாடே இயேசு தனது உடலையும் , இரத்தத்தையும் நமக்கும் கொடுத்தது. வாழ்வின் உணவை, ஒன்றிப்பின் உணவை உண்டு  கிறிஸ்துவின் வாழ்வோடு ஒன்றித்திருப்போம். இதற்காக இன்றைய இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

*வாசகமுன்னுரை**முதல் வாசக முன்னுரை*

இன்றைய முதல் வாசகத்தில், தந்தையாம் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கடினமான காலங்களில், பாலைவனத்தில், அவர் தண்ணீரும்,  உணவும் தந்தது போல, நமக்கும் கொடுப்பார். நமது நம்பிக்கையற்ற வாழ்விலும், சோதனைக் காலங்களிலும் கூட , இஸ்ரேயலருக்குச் செய்தது போல, கடவுள் நமக்கு எல்லாம் செய்வார். உண்மையான கிறிஸ்துவின் பிரசன்னம் மூலம், நமக்குத் தேவையானவற்றைத் தந்தை கடவுள் கொடுக்கிறார் என்பதை வலியுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

.*இரண்டாம் வாசக முன்னுரை*

நற்கருணையில் நாம் இயேசுவோடு இணைந்திருப்பதை இன்னும் கிறிஸ்துவின் உடலோடு, இவ்வுலகில் உள்ள எல்லா மக்களோடும் நமது இணைப்பை அதிகமாக்குகிறது என்று சொல்கிறது. அதன் மூலமாக நமக்குத் தேவையானதை இறைவன் கொடுக்கிறார். மேலும், இந்த இணைப்பில், இயேசு நமக்கு உறுதியளித்தது போல, நமக்கு விண்ணக வாழ்வு நமக்கு முழுமையாகக் கிடைக்கவிருக்கிறது. இக் கருத்துக்களை கவனமுடன் கேட்டு நம் உள்ளத்தில் பதிவுசெய்வோம்.

*பதிலுரைப்பாடல்*

பதிலுரை: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!.
திருப்பாடல்கள்  147: 12-13, 14-15, 19-20

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!  அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பதிலுரை

அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.  அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பதிலுரை

யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.  அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பதிலுரை

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர்.  அல்லேலூயா

*மன்றாட்டுகள்*

1.அன்பின் ஊற்றான இறைவா!திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவருக்கும் உமது மகனின் திருவுடல், திருஇரத்தமும் எம் வாழ்வின் நிறைஉணவாகவும், உடலுக்குத் திருமருந்தாகவும், ஒன்றிப்பில் அனைவருக்கும் ஊக்கமருந்தாகவும் செயல்பட்டு இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. உறவுகளின் ஊற்றான இறைவா! தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருநாளன்று, எங்கள் குடும்பங்களின் உள்ள அனைவரும் மக்களின் நல்வாழ்வுக்கு ஏதோ ஒரு வகையில் தம்மையே வழங்கும் வழிகளையும் தன்னலமற்ற தொண்டுள்ளமும் எமக்குத் தர வேண்டும்மென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கத்தின்  ஊற்றான இறைவா! உலகெங்கும் எழுந்துள்ள இயற்கைச் சீற்றங்களால் துயரத்திலுள்ள உம் மக்களைக் கண்நோக்கும். அவர்களின் துயரங்களைத் துடைத்து வெள்ளங்களினாலும், விபத்துக்ளினாலும், சிதைந்துபோன குடும்பங்கள் மீண்டும் தழைத்தோங்கவும், இழப்புகளினால் வாடிவருந்துவோர்கள் அனைத்தையும் மீண்டும் நிறைவாய் பெற்றிட வேண்டிய வரங்களைத் தந்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கொடைகளின் ஊற்றான இறைவா! இப்புதிய கல்வியாண்டில் முதல் முறையாகப் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் சிறார் முதல் தங்கள் இறுதிப் படிப்பை முடிக்க உள்ள எம் இளையோர் வரையுள்ள அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவர்களுக்கு நல்ல ஞானத்தையும், ஞாபக சக்தியையும், இறையச்சத்தையும் அளித்து, சிறந்த படைப்பாக இவ்வுலகில் வலம் வர உம் அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.                                                    www.anbinmadal.org

Wednesday, June 7, 2017

மூவொரு இறைவன் பெருவிழா (11.06.2017)*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


விடுதலைப் பயணம் 34: 4-6, 8-9

2 கொரிந்தியர் 13:11-1 3
யோவான்  3:16-18

 *முன்னுரை*


அன்புடையீர்,
கடந்த ஆறு வாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நாம் விழாக்களைக் கொண்டாடி வந்தோம். இவ்விழாக்களின் சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். "அன்பைக் காண முடிந்தால், மூவொரு இறைவனையும் காண முடியும்" என்று அந்த இறைவனைப்பற்றி, புனித அகுஸ்தின் அவர்களின் கூற்றுக்கேற்ப இறைஅன்பில் இணைந்து இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் கூறியது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. இயேசுவின் காலம்வரை இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை, தந்தை, மகன், தூய ஆவியார் என்ற ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்?
உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய இன்று நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித் தர வேண்டும் என்று இன்று இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*

இன்றைய முதல் வாசகத்தில் விடுதலைப்பயணத்தின் போது “என் மக்களே” என்று தாம் அழைத்த இஸ்ரயேல் மக்களை இறைவன் மோசேயின் தலைமையில் எகிப்து நாட்டு அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்து வாக்களிக்கப்பட்ட வளமான பூமியில் வழிநடத்துகையில் ஏற்பட்ட நிகழ்வுகளில் ஒன்றைப் பற்றிய செய்தியை நாம் இப்போது செவிமெடுக்க இருக்கிறோம்.
இறைவன் எத்தகைய மகத்துவம் மிக்கவர் என்பதையும் இறைவனால் தலைமைப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்ட மோசேயின் குணநலன்கள் எத்துணைச் சிறப்பானவை என்பதையும் கவனமுடன் வாசிக்கக் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*

பிரிவு மனப்பான்மை கொண்டு சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டிருந்த கொரிந்து நகரமக்களை மூன்றாம் முறையாகச் சந்தித்து, நேரில் அவர்களுக்கு அறிவுரைக் கூறுமுன், திருத்தூதர் பவுல் எழுதும் இரண்டாம் திருமுகத்திலிருந்து வரும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கொரிந்து மக்களின் வாழ்க்கை நெறிப்படுத்தப்பட அறிவுரைகளைத் தாங்கிய திருத்தூதரின் வார்த்தைகளையும், அன்பு மேலோங்கி அவர் வழங்கும் வாழ்த்துரையையும் இப்போது வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.


*பதிலுரைப்பாடல்*


பல்லவி: என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்.
திருப்பாடல்கள் தானி. 1: 29-33

எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி

உமது தூய மாட்சிவிளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக. உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர். கெருபுகள்மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி

உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப்பெறுவீராக. உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா

*மன்றாட்டுகள்*

1.அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது ஒன்றிப்பிலும், அன்பிலும் உம்மை உய்த்துணர்ந்தவர்களாய் அன்பிலும், ஒற்றுமையிலும் நிறைவாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.


2. உறவுகளின் ஊற்றான இறைவன்! எங்கள் குடும்பங்களின் உறவுகளிலேயே மிக அதிகமாகப் பழுதடைந்திருப்பது பெற்றோர்மீது, அதுவும், வயதானப் பெற்றோர்மீது நாம் கொண்டுள்ள உறவு. இந்த உறவை மீண்டும் அலசிப் பார்க்க, பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய, உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் எமக்குச் சொல்லித் தர வேண்டும்மென்று உம்மை மன்றாடுகின்றோம்.


3. அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா! உலகெங்கும் எழுந்துள்ள உள்நாட்டுப் போரினால், வன்முறையாலும் பல்லாயிரம் குடும்பங்கள் சிதைந்துள்ளன. உறவின் ஊற்றான மூவொரு இறைவா! அங்கெல்லாம் அமைதியை விரைவில் கொணர வேண்டும் என்றும், சிதைந்துபோன குடும்பங்கள் மீண்டும் இழந்துபோன உறவுகளில் பலப்படவும், அன்பில் மேன்படவும் நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. உறவுகளின் ஊற்றான இறைவன்! இப்புதிய கல்வியாண்டில் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் எம் இளையோர் அனைவரையும் புதுப்படைப்பாய் மாற்றி, தங்கள் பெற்றோர்களின் துயரங்களை உணர்ந்துப் படிப்பிலும், நல்லெழுக்கத்திலும் சிறந்து விளங்க ஞானத்தையும் புத்தியையும் அன்பையும் அவர்களுக்கு வழங்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


                                                                  www.anbinmadal.org