Wednesday, January 29, 2020

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு - முதல் ஆண்டு

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு

ஆண்டவரை ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணித்த விழா


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


மலாக்கி 3: 1-4
எபிரேயர் 2: 14-18
லூக்கா 2: 22-40


திருப்பலி முன்னுரை


இன்றைய ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று, இறைவனைத் தொழுதிட கூடியிருக்கின்ற இறைமக்கள் அனைவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் இறைஇயேசுவின் அன்பும் சமாதானமும் நிறைந்து நிலைத்திட வாழ்த்துகிறோம்.

"ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்னும் திருச்சட்டத்தை நிறைவேற்றும் வண்ணமாக, குழந்தை இயேசுவை ஆலயத்திற்கு எடுத்து வந்து அர்ப்பணம் செய்த நிகழ்வினை அன்னையாம் திருஅவை இன்று விழாவாகக் கொண்டாடுகின்றது. இந்த நாளில் இறைமகன் இயேசு தம்மீது நம்பிக்கை கொண்ட தம் மக்களை சந்தித்து, தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார். தூய ஆவியாரின் ஏவுதலால் கோவிலுக்கு வந்த முதியோரான புனிதர்கள் சிமியோனும், அன்னாவும், அதே ஆவியாரால் உள்ளொளி பெற்று, அவரை ஆண்டவர் என அறிந்து அக்களிப்புடன் அறிக்கையிட்டனர். இந்த இரு புனிதர்களின் தளராத இறைநம்பிக்கையும், ஜெபவாழ்வும், மீட்பரை அடையாளம் கண்டுகொள்ள துணை செய்தன. 


ஆழமான நம்பிக்கையோடு, இடையறாத இறைவேண்டலில் கடவுளுக்கு உகந்த வாழ்வை மேற்கொண்டிருந்தால், ஆண்டவரை அடையாளம் கண்டுகொள்ளும் இறைஅனுபவத்தை நாமும் பெற்றிடுவோம் என்பது திண்ணமே. ஆண்டவரை ஆலயத்தில் அர்ப்பணித்த இன்றைய நாளில், தங்களையே ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழ்கின்ற குருக்கள், துறவறத்தார் மற்றும் அருள்சகோதரிகளுக்காக இந்த திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.



வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை


உலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற மீட்பர் எப்போது வருவார்? அவரது வல்லமை எத்தகையது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை முதல் வாசகம் முன்வைக்கிறது. “நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரென்று தம் கோவிலுக்கு வருவார்; அவரது வல்லமை புடமிடுகின்ற நெருப்பு போன்றது; தம் மக்களை பொன், வெள்ளியைப் போல புடமிட்டு தூய்மையாக்குவார்” என்று இறைவாக்கினர் மலாக்கி இந்த முதல் வாசகத்தில் முன்னறிவிக்கிறார்.


இரண்டாம் வாசக முன்னுரை


இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமை குருவாகிய இறைமகன் இயேசு, தம் மக்களுக்கு பாவத்திலிருந்து விடுதலை தர இவ்வுலகில் அவதரித்தபோது, இரத்தமும், சதையும் கொண்ட சாதாரண மனித உருவிலே அவர்களோடு உறவாட திருவுளம் கொண்டார். சாவின் மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையை, தனது சாவினாலே அழித்து, அடிமைப்பட்டிருந்த தம் மக்களை விடுவித்தார். விண்ணிலும், மண்ணிலும் எல்லா அதிகாரங்களையும் கொண்டிருந்த கிறிஸ்து, வானதூதருக்கு துணை நிற்காமல், நம்மில் ஒருவரானார் என்று திருத்தூதர் புனித பவுல் எபிரேயருக்கு எழுதியத் திருமடலில் எடுத்துரைக்கிறார்.


பதிலுரைப் பாடல்


திருப்பாடல் 51: 12-13. 14-15. 16-17

பல்லவி: தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே, கடவுளே! படைத்தருளும்.


கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.

உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். (பல்லவி)

உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.

அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். (பல்லவி)

கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.

என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். (பல்லவி)


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. திருப்பொழிவு செய்யப்பட்டவர்களை, அனைத்து தீங்கிலிருந்தும் விடுவித்துக் காக்கும் எம் இறைவா! திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை அனைவரையும் உமது இறைதூதுப்பணியாளராக நீர் விடுத்த அழைப்பை நன்கு உணர்ந்து உமது அன்பும், உடனிருப்பும் எங்களுக்கு இவ்வுலகில் எல்லா வெற்றிகளையும் தேடித்தரும் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டிய வரங்களை வழங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உயர்ந்த இடத்தில் எம்மை நிலையாய் நிற்கச் செய்யும் இறைவா! எங்கள் குடும்பங்களில் உமது அன்பை நிறைவாய் பொழிந்து, நாங்கள் உம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக வாழவும், உமது அன்பின் சாட்சிகளாக இவ்வுலகில் வலம் வரவும், இறையரசை அறிவிப்பவர்களாகவும் வாழவேண்டிய அருள் வரங்களை நிறைவாய் பொழிந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நீதியோடும், நேர்மையோடும் செயலாற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்ற எம் தந்தையே இறைவா! அன்பே பிரதானம் என்பதை எம் நாட்டு தலைவர்களும் மக்களும் உணர்ந்திடவும்; பொறுமை, பரிவு போன்ற அன்பின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வில் பெற்றுச் சமத்துவச் சமுதாயத்தை அமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பே உருவான இறைவா, இன்றைய நாட்களில் உலகமெங்கும் நிலவும் போட்டிகளுக்கும், பயங்கரவாதத்திவிற்கும் முக்கியக் காரணமான அன்பில்லாமையைப் போக்கிடவும், அகதிகளாய் பிறநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த மக்களுக்கு வேண்டி அடைக்கலமும், அவர்களின் தனித்தன்மைகள் போற்றப்படவும், எல்லோரையும் தம் சகோதர சகோதரிகளாய் ஏற்றுக்கொள்ளும் நல் எண்ணங்களை அருளவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

Monday, January 20, 2020

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு - முதல் ஆண்டு

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-


எசாயா 9:1-41
கொரிந்தியர் 1:10-13,17
மத்தேயு 4:12-23

திருப்பலி முன்னுரை:-


பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

இறைசாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்டப் பணிக்காக அழைக்கப்படுகிறோம். இயேசு தனது விருப்பங்களை இந்த மண்ணுலகில் மனித உறவுகளில் நிறைவுக் காணத் தனது சீடர்களை அழைக்கின்றார். மனமாற்றத்தைக் காணத்தான் இயேசு அழைக்கின்றார். உண்மை அழைத்தல் என்பது வெளிக்குறத் தோற்றத்தை வைத்துத் தீர்மானிப்பது அல்ல. மாறாக அடிப்படையில் மனநிலை மாற்றம் காண்பதோயகும். இதனையே இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. வாழ்க்கை மாற மனமாற்றம் முதலில் தேவை என்பதை இயேசு வலியுறுத்துகின்றார்.

அன்புள்ளம் கொண்டு நம்மைக் கரம் பிடித்து அழைத்த இயேசு கிறிஸ்து நம்முடன் கடைசி வரை இருக்கின்றார். இறைவனில் அழைத்தல் இல்லறமோ துறவறமோ எதுவாக இருந்தாலும் அதில் நிலைத்து நின்று வாழத் தேவையான வரங்களை இத்திருப்பலி வழியாக இறைவனிடம் மன்றாடுவோம். வாரீர்! 




வாசகமுன்னுரை:-



முதல் வாசக முன்னுரை:-


செபுலான், நப்தாலி ஆகிய பகுதிகள் பாழ்படுத்தப்பட்டதன் விளைவாக அம் மக்கள் அடிமைகளாய் முகவரி இல்லா மக்களாய் வாழ்ந்தபோது இறைவன் இறைவாக்கினர் எசாயா மூலம் அவர்களின் சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றினார். இருட்டில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கையில் பேரொளியை உதிக்கச் செயதார். மக்கள் அக்களிப்பதுபோல் களிகூர்ந்தனர் என்று இறைவாக்கினர் எசாயா எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:-


கொரிந்து நகர் திருச்சபையில் ஏற்பட்ட பிரிவினைகளால் யார் பெரியவர்கள் என்ற ஏற்றத்தாழ்வும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதங்களும் தன்னலம் மிகுந்தபோக்கும் நிறைந்துபோனது. இவ்வாறு ஏற்றப்ட்டப் பிரிவினையால் வருந்தியத் திருத்தூதர் பவுல் நம் அனைவரும் இயேசுகிறிஸ்துவின் பெயரால் தான் திருமுழுக்குப் பெற்றுள்ளோம். எனவே நமக்குள் பிரிவினைப் பேதங்கள் இருக்க்கூடாது என்று அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்குச் செவிமெடுத்து மனமாற்றம்பெற முயற்சிப்போம்.

பதிலுரைப்பாடல்:-


பல்லவி: ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு.
திருப்பாடல்: 27: 1,4, 13-14

ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்சவேண்டும்?ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம். யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன். அதையே நான் நாடித் தேடுவேன். ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும். அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன் னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு. மன உறுதிகொள். உன் உள்ளம் வலிமை பெறட்டும். ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-


1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவைக் கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வு மலர்ந்திட இறைமனித உறவு ஒன்றுப்பட்ட வாழத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. துன்புறுவோரின் துணையாளரே எம் இறைவா! உலகில் நிலவும் ஏழ்மை, வறுமை, இல்லாமை என்ற நிலைகள் மாறி இருப்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, சேமித்து, அளவுக்கு அதிகமான பொருட்களை, சொத்துக்களைச் சேமிக்காமல் எழைகளோடு பகிர்ந்து கொண்டு உண்மையான கிறிஸ்தவ, ஆதிதிருச்சபைக் கொண்டு வந்த அர்த்தமுள்ள, கிறிஸ்தவ வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வழிபாட்டின் நாயகரே எம் இறைவா! இன்றைய சூழலில் வழிபாடுகள் பெறும் வெற்றுச் சடங்குளாக அல்லாமல் அர்த்தமுள்ளதாக அமையவும், வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாடிக்கையான ஒரு செயலாக இல்லாமல் பொருள் உள்ள வழிபாட்டின் முழுநிறைவையும், முழுமையாகப் பெற்றுத் திருமுழுக்கு யோவானைப் போல் சாட்சிய வாழவு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம்மை அரவணைக்கும் எம் இறைவா! இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைத் தங்கள் விருப்பம் போல் வாழாமல் கிறிஸ்து இயேசுவை அடிக்கல்லாகவும், அவரின் வாழ்வை மூலைக்கல்லாகவும் கொண்டு புதிய சிந்தனைகளோடும் புதிய ஆற்றவோடும் பணிவாழ்வே தங்களின் வாழ்வின் நிலையான வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்ந்திடத் தூய ஆவியின் வழி நடத்துதலில் வாழ்ந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கமே உருவான எம் இறைவா! இன்று எம் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறிப்பாக எம் நாட்டின் இறையாண்மைக்கு, மக்களின் ஒற்றுமைக்கு எதிரான சட்ட மாற்றங்கள், விவசாயிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், ஏழை எளியோர் இழைக்கப்படும் அநீதிகள் நீங்கிட உம் இரக்கத்தை  எங்கள் மீது பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்



www.anbinmadal.org

Sunday, January 12, 2020

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு - முதல் ஆண்டு

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு - முதல் ஆண்டு

 

 

 *இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


எசாயா 49:3,5-6
1கொரிந்தியர் 1:1-3
யோவான் 1:29-34


*திருப்பலி முன்னுரை*


இன்று பொதுக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு. இறைமகன் இயேசுகிறிஸ்துவுக்குச் சான்றுப் பகர்ந்திட வந்துள்ள இறைமக்களே! இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

“கடவுளின் ஆட்டுடிக்குட்டி” என்று கூறும் திருமுழுக்கு யோவான் இயேசுகிறிஸ்துவிற்குச் சான்றுப் பகிர்வதின் மூலம் மெசியாவை இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். தூயஆவி புறாவடிவில் இறங்கி வந்து யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூயஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் என்று அடையாளம் காட்டப்பட்டவரை “நானும் கண்டேன்” என்று பதிவுச் செய்கிறார்.

இறைவனின் ஆட்டுக்குட்டி உலகின் பாவங்களைப் போக்க வந்தவர் என்று இயேசு வருணிக்கப்பட்டதை நாளும் திருப்பலியில் திருவிருந்திற்கு முன் நினைவூட்டப்படுகிறது. பாவங்களை மன்னிப்பதை மட்டுமல்ல. புண்ணியங்களாக மாற்றுவதே இயேசுவின் பணி. மனிதகுலம் பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தது. இந்நிலையில் இயேசு செம்மறியாக நமக்காகத் தன்னையே கையளித்தார்.

பாவத்தைச் சுமந்தவர் மட்டுமல்ல பாவத்திலிருந்து விடுதலையடைந்துப் புனித வாழ்வு வாழ அழைப்பும் விடுக்கின்றார். இயேசுவின் அழைப்புக்குச் செவிமடுத்து அவரது சீடர்களாக வாழ உறுதி எடுப்போம். அதற்குத் தேவையான வரங்களை வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். வாரீர்!



 *வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*

யாக்கோபின் கோத்திரங்களைக் கட்டியெழுப்ப, எஞ்சினோரைக் கூட்டிச் சேர்க்க, இறைவனால் அழைக்கப்பட்ட இறை ஊழியர்கள் பலர் வந்தார்கள். ஆனால் இஸ்ரேயல் குலம் தன் இனத்தை மட்டுமே மீட்க மெசியா வருவார் என்று எண்ணியது. ஆனால் இவ்வூழியன் அனைத்துக்குலத்திற்கும் மீட்பராவார்: ஒளியாவார் என்று இயேசுவைக் குறித்து எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் மனதில் பதிவு செய்வோம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*


இன்றைய இரண்டாம் வாசகத்தில் தம் மக்களை மீட்டுக் கொணர இறைவன் இறைவாக்கினர்களை அழைத்ததுபோல, தம் ஏகமகனை இறை ஊழியனாக அழைத்துதுபோலத் தம்மையும் அழைத்துள்ளார் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கின்றார் திருத்தூதர் பவுலாடியார். நாமும் திருமுழுக்கால் கிறிஸ்துவுக்குள் தூயவர் ஆக்கப்பட்டவர்களே! அழைக்கப்பட்டவர்களே! நன்றி உணர்வுடன் மனதில் பதிவுச் செய்வோம்.வாழ்ந்துக் காட்டுவோம் வாரீர்.


 பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே உம் அடியான்; உம் திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்.
திருப்பாடல் 40:1 மற்றும் 3, 6-7, 7-8, 9



நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.  புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; - பல்லவி


 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.  எனவே, 'இதோ வருகின்றேன்; - பல்லவி


என்னைக்குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;  என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;  உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' - பல்லவி


என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி


*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*


 1.  சீயோனிலிருந்து நல் ஆசீர் வழங்கும் எம் இறைவா! உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் தூயஆவியில் புத்துணர்வுப் பெற்று எம் மீட்பராம் இயேசுவின் மாட்சிமையை உணர்ந்துத் தங்கள் வாழ்க்கையின் மூலம் உலகம் மாந்தர்கள் அனைவரும் தம் அழைப்பை ஏற்று இயேசுவின் சீடர்களாய் அன்பைப் பகிர்ந்துடும் மக்களாய் வாழ்ந்திட அருளாசீர் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. உம் திருமலையிலிருந்து எமக்குப் பதிலளிக்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களின் தேவைகளை அறிந்து எம் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்தருளும். நாங்கள் உம்மிடம் வேண்டிக்கேட்பதைவிட மேலானவற்றைப் பொழிந்து எம் குடும்பங்களில் அன்பும் நட்பும் மலர அனைவரும் ஒன்றிணைந்துச் செயல்பட வேண்டிய ஞானத்தையும் விவேகத்தையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


3. எம் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமுமான எம் இறைவா! வல்லரசுகளால் போர் எழும் ஆபத்துகளிலிருந்து இவ்வுலத்தை காத்து, அனைத்துலக ஆட்சியாளர்களின் உள்ளத்தில் பகைமை எண்ணங்கள் நீங்கி அன்பும் அமைதியும் ஏற்பட்டு. அவலங்கள் நீங்கி வளமைப் பெற்ற வாழ வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. உம் இறக்கைகளின் பாதுகாப்பில் எம்மை அரவணைக்கும் எம் இறைவா! உலகெங்கும் உள்ள இளையோர்களை மாற்றங்களால் நாளுக்குநாள் மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகச் சுகபோகவாழ்க்கையிலிருந்து மீட்டுத் தன்னலமற்ற சேவை வாழ்க்கையில் ஈடுபடவும், சமுதாயத்தில் தங்களின் தூயவாழ்வால் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. எம் வாழ்க்கையில் ஒவ்வொருகட்டத்திலும் எம்மைக் காக்கும் இறைவா! எம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் உள்ள நலிந்தோரையும், நோயாளிகளையும், கைவிடப்பட்டடோர்களையும், நாடோடிகளாய் வாழும் எளியோரையும் பேணிக்காத்து அவர்கள் வாழ்வு உயர நாங்கள் அனைவரும் உழைக்க, உதவிட வேண்டிய நல்ல மனதினைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 www.anbinmadal.org

Monday, January 6, 2020

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா - முதல் ஆண்டு

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா

 


திருப்பலி முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு. இறைமகனின் திருமுழுக்குப் பெருவிழா. இறைமகன் இயேசு பிறந்து முப்பது ஆண்டுகள் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்துக் கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தவர் இப்பொழுதுப் பொதுவாழ்வில் நுழையும் முன் அவருக்குத் தேவைப்பட்டது தூய ஆவியாவனர் ஆற்றலும், துணிவுடன் தன் மூன்று ஆண்டுக் காலப் பொது வாழ்வில் மக்களைச் செம்மைப்படுத்த, தந்தையாம் கடவுளின் அருளும் தேவைப்பட்டபோது, அவர் திருமுழுக்கு யோவானிடம் சாதாரண மக்களைப் போல வந்து நின்றுத் திருமுழுக்குப் பெறும் வேளையில் ஆவியானவர் இறங்கி வர, தந்தை தன் ஓரே மகனிடம் புரிப்படைவதையும் வானத்திலிருந்து கேட்டக் குரலொலிச் சுட்டிக்காட்டுகின்றது.

திருமுழுக்குப் பெற்ற நாம் இன்று அதை வெறும் சடங்காகப் பாராமல் திருமுழுக்கின் வெளிப்பாடுகளை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயலுகிறோமா என்ற கேள்விகுறி நம் உள்ளத்தில் எதிரொலிக்கின்றது. திருமுழுக்கின் முலம் இறைவனின் பிள்ளைகளான நாம் அதை நம் பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இப்பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் தூயஆவியின் ஆற்றலையும் பெற மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசகம்



இறைவாக்கினர் எசாயா இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டதைத் தெளிவாக இன்றைய வாசகத்தின் வழியாகப் பதிவுச் செய்கிறார். இதோ என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது என்ற ஆண்டவர் பெருமிதம் கொள்கின்றார். அவர் வழியாக நாம் அடையவிருக்கும் நன்மைகளை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கேட்டுச் சிந்தித்து ஆண்டவரில் பூரிப்படைவோம்.


இரண்டாம் வாசகம்



இந்த இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு இறைமகன் இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றுக்கொண்ட, பெறப்போகும் அருள்வளங்களை எடுத்துரைக்கின்றார். கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. அலகையின் சோதனைகளிலிருந்து நம்மை விடுவித்து என்றும் நன்மை செய்துகொண்டே இருக்கின்றார். இறைவாக்கினார் எசாயாவைப் போல் புனித திருத்தூதர் பேதுருவும் ஆண்டவரின் அருள்கொடைகளை ஆழமாக நம் உள்ளத்தில் பதிவுச் செய்யும் இவ்வாசகத்தைக் கவனித்து இறையருள் பெறுவோம்.


பதிலுரைப் பாடல்

திபா 29: 1-2. 3ac-4. 3b,9c-10 (பல்லவி: 11b)

பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!

இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். - பல்லவி


ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. - பல்லவி


ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது; அவரது கோவிலில் உள்ள அனைவரும் ‘இறைவனுக்கு மாட்சி’ என்று ஆர்ப்பரிக்கின்றனர். ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். - பல்லவி


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. நலம் தரும் புத்தாண்டை அளித்த எம் இரக்கத்தின் தந்தையே இறைவா! திருமுழுக்கு வழியாக உமது பிள்ளைகளாக்கிய எம் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார், பொதுநிலையினர் அனைவரின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். தூய ஆவியால் நிறைவுப் பெற்ற இத்திருஅவை இறையச்சத்திலும், ஞானத்திலும், தன்னலமற்ற சேவையிலும் தலைச் சிறந்து விளங்க உமது அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அஞ்சாதே என்று வாழ்த்திப் புத்துயிர் தந்த எம் கனிவானத் தந்தையே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளை உணர்ந்த உம் வார்த்தைகளின்படி வாழ்க்கை நடத்தவும், வரும் தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலைப் பெற்றிட வேண்டிய வரத்தை எமக்கு அளித்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. புதுயுகம் படைத்திட உம் துணையாளரை எமக்கு அளித்த தந்தையே இறைவா! எம் அரசியல் தலைவர்கள் , அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் தன்னலமற்ற சேவையாலும், மதம், இனம், மொழி, என்ற பாகுபாடு இல்லாமல் தங்கள் பணிகளைச் செய்து நீர் விரும்பும் சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கவும் வேண்டிய வரத்தை அவர்களக்குத் தரவேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்கு மன்னிப்பு அளித்து எமக்குப் புதுவாழ்வை வாக்களித்த தந்தையே இறைவா! இளைஞர் ஆண்டுக் கொண்டாடும் எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களைக் கண்டு கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளத் தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருளவேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Thursday, January 2, 2020

ஆண்டவரின் திருக்காட்சி - பெருவிழா - முதல் ஆண்டு

 *ஆண்டவரின்  திருக்காட்சி - பெருவிழா*





*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


ஏசாயா 60: 1-6.
எபேசியர் 3: 2-3, 5-6.
மத்தேயு 2:1-12

*திருப்பலி முன்னுரை *


இறைமகன் இயேசு கிறிஸ்துவிற்குப் பிரியமானவர்களே!
நமக்காகக் குடிலில் பிறந்த கோமகனின் திருக்காட்சியைக் காண நெஞ்சமெல்லாம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இன்றைய திருப்பலிக்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

திருச்சபையின் பழம்பெரும் பெருவிழாகளில் ஒன்றான ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா மூலம் இறைமகன் இயேசுவின் பிறப்பு உலகமக்கள் அனைவருக்கும் உரித்தான ஒன்று என்பதை ஆழமாகப் பதிவு செய்கிறது நம் திருச்சபை. தன்னைத் தேடி வருபவர்களை அற்புதமாக வழிநடத்தித் தன்னை வெளிப்படுத்துகின்றார். நல்மனம் படைத்த அனைவருக்கும் அவர் சொந்தமானவர்.

பிறந்தபோது மகிழ்ச்சித் தந்தவர், இறக்கும்போது மன்னிப்பை வழங்கியவர், தேடிவருபவர்களுக்குத் தூயஆவியின் அருட்கொடைகளை அள்ளித் தருகிறார். எனவே தான் திருத்தூதர் பவுலடியார் “ஆண்டவர் அனைவரையும் அன்புச் செய்யும் ஆண்டவராக விளங்குவதால் நாம் எந்த வேற்றுமையும் பாராட்டாது அனைவருக்கும் அன்பு நண்பர்களாக இருக்கவேண்டும்” என்கிறார்.

அன்று ஒளியாகப் பிறந்துத் தம் ஞானஒளியை வீசி அனைத்து மக்களையும் ஈர்த்தவரைத் தொழ வந்துள்ள நம் அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளித்து நாமும் அவரைப்போல் மற்றவர்களை நம்பால் ஈர்க்க வாழ்வளிக்கும் தியாகச்சுடராய்த் திகழ்ந்திட அன்புடன் அழைக்கின்றார். தியாகச்சீடராய் மாறிட இத்திருப்பலியில் மனமுறுக வேண்டிடுவோம். வாரீர் நம்பிக்கையுடன்...



*வாசக முன்னுரை*



*முதல் வாசகம்*


இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் மெசியா வருகையின் போது எருசலேம் நகரில் நடைபெறும் நிகழ்வுகளை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். கடவுளின் மாட்சிமை ஒளியைக் கண்டு பிற இனத்தவர்கள் அந்த ஒளியைத் தேடிவருவார்கள். செல்வங்கள் தேடிவரும். மக்கள் பொன், நறுமணப் பொருள் ஏந்தி வருவதைக் கண்டு எருசலேம் நகர் அகமகிழ்ந்திடும். அவர்கள் கடவுளைப் புகழ் பாடுவார்கள் என்று முன்னுரைத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசகம்*


திருத்தூதர் பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட மறைபொருளைப் பற்றி எடுத்துரைக்கின்றார். நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தாரும் இயேசுகிறிஸ்துவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்று இயம்பும் இக்கருத்தினைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


*பதிலுரைப்பாடல்*


பல்லவி: ஆண்டவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2,7-8,10-11,12-13.

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.  அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!  பல்லவி.

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.  ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.  பல்லவி

தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.  எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.  பல்லவி

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.  வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.  பல்லவி


*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*


1.எழுந்து ஒளிவீசு என்று எம்மைப் பணித்த எம் இறைவா! உலகின் ஒளியாம் இயேசு கிறிஸ்துவின் சீடராய் இவ்வுலகில் வலம் வரத் தேவையான விசுவாசத்தையும், உறுதியான உள்ளத்தையும், எதிர்வரும் இடர்களையும், சவால்களையும் ஏற்றுக் கடைசிவரை உமது அன்பில் நிலைத்திருந்து உமக்குச் சாட்சிப் பகர உம் திருஅவையினர் அனைவரையும் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார் என்று அமைத்த எம் இறைவா! நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் அடங்கிவிடாமல் நீர் படைத்த இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களையும் உம்மைப்போல் அன்புச் செய்யவும், ஏழை எளியோர்களையும் குடும்பத்திலுள்ள முதியோர்களையும், ஆதரவற்றவர்கைளையும் நேசிக்கவும், அரவணைத்து அவர்களின் வாழ்வாதரங்களை உயரவும் நாங்கள்  உழைத்திட நல்மனதினைப் பெற்றிட வேண்டிய வரங்களைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உமது அளப்பரிய அன்பினால் எம்மை மீட்ட தந்தையே!  நாட்டில் எங்கு நோக்கினும் பொருளாதார மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் உம் மக்களைச் சிதறடிக்கும் நிலையை நீவீர் நன்கு அறிவீர். இந்தப் போராட்டங்களுக்கு முற்றுபுள்ளி வைத்துப் பொதுநலம் காத்திடவும், அனைத்து மக்களும் பயமின்றி வாழவும் உம் வரங்களை அருள்மாரிப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.எமைப் படைத்து ஆளும் எம்  இறைவா! வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 www.anbinmadal.org