Monday, February 27, 2017

திருநீற்றுப் புதன் 01.03.2017

திருநீற்றுப் புதன் - முதல் ஆண்டு  01.03.2017
இன்றைய வாசகங்கள்

யோவேல்2:12-18
2 கொரி 5:20-6:2
மத்தேய 6:1-,16-18


திருப்பலி முன்னுரை


    ஒப்பில்லா ஆன்ம மீட்பிற்கு நம்மை ஏற்புடையவர்களாக மாற்றுவதும், உன்னதத் தேவனோடு ஒன்றித்து உறவாட நம்மைத் தூண்டுவதுமானத் தவக்காலத்தின் தொடக்க நாள் இன்று. ஆசீர்வாதமான இந்நாட்களில் நாம் ஆவிதரித்து வாழ்ந்து கொண்டிருப்பது அனைத்தும் வல்லவரின் அளவிடற்கரியக் கருணையாலேயே! இன்றைய நிகழ்வுகளும், வாசிக்கப்படும் வாசகங்களும், இசைக்கும் பாடல்களும் நிலத்திடை நம் வாழ்வு நிலையற்றது என்ற நினைவூட்டலைப் புரிந்து, ‘மனிதனே, நீ மண்ணாய் இருக்கின்றாய் - மண்ணுக்குத் திரும்புவாய்” என்ற மகத்தான உண்மையை உள்ளத்தின் ஆழத்தில் ஊன்றிட முயல்வதாகக் காண்கின்றோம். எவை எவற்றை விண்ணகத்தந்தை மண்ணக மாந்தர்களாகிய நம்மிடமிருந்து எதிர்நோக்குகின்றார் என்பதை இறைவாக்கினர் யோவேலின் வழியாக அவரே கூறுவதை முதல் வாசகம் நமக்குச் சொல்லுகிறது. பெறற்கரியக் கொடையான மீட்பை நமதாக்கிக் கொள்ள நம்மை நாம் மனமாற்றத்திற்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், அதற்கு உரியக் காலம் இந்தப்பொழுதே என்பதையும் உணர்த்துவதாகத் திருத்தூதர் தூய பவுலின் திருமுகத்திலிருந்து தரப்படும் இரண்டாம் வாசகத்தால் நாம் கற்பிக்கப்படுகிறோம். திருத்தூதர் தூய மத்தேயுவின் பதிவிலிருந்து இன்றைய நற்செய்தி நமக்குத் தரப்பட இருக்கின்றது. அதில் செய்யும் அறச்செயல்களுக்கு விளம்பரம் தேடுபவர்களாக நாம் இருந்துவிடக்கூடாது; புரியும் தானதர்மங்கள், ஏறெடுக்கும் இறைவேண்டல்கள், மேற்கொள்ளும் நோன்பு ஆகியன இறைத்தந்தை மட்டுமே அறியும் ஒன்றாக இருத்தல் அவசியம் என்ற இயேசுவின் வார்த்தைகளை நாம் செவியேற்க இருக்கின்றோம். குன்றா விசுவாசத்தோடு, மனம் ஒன்றி நாம் எழுப்பும் இறைவேண்டல்கள்; ஒப்புரவு அருட்சாதனத்தைத் தக்கவிதமாய்ப் பயன்படுத்தித் துப்புறவான உள்ளம்; வலக்கைப் புரிவதை இறைவன் அன்றி இடக்கை அறியாத நற்செயல்கள் ஆகிய இவற்றால் இறைதந்தையை மகிழ்விக்கவும், அதன் பலனாய் நிலைவாழ்வில் அவரை முகமுகமாயத் தரிசிக்கவும் இந்தத் திருப்பலியை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.முதல் வாசக முன்னுரை


    இறைவாக்கினர் யோவேல் வழியாக இறைவன் நம்மோடு பேசுவதையே நாம் இன்று முதல் வாசகமாகக் கேட்க இருக்கின்றோம். நெறி தவறி வாழ்பவர்களை ஆண் என்றும், பெண் என்றும் பாலினப் பாகுபாடு பார்க்காது, பழுத்த முதியோர் தொடங்கி, பச்சிளம் பாலகர்கள் வரை வயது வேறுபாடு பாராட்டாது, பரமதந்தை அழைக்கின்றார். ‘இப்போதாவது என்னிடம் திரும்பி வாருங்கள்” என்று. அவரிடம் திரும்பி வருவதற்கு எவை, எவற்றைக் கைநெகிழ வேண்டும் என்பதையும், எவை, எவற்றைக் கைக்கொள்ள வேண்டும் என்பதையும் பரம தந்தையே விரித்துரைக்கின்றார். எல்லை கடந்த அவரது அன்பும், இரக்கமும் திரும்பி வருவோருக்கு வழங்கப்படுவதை வாசகம் எடுத்துரைக்கின்றது. வாசிக்கக் கேட்போம். (யோவேல்.2:12-18)

இரண்டாம் வாசக முன்னுரை


    கிறிஸ்து இயேசுவின் தூதுவராய் திருத்தூதர் தூய பவுல், கொரிந்து நகர் விசுவாசிகளுக்கு விடுத்த வேண்டுகோளை நாம் இப்போது இரண்டாம் வாசகமாகச் செவியேற்க இருக்கின்றோம். பாவமாசு அனுகாதக் கிறிஸ்து இயேசுவை, பாவநிலைக்கு உட்படுத்தி, பரம தந்தை நம்மனைவருக்கும் அருளியிருக்கும் பெறற்கரியக் கொடைத் தான் மீட்பு. இத்தகைய ஒன்றினை நாம் இழந்துவிடக்கூடாது என்றும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்களே மனமாற்றம் பெற்று, மீட்பிற்கான தகுதியை அடைய ஏற்றக் காலம் என்பதையும் நமக்கு வாசகம் எடுத்துரைக்கின்றது. செவியேற்பதோடு, விரைந்து செயல்படவும் முன்வருவோமாக. (2கொரி.5:20, 6:2)

விசுவாசிகளின் மன்றாட்டு


1) பரம தந்தையே - எம் இறைவா! பொதுநிலையினரான எங்களுக்கு ஆன்ம வழிகாட்டலைச் செய்து, ஞான நல்லுணர்வை ஊட்டவும், ஆலயத்திருப்பணி உள்ளிட்ட ஆன்மீகச் செயல்பாடுகளை அர்ப்பணிப்போடு ஆற்றவும், உம்மால் முன் குறிக்கப்பட்ட எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்கன்னியர்கள் மற்றுமுள்ள துறவியர்களின் ஆன்ம, உடல் உள்ள நலன்கள் ஆசீர்வதிக்கப்பட நாங்கள் ஆசிக்கின்றோம். ஞானம் மற்றும் நல்லறிவுடன் கூடிய விழிப்புணர்வு இவர்களுக்கு அருளப்படவும், இவர் தம் இறை உறவும், உடன்படிக்கையும் வலுப்பெறவும், இவர்கள் எதிர்கொள்ளும் தீமைகள், இன்னல்கள், இக்கட்டுகள், இடையூறுகள் வலுவிழந்து உடைபடவும் வரம் தந்திட இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.

2) பரம தந்தையே - எம் இறைவா! ஆன்மீக விடுதலைக்கான அருகதையை நாங்கள் அடைந்திடவும், அன்பா; இயேசுவின் அருமை நண்பர்களாய் ஆனந்தத்தில் திளைத்திடவும் ஆசிக்கின்றோம். இறைச்சட்டம் கூறும் நெறிமுறைகளை அப்பழுக்கின்றிக் கடைபிடித்து ஒழுகவும், ஒப்புரவு அருட்சாதனத்தைத் தக்கவிதமாய்ப் பயன்படுத்தித் தூயவராய் துலங்கிடவும், விலை மதிப்பில்லா விடுதலையின் மக்களாக விளங்கிடவும் வரமருள - இறைவா! உம்மை மன்றாடுகிறோம். (யோவான்.8:31:32)

3) பரம தந்தையே - எம் இறைவா! நாங்கள் எங்கள் உயிரைக் காத்துக்கொள்ளவும், உரிமை வாழ்வின் உறுப்பினர்களாகும் தகுதியைப் பெற்றுக்கொள்ளவும், உன்னதர் இயேசுவைச் சார்ந்தவர்களாய் எண்ணப்படவும் ஆசிக்கின்றோம். எங்கள் ஆவல் செயல்வடிவம் பெற நாங்கள் தத்தம் சிலுவைகளை நித்தம், நித்தம் முறைப்பாடினின்றிச் சுமந்து இறைமகன் இயேசுவை பின்பற்றும் கருணையை வழங்கிடக் கோரி, இறைவா! உம்மை மன்றாடுகிறோம். (மத்.10:38-39)

4) பரம தந்தையே - எம் இறைவா! இருள் அகன்ற நண்பகலாய் எங்கள் வாழ்வு ஒளிரிந்திடவும், இயேசுவின் அடித்தடங்களைப் பின்தொடரும் அன்பர்களாய் நாங்கள் மிளிர்ந்திடவும், வறண்ட நிலை அகன்று, எம்மில் ஆன்மீக வளம் பெருகிடவும் ஆசிக்கின்றோம். பசித்திருப்போரிடத்து நாங்கள் காட்டும் பரிவாலும், வறியவர்களிடத்து நாங்கள் கொள்ளும் வாஞ்சையாலும், வாழ்வளிக்கும் இறைவார்த்தைகளை நாளும் நாங்கள் வாசித்துத் தியானிக்கும் வழக்கத்தாலும் பிறரன்பு எம்மில் பெரிதும் சுடர்விடும் வரம் கேட்டு, இறைவா! உம்மை மன்றாடுகிறோம். (எசாயா.58:10-11)

5)  பரம தந்தையே - எம் இறைவா!  தாம் செய்தது போல நாங்களும் செயல்படுமாறு உம் திருமகனும், எங்கள் மீட்பருமான கிறிஸ்து இயேசு பல்வேறு முன்மாதிரிகைகளை எங்களுக்கு தந்துள்ளார். அவற்றைக் கடைபிடித்து எங்கள் வாழ்வில் நாங்கள் கிறிஸ்துவை பிரதிபலிக்க வேண்டுமென்று பெரிதும் ஆசிக்கின்றோம். பாலைவெளியில் தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களின் பசியைப் போக்கிய இயேசுவின் பரிவு - கல்லெறிந்து கொல்லப்படயிருந்த பெண்ணை காப்பாற்றி மன்னித்த இயேசுவின் கருணை சீடர்களின் பாதங்களைக் கழுவுவதற்காகத் தம்மை தரை மட்டும் தாழ்த்திய அவரின் தாழ்ச்சி - சிறைபடவும், வதையுறவும் தம்மை முழுமையாய் அரிப்பணித்த தியாகம் - சிலுவைச் சாவிற்கு காரணமான அத்தனை பேர்களையும் மன்னித்த மாண்பு - அவர்கள் பொருட்டு பரமதந்தையிடம் சமர்ப்பித்த மன்றாட்டு. இயேசுவின் இத்தகு அரிய பண்புகளை நித்தமும் தியானிப்பவர்களாய் நாம் வாழ்ந்து, அதன் பயனாய் உண்மையும், உத்தமுமான கிறிஸ்தவனாக, கிறிஸ்தவளாக வாழும் வரம் கேட்டு, இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.
எழுதியவர் திரு எம்.எம். லூயிஸ்

Wednesday, February 22, 2017

பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு 26.02.2017*பொதுக்காலம்  எட்டாம் ஞாயிறு  26.02.2017*
*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

*முன்னுரை*ஆண்டில் பொதுக் காலத்தின் ட்டாம் ஞாயிறான இன்று இயேசுவின் இனிய நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.  கவலையில்லாத மகிழ்ச்சியான மனநிலையில் இத்திருப்பலியில் பங்கேற்க அன்புடன் வரவேற்கிறோம்.

இன்றைய வாசகங்கள் கவலைப்படுவதால் நாம் எதையும் சாதிக்கமுடியாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றது. ஆனால் கவலையில்லாத மாந்தரைக் காண்பது அரிது. எல்லாவற்கும் கவலைப்பட்டு வாழ்க்கை இழந்த பலரை இன்று காண்கின்றோம். இறைவன் எவ்வளவு ஆழமாக அன்பு செய்கின்றார் என்றால் உன் தாய் மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்று ஆறுதல் தருகின்றார். நமக்காக ஒருவர் கவலைப்படும் போது நாம் ஏன் கவலைப்படவேண்டும். அவை அனைத்தையும் அவரிடமே ஒப்படைத்துவிடுவோம். அதற்காக தானே தன் அன்பார்ந்த  மகனை நமக்குத் தந்தார். காட்டு செடிகளுக்கு வண்ணமலர்களால் அழகு பார்ப்பவர், வானத்துப்பறவைகளுக்கு உணவளிப்பவர்  நம் வானகத்தந்தை தன் சாயலாகப் படைத்து பராமரித்த வரும் அவா நமக்கு எத்தகைய கைம்மாறு அளித்து பாதுக்காக்கின்றார் என்ற நல்சிந்தனைகளை மனதில் பதித்து நம்பிக்கையோடு இறைவார்த்தையில் ஊன்றி இந்த உலகை வலம் வருவோம். நாளைய கவலைகளை மறந்து உடன்பயணிக்கும் இயேசுவின் கரம் பற்றி இன்றைய திருப்பலியில் கலந்திடுவோம். வாரீர்.

..


*வாசகமுன்னுரை**முதல் வாசக முன்னுரை*
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கு உரைக்கும் எசாயா, கடவுள் மறந்துவிட்டாரா? அல்லது மறக்கவில்லையா? என்ற பிளவுபட்ட நிலையைச் சரி செய்கின்றார். எபிரேயத்தில் 'மறத்தல்' என்பது 'புறக்கணித்தல்'. நாம் எதைப் புறக்கணிக்கிறோமோ அதைத்தானே மறந்துவிடுகிறோம். இஸ்ரயேல் மக்கள் கடவுளை மறந்தனர். இருந்தாலும், கடவுளின் மற்றொரு தன்மை - அவரின் தாய்மை அவரின் தண்டித்தலை விட அது மேலோங்கி நிற்கிறது. வலுவற்ற குழந்தையான இஸ்ரயேல் மக்களைத் தன் இரக்கத்தால் தாயாகத் தாங்குகின்றார். அவர்களைக் குனிந்துப் பார்க்கின்றவராக இருக்கின்றார் யாவே இறைவன். அவரின் தாயுள்ளத்தைப் புடமிட்டுக் காட்டும் இவ்வாசகத்திற்குச் செவிமேடுப்போம்.
*இரண்டாம் வாசக முன்னுரை*இன்றைய இரண்டாம் வாசகத்தில் கொரிந்து நகரத் திருச்சபையில் நிலவியப் பிளவுகளைக் கடிந்து கொள்ளும் பவுல், இதற்கான அதிகாரம் தனக்குக் கடவுளிடமிருந்தே வருகிறது என்கிறார். மற்றவர்களும், தானும் தனக்குத் தரும் தீர்ப்பு தேவையில்லை எனவும்இறைவன் ஒருவரே தீர்ப்பிடுபவர் எனவும் சொல்கிறார் பவுல். மற்றவர்களின் தீர்ப்பை மனதில் கொண்டால் பவுல் அவர்கள் சார்பாக நடந்து கொள்ளவும், ஆள்பார்த்துச் செயல்படவும் வாய்ப்புக்கள் உண்டு. தனக்குத் தானே தீர்ப்பிட்டுக் கொண்டால் அது சில நேரங்களில் குற்றவுணர்வில் போய் முடியலாம். ஆக, தீர்ப்பைக் கடவுளுக்கு விட்டுவிடுகின்றார் திருத்தூதர் பவுல். இவ்வாறு திருத்தூதர் பவுலடியாரின் கொரிந்தியர்ருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்
திபா
62: 1-2. 5-6. 7-8
பல்லவி: என் நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு.


கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தேஉண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே; என் கோட்டையும் அவரே; எனவே நான் சிறிதும் அசைவுறேன். - பல்லவி


நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே; உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன்.- பல்லவி


என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன; என் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமும் கடவுளே.  மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலையில்உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.


*மன்றாட்டுகள்*


1. தந்தையும் தாயும் ஆன வல்லரே எம் இறைவா!  எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவியர் அனைவரும் உண்மையான பணியாளர்களாகவும், எல்லோரின் நம்பிக்கைக்குரிவர்களாகவும், மக்களின் உன்னத வழிகாட்டிகளாகவும் இருந்திட வேண்டிய அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.


2. தந்தையும் தாயும் ஆன வல்லரே எம் இறைவா!  நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் கிறிஸ்துவின் மதிப்பீடுகளைப் பின்பற்றித் தங்களை வெறும் மக்களை ஆளுகின்ற ஆணவ வர்க்கமாக இல்லாமல், மக்களின் பணிசெய்வதற்கே என்ற நல்ல மனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. தந்தையும் தாயும் ஆன வல்லரே எம் இறைவா!  எங்களை பராமரித்து பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு , அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால்,பாதுகாப்புடன் வாழ,  இத்தலைமுறையினர் பெரியவர்களின் மேன்மையை உணர்ந்து அவர்களை பாதுகாக்க தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..


4. தந்தையும் தாயும் ஆன வல்லரே எம் இறைவா!  எம் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் அரசுதேர்வு எழுதப்போகும் அனைத்து மாணவ மாணவியர்களை உம் பாதத்தில் வைக்கின்றோம். அவர்கள் பயம், கவலை, மறதி போன்ற தீயசக்திகளிடமிருந்து விடுவித்துஞானத்தோடு செயல்பட, எதிர்காலத்தின் கனவுகள் நினைவாகிட உம் ஆவியின் வல்லமையை பொழிந்திட வேண்டுமென்ற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.www.anbinmadal.org


Tuesday, February 14, 2017

பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு 19.02.2017

*பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு  19.02.2017**இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

லேவியர் 19:1-2,17-18
1கொரிந்தியர் 3:16-23
மத்தேயு 5:38-48


*முன்னுரை*


பொதுக் காலத்தின் ஏழாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இன்றைய வாசகங்கள் நம் மனதில் அன்பை விதைக்கின்றன. இறைமகன் இயேசுவின் விழுமியமாகிய அன்பு நம் வாழ்வில் நிலைநாட்டி அவரே நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவரின் முக்கியக் கட்டளையாகிய உன்னைப்போல் உன் அயலானை நேசி. அவர் உமது எதிரியாக இருந்தாலும் அன்புச் செய். அவருக்காய் இறைவனிடம் மன்றாடு என்பதே! அதற்கான நம் வாழ்நாள் முன்னோடித் தான் மக்களின் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால். தன்னைச் சுட்டவனை மன்னித்துத் தன் நண்பனாக ஏற்றுக்கொண்ட அவர், அலி அஃகாவைச் சிறையில் சந்தித்து இறைமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தினார். நாம் புனிதராய் இருப்பதுபோல நீங்களும் புனிதராய் இருங்கள் என்று இறைவன் அழைக்கின்றார். புனித வாழ்வு என்பது பிறரன்பைப் பொறுத்தே அமைகின்றது.தவறுக்குத் தவறு செய்யாமல், தீமைக்குத் தீமை செய்யாமல் பிறரை மன்னிக்கும் மேலான நிலைக்கு உயர்ந்து வர இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இத்தகைய நல்ல இதயம் உள்ளவர்களாக மாறும் போதுதான் நாம் கடவுளைப் போலத் தூயவர்களாக, நிறைவுள்ளவர்களாக வாழ முடியும். இத்தகைய வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கின்றார். இயேசுவுக்கு நாம் தரும் பதில் தான் என்ன? சிந்திப்போம். இத்திருப்பலியில் இயேசுவின் அன்புடன் கலந்து விடைகாணச் செபிப்போம்.

*வாசகமுன்னுரை**முதல் வாசக முன்னுரை*


அன்பு வழி புனிதமும், புனிதம் வழி நிறைவும் காண வேண்டும் என நம் திருஅவை விரும்புகிறது. அநீதியை அதட்டிக் கேட்கும் அன்பும், நீதிக்குத் தோள் கொடுக்கும் அன்பும், குற்றத்தைச் சுட்டிக்காட்டும் அன்பும், அயலானின் பிரதிபலிக்கும் அன்பும் தான் ஒரு மனிதனைப் புனிதத்தின் நிறைவுக்கு அழைத்துச் செல்கிறது. நாம் புனிதராய் இருப்பதுபோல நீங்களும் புனிதராய் இருங்கள் என்கிறார் இறைவன். இக்கருத்துகளை எடுத்துரைக்கும் லேவியர் நூலிலிருந்து வரும் இன்றைய முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.*இரண்டாம் வாசக முன்னுரை*


நமது இதயத்திற்குள்ளே கடவுளின் ஆவியானவர் குடி கொண்டிருக்கிறார். பழைய ஏற்பாட்டு மக்களுக்குக் கிடைக்காத பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்தப் பாக்கியமே நாம் பெற்றிருக்கும் தூயஆவி. ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். இவ்வுலக ஞானம் கடவுளின் முன் மடமையே மனிதரைக் குறித்து யாரும் பெருமைப் பாராட்டலாகாது. நாம் அனைவரும் கிறிஸ்துவிற்கு உரியவர்கள் என்று திருத்தூதர் பவுலடியார் இயம்பும் கொரிந்தியர்ருக்கு எழுதிய முதல் திருமுகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


*பதிலுரைப்பாடல்*

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

திருப்பாடல்: 103: 1-2, 3-4, 8, 10,12-13


என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!  என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!. . பல்லவி 

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்.. பல்லவி 

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி 

மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்..  பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


 அல்லேலூயா,அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. அல்லேலூயா!*மன்றாட்டுகள்*


1 என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும், எம்மையும் அன்பும் புனிதமும் நிறைந்த தூய ஆவியாரின் ஆலயமாகவும், தீமைச் செய்வோரை அன்பால் அரவணைத்து உம் அன்பின் பாதையில் வழி நடத்திச் செல்லத் தேவையான இறைஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

2. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! மாந்தர்கள் அனைவரும் தூய ஆவியானவரின் ஆலயம் என்பதை ஒருபோதும் மறவாமல் இருக்கவும், அவ்வாலயத்தின் தூய்மை ஒருபோதும் கேடாமல் பாதுகாத்து, பகைமையை வேரறுத்து அன்பை வளர்த்திடும் இல்லமாகவும்,  நன்மைகளின் ஊற்றாகவும் மாறிடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! இன்றைய பதட்டமான சூழலில் தங்களின் கல்வித் தேர்வுகளை எழுதிவருபவர்களுக்கும், வரும் தேர்வுகளுக்குத் தம்மையே தயாரித்துக் கொண்டிருக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு நல்ல புரிதலையும், படித்தவற்றை மறந்திடாமல் இருக்க நல்ல ஞாபகசக்தியையும், நல்ல உடல்நிலையும் தந்துச் சிறப்பாகத் தேர்வுகள் எழுதி வெற்றிபெறத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் சகோதர பிணைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திடவும், உறவுகள் மேன்படவும், தூய ஆவியின் கொடைகள் எம் இல்லங்களில் தங்கி எம் இல்லத்திலுள்ள அனைவரையும் வழி நடத்திடவும், வேற்றுமைகள் ஒழிந்து, மன்னிப்பே மாண்பு என்பதை உணர்ந்து வாழ்ந்திட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.


                                                                       www.anbinmadal.org


Wednesday, February 8, 2017

பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு 12.02.2017

*பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு  12.02.2017**இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

சீராக் 15:15-20
1கொரிந்தியர் 2:6-10
மத்தேயு 5:17-37

*முன்னுரை*


பொதுக் காலத்தின் ஆறாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இன்றைய வாசகங்கள் நமக்கு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அழைக்கின்றது. நல்லது- தீயது, நெருப்பு- நீர், வாழ்வு- சாவு. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது தான் நமது விருப்பத்தைப் பொறுத்தது.
இயேசு திருச்சட்டத்தின் வாக்குகளைப் பற்றி வெளிப்படுத்துகின்றார். திருச்சட்டத்திலிருந்து அனைத்தும் நிறைவேறாத வரை அச்சட்டத்தின் எழுத்தோ சிறுபுள்ளியோ ஒழியாது என்று பதிவு செய்கின்றார். இறைவாக்கு நமக்கு வழங்கும் அறநெறிகளின்படி நாம் வாழ அழைப்பு விடுக்கின்றார். இதனை மறந்து மனம்போன போக்கில் வாழ்ந்து அடுத்தவரின் வாழ்வாதரத்தை அழிக்கும் இழிச்செயல்களில் ஈடுபடுவோரையும் வன்மையாகக் கண்டிக்கின்றார்.
இயேசுவின் நெறியோ அகமனப் பக்குவத்தைச் சார்ந்த்து. நற்சிந்தனைகளுக்கும் தூய எண்ணங்களுக்கும் முக்கிவத்துவம் கொடுப்பது. ஏனென்றால் அகமனப் பக்கவத்தைப் பொறுத்தே நம் வெளிச் செயல்பாடுகள் இருக்கும் என்பதை இங்கு நன்கு உணர்த்துகின்றார் இயேசு. சுயநலமற்ற, அன்புக் கலந்த அக்கறை உணர்வோடு உண்டாகும் கோபத்தைத் தான் ஆணடவர் இயேசு பரிசேயரிடமும், ஆலயத்திலும் வெளிப்படுத்தினர். ஆகவே கோபம், பகை, வெறுப்பு இவைகளை அடியோடு ஒழிக்க முயல்வோம். மற்றவர்களைப் பற்றிய இனிமையான நினைவுகளை மட்டும் மனதில் கொண்டு இத்திருப்பலியில் கலந்து இறையருள் நாடிடுவோம் வாரீர்.

*வாசகமுன்னுரை**முதல் வாசக முன்னுரை*


சீராக் நூலில் இருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களையும், வாழ்க்கை மரபு மற்றும் நெறிமுறைகளையும் தாங்கி வருகிறது. மாந்தர்கள் முன் வாழ்வும், சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். கடவுள் மனிதர்களின் அனைத்துச் செயல்களையும் காண்கின்றார். பழைய ஏற்பாடுகளில் ஞானத்தை வெளிப்படுதும் சிறந்த நூலாகிய சீராக் ஞானநூலின் வாசகத்தைக் கவனமுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


நமது வாழ்வின் வழி எளிமையானதல்ல. அது மிகக் கடினமானது. இத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்க நமக்கு இறைஞானம் வேண்டும். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியாரின் வெளிப்படுத்துகின்றார். மாந்தருக்கு வேண்டியது உலக ஞானம் அல்ல. இறைஞானமே! நாம் மேன்மைப் பெற வேண்டும். வாழ்வுப் பெற வேண்டும் என்பதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டதே இறைஞானம். இறைஞானம் இறைவனை அன்புச் செய்வோருக்குத் தூய ஆவியார் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. இவற்றை விளக்கம் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.*பதிலுரைப்பாடல்*

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல்: 119: 1-2, 4-5, 17-18, 33-34

மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.  அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். . பல்லவி

ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.  உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!. பல்லவி

உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன்.  உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். பல்லவி

ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன்.  உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.  பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

 அல்லேலூயா,அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா!

*மன்றாட்டுகள்*


1 கருணைக் கடலாகிய எம் இறைவா! எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும், எம்மையும் நீதியும் நேர்மையும் நிறைந்த இதயங்களால் நிரப்பி இறைமகன் இயேசு கிறிஸ்துவின் சாட்சிகளாக உலகெங்கும் அன்பையும் நல்லுரவையும் மலரச் செய்ய உம் ஞானத்தையும் வல்லமையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

2. கருணைக் கடலாகிய எம் இறைவா! மாந்தரின் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு நன்மைச் செய்யும் விதமாய் அமையவும், சுயநலம் பாராமல் அடுத்திருக்கும் மாந்தரின் முன்னேற்றத்தில் தன்னலமற்ற சேவையின் மூலம் ஏற்றம் பெறச் செய்யவும். அனைவரும் இணைந்துச் செயல்பட்டு உம் அன்பின் ஆட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கருணைக் கடலாகிய எம் இறைவா! இன்றைய அரசியல் சூழலில் சிக்குண்டுத் தவிக்கும் எம் மக்களைக் கண்ணோகியருளும். தம் பயணிக்க வேண்டிய பாதைகளை நீதியுடனும் நேர்மையுடனும் தேர்வு செய்து நாட்டு மக்களைத் திறம்பட நடத்திட ஆள்பவர்களுக்கும், நடுநிலையுடன் மக்கள் சேவையில் சிறந்த தலைவர்களைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு நல்ல ஞானத்தையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கருணைக் கடலாகிய எம் இறைவா! புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் எம் இளையோர்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் எதிர்பார்த்திருக்கும் வளமான வாழ்வு, சிறந்த வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான தேவையான தரமான கல்விகூடங்களில் அனுமதி, பொருளாதார உதவிகள் மற்றும் உள்ள உடல் உறுதியை வழங்கிடத் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

5. கருணைக் கடலாகிய எம் இறைவா! இன்று உலகில் எங்கள் குடும்பங்கள் சிறுவட்டத்திற்குள் சிக்கவிடாமல் உறவுகளை மதித்த அதனை வளர்க்கக் கோபம், பொறமை, பேராசை, தன்னலம் போன்ற குணங்களிலிருந்து விடப்பட்டுப் பெயரிவர் முதல் சிறியவர் வரை அனைவர் மீதும் அன்புப் பாராட்ட உம் அன்னை மரியாளைப் போலக் கரிசனை அன்புப் பெற்றிட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

www.anbinmadal.org

Wednesday, February 1, 2017

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு 05.02.2017

*பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு  05.02.2017*


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


எசாயா 58:7-10

1கொரிந்தியர் 2:1-5
மத்தேயு 5:13-16

*முன்னுரை*


பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இன்றைய வாசகங்கள் நம்மைச் சுவையுள்ளவர்களாகவும், அனைவருக்கும் ஒளியாகவும் இருக்க அழைக்கின்றது. திருமுழுக்கின் போது நாம் உவர்ப்புடையவர்களாக உப்பைச் சுவைப்பதின் மூலமாக மாற்றப்படுகிறோம். கடவுளின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, இன்னும் பல நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பலன் கொடுக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் கடவுளின் வாழ்வான அன்பு, அமைதி, மகிழ்வு அனைத்திற்கும் இன்னும் சுவைக் கூட்டி நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டும். உப்பின் உவர்ப்புத் தன்மை மாறினால் அதை என்ன செய்வது என்று இயேசு கேட்கிறார். அதற்குப் பதில் கடவுள் நம்மை மீண்டும் உப்பாகக் கடவுள் மாற்ற நாம் அனுமதிக்க வேண்டும்.
திருமுழுக்கில் நாம் கையில் மெழுகுவர்த்தியைப் பெறும் போது அனைவருக்கும் ஒளியாக இருக்கிறோம். இயேசு நம்மை ஒளியாக இருக்க அழைக்கிறார். அது மற்றவர்களுக்குத் தெரியும்படியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மற்றவர்களின் வாழ்வில் இயேசுவின் பிரசன்னத்தைக் கொண்டுவர, நாம் இயேசுவின் ஒளியை நம்மில் ஒளிர விட வேண்டும். இருள் நடுவே நம் ஒளி உதிக்கவேண்டும். நற்செயல்களால் கடவுளுடன் இணைந்திடுவோம். இவரின் ஞானத்தையும் வல்லமையையும் பெற்றிட இத்திருப்பலியில் உப்பாய் ஒளியாய் கலந்திடுவோம் வாரீர்.

*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்று இறைவனிடம் முறையிட்டப் போலிப் பக்தர்களுக்கு, பசித்தோருக்கு உணவளித்தும் உறைவிடம் இல்லாதோருக்குத் தங்க இடமளிப்பதும், உடையற்றோருக்கு உடையை வழங்குவதுமே இறைவன் விரும்பும் நோன்பு உண்மையான நோன்பின் குறிக்கோளை விளக்கும் இறைவாக்கினர் எசாயா மூலம் எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


நமது நம்பிக்கையின் அடிப்படைக் கடவுளின் வல்லமையே தவிர மனித ஞானம் அல்ல. இதன் அடிப்படையில் தூய பவுலடியார் தனது பணிவாழ்வை மேற்க்கொண்டார். போர்வீரனாக இருந்த அவர் சொல்லாற்றல் மிக்கப் பேச்சாளராகவோ அல்லது ஞானம் பெற்ற அறிஞராகவோ இருந்தது இல்லை. ஆயினும் அவர் பறைசாற்றிய நற்செய்திகள் அனைத்தும் தூய ஆவியாரின் வல்லமையான செயல்களே என்று அழுத்தமாகப் பதிவுச் செய்யும் இன்றைய இரண்டாம் வாசகமான திருத்தூதர் பவுலடியாரின் கவனமுடன் செவிமெடுப்போம்.

*பதிலுரைப்பாடல்*


பல்லவி: ஆண்டவர்க்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மளிர்வர்.

திருப்பாடல்: 112: 4-5, 6-7, 8-9


இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.  மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். பல்லவி

எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.  தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். பல்லவி

அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி.  அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்கள் நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்.. பல்லவி

*மன்றாட்டுகள்*

1.  இருளில் ஒளியென ஒளிர்ந்திடு என்று அழைத்த எம் இறைவா! உம் திருச்சபையைத் தயவாய் கண்ணோக்கி, எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும், எம்மையும் உலகின் மீட்புக்குத் தெளிவான அடையாளமாக உலகின் உப்பாகவும், ஒளியாகவும் எமது நற்செயல்களால் மற்றவர்களுக்கு உம் சாட்சிகளாக அமைத்தருள உம் ஞானத்தையும் வல்லமையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2. வல்லமையும் ஞானமும் கொண்ட எம் இறைவா! மாந்தரின் அன்பரே, மனித முன்னேற்றத்தில் தன்னலமற்ற சேவையின் மூலம் எங்களின் பங்கைச் சிறப்பாக ஆற்றிடவும், உலகத் தலைவர்களும், நாட்டுதலைவர்களும் இவ்வுலகில் உம் அன்பின் ஆட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வாழ்வின் வழிகாட்டியான எம் இறைவா! இன்றைய சூழலில் தேர்வுகள் எழுதத் தம்மைத் தயார் செய்து வரும் அனைத்து மாணவச் செல்வங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்களுக்குத் தேவையான அமைதியான சூழ்நிலையும், நல்ல ஞாபகச்சக்தியையும், நல்ல உடல், உள்ள உறுதியையும் தந்து, அவர்கள் சிறப்பாகச் செயல்படப் பெற்றோர்களையும் ஊக்கிவிக்கத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வளங்களின் நிறைவே எம் இறைவா! எம் பங்கைச் சார்ந்த அனைத்து மக்களையும் ஆண்டுப் பராமரித்து, நற்சுகமும், வளமும் பொழிந்து அனைவரின் குடும்பங்களும் உமது பேரன்னப நிறைவாய் பெற்று உம் அன்னையைப் போல உம் சீடர்களாய் வாழ்ந்திடவும் திருமுழுக்கின்போது நாங்கள் பெற்றுக் கொண்ட உப்பையும் ஒளியையும் நாங்கள் வாழும் இடங்களில் மற்றவர்களுக்கு வழங்கிடத் தேவையாக வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

5. இரக்கமே உருவான எம் இறைவா! இன்று உலகில் உம் திருஅவைக்கும், அதன் மக்களுக்கும் எதிராக இழைக்கப்படும் அநீதிகள், குற்றசாட்டுகள், இறையச்சம்யின்மையால் நேர்ந்திடும் ஆபத்துகள் போன்ற எல்லா இன்னல்களிலிருந்து எம்மைக் காத்து உலகமாந்தர்கள்  எங்களை இயேசுவின் சீடர்களாய் எம்மைக் கண்டு கொள்ளவும், உமது ஒளியில்  அனைவரையும் ஒன்று சேரும்படி இறையரசை அறிவிக்கத் தேவையான ஞானத்தையும் உள்ள உறுதியையும் மீது பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.www.anbinmadal.org