Wednesday, April 29, 2020

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு


 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்



திருத்தூதர் பணிகள் 2:14அ  ,36-41
1 பேதுரு 2:20ஆ-25
யோவான்: 10:1-10

திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
உயிர்ப்பின் காலம் நான்காம் ஞாயிறான இன்று நல்லஆயன் ஞாயிறாகக் கொண்டாட இறைவனின் திருவடி நாடி வந்துள்ள இயேசுவின் அன்பார்ந்த இறைமக்களே உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இயேசு தன் ஆடுகளுக்கு முன்னே பாதுகாப்பாகச் செல்லும் நல்ல ஆயனாக இருக்கின்றார். இந்த நல்ல ஆயன் மானிடராகிய நம் வாழ்விற்காகத் தன்னையே தியாகம் செய்யும் தாயுள்ளம் படைத்தவராகத் தான் இருப்பதை இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியில் பதிவு செய்கின்றார்.

இயேசுவின் அன்புக்கு உரிய நாம் அவருடைய குரலைக் கேட்கின்றோம். அவர் நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். அவரது அழைப்பை ஏற்று நாமும் இயேசுவைப் போல் தந்தையுடன் இறைவேணடலில் நிலைத்திருந்து அவரின் சீரியப் பார்வையில் நம்மிடம் காணப்படும் அனைத்து வேறுபாடுகளைக் களைந்து இணைந்துச் செயல்படுவோம் இறையரசை அறிவிக்க..

இறையழைத்தல் ஞாயிறான இன்று அவரவர் இருக்கும் நிலையில் இருந்து இறைவனின் அழைத்தலை உணர்ந்து எத்தனை தோல்விகள் வந்து வாட்டினாலும் அதனை வெற்றிக்கொள்ள இத்திருப்பலியின் வழியாக நம் ஆயனாம் இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம் ஒர் அணியாக... குறிப்பாக தன்னலமற்ற மருத்துவ பணியில் ஈடுபட்டு இறந்த அனைவரும் இளைபாற்றிப் பெற்றிட செபிப்போம்.



வாசகமுன்னுரை



முதல் வாசக முன்னுரை

இறைமகன் இயேசுவைக் கொலைச் செய்த  இஸ்ரயேல் மக்களுக்குச் சீடர்கள் விடுக்கும் அழைப்பான ”மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும் பொருட்டுத் திருமுழுக்குப் பெறுங்கள். அப்போது தூயஆவியைப் பெற்றுக்கொள்ளவீர்கள் என்பதே ஆகும். இவ்வாறு மனம் மாற இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கின்றது. இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை


நன்மை செய்தும் துன்பத்திற்கு ஆளாகும் நாம் அதைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும் போது அவை கடவுளுக்கு ஏற்றதாக உள்ளது. இவ்வாறே இயேசுவும் துன்புற்று ஒரு மாதிரியை விட்டுக் சென்றுள்ளார். இதைப் பின்பற்றி நீதிக்காகவே வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் வந்துள்ளோம் என்பதை எடுத்துக்கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் மனத்தில் உள்வாங்கிச் சிந்திப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
திருப்பாடல் 23: 1-3a. 3b-4. 5. 6.

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.  பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.  அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்.  மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

 

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. நல்லஆயன் நானே என்ற இறைமகனின் திருப்பயணத்தில் இணைந்து இறைபணியாற்றிடத் திருப்பொழிவு செய்து தேர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், ஆயாகள், திருப்பணியாளர்கள் அருட் சகோதரர்கள், சகோதரிகள் பொதுநிலையினர் அனைவரும் நல்ல மேய்ப்பனாகத் தன் ஆடுகளுக்காகத் தன்னையே தருகின்ற ஆற்றல் கொண்டவர்களாகிட, தங்களின் அழைப்பை உணர்ந்து உழைத்திட, தொற்று நோயிலிருந்து காத்திட வேண்டிய அருள்வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மை ஆளும் எம் தலைவா! நாட்டில் செயல்படும் தலைமை பொறுப்பாளர்கள் சுயநலம் கருதாமல் பொதுநலம் காணவும் ஏற்றத் தாழ்வு இல்லாச் சமத்துவச் சமுதாயம் படைத்திட அவர்களுக்கு போதுமான ஞானத்தையும் அருள் வாழ்வையும் அவர்கள் மீது பொழிந்துத் தொற்று நோயிலிருந்து உம் மக்களைப் பேணிக் காக்கும் நல்ல ஆயனாகச் செயல்படவேண்டிய வரத்திற்காக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை என்று இயம்பிய இயேசுவே! உமது திருப்பணியாளர்கள் சமுதாயத்தல் ஏற்படும் பிரச்சனைகளை வெகுவாக ஏற்றுக் கொண்டு உம் திருப்பணியைத் திறம்பட ஆற்றிட உம் துணையாளரின் துணை அவர்களோடு இணைந்து இறைமக்களை இறைவனிடம் அழைத்துச் செல்லும் ஆற்றலை இவர்களுக்கு நிறைவாய் பொழிந்து அவர்கள் உம் சாட்சிகளாய் வாழ்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன் என்றுரைத்த இயேசுவே! இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை நாங்கள் உணர்ந்து உம்பாதம் அவர்களை அர்ப்பணிக்கின்றோம். இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறையழைத்தலை உணர்ந்து நல்ல கனித் தரும் உமது ஊழயர்களாக அவர்கள் வளர்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ஆபத்துகளிலிருந்து எம்மைக் காத்து வழிநடத்திடும் எம் இறைவா! தொற்று நோயின் தாக்கத்திலிருந்து உலக மக்கள் அனைவரையும் காத்திடப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் அவர்களுடன் இணைந்துப் பணியாற்றும் அனைவரையும் காத்து வழிநடத்திவும், அவர்கள் உடலும் உள்ளமும் உறுதியுடன் இருக்கவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Friday, April 24, 2020

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு


பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு


www.freebibleimages.org


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர் பணிகள் 2:14,22-33
1 பேதுரு 1:17-21
லூக்கா 24:13-35

திருப்பலி  முன்னுரை


அன்புடையீர்,
உயிர்ப்பின் காலம் மூன்றாம் ஞாயிறான இன்று எம்மாவுச் சீடர்களைப் போல உயிர்த்த இயேசுவுடன் வழி நடந்து இத்திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இயேசுவின் அன்புச்சீடர்களாகிய இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுயில் நம்பிக்கைக் கொள்ளவும், அவரின் சாட்சியாக இவ்வுலகில் வலம் வரவும் நம்மை அழைக்கின்றது. எம்மாவுச் சீடர்கள் போல் வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களாக வாழாமல், இறைநம்பிக்கையே நம் வாழ்வு என்பதை உணர்ந்திட வேண்டும். மனிதன் சுவாசிப்பதால் மட்டும் உயிர் வாழவதில்லை. மாறாக அவன் நம்பிக்கையைச் சுவாசிப்பதாலும் உயிர் வாழ்கிறான்.
எம்மாவுச் சீடர்களுடன் பந்தியமர்ந்தப் போது அங்கிருந்த அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்துப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் கண்டு கொண்டன. இயேசு எப்போதும் நம்மிடம் இருப்பதை ஆசீர்வதித்து நம்மைத் தன் நலன்களால் நிரப்பிக்கூடியவர். எனவே, குடும்பமாக இணைந்து இயேசுவிடம் “எங்களோடு தங்கும்” என அவரை மன்றாடி நம் வாழ்வில் எந்நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் இருக்கும் வரத்தை இத்திருப்பலியில் உயிர்த்த இயேசுவிடம் மன்றாடுவோம். வாரீர்.




வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இறைமகனால் திடப்பட்டுத்தப்பட்டுத் தூயஆவியால் அருட்பொழிவுசெய்யப்பட்ட சீடர்கள் உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாக எருசலேம் நகரத்தில் வாழும் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் இறைமகனின் உயிர்ப்பின் மகிமைக்கும் மகிழ்ச்சிக்கும் தாங்களே போதுமானச் சாட்சிகள் என்று ஆணித்தரமாகப் பதிவுச் செய்கின்றனர். பேதுருவின் வீறுக்கொண்ட இந்தச் சொற்பொழிவைக் கவனமுடன் கேட்டு உயிர்த்த இயேசுவின் மீது நமக்குள் விசுவாசத்தை உறுதிபடுத்திக்கொள்ள இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கின்றது. இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.



இரண்டாம் வாசக முன்னுரை
வானகத்தந்தை ஆளைப் பார்த்துத் தீர்ப்பு வழங்குவதில்லை மாறாக அவரவர் செயல்களின்படி தீர்ப்பு வழங்குவார். இறையச்சத்தோடு வாழ அழைக்கிறார். மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற இயேசுவின் விலையில்லாத இரத்ததால் நமக்கு மீட்பு கிடைத்தது. இறந்த அவரை உயிர்ப்பிக்கச் செய்து பெருமைப்படுத்தினார். இதனால் நாம் இயேசுகிறிஸ்துவை எதிர்நோக்கி இருக்க அழைப்பு விடுக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.



பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்
திருப்பாடல் 16:1-2, 5,  7-8, 9-10, 11

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். பல்லவி

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு. உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா அல்லேலூயா
 


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1 உம் வார்த்தைகளால் எம் உள்ளத்தைத் திறந்த எம் இறைவா! திருஅவை உள்ளத் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரின் உள்ளங்கள்  இறைவார்த்தையால் பற்றி எரியவும், திருப்பலி எனும் அருட்சாதனத்தால் இறைவனைக் கண்டு கொள்ளவும், அவரின் சாட்சிகளாக வளர வேண்டிய அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உம்மைக் கண்டு கொள்ள எம் இதயத்தைத் திறந்த எம் இறைவா! எம் வாழ்வில் உம் வார்த்தைகளாலும், நீர் செய்யும் அற்புதங்களாலும் எங்கள் குடும்பத்திலுள்ள நாங்கள் அனைவரும் இறைநம்பிக்கை மேன்மேலும் வளரவும், எம்மாவு சீடர்களை வழி நடத்தி அவர்களுடன் தங்கியது போல எம் இல்லங்களில் தங்தி எங்களுக்கும் உம் ஆசீர் வழங்கிட வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3.நலங்களினால் எங்களை நிரப்பும் எம் இறைவா! தொற்று நோயின் சீற்றத்தால்  அழிந்து வரும் உலகமக்களைக் கண்ணோக்கியருளும் . மன்னிக்கும் தெய்வமே மீண்டும் எங்களுக்கு நலமான வாழ்வையும் நற்சுகத்தையும் தந்திடவும்,  வாழ்வின் எல்லைக்கோட்டிற்குத் தள்ளப்பட்ட எம் ஏழை எளியமாந்தர்களின் வாழ்வாதாரங்கள் மேன்மைபடவும்,  தொற்று நோயின்  தாக்கத்திலிருந்து அனைவரையும் காத்திடவும் அருள்மாரிப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4 அன்பின் தந்தையே! எம் இறைவா! உலகம் முழுவதும் மருத்துவபணிகளில் தம்மையே அர்ப்பணித்து தன்னலம் துறந்த பிறர்நலம் பேணும் அனைத்து நல்ந உள்ளங்களுக்காக மன்றாடுகிறோம். இப்பணியை திறம்பட செய்ய தேவையான நற்சுகமும், பாதுகாப்பும் உமது ஆற்றலால் வழிநடத்தவேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகின்றோம்.
                                 
www.anbinmadal.org

Friday, April 17, 2020

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு முதல் ஆண்டு


பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர்பணிகள் 2:24-47
1பேதுரு 1:3-9
யோவான் 20:19-31


திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறும் இறைஇரக்கத்தின் ஞாயிறுமான இன்று உள்ளத்தில் எழும் ஐயங்கள் நீங்கி இறைமகன் இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இல்லங்களில் அமர்ந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய வாசகங்கள் இறைவனிடம் நம்பிக்கைக் கொள்ளவும், பகிர்ந்து வாழ்ந்திடவும் நம்மை அழைக்கின்றது. நம்பிக்கையில்லாக் கோழைகளாக இருந்த தம் சீடர்களைக் காண, அவர்களைத் தேற்ற, இயேசு அவர்கள் முன் தோன்றித் தன் சமாதானத்தை அளிக்கின்றார். தோமாவின் ஐயம் களையப்பட்டபோது உயிர்ப்புக்கு அடித்தளம் கிடைத்தது. அவர் அவரோடு தன்னை இணைத்துக்கொண்டார். இறுதி மூச்சுவரை அவருக்காகச் சாட்சிப் பகிர்ந்திடும் உறுதியான உள்ளத்தின் உந்துத்தால் நம் இந்திய நாட்டில் இறைசாட்சியாக மரிக்க முடிந்தது.

ஐயம் தவித்து நம்பிக்கைக் கொண்டவர்களாய், அச்சம் நீங்கி ஆனந்தம் அடைந்தவர்களாய், கண்டவர்களை விடக் காணாமல் நம்புகிறவர்களாய், பகிர்ந்துண்டு வாழும் நல்லெண்ணங்கள் கொண்டவர்களாய், இறைஇரக்கத்தைப் பெற்றவர்களாய் வாழ்ந்திடச் சமாதானத்தின் தேவனாம் உயிர்த்த ஆண்டவரிடம் தொற்றுநோய் முற்றிலும் விலகிட இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.


முதல் வாசக முன்னுரை


நம்மில் விசுவாசம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளத் திருத்தூதர்பணிகள் நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகம் எடுத்துக்காட்டுகிறது. ஆதிகிறிஸ்தவர்கள் திருத்தூதர்களின் போதனைகளுக்குச் செவிமெடுத்தார்கள். கூடிச் செபித்தார்கள். அப்பத்தைப் பிட்பதிலும் இறை வேண்டலிலும் உறுதியாக இருந்தார்கள். பகிர்வதே கிறிஸ்துவ வாழ்வு என்று வலியுறுத்தும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை


உயிர்ப்பு அனுபவம் ஆதிக் கிறிஸ்தவர்களின் தனிநபர் அனுபவமாக மட்டும் இல்லாமல், அஃது அவர்களின் குழுவாழ்விலும் செயல்வடிவம் பெற்றது. ஆகையால் தான், 'திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் அவர்கள் உறுதியாய் நிலைத்திருந்தனர். நம்பிக்கைக் கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்தனர் என்று எடுத்துக்காட்டும் பேதுரு எழுதிய இன்றைய இரண்டாம் வாசகம் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பைப் பெறுக்கொள்ள அழைக்கின்றது.

பதிலுரைப்பாடல்


திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! பல்லவி

அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.  பல்லவி

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா! திருத்தந்தை, உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் முழுமையாகப் பெற்றுத் தோமாவைப் போல் துணிவுடன் இறையரசை அறிவிக்க, இணைந்து செயல்படத் தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.
மன்னிக்கும் மகத்துவமிக்க எம் இறைவா!  பாஸ்கா காலத்தில் எங்கள் குடும்பங்களுக்கு உமது உயிர்ப்பின் பலனான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பகிர்ந்து வாழும் நல்மனம் ஆகியவற்றை நிறைவாய் பொழிந்து, எங்கள் குடும்பங்களில் உமது துணையாளரின் அருளால் சாட்சிய வாழ்வு வாழவும் உமது இரக்கத்தை அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.கருணைக் கடலே எம் இறைவா!  வாழ்வில் நம்பிக்கை இழந்த எம் மக்களின் தொற்றுநோயிலிருந்து விடுபடவும், வாழ்வாதரங்கள்  சிறப்படையவும், அவர்கள் மனித நேயத்துடன் நடத்துப்படவும், விரைவில் குடும்பங்கள் ஒன்றிணைந்திடவும், மகிழ்ச்சியுடன் பாஸ்கா காலத்தைக் கொண்டாடத் தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.அன்புத் தந்தையே எம் இறைவா! பேரிடர்காலமான இவ்வேளையில் எம் ஆட்சியாளர்களுக்குத் தேவையான அரசியல் ஞானத்தைக் கொடுத்து, எழை எளிய மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டு அவர்களின் உடல்நலத்திலும், பொருளாதரநிலமைகளிலும் கவனம் செலுத்த தேவையான நல்ல மனதினைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5 இரக்கம் நிறைந்த எம் இறைவா! இன்று தொற்றுநோயால் மரித்த அனைத்து ஆன்மாகள் அனைவரையும் நினைவு கூர்கிறோம். அவர்கள் உமது நிறைவாழ்வைப் பெறவும், அவர்களின் குடும்பத்தார்கள் ஆறுதலும், தேற்றுதலும் பெறவும், அவர்களுக்காக உழைத்த எல்லா நல் உள்ளங்கள் நலமுடன் தம் பணிகளைத் தொடரவும்  தேவையான இறைஅருளைப் பொழிந்திட  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
                               
www.anbinmadal.org

Wednesday, April 1, 2020

ஆண்டவருடைய பாடுகளின் புனித வார நிகழ்ச்சிகள்.2020

ஆண்டவருடைய பாடுகளின் புனித வார நிகழ்ச்சிகள்.2020


தவக்காலத்தின் இறுதி வாரத்தில் உள்ளோம். ஆனால் தொற்று நோயின் காரணமாக அனைவரும் ஆலயங்களில் ஒன்றாய் கூடி இறைவழிபாட்டுகள் நடத்த இயலாதச் சூழ்நிலை...

அவரவர் இல்லத்தில் குடும்பமாகக் கூடி இவ்வழிபாட்டுகளை நடத்துவதற்கு உதவியாக இருக்க அருள்பணியாளர் இல்லாத போது குடும்பங்களில் செபிக்க.. என்ற திருவழிபாட்டு வழிகாட்டித் தொகுப்பை திண்டிவனம் தமிழகத் திருவழிபாட்டுப் பணிக்குழு முப்பணி மையம் சார்பில் அதன் பொதுச்செயலர் அருள்பணி முனைவர் அற்புதராஜ் அவர்கள் தயாரித்து வழங்கியுள்ளார் தமிழக ஆயர் பேரவையின் அனுமதியுடன்...

1. ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு
2. ஆண்டவருடைய இரவு விருந்து
3. ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி
4. புனித இரவில் பாஸ்கா திருவிழிப்பு
5. ஆண்டவருடைய உயிர்ப்பு ஞாயிறு