Thursday, March 31, 2016

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு 03-04-2016பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறை இறை இரக்கத்தின் ஞாயிறாகக் கொண்டாட வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.  இந்த ஆண்டு அனைவருக்கும் இறைவனின் இரக்கத்தையும் நம்பிக்கையையும் தருகின்ற ஆண்டாக அமைய வேண்டும்.

இறந்து உயிர்த்த இயேசு முதல் முதலாக தன் சீடத்தி மகதலா மரியாவின் வழியாக தனது உயிர்ப்பை உறுதிச் செய்து விட்டு கலிலேயாவில் தன் சீடர்களை சந்திக்கச் செல்லுகிறார். இயேசுவின் மரணத்திற்குப் பின் மற்ற சீடர்கள் பயந்திருக்க துணிவோடு வெளியே சென்று வந்த தோமையார் மூலம் மீண்டும் தன் உயர்ப்பை அறிக்கையிட செய்கிறார். நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்! என்று போற்றி ஆண்டவரைக் கண்டுக் கொண்ட தோமையார் மூலம் காணமால் இயேசுவை நம்பும் நம்மை எல்லாம் பேறுபெற்றோர் என்று வாழ்த்துகின்றார்.

இயேசுவை சந்தித்த பலரும் தாங்கள் வாழ்க்கையில் பெரியதோரு மாற்றத்தை அடைந்தது போல நாமும் அவர் பெயரில் நம்பக்கைக் கொண்டு அவரின் பேரக்கத்தைப் பெற்று அவரின் சாட்சிகளாக வாழ வரம் வேண்டி இன்றையத் திருப்பலிக் கொண்டாடங்களில் நிறைவாய் பங்கேற்ப்போம்.

வாசகமுன்னுரை:

தூய ஆவியானவரின் வருகைக்குப் பின் துணிவுடன் இயேசுவுக்குச் சான்று பகர்ந்த திருத்தூதர்களின் வாழ்க்கை முறை பற்றி பதிவு செய்கின்ற லூக்கா, அவர்கள் வழியாக நடந்தேறிய அருஞ்செயல்கள் மற்றும் அரும் அடையாளங்கள் பற்றியும் இயேசுவுக்கும், திருத்தூதர்களுக்குமான இடைவெளியை மிக அழகாக பதிவு செய்கின்றார். தொடர் ஓட்டத்தில் ஓடுவதுபோல கையில் இறையாட்சி என்னும் தீபத்தை எடுத்துக் கொண்டு ஓடிய இயேசு, அதைத் தன் சீடர்களின் கையில் கொடுத்துவிட்டார். நிழலாக இன்றும் தொடர்கின்றார். இதனை விளக்கும் முதல் வாசகமான திருத்தூதர் பணிகள் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பத்முதீவுக்கு நாடுகடத்தப்படும் திருத்தூதர் யோவான் கிறிஸ்துவைக் காட்சியாகக் காண்கின்றார். அவரைக் கண்டபோது அவரிடம் எழுந்த உள்ளுணர்வுகளையும், இந்தக் காட்சியை எழுதி வைக்குமாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையையும், இயேசு உயிர்த்தபின்  மனித நிலையிலிருந்து மாறி, இறை நிலையில் உயர்ந்து நிற்பதையும் நாம் இரண்டாம் வாசகத்தில் அறிகின்றோம். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாடு நூலிருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

1.`என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!  `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!  `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! -பல்லவி

2.அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.  நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. -பல்லவி

3.கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!  ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!  ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். -பல்லவி

மன்றாட்டுகள்:


1. ஒன்று கூடி வாழ எம்மை அழைக்கும் அன்பு இறைவா! திருத்தூதர்கள் வழியாக செயலாற்றுபவர் இயேசு. திருத்தூதர்கள்  வெறும் கருவிகள் தாம். வாழையடி வாழையாக இன்று வரை தொடரும் இந்த திருத்தூதர் மரபில், திருத்தந்தை, ஆயர்கள் மற்றும் அவர்களின் உடன் பணியாளர்கள் அருள்பணியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான். இவர்கள் தாங்களாக எதையும் செய்வதில்லை. இவர்கள் வழியாக செயலாற்றுபவர் இறைவனே. இவர்கள் இறைவனின் கையில் உள்ள கருவிகள் மட்டுமே. இதனை உணர்ந்து உம் திருஅவையை சிறப்புடன் வழிநடத்த வேண்டிய வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.காணமால் நம்புவோர் பேறுபெற்றோர் என்று ஆசீர் வழங்கிய எங்கள் இறைவா! இயேசுவில் நம்பிக்கை கொண்டு கூடிவருதலால் நாங்கள் எங்கள் நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு உதவி செய்ததோடு, நம்பிக்கை குன்றியவர்களுக்கு துணிவையும் தந்து எங்களின் குடும்பம், பின்புலம், சமூக அந்தஸ்து, வேலை போன்றவற்றில் வேறுபட்டிருந்தாலும், இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை ஒருமனத்தோடு இவர்கள் வாழ வழிசெய்ய  வேண்டிய வரங்களை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நானே உங்கள் கடவுள்! நீங்கள் என் மக்கள் என்று பாசத்துடன் உடன்படிக்கை செய்து கொண்ட எம் இறைவா!  உலக நாடுகளில் மக்களை வழி நடத்தும் தலைவர்கள் உம் மக்களை பயங்கரவாதத்திலிருந்தும், நாட்டுகளுக்கிடைய ஏற்படும் போட்டி, பொறமை மற்றும் மத்தியதரைகடல், ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் மதகலவரங்களிலிருந்து காத்து வளமான வாழ்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எங்களை பராமரித்து பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு , அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால்,பாதுகாப்புடன் வாழ, இத்தலைமுறையினர் பெரியவர்கள் மேன்மையை உணர்ந்து அவர்களை பாதுகாக்க தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Thursday, March 10, 2016

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு 13/03/2016தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா43: 16-21
பிலிப்பியர் 3: 8-14
யோவான் 8:1-11


முன்னுரை:

இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றை கொண்டாடுகிறோம். ஒவ்வொரு ஞாயிறும் ஒரு தனிப்பட்டக் கருத்தை எடுத்துச் சிந்தித்து நம் அகவாழ்வை ஆராய்ந்து பார்க்க வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. தவக்காலத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமையாகிய இன்று மீண்டும் நம் அகவாழ்வைச் சிந்திக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தவறுவது மனித  இயல்பு. ஆனால் தவறுக்குப்பின் திருந்தி எழுவதுதான் மனிதனின் மாண்பு. அது தான் கிறிஸ்தவனின் பண்பு  என்பதை இன்றைய இறைவாக்குகள் அதிலும் சிறப்பாக நற்செய்தி வாசகம் நமக்கு வெளிப்படுத்துகின்றது

இயேசு இரக்கத்திலும், மன்னிப்பதிலும், அன்பு செய்வதிலும் என்றும் மாறாதவர். இயேசு யாரையும் தீர்ப்பிடுவதில்லை. இரண்டாம் வாசகத்திலும் நான் விரும்புவது எல்லாம் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தூய பவுலின் கூற்றும், முதல் வாசகத்தில் இதோ, நாம் புதியன செய்கிறோம் என்ற எசாயா இறைவாக்கினின் முழக்கமும், இயேசுவின் பாணியில் நாம் பிறருக்குத் தீர்ப்பிடாமல், மன்னித்து ஏற்கும் மனப்பக்குவத்திற்கு நம்மை அழைக்கின்றது. அவரில் ஓப்புறவு கொண்டு நம்மிலே மனமாற்றம் காண இத்திருப்பலியில் முழுமனதோடு பங்கேற்போம்.


வாசக முன்னுரை:

பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த யூத மக்களை விடுதலை செய்வதாக இறைவாக்கினர் எசாயா வழியாக வாக்களிக்கும் இறைவன், அவர்களுக்கு தான் எகிப்தில் செய்த அறிகுறியை நினைவுபடுத்தி, தான் இப்போது செய்வது அதனிலும் புதியது என்று தான் தரவிருக்கும் விடுதலையின் மேன்மையைச் சொல்கின்றார். எகிப்தின் அடிமைத்தனம் மிகப்பெரிய வடுவை இஸ்ரயேலரின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கலாம். 'என்னை அவன் அடிமையாக வைத்திருந்தான்' என்பதை அவர்களால் எப்படி மறக்க முடியும். ஆனால், மறந்தால்தான் இறைவனின் புதிய அற்புதங்களை இரசிக்க முடியும்.இறைவனின் புதிய செயல் என்னவென்று இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க நாம் கவனமுடன் கேட்போம்.

பவுலடியாரைப் பொறுத்த மட்டில் ஒருகாலத்தில் முதன்மையானவை என இருந்தவை இப்போது கிறிஸ்துவை அறிந்தவுடன் கடைநிலைக்குச் சென்றுவிட்டன. 'கிறிஸ்துவைப் பற்றிய அறிவின் முன் இவை யாவும் குப்பை அல்லது இழப்பு'. 'கடந்ததை மறந்து விட்டு, முன்னிருப்பதைக் கண்கொண்டு' என்று கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு பவுலடியார் இங்கே பயன்படுத்தும் ஓர் உருவகம் தான், 'பந்தயத்தில் ஓடுவது.' பந்தயத்தில் ஓடுவோரின் கண்முன் இலக்கு மட்டுமே இருக்க வேண்டும். நாம் இதுவரை ஓடிவந்த டிராக் எப்படி இருந்தாலும், டிராக் மாறி வந்தாலும், இன்றுமுதல் சரியான டிராக்கில் ஒவ்வொரு அடியையும் முழுமையாக எடுத்து வைத்து வாழவோம். இவ்வாறு இயேசுவைப் பற்றிக் கொள்ள அழைக்கும் திருத்தூதர் பவுலடியாரின் வார்த்தைகளுக்கு செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்:
திருப்பாடல்126: 1- 6
பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் பெருமகிழ்வடைகின்றோம்.

சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது.  பல்லவி 

உன "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி
 
ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி 
 
விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். பல்லவி

மன்றாட்டுகள்:

உங்கள் பதில்:
இறைஇரக்கத்தின் ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்புத் தந்தையே எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் ஓப்புறவு அருட்சாதனத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கின்ற தவறான கண்ணோட்டங்களைக் களைந்து, நல்ல ஒப்புறவு அருட்சாதனத்தில் பங்குகொண்டு இத்தவக்கால பலன்களை முழுமையாக அனுபவிக்கவும், இயேசுவின் உயிர்ப்பில் இணைந்திட வேண்டிய உறுதியான மனநிலையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எளியவர்க்கு இரங்கும் இறைவா! எங்கள் இடுக்கண்களையும் பலவீனங்களையும் நீ நன்கு அறிவீர். நாங்கள் எவ்வளவுக்கு வலுவற்றவர்களாக இருக்கின்றோமோ அவ்வளவுக்கு நீர் உறுதுணை தந்து எங்களை வலுப்படுத்துகிறீர். உமது கொடையாக நாங்கள் பெற்றுள்ள இந்த ஒப்புறவுக் காலத்தை நன்றியுடன் பயன்படுத்தி எங்கள் வாழ்வைப் புதுப்பிக்க வேண்டிய வரம் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவருடைய கட்டளைகளை இதயத்தில் இருத்திக் கொள்பவர் நீடிய ஆயுளையும், நிலையான நலன்களையும் பெற்றுக் கொள்வார் என்ற மொழிந்த எம் இறைவா! கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர். நம்மீது அவர் மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்பதை உணர்ந்து, அதே இரக்கத்தையும் அன்பையும் நாம் பிற மனிதர்களுக்கும் காட்ட எங்களுக்கு அருள் புரியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அரசர்களுக்கெல்லாம் அரசராகிய எம் இறைவா! எம் நாட்டின் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். அணிகள் சேர்த்துக் கொண்டு மற்ற்றவர்களை வெறுத்து ஒதுக்கமால் அனைவரும் இந்நாட்டு மக்கள், அனைவருக்கும் சேவை செய்யவே தெரிந்துக் கொள்ளப்பட்டோம் என்பதனை உணர்ந்திடக் கூடிய நல்ல மனதினை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Wednesday, March 2, 2016

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு 06/03/2016தவக்காலத்தின் நான்காம் ஞாயிறுஇன்றைய நற்செய்தி வாசகங்கள்.

முன்னுரை:

இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்களே! தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றை மகிழ்ச்சி ஞாயிறு என்று கொண்டாடுகிறோம். முதல் வாசகத்தில் மகிழ்ச்சி பாஸ்கா கொண்டாட்டமாகவும், இரண்டாம் வாசகத்தில் ஒப்புரவாகவும், நற்செய்தி வாசகத்தில் இல்லம் திரும்புவதாகவும் முன்வைக்கப்பட்டுள்ளது. என்னை நோக்கி நான் திரும்பினாலே, இறைவனை நோக்கிய, பிறரை நோக்கிய திருப்பம் சாத்தியமாகிவிடும். ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு அன்புடன், நட்புடனும் வாழ முற்படும் போதுதான் நாம் நம் மனமாற்றத்தின் நிறைவைக் காண்கிறோம்.

இழந்த உறவை மீண்டும் சரிசெய்யவே இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். காரசாரமான நம் வார்த்தைகள் எத்தனை உறவுகளை முறித்திருக்கின்றன எனச் சிந்திப்போம். முறிந்த உறவுகள் மீண்டும் இணையும்போது அங்கே இறைவனின் பிரசன்னமும் தோன்றுகிறது. ஏனென்றால் அன்பு எங்கே உள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் என்பதை உணர்ந்திடுவோம். இந்த தவக்காலம் நம்மில் வீழ்ந்து கிடக்கும் சுயநலம், பாவம் போன்ற ஆன்ம அழுக்குகளை அப்புறப்படுத்த அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. நம்மிலே மனமாற்றம் காண இத்திருப்பலியில் முழுமனதோடு பங்கேற்போம்.


வாசக முன்னுரை:

மோசேயின் தலைமையில் எகிப்து நாட்டை விட்டு புறப்பட்ட இஸ்ரயேல் மக்கள், யோசுவாவை படைத்தலைவராகக் கொண்டு யோர்தானைக் கடக்கின்றனர். பாலும். தேனும் பொழியும் கானான் நாட்டில் அவர்கள் கால் பதித்தவுடன் கில்காலில், எரிகோ சமவெளியில் இஸ்ரயேலர் கொண்டாடும் இரண்டாம் பாஸ்காதான் வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர்கள் கொண்டாடும் முதல் பாஸ்கா. இந்த மகிழ்ச்சியில் நாம் இன்றைய முதல் வாசகத்தை வாசிக்க கவனமுடன் கேட்போம்.

திருத்தூதர் பணி என்பது ஒப்புரவாக்கும் பணி என்று கொரிந்து நகரத் திருச்சபைக்கு மனம் திறக்கும் பவுலடியார், அந்த ஒப்புரவு என்றால் என்ன? அந்த ஒப்புரவுப் பணியில் மக்கள் மற்றும் தன் பங்கேற்பு என்ன? என்பதை தெளிவுபடுத்துகின்றார். 'தடைபட்ட உறவு மீண்டும் சரிசெய்யப்படுவதே ஒப்புரவு. கடவுள் தன் கொடையாக ஒப்புரவை நமக்கு வழங்கினாலும், அந்த ஒப்புரவிற்கு நம்மையே நாம்தான் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். ஒப்புரவை அன்றாடம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். திருத்தூதர் கூறும் இந்த அறிவுரையை சீரியமுறையில் மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப் பாடல்:

திபா 34: 1-2. 3-4. 5-6

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;
எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;
அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்;
அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

மன்றாட்டுகள்:

உங்கள் பதில்:
இறைஇரக்கத்தின் ஆண்டவலே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்புத் தந்தையே எம் இறைவா! திருஅவை என்பது அருட்பணியாளரும், பொது நிலையினரும் இணைந்த செயல்பாடுகளே. இவை திருஅவையில் நிலவிட, திருத்தந்தை முதல் பொதுநிலையினர்கள் வரை உம் இறைஇரக்கத்தின் கருணையினால் நல்ல மாற்றங்கள் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அரசர்கெல்லாம் அரசரான எம் இறைவா எம் நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார சீர்கேடுகள் ஆட்சியாளர்களின் தவறான வழி நடத்துதல் இவற்றிலிருந்து  வேறுபட்டு புதிய சிந்தனைகளும் தூய ஆவியின் வழி நடத்துதால்,  நல்ல தலைவர்களை உருவாக்கி தந்திட வரம் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் அரசுதேர்வு எழுதப்போகும் அனைத்து மாணவ மாணவியர்களை உம் பாதத்தில் வைக்கின்றோம். அவர்கள் பயம், கவலை, மறதி போன்ற தீயசக்திகளிடமிருந்து விடுவித்து, ஞானத்தோடு செயல்பட, எதிர்காலத்தின் கனவுகள் நினைவாகிட உம் ஆவியின் வல்லமையை பொழிந்திட வேண்டுமென்ற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உலகிற்கு, உப்பாக ஒளியாக விளங்கிட, எம் குடும்பங்களை அர்ப்பணிக்கின்றோம். இன்று குடும்ப உறவுகளில் நிலவும் பிரச்சினைகள், வேறுபாடுகள், தனிகுடும்ப வாழ்வு, பெற்றோர்களால் தனித்து விடப்படுதல் போன்ற இவைகளிலிருந்து அனைத்தும் மாற்றம் பெற்று ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு மன்னித்து வாழக்கூடிய நல்ல மனதினை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.