Wednesday, February 27, 2019

பொதுக்காலம் ஆண்டின் எட்டாம் ஞாயிறு

 *பொதுக்காலம் ஆண்டின்  எட்டாம் ஞாயிறு**இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


சீராக் ஞானம் 27-4-7
1கொரிந்தியர் 15: 54-58
லூக்கா 6: 39-45

*திருப்பலி முன்னுரை*


பொதுக் காலத்தின் எட்டாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உவமையின் வாயிலாகப் பல அறிவுரைகளை நம் மனதில் பதிவு செய்கின்றார். நாம் அடிக்கடிப் பிறருடைய குற்றங்களை மிகைப்படுத்தி அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்கின்றோம், அவ்வாறு செய்வதற்கு நமக்கு உரிமையில்லை என்கிறார் இயேசு கிறிஸ்து. ஏனெனில் நம்மிடத்தில் கணக்கற்ற குற்றங்கள் உள்ளன. முதலில் நம் கண்ணில் உள்ள மரக்கட்டயை எடுத்துவிட்டு அதன்பின் மற்றவர் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க முன்வரவேண்டும்.
தனது நிலையை அறியாமல் அடுத்தவர்களைக் குறைகூறும் மனிதர்கள் ஒரு விதத்தில் மனநோயாளிகள் எனலாம்.

தன்னையே முழுவதும் அறிவதுதான் வாழ்க்கையின் முதற்படி. தன்னை முழுமையாகப் புரிந்தவன் பிறரையும் புரிந்துக் கொள்வான். ஒருவன் தன்னையே நன்கு புரிந்துகொண்டால்தான் நிறை, குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். தான் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பவன் தான் பிறருக்கு வழிகாட்ட முடியும். இருளைப் பழிப்பதைவிட ஒளியேற்றுவதே மேல் என்பதை உணர வேண்டும்.


தன்னிடம் இருக்கும் தவற்றை அறியாது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் இன்று அதிகம்.முதலில் நாம் திருந்துவோம்; பிறகு மற்றவர்கள் திருந்த அறிவுரைகள் சொல்வோம், வழிக் காட்டுவோம். இத்திருப்பலியில் உளமாறக் கலந்து மாற்றம் காண்போம்.*வாசகமுன்னுரை**முதல் வாசக முன்னுரை*


மனிதனுடைய வார்த்தைகள் தான் மனதிலுள்ள எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன. "சல்லடையில் சலிக்கின்ற போது உமி தங்கிவிடுவது போல, மனிதரின் பேச்சில் மாசு படிந்து விடுகிறது. இன்றைய முதல் வாசகத்தில் சீராக்கின் ஞான நூல் நாம் பேசுவதற்கு முன்னால் நம்மையே நாம் சோதித்துப் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றது. இதனைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


திருத்தூதர் பவுலடியார் கொரிந்தியர்ருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் வழியாக அவர்களுக்குச் சாவைப்பற்றி ஏற்பட்ட அச்சத்தை நீக்குகிறார். எப்படி ஒரு விதையானது மண்ணில் மடிந்து மீண்டும் உயிர் பெற்று எழுகிறதோ அதைப் போல் நாமும் கிறிஸ்துவில் மரித்து இறுதிநாளில் சாவை வெற்றிக் கொண்டு அவரைப்போல உயிர்த்தெழுவோம் என்று நம்பிக்கைத் தரும் அவரின் வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.*பதிலுரைப்பாடல்*

திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று.

ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. பல்லவி

நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். பல்லவி

அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;  `ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். பல்லவி
*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


 அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.

*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*


1. நலன்களுக்கெல்லாம் தொடக்கமும் நிறைவுமாகிய இறைவா! எம் திருஅவையில் உள்ள அனைவரும் எத்தகைய துன்பங்கள் சோதனைகள் வந்தாலும் இறை நம்பிக்கைக் குறையாமல் உமது அன்பின் சாட்சிகளாக நற்செய்திகளின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வாக மாற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியாக வாழ்ந்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப் பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா! எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம் வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம் மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பரிவன்பமிக்க எம் தந்தையே, இறைவா! எம் பங்கிலுள்ள ஏழைகள், திக்கற்ற எளியோர்கள், வறியோர்கள், முதியோர்கள், அனாதைகள் ஆகிய அனைவருக்கும் இரக்கம் காட்டும். அவர்கள் நோய்நெடியின்றி வாழ உலக நோயாளர்கள் தினத்தில் சிறப்பாக அவர்களுக்கு நலம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நம்பிக்கையின் புகலிடமே! எம் இறைவா! குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம், சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் அறிந்து அதன்படி பிறருடன் உன்னதப் பண்புடன் நடந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5 .எம் முன்னோருக்கு வழிகாட்டி நடத்திய தெய்வமே! எம் இறைவா! கல்வியாண்டு இறுதிதேர்வை எழுதி வரும் எம் அன்பு பிள்ளைகளுக்காக உம்மிடம் வேண்டுகிறோம். படிப்பதற்கு நல்வழிகாட்டி, அவற்றை மறக்காமல் சரியான விடைகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, சமூகத்தில் உயர் நிலைக்கு வரத் தேவையான ஞானத்தையும், உம்மில் நம்பிக்கைப் பெற்றவும் உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..


www.anbinmadal.org

Sunday, February 17, 2019

பொதுக்காலம் ஆண்டின் ஏழாம் ஞாயிறு

 *பொதுக்காலம் ஆண்டின் ஏழாம் ஞாயிறு  *


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

சாமுவேல் 26: 2, 7-9, 12-13, 22-23
1கொரிந்தியர் 15: 45-49
லூக்கா 6: 27-38

*திருப்பலி முன்னுரை*


பொதுக் காலத்தின் ஏழாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே! உங்களை அன்புடன்வாழ்த்துகிறோம்.

இன்றைய வாசகங்கள் நம் மனதில் அன்பை விதைக்கின்றன. இறைமகன் இயேசுவின் விழுமியமாகிய அன்பைத் தம் வாழ்வில் நிலைநாட்டி, அவரே நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவரின் முக்கியக் கட்டளையாகிய உன்னைப்போல் உன் அயலானை நேசி. அவர் உமது எதிரியாக இருந்தாலும் அன்புச் செய். அவருக்காய் இறைவனிடம் மன்றாடு என்பதே! அதற்கான நம் வாழ்நாள் முன்னோடித் தான் மக்களின் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். தன்னைச் சுட்டவனை மன்னித்துத் தன் நண்பனாக ஏற்றுக்கொண்ட அவர், அலி அஃகாவைச் சிறையில் சந்தித்து இறைமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தினார்.

நாம் புனிதராய் இருப்பதுபோல நீங்களும் புனிதராய் இருங்கள் என்று இறைவன் அழைக்கின்றார். புனித வாழ்வு என்பது பிறரன்பைப் பொறுத்தே அமைகின்றது. தவறுக்குத் தவறு செய்யாமல், தீமைக்குத் தீமை செய்யாமல் பிறரை மன்னிக்கும் மேலான நிலைக்கு உயர்ந்து வர இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இத்தகைய நல்ல இதயம் உள்ளவர்களாக மாறும் போதுதான் நாம் கடவுளைப் போலத் தூயவர்களாக, நிறைவுள்ளவர்களாக வாழ முடியும். இத்தகைய வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கின்றார். இயேசுவுக்கு நாம் தரும் பதில் தான் என்ன? சிந்திப்போம். இத்திருப்பலியில் இயேசுவின் அன்புடன் கலந்து விடைகாணச் செபிப்போம்.
*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


தன்னுயிரைக் கொல்லத் தன்னைத் துரத்தி வந்த சவுல் அரசனைக் கொன்றுப் பழி தீர்த்துக் கொள்வதற்கு நல்ல சந்தர்பப்பம் தாவீதுக்குக் கிடைத்தது. ஆனால் ஆண்டவர் அருள்பொழிவுப் பெற்றவர் மேல் கை வைக்கக் கூடாது என்று அவருக்கு ஒரு தீங்கும் செய்யாமல் மன்னித்துவிட்ட தாவீதின் பெருந்தன்மையயாகச் செயலை எடுத்துக்கூறும் இன்றைய முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம். பகைவனுக்கு அன்பு செய்வோம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*


மண்ணகத்தைச் சார்ந்த நாம் விண்ணகலிருந்து வந்த இயேசுவின் சாயலை நாம் அணிந்து கொள்ள வேண்டும். அஃதாவது இயேசு சிலுவையில் தொங்கும்போது கூடத் தன் பகைவரை மன்னித்து அவர்களுக்காகச் செபித்துபோல நாமும் பகைவரை மன்னித்து வாழ அழைப்பு விடுக்கிறார் திருத்தூதர் பவுலடியார் கொரிந்தியர்ருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் வழியாக. இதனைக் கவனமுடன் செவிமெடுப்போம்.*பதிலுரைப்பாடல்*

திபா 103: 1-2. 3-4. 8,10. 12-13 (பல்லவி: 8a)

*பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.*

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். ` பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். பல்லவி*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


 அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். அல்லேலூயா.

*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*


1 என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும், எம்மையும் அன்பும் புனிதமும் நிறைந்த தூய ஆவியாரின் ஆலயமாகவும், தீமைச் செய்வோரை அன்பால் அரவணைத்து உம் அன்பின் பாதையில் வழி நடத்திச் செல்லத் தேவையான இறைஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

2. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! மாந்தர்கள் அனைவரும் தூய ஆவியானவரின் ஆலயம் என்பதை ஒருபோதும் மறவாமல் இருக்கவும், அவ்வாலயத்தின் தூய்மை ஒருபோதும் கேடாமல் பாதுகாத்து, பகைமையை வேரறுத்து அன்பை வளர்த்திடும் இல்லமாகவும்,  நன்மைகளின் ஊற்றாகவும் மாறிடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! இன்றைய பதட்டமான சூழலில் வரும் தேர்வுகளுக்குத் தம்மையே தயாரித்துக் கொண்டிருக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு நல்ல புரிதலையும், படித்தவற்றை மறந்திடாமல் இருக்க நல்ல ஞாபகசக்தியையும், நல்ல உடல்நிலையும் தந்துச் சிறப்பாகத் தேர்வுகள் எழுதி வெற்றிபெறத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் சகோதரப் பிணைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திடவும், உறவுகள் மேன்படவும், தூய ஆவியின் கொடைகள் எம் இல்லங்களில் தங்கி எம் இல்லத்திலுள்ள அனைவரையும் வழி நடத்திடவும், வேற்றுமைகள் ஒழிந்து, மன்னிப்பே மாண்பு என்பதை உணர்ந்து வாழ்ந்திட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

5 .என்றும் மாறப் பேரன்பு கொண்ட எம் இறைவா! எம் நாட்டு மக்கள் மீது நடைப்பெறும் பயங்கரவாதச் செயல்களால் இறந்தோரின் குடும்பங்களை நினைவுகூர்கிறோம். இறந்தோரின் ஆன்மா இளைப்பாற்றிக்காகவும், அவர்களின் குடும்பங்கள் சோகத்திலிருந்து விடுபட்ட ஆறுதலையும் தேற்றுதளையும் தந்து அவர்கள் வளமுடனும் நலமுடனும் வாழவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்


www.anbinmadal.org


Wednesday, February 13, 2019

பொதுக்காலம் ஆண்டின் ஆறாம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் ஆறாம் ஞாயிறுஇன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எரேமியா 17: 5-8
1 கொரிந்தியர் 15: 12,16-20
லூக்கா 6: 17,20-26

திருப்பலி முன்னுரை:


இறைமகன் இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டின் ஆறாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு அன்புடன் வாழ்த்துகிறோம்.
இன்றைய நற்செய்தியில், இறைமகன் இயேசு ஏழைகளிடத்திலே, கடவுள் பரிவும் அன்பும் கொண்டு, அவர்கள் பக்கம் தான் இருப்பார் என்று நமக்குத் தெளிவாகச் சொல்கிறார். ஏழைகள் உயர்த்திப் பேசப்படுவதையும், செல்வர்கள் கடுமையாக வார்த்தைகளால் இடித்துரைக்கப்படுவதையும் விவிலியத்தில் பல இடங்களில் காண முடிகிறது.

கடவுளின் எண்ணங்களும் வழிகளும் மனிதர்களின் எண்ணங்களையும் வழிகளையும் விட உயர்ந்தவை. இவ்வுலகின் தாரகமந்திரம்: உலகயமாக்குதல், தாராள மயமாக்குதல். நவீனமயமாக்குதல், ஆனால் கடவுளின் தாரக மந்திரம்: நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு. இவ்வுலகுக் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையற்றச் செல்வம் கிடைக்கலாம், ஆனால் கடவுள் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையான செல்வம் கிடைக்கும். மனிதருக்குப் பொருளும் வேண்டும்; அருளும் வேண்டும். பொருளில்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களைத் உணரமுடியாது. அருளில்லாதவர்கள் மறுமைப் பேரின்பத்தைப் பெற முடியாது. வலியோரை அல்ல எளியோரையே இறைவன் விரும்புகிறார். ஏனெனில் இவர்கள் நிலைவாழ்வில் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். நாமும் இறைவனில் நம்பிக்கைக் கொண்டு நிலைவாழ்வைப் பெற்றிட இத்திருப்பலியில் மன்றாடுவோம்

 

வாசகமுன்னுரை:முதல் வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினரும் "மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டவர்" எனக் குறிப்பிடுகிறார். ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்போர் என்றும் கனிதரும் மரம்போலப் பசுமையாக இருப்பர். இறைவன் மீது நம்பிக்கை வைப்பவனுக்கு நலமும் வளமும் இறைவனிடமிருந்து அருளப்படும். இறைவாக்கினர் எரேமியா அருளும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் கேட்டு இறைநம்பிக்கையில் வளர்வோம்.

இரண்டாம் வாசகமுன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இவ்வுலகில் துன்பப்படுவோர் மறுமை வாழ்வை எண்ணி மகிழ வேண்டும். நமக்கு மறுமைவாழ்வு மட்டும் இல்லை என்றால் மற்ற மக்களைவிட நாம் மிகுந்த பரிதாபத்துக்குரியவர்கள் என்கிறார். இதன் மூலம் இயேசுவின் உயிர்ப்பு நம் விசுவாத்தின் ஆணி வேரும் அச்சாணியுமாக விளங்குகிறது. என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார்.

பதிலுரைப் பாடல்


திபா 1: 1-2. 3. 4-6 (பல்லவி: 40: 4a)

பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர் பேறுபெற்றவர்.

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வது அனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 6: 23அ

அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டு:1 கருணைக் கடலாகிய எம் இறைவா! எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும், எம்மையும் நீதியும் நேர்மையும் நிறைந்த இதயங்களால் நிரப்பி இறைமகன் இயேசு கிறிஸ்துவின் சாட்சிகளாக உலகெங்கும் அன்பையும் நல்லுரவையும் மலரச் செய்ய உம் ஞானத்தையும் வல்லமையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

2. கருணைக் கடலாகிய எம் இறைவா! மாந்தரின் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு நன்மைச் செய்யும் விதமாய் அமையவும், சுயநலம் பாராமல் அடுத்திருக்கும் மாந்தரின் முன்னேற்றத்தில் தன்னலமற்ற சேவையின் மூலம் ஏற்றம் பெறச் செய்யவும். அனைவரும் இணைந்துச் செயல்பட்டு உம் அன்பின் ஆட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கருணைக் கடலாகிய எம் இறைவா! இன்றைய அரசியல் சூழலில் சிக்குண்டுத் தவிக்கும் எம் மக்களைக் கண்ணோகியருளும். தம் பயணிக்க வேண்டிய பாதைகளை நீதியுடனும் நேர்மையுடனும் தேர்வு செய்து நாட்டு மக்களைத் திறம்பட நடத்திட ஆள்பவர்களுக்கும், நடுநிலையுடன் மக்கள் சேவையில் சிறந்த தலைவர்களைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு நல்ல ஞானத்தையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கருணைக் கடலாகிய எம் இறைவா! புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் எம் இளையோர்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் எதிர்பார்த்திருக்கும் வளமான வாழ்வு, சிறந்த வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான தேவையான தரமான கல்விகூடங்களில் அனுமதி, பொருளாதார உதவிகள் மற்றும் உள்ள உடல் உறுதியை வழங்கிடத் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

5. கருணைக் கடலாகிய எம் இறைவா! இன்று உலகில் எங்கள் குடும்பங்கள் சிறுவட்டத்திற்குள் சிக்கவிடாமல் உறவுகளை மதித்த அதனை வளர்க்கக் கோபம், பொறமை, பேராசை, தன்னலம் போன்ற குணங்களிலிருந்து விடப்பட்டுப் பெயரிவர் முதல் சிறியவர் வரை அனைவர் மீதும் அன்புப் பாராட்ட உம் அன்னை மரியாளைப் போலக் கரிசனை அன்புப் பெற்றிட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.


                                                                       www.anbinmadal.org

Wednesday, February 6, 2019

பொதுக்காலம் ஆண்டின் ஐந்தாம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் ஐந்தாம் ஞாயிறு

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எசாயா: 6:1-8
1 கொரிந்தியர் 15:1-11
லூக்கா 5:1-11
திருப்பலி முன்னுரை:


இறைமகன் இயேசுவில் பிரியமானவர்களே! ஆண்டின் ஐந்தாம் ஞாயிறுத் திருவழிபாட்டிற்கு அன்புடன் வாழ்த்துகிறோம். ஆம்! இன்றைய வாசகங்கள் இறைவன் நம்மை அழைக்கின்றார் என்ற செய்திகளை நமக்கு எடுத்துரைக்கின்றன. நாம் எத்தகையராக இருந்தாலும் நம்மைப் புடமிட்டுத் தூய்மைப்படுத்தி இறைவார்த்தைகளை அறிவிக்கப் பயன்படுத்துவார். அவரின் அழைப்பை ஏற்று நம்மை அவருக்கு முழுவதுமாக அர்ப்பணிக்கும்போது நாம் அவரில் வளர்கிறோம்.

இன்று அழைக்கப்பட்டவர்கள் மூவரும் சாதாரணமானவர்ளே! இந்த மூவரும் அழைக்கப்பட்டபோது தன் இயலாமையை உணர்ந்திருந்தார். அந்த இயலாமையில் இறைஆற்றலைக் கண்டுணர்ந்தார்கள். மீனவரான பேதுரு திருச்சபையின் தலைவராக நியமனம் பெறுகிறார். ஏசாயா அருகதையற்ற நான் எப்படி அருள்வாக்கை உரைக்க முடியும் என்று அஞ்சியபோது, இறைவன் அவரது உதடுகளைத் தூய்மைப்படுத்தி "நான் என்றும் உன்னோடு" என்று அனுப்பிவைக்கிறார். தடுத்து ஆட்கொள்ளப்பட்ட பவுலடியார் புறவினத்தாரின் திருத்தூதராக மாறுகிறார். இப்படி நம்மையும் தன் பணிக்காக அழைக்கும் இறைவனின் குரலுக்கு இதோ உமது அடிமை நானிருக்கிறேன் என்று உறுதியளித்து நமது இயலாமையை இறைவனின் ஆற்றலாக மாற்ற இறையருளை வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.

 

வாசகமுன்னுரை:முதல் வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் எசாயாவை இறைவாக்கு அளிக்க அழைத்த போது தன் அசுத்த உதடுகள் கொண்டவன். அருகதையற்ற நான் எப்படி அருள்வாக்கு உரைக்க முடியும் எனத் திகைத்த நின்ற வேளையில், இறைவன் அவரின் உதடுகளைத் தூய்மைப்படுத்தித் "துணிந்துச் செல், தயக்கம் வேண்டாம். நான் உன்னோடு இருக்கிறேன்" என்று ஆறுதலும் தேற்றுதலும் தந்து அனுப்பி நிகழ்வுகளைக் கவனமுடன் கேட்டு நம் மனதின் ஆழத்தில் பதிவு செய்வோம்.இரண்டாம் வாசகமுன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் தான் கிறிஸ்துவர்களைத் துன்புறுத்தியதையும், இயேசு அவரைத் தடுத்து ஆட்கொண்டதையும், திருத்தூதர்களில் கடைசியானவராக இருந்தாலும் அவரை ஆட்கொண்ட இறையருளே அவரை இறைவாக்கு உரைக்கத் துணிச்சலையும் ஆற்றலையும் அளித்தது என்று தம்மையே தாழ்த்திக்கூறும் இந்த உண்மைகளை மனதின் ஆழத்தில் பதிவு செய்து இறைவனின்அழைத்தலை ஏற்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 138: 1-2. 2-3. 4-5. 7-8

பல்லவி: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.


ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்;என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி

ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! -பல்லவி

உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.துணிந்துச் செல். நான் உன்னோடு இருக்கிறேன் என்றுரைத்த எம் இறைவா! திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை அனைவரும் உமது அழைப்பை ஏற்றுத் துணிவுடன் இவ்வுலக மக்கள் அனைவருக்கும் உமது அருள்வாக்கை எடுத்துரைக்கவும், வாழ்ந்துக் காட்டிடவும் வேண்டிய வரங்களை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.நாங்கள் பேச வேண்டியவற்றைக் குறிப்பிட்ட நேரத்தில் எங்களுக்குக் கற்றுத்தரும் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ளவர்கள் எசாயாவைப்போல் உமது அழைப்பை ஏற்று எங்கள் அருகில் உள்ளள ஏழைகள், அநாதைகள், கைவிடப்பட்டோருக்கு எங்களால் இயன்ற உதவி செய்து உமது அன்பைப் பகிர்ந்து வாழவேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. மாந்தர் அனைவரையும் ஆண்டு வருகின்ற இறைவா! எம் அரசியல் தலைவர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்தவர்களாக இலஞ்சம் தவிர்த்து மக்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரத்தையும், பொருளாதார வளமும் பெற உழைத்திட வேண்டிய நல்ல மனதினைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இரக்கத்தின் உறைவிடமாகிய இறைவா, இன்றைய நற்செய்தி வாசகங்களில் நீர் அழைத்துபோல் நாங்களும் அழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்துத் தூய்மையற்ற எங்களைத் தூய்மைப்படுத்தவும், எங்கள் இயலாமைகளை இறைஆற்றலாக மாற்றவும், உமது தூதர்களாக இவ்வுலகில் வலம் வரவும் வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org