Wednesday, June 27, 2018

ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு

*ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு *



*இன்றைய வாசகங்கள் *

 

 

*திருப்பலி முன்னுரை*


இறைமகன் இயேசுவின் அன்புக்குரியவர்களே!

ஆண்டின் பொதுக்காலம் 13-ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ளோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு பெண்கள் நலமடைந்த புதுமைகளை கேட்கவிருக்கிறோம். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ள இந்த நிகழ்வில் இரு புதுமைகள் நிகழ்கின்றன.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது, எவ்விதத் தொடர்பும் இல்லாத இருவேறு புதுமைகளை நற்செய்தியாளர்கள் இணைத்துள்ளதைப்போல் தோன்றலாம். ஆனால், ஆழமாகச் சிந்திக்கும்போது, அழகான ஒப்புமைகளும், வேற்றுமைகளும் வெளியாகும்.

இருபெண்கள் குணமடைகின்றனர்... நோயுள்ள ஒரு பெண்ணும், இறந்த ஒரு சிறுமியும் இயேசுவால் வாழ்வு பெறுகின்றனர். நோயுள்ள அந்தப் பெண் பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் தன் உயிரைக் கொஞ்சம், கொஞ்சமாய் இழந்து வருபவர். சிறுமியோ, அதே பன்னிரு ஆண்டுகளாய் சுகமாக, மகிழ்வாக வாழ்ந்து, திடீரென உயிர் இழந்தவர். இரத்தப்போக்கு நோயுள்ள பெண், தானே வலியவந்து, இயேசுவைத் தொடுகிறார். அதுவும், யாருக்கும் தெரியாமல் கூட்டத்தோடு, கூட்டமாய் வந்து, அவரது ஆடையின் விளிம்புகளைத் தொடுகிறார். குணமடைகிறார். உயிரிழந்த சிறுமியையோ, இயேசு, தேடிச் சென்று, தொட்டு உயிரளிக்கிறார்.

ஆரவாரமாக, கூட்டமாக ஆரம்பித்த ஒரு நிகழ்வு யாருக்கும் தெரியக்கூடாது என்ற கட்டளையுடன் முடிகிறது. ஆனால், யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் ஆரம்பித்த அந்தப் பெண்ணின் புதுமையை இயேசு ஊரறியச் செய்கிறார். ஓரங்கள் மையமாவதும், மையங்கள் ஓரமாவதும் இறைவனின் கணக்கு.

இந்நிகழ்வை நம் ஆழ்மனதில் பதிவுசெய்து நாம் எப்பொழுதும் இறைமகன் இயேசுவை மையமாக கொண்டு நம் வாழ்வை வளமாக்க இத்திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

 

*முதல் வாசக முன்னுரை*


ஊடகங்கள் தரும் உலகையும், விவிலியம் தரும் உலகையும் இணைத்துச் சிந்திக்கும்போது, , இந்த உலகை ஒரு சுடுகாடாய், கல்லறைத் தோட்டமாய் நாம் அடிக்கடி எண்ணத் தோன்றுகிறது. இந்தச் சுடுகாட்டின் மத்தியில், கல்லறைத் தோட்டத்தின் நடுவில் கவிதை வரிகளாய் இன்றைய முதல் வாசகம் ஒலிக்கிறது: "கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்: தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது" என்பது தான் இவ்வரிகள். முதல் வாசகமாக வரும் சாலமோனின் ஞானம் இப்பகுதியை கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


இன்றைய இரண்டாம் வாசகத்தில் சேமிப்பைப் பற்றியும் பகிர்வைப் பற்றியும் திருத்தூதர் பவுலடியார் "மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை: குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை " என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! என்ற எடுத்துக்காட்டுடன் இயேசுவின் அன்பை அழகாக எடுத்துரைக்கின்றார். இயேசு அவர் செல்வராயிருந்தும் ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நாம் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். பவுலடியாரின் இக்கருத்துக்களை நம் உள்ளங்களில் பதிவு செய்வோம்.

*பதிலுரைப் பாடல்*

திபா 30: 1,3. 4-5. 10,11,12
*பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.*

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். -*பல்லவி*

இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. -*பல்லவி*

ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். -*பல்லவி*

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! *நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.* அல்லேலூயா. 


*நம்பிக்கையாளரின் மன்றாட்டு*


1.உயிரினும் மேலான பேரன்பு கொண்ட தந்தையே எம் இறைவா! எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் இறையரசை அறிவிக்க தங்கள் வார்த்தையாலும், வாழ்க்கையாலும் சாட்சியம் பகர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2.எம் நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! எங்கள் குடும்பங்கள் அனைத்தும் உம்மையே மையமாகக் கொண்டு, உம் மேல் முழு நம்பிக்கை வைத்து எங்கள் வாழ்க்கையை உமக்கு உகந்ததாக வாழவும், பிறரன்பில் சிறந்து விளங்கவும், நிலைவாழ்வைப் பெற்றிட தேவையான அருள் வரங்களை அருளுமாறு ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3.எல்லாரும் தஞ்சம் தரும் எம் இறைவா! புலம்பெயந்து துன்புரும் எல்லாநாட்டு மக்களையும் கண்நோக்கியருளும். அவர்களுக்கு அடைக்கலம் தரும் நல்ல உள்ளத்தையும், மனிதநேயத்தையும் தந்து, அம்மக்களை ஆதரிக்க உலகநாட்டு அரசியல் தலைவர்கள் முன்வரவும், வாழ்வும், வளமும், ஏற்றமும் பெற்றிட தேவையான அருள் வரங்களை அருளுமாறு ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4.என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா! எம் இளையோர்கள் அனைவரும் படிப்பிலும், ஒழுக்கத்திலும், மனிதமாண்பிலும் உன்னதஇடத்தைப் பெற்றிடவும், அவர் தம் பெற்றோர்கள் முன்மாதிரியாக வாழ்ந்திடவும் ஆவியாரின் அன்பும், அருளும் நிறைவாய் பெற்றிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அனைவரையும் ஆதரிக்கும் தந்தையே எம் இறைவா! ஏழைகள், கைவிடப்பட்டோர், ஆதரவற்ற அனாதைகள் ஆகியோரை கண்டு அவர்களுக்கு உதவிட தங்கள் உழைப்பாலும், பொருளாதார உதவியாலும் வாழ்வில் மகிழ்வு, உடல்நலமும் பெற்று அமைதியான வாழ்க்கைப் பெற்றிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 www.anbinmadal.org

Thursday, June 21, 2018

திருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா.

*திருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா.*



*இன்றைய வாசகங்கள்*


*திருப்பலி முன்னுரை:*


திருஅவையின் பாரம்பரியத்தில்  மூவருக்கு மட்டும் மண்ணுலகில் அவர்கள் பிறந்தநாட்கள் கொண்டாடப்படுகின்றன. அவைகள் 1.இயேசுவின் பிறந்தநாள், 2.அன்னை மரியாவின் பிறந்தநாள், 3. திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள்.

இன்று திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவான் ஒரு வைரம்... பாலை நிலத்தில் தவத்திலும், துன்பத்திலும் தன்னைத்தானே பட்டைத் தீட்டிக்கொண்ட ஒரு வைரம். இயேசு என்ற ஒளியில் இந்த வைரம் பல கோணங்களில், பல வண்ணங்களில் மின்னியது. "மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை" என்று இயேசுவால் புகழப்பட்ட வைரம் இவர். இறுதியாக இரத்தம் சிந்திச் சான்று பகர்ந்தவர். இவ்வாறு மீட்பு வரலாற்றில் அவர் தனியிடமும் தனித்துவமும் பெற்றதே இன்றைய விழாவிற்கான சிறப்புக் காரணமாகும்.

வயதுமுதிர்ந்த காலத்தில், செக்கரியா, எலிசபெத்து இருவருக்கும் இறைவனின் கருணையால் குழந்தை பிறந்ததால், இக்குழந்தைக்கு 'யோவான்' என்று பெயரிடும்படி தலைமைத் தூதர் கபிரியேல் பணித்திருந்தார். இறைவன் இக்குழந்தைக்குத் தந்த 'யோவான்' என்ற பெயருக்கு 'யாவே அருள் வழங்கினார்' என்று பொருள். 'யோவான்', தன் பெயருக்கேற்ப வாழ்ந்தார். அவர் மட்டும் அருளால் நிறையவில்லை. அவர் பணிகளால், நாம் அனைவரும் அருளுக்கு மேல் அருள் பெற்றுள்ளோம்.

இறையருளை மக்களுக்கு அள்ளித்தந்தத் திருமுழுக்கு யோவான், நமக்கும் இறைவனிடமிருந்து அருள்வளங்களைப் பெற்றுத்தர இத்திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.


*வாசகமுன்னுரை:*


*முதல் வாசக முன்னுரை*:

கடவுள் இறைவாக்கினர்களைத் தனிப்பட்ட முறையில் சிறப்பு அருளால் தேர்ந்துகொள்கிறார். இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, "கருப்பையில் இருக்கும் போதே ஆண்டவர் என்னை அழைத்தார். தாயின் வயிற்றில் உருவாகும் போதே என்னைப் பெயர்ச் சொல்லி அழைத்தார்" என்கிறார். உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கும் ஒளியாகவும் ஏற்படுத்துவேன் என்று முன்பாகவே அறிவித்தது இன்றைய விழா நாயகன் திருமுழுக்கு யோவானைத் தான் என்பதை நமக்கும் விளக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் நம்மையும் கடவுள் எவ்வாறு தேர்ந்தெடுத்து அவர் தம் திருப்பணிக்கு அழைத்துள்ளார் என்பதைக் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவின் வருகைக்கு முன்பே இன்றைய விழா நாயகன் திருமுழுக்கு யோவான் சமுதாய அவலங்களையும், அநீதிகளையும் கடிந்து எதிர்குரல் எழுப்புகிறார், நற்செய்தியை மக்கள் அனைவருக்கும் பறைசாற்றினார். கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத் தான் அனுப்பப்பட்டுள்ளது என்று நம்மை மீட்பின் செய்தியை அறிவிக்க அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

*பதிலுரைப்பாடல்* :

பல்லவி*: வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்:
பதிலுரைப்பாடல்: திபா. 139: 1-3, 13-14, 15

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்: என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். *பல்லவி*

நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்: என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. *பல்லவி*

ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் என க்கு உருதந்தவர் நீரே! அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்த தால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்: உம் செயல்கள் வியக்கத்தக்கவை என் பதை என் மனம் முற்றிலும் அறியும். *பல்லவி*

என் எலும்பு உமக்கு மறைவானதன்று: மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர்.* பல்லவி*

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! *குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் என ப்படுவாய்: ஏனெனில் ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்.* அல்லேலூயா 



*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:*


1.அன்புத் தந்தையே! எம் இறைவா! இன்றைய சூழலில் திருஅவை எதிர்கொள்ளும் அனைத்துச் சவால்களைக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ற அன்பின் பாதையில் வழிநடந்துச் செல்லவும், எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர்கள், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் மீட்பைப் பறைசாற்றிடவும், சமுதாய அவலங்களையும், அநீதிகளையும் களைந்திடவும் தேவையான தூயஆவியின் ஆற்றலையும் இறைஞானத்தையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2.எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம் இறைவா! எங்கள் பங்கை, எம் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். எங்கள் அனைவரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும், இயேசுவின் சீடராய் மாறிட அடிப்படைத் தேவையான அர்ப்பணிப்பு வாழ்வு, அதன் மூலம் உம் அன்பின் ஒளியாய் சுடர் விட்டுப் பணியாளராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உறவின் ஊற்றாகிய இறைவா! இன்றைய சூழலில் கிறிஸ்துவத்திற்கு எதிராக எழுப்பப்படும் அநீதிகள், வன்முறைகள், கொலைகள் , தீவிரவாத செயல்கள் இவை அனைத்திலிருந்தும் விடுதலைப் பெற்று, உமது கருணைமிகு இரக்கத்தால் அனைவரும் ஒற்றுமையோடும், நீதி, நேர்மையோடும், ஒருவர் ஒருவரைப் புரிந்து கொண்டு மனித மாண்புகள் செழிக்க உமது ஆற்றல் மிகு அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. காலங்களைக் கடந்த எம் இறைவா! எம் நாட்டில் உள்ள அனைத்து இளையோர்கள் தங்கள் இளமைக் காலங்களில் உம் தூய ஆவியின் துணையை நாடி ஞானத்தைப் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் விசுவாச வாழ்வில் திருமுழுக்கு யோவானைப் போல் சாட்சிகளாகத் திகழத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5 அன்புத் தந்தையே எம் இறைவா! உலகில் ஏழைப் பணக்காரன் என்ற வேறுபாடுகளைக் களைந்துச் செல்வம் படைத்தவர்கள் தங்கள் செல்வத்தைக் கொண்டு ஏழைகளின் வாழ்வு வளம் பெற உதவிப் புரியவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் அனைத்து மாந்தருக்கும் சாதி, மத வேறுபாடுகள் களைந்துத் தன்னலமற்றவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


           www.anbinmadala.org

Tuesday, June 12, 2018

பொதுக்காலம் ஆண்டின் 11ஆம் ஞாயிறு

*பொதுக்காலம் ஆண்டின் 11ஆம் ஞாயிறு*



*இன்றைய வாசகங்கள்*


எசேக்கியேல் 17: 22-24  |  2 கொரிந்தியர் 5: 6-10  |  மாற்கு 4: 26-34

*திருப்பலி முன்னுரை*:


இயற்கையுடன் இணையாமல் இயற்கைக்கு மாறாக, இரவையும் பகலாக்கி, இடைவிடாமல், அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு இந்த ஞாயிறு வாசகங்கள் வழியே இயற்கைப் பாடங்கள் சொல்லித் தருகின்றார் இறைவன்.

இயற்கை என்ற பள்ளியில் இறைவன் நமக்குச் சொல்லித்தர விழையும் பாடங்களைக் கவனமாகப் படித்திருந்தால், இந்த இயற்கை வளங்களை இழக்கும் நிலைக்கு நாம் வந்திருக்கத் தேவையில்லை. இயற்கையைவிட நாம் அறிவாளிகள் என்ற இறுமாப்பில், இறைவன் படைத்த இயற்கையைச் சின்னாபின்னமாக்கிவிட்டு, இறந்து கொண்டிருக்கும் இயற்கையை எப்படிக் காப்பாற்றுவது என்று உலகநாடுகள் அனைத்தும் மாநாடுகள் நடத்தி வருகின்றது.

மாற்கு நற்செய்தியில் மட்டும் நாம் காணும் இந்த அழகிய உவமையே இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் "தானாக வளரும் விதை" என்ற உவமை.

இந்த உவமையில் இயேசு முக்கியமாக வலியுறுத்துவன... பொறுமை, நிதானம், நம்பிக்கை... இந்த அற்புத குணங்கள் நாம் வாழும் அவசர உலகில் பெருமளவு காணாமற் போய்விட்டன.

இன்றைய நற்செய்தியில் வரும் விதை போன்றவர்கள் தாம் நாம். பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளில் இறைவார்த்தைகள் உரமாக இருந்து, அருள்கொடைகள் எனும் நீர் ஊற்றி, விதை முளைத்து, செடியாக, மரமாக வளர்ந்து நிற்கும்போது, நாம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும், நம்மால் நல்ல கனியைக் கொடுக்க முடியும், பகிர்ந்து கொள்ள முடியும். அக்கனிகள் வளரக் கடவுள் ஊட்டி வளர்த்திருக்கிறார் என்ற நம்பிக்கையில் இத்திருப்பலியில் இறைவனின் நற்கனிகளாய் உருபெறச் சிறப்பாக மன்றாடுவோம்.

*வாசக முன்னுரை*:

*முதல் வாசக முன்னுரை*:


இறைவனின் உன்னத கொடையே நம் உயர்வும், வளர்ச்சியும் ஆகும்.  மனித வாழ்க்கை வளர்ந்து அது பூக்களாகவும், காய்களாகவும், கனிகளாகவும் பல மடங்கு பயன் தரும் மரமாக வேண்டும். பாபிலோனிய அடிமைத்தனத்தில் நம்பிக்கை இழந்த இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை என்னும் விதையை அவர்களின் இதயங்களில் விதைத்தார் இறைவாக்கினர் எசேக்கியேல். வளர வைப்பதும், வளர்ந்ததை உலர வைப்பதும் இறைவனின் வல்லமை. இறைவனின் நம்பிக்கை தரும் இவ்வார்த்தைகளை கவனமுடன் கேட்போம்.

 

*இரண்டாம் வாசக முன்னுரை*:


நம் வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் கனிகளை நாம் என்ன செய்வது? இந்த உலகில் நாம் படைக்கப்பட்டதே மற்றவர்களுக்கு உதவி செய்யத்தான் என்பதை உணர்ந்து பழுத்த மரமாக வாழ நாம் முன்வரவேண்டும்! இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவதுபோல இந்த உலகிலே நாம் செய்யும் நற்செயல்கள் மறு உலக வாழ்வை நிர்ணயிக்கும்.ஆம் இறுதிநாளில் இயேசுவின் நீதிமன்றத்தில்  நாம் தோன்றும் போது நாம் உடல் வாழ்க்கையின் போது நாம் செய்த நற்செயல்கள், தீச்செயல்களுக்கு உரிய   பலனைத் தரும் என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

*பதிலுரைப் பாடல்*


திபா 92: 1-2. 12-13. 14-15
*பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று.*
ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. -*பல்லவி*

நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். -*பல்லவி*

அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; 'ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். -*பல்லவி*

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! *இறைவாக்கு வித்தாகும்; கிறிஸ்துவே விதைப்பவர்; அவரைக் கண்டடைகிறவன் என்றென்றும் நிலைத்திருப்பான்.* அல்லேலூயா.

*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*



1. கடவுளின் நம்பிக்கை தரும் வாக்குறுதியாகத் திகழும் திருச்சபை கேதுருமரம் போல் தளிர்விட்டு தழைத்து மேலோங்கிட இறைநம்பிக்கையால் தேர்ந்து கொள்ளப்பட்ட திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவரது ஒளியில் மிளிரும் ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர். தாம் தேர்ந்து கொண்ட அழைப்பிற்கேற்ற வாழ்க்கை வாழ வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

2. எம்மைப் படைத்தாளும் எம் இறைவா! அனைத்தையும் சுற்றிவளைத்து அபகரித்துக் கொள்ளும் சுயநலத்தைக் களைந்து, மென்மையான மனதுடன், படைப்பு அனைத்தையும் பேணிக் காக்கும் மனதை எங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கி நீர் படைத்த இயற்கையோடு ஒன்றித்துவாழ அருள் புரிய இறைவா உம்மை மன்றாடுவோம்.

3. அன்பு இறைவா, நல்ல பெற்றோர்களாக நாங்கள் வாழ்ந்து, எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் நல்ல முன் மாதிரியாகத் திகழ்ந்து, ஆன்மிக வாழ்விலும், அருள் வாழ்விலும் எங்கள் குழந்தைகள் வளர்ந்திட உமதுஅருள் வரங்களை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பிறரின் சுமைகளையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட இறைவா! துன்பத்தில் பங்கேற்ற சீமோனைப் போன்ற நாங்கள் எல்லாச் சூழ்நிலையிலும் பிறருடன் அவரவர் தேவைக்கேற்ப எங்கள் உடைமைகளையும், உணர்வுகளையும், ஆறுதல் தரும் வார்த்தைகளையும் பகிர்ந்து வாழக் கூடிய நல் மனதைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. கொடைகளின் ஊற்றான இறைவா! இப்புதிய கல்வியாண்டில் பள்ளிக் கல்வி முடித்துக் கல்லூரிகளுக்கும், உயர் படிப்புக்கும் செல்லவிருக்கும் எம் இளையோர் அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். அவரவர் விருப்பத்திற்கும், திறமைகளுக்கும், வசதிகளுக்கும் ஏற்றப் பாடங்களைத் தேர்வு செய்து சிறப்புடன் வெற்றி பெற்று இயேசுவின் சாட்சிகளாய் விளங்கிட உம் அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



www.anbinmadal.org 

Wednesday, June 6, 2018

*பொதுக்காலம் ஆண்டின் 10- ஆம் ஞாயிறு 10.6.18*

*பொதுக்காலம் ஆண்டின் 10- ஆம் ஞாயிறு 10.6.18*







*இன்றைய வாசகங்கள்*

தொடக்க நூல். 3:9-15
2 கொரிந்தியர். 4:13-5:1
மாற்கு 3:20 - 35


*திருப்பலி முன்னுரை*:

இன்று பொதுக்காலம் ஆண்டின் பத்தாம் ஞாயிறு. நம் ஆலயத்தில் கூடியுள்ள இறைமக்களே பொய்மையிலிருந்து விடுபட்டு உண்மைக்காக, உண்மையில் வாழ இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

கடவுள் இவ்வுலகை நல்ல நிலையில்தான் படைத்தார். அவர் படைத்த அனைத்தும் நன்றாக, மிகவும் நன்றாக இருக்கக் கண்டார் என்று தொடக்கதால் கூறுகிறது. அப்படியானால் பாவம் எப்படி இவ்வுலகில் நுழைந்தது? இக்கேள்விக்கு இன்றைய முதல் வாசகத்தில் மனித குலத்தின் முதல் பெண் வாயிலிருந்து வரும் பதில்: "பாம்பு என்னை ஏமாற்றியது." எனவே அலகையின் வெஞ்சகத்தால்தான் பாவமும் அதன் வழியாகச் சாவும், மற்ற எல்லாத் துன்பங்களும் வந்தன.


கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தது "அலகையின் செயல்களைத் தொலைக்கவே' என்று கூறுகிறார் புனித யோவான். கிறிஸ்து அலகையை 'இவ்வுலகின் தலைவன்' என்றழைக்கிறார். ஆனால் அதே நேரத்தில் கிறிஸ்துவின்மேல் அலகைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதையும் ஆணித்தரமாகக் கூறுகின்றார். மேலும் "இவ்வுலகத் தலைவன் வெளியே துரத்தப்படுவான்" என்றும் ஐயத்திற்கு இடமின்றி அறிவிக்கிறார்.

ஒரு மனிதன் தவறு செய்துவிட்டு தனது தவற்றை ஏற்றுக் கொள்ளும்போது அவன் பொய்மையிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். ஆம், உண்மையான வாழ்வு வாழ நாம் முன் வந்தால், துன்பங்கள் நமக்கு வரலாம்! ஆனால் அந்தத் துன்பங்களுக்குப் பிறகு மறைந்து நிற்கும் மனநிம்மதி என்னும் முழுமதி நமது இதய வானிலே எழுந்து இதம் தருவது உறுதி.

இந்த இதமான ஆசீரை அனுபவிக்க வீடு ஒன்று விண்ணகத்தில் உள்ளது என்ற ஆழமான நம்பிக்கையில் இன்றைய திருப்பலியில் நிறைவாய் பங்கேற்போம்.


*முதல் வாசக முன்னுரை*

முதல் மனிதன் ஆதாம் தனது குற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து தன் மனைவி மீது குற்றத்தைச் சுமத்தியபோது அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படாத பாவங்களாக மாறின! அவர்கள் மனம் மன்னிக்கப்படாத சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டது! சூழ்நிலை மாறியதால் இறைவனால் வகுக்கப்பட்ட சூழ்நிலைக்குள் அந்த முதல் மனிதர்களால் வாழ முடியவில்லை ! இன்ப வனத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர்கள் பட்ட பாடுகள் என்னவென்று நமக்குத் தெரியும்! இந்நிகழ்வை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*

நம்பிக்கை மனப்பான்மைக் கொண்டுள்ள திருத்தூதர் பவுலடியார் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே நம் எல்லோரையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார் என்று நம்பிக்கையுடன்  பேசுகிறார். நாம் அடையும் துன்பங்கள்  மிக எளிதில் தாங்கக் கூடியவை. நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்துபோனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு.  அது என்றும் நிலையானது என்று தெரிந்த நாம் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் மனதில் பதிவுச் செய்வோம்.


*பதிலுரைப்பாடல்*
திருப்பாடல் 130: 1-2, 3-4, 5-6, 7-8
*பல்லவி*:  பேரன்பும் மீட்பும்  ஆண்டவரிடமே உள்ளன.

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். - *பல்லவி*

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். - *பல்லவி*

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம்;, விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. - *பல்லவி*

இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! - *பல்லவி*

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! *இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்" என்றார் ஆண்டவர்.அல்லேலூயா, அல்லேலூயா!*


*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*:

இரக்கம் காட்டுவதில் வல்லவரான எம் தந்தையே இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் மறுமையில் ஒரு வீடு எங்களுக்கு நிலையாக உள்ளது என்று நம்பிக்கையின் மூலம் பொய்மையிலிருந்து விடுபட்டு உண்மைக்குச் சான்றுப் பகரும் நல்வாழ்வை வாழ்ந்திடத் தேவையான நேரிய மனமும், உள்ள உறுதியும் பெற்றிட அருள் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

படைப்புகளின் ஆண்டவரே எம் இறைவா! இருளில் வாழ்வோரைக் கண்ணேக்கியருளும். உம்மை ஒரே உண்மைக் கடவுளாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி அவர்களின் உள்ளங்களில் உமது அன்பின் ஒளிப் பரவிடவும், உமது போதனைகளுக்கு உண்மையாக இருக்க உமது ஆவியை எங்கள் மேல் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நாடுகள் அனைத்திற்கும் ஒளியான எம் தந்தையே இறைவா! உலகின் எல்லா நாடுகளுக்காகவும், பதவியில் உள்ளவர்கள் மக்களிடையே அமைதிக்காகவும் நல்ல உறவுக்காகவும் உழைக்கவும், மனிதநேயம் காக்கப்படவும், மக்களின் வாழ்வு ஏற்றம் பெறவும் தேவையான நல்ல உள்ளங்களும்,நேர்மையும் கொண்டவர்களாகப் பணிபுரிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

வெற்றியின் நாயகனே எம் இறைவா! எம் வாழ்வில்  நாங்கள் சந்தித்த அனைத்து போராட்டங்களும், படும் வேதனைகளும் எதிர்காலத்தில் எமக்கு கிடைக்கும் வெற்றிவாகை என்பதனை உணர்ந்து குடும்பவாழ்வில் தனிமை, வருத்தம், நெருக்கடி, தோல்வி, வேதனை இவைகளிலிருந்து மீண்டும் எழுந்திட, குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் தழைத்து ஓங்க  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கமும் பேரன்புமிக்க எம் இறைவா! இன்றைய சமூகத்தில் நிலவும், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகளிலிருந்தும் வறுமையிலிருந்தும் விலகி வெளிவந்திடவும், மக்கள் தங்கள் சுயத்தையும், சமூக மதிப்பீடுகளையும், உறவுகளையும் இழந்து நிற்கும் நிலைமாறி, உறவை போற்றிப் பேணிப் பாதுகாக்கக் கூடியவர்களாக மாற்றி நல் வாழ்வு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org