Tuesday, November 26, 2019

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு - முதல் ஆண்டு

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு



 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


எசாயா 2:1-5
உரோமையர் 13:11-14
மத்தேயு 24:37-44

திருப்பலி முன்னுரை:-

திருவழிப்பாட்டின் புதிய ஆண்டைத் தொடங்கும் இவ்வேளையில் திருவருகைக்கால முதல்ஞாயிறு ஆன இன்று இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துகள்.

கிறிஸ்துவின் முதல் வருகையைக் கொண்டாடத் தயாராகும் நாம் அவரின் இரண்டாம் வருகைக்கு நம்மை நாமே தயாரிக்க வேண்டியநிலையில் உள்ளோம். இன்றைய மூன்று வாசகங்களும் இறைமகனின் வருகைக்காக இறைமக்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும். இறைமகனின் வருகையை எதிர்நோக்கி வாழ வேண்டும் என்ற கருத்துகளை வலிறுத்திக் கூறுகின்றன. நற்செய்தி வாசகம் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து, விழிப்பாய் இருக்க அழைப்பு விடுக்கின்றது.

இன்று ஏற்றப்படும் திருவருகைக் கால முதல் மெழுகுவர்த்தி நம்பிக்கையைக் குறிக்கின்றது. இருள் ஒளி அகற்றி அக ஒளி ஏற்றி இறைவனின் ஒளியின் மக்களாய் இந்தக் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்குத் தயாராகும் வேளையில் அவரின் இரண்டாம் வருகை எதிர்நோக்கிப் புனிதப் பயணம் மேற்கொள்வோம். இயேசுவின் வருகை எப்போது என்று தெரியாதநிலையில் நாம் விழிப்புடன் இருந்திட வேண்டிய ஞானத்தையும், இறுதிகாலத்தை நினைவில் கொண்டு நாம் மீட்பிற்கான செயல்களில் ஈடுபடவேண்டிய அருளையும் பெற்றிட உருக்கமுடன் வேண்டி இத்திருப்பலியில் பங்குகொள்வோம்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை

மெசியா வரும்போது எல்லா மக்களுடைய கதியையும் நிர்ணயிப்பதில் எருசலேமுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு என இன்றைய வாசகம் தெரிவிக்கிறது. மனிதரிடையே அமைதியைக் கொணர மனிதருடைய முயற்சி மட்டுமே போதாது. கடவுள் தம்முடைய அருளை நமக்கு அளித்து, மனித உள்ளங்களில் அமைதி உணர்வை எழுப்பி, மனிதர் ஒருவர் ஒருவர் மட்டில் அன்புறவு கொண்டு வாழ்ந்திட அழைக்கின்றார். அந்த அழைப்பை மனிதர் ஏற்றுச் செயல்படும்போது அங்கே கடவுள் கொடையாக அளிப்படும் அமைதித் தழைத்தோங்கும். இதையே எசாயா யூதா நாட்டினர்க்கு அறிவுறுத்தினார். எசாயா விடுக்கும் அழைப்பை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

உரோமை நகரக் கிறிஸ்தவச் சபைக்குப் பவுல் எழுதிய கடிதத்தில் பவுல் 'இறுதிக்காலம்' பற்றிப் பேசுகின்றார். இயேசு கிறிஸ்து மனிதராக நம்மிடையே வந்து 'இறுதிக்காலத்தை' ஏற்கெனவே தொடங்கிவைத்தார். அவருடைய வருகையால் உலகில் கடவுளின் உடனிருப்பு ஒரு சிறப்பான நிலையை எய்தியது. உலகில் ஒரு புதிய விடியல் தோன்றியது. என்றாலும், மனித வாழ்க்கையிலிருந்து இருள் முற்றிலுமாக மறைந்து விடவில்லை. பாவத்தின் சக்தியும் நம்மைவிட்டு முழுமையாகப் பிரியவில்லை. இருளையும் பாவத்தையும் அறுதியாக முறியடித்து வெற்றிகொள்ளும் கட்டம் இயேசுவின் இரண்டாம் வருகையின்போதே நிறைவுறும் என்று எடுத்துரைக்கும் தூய பவுலடியாரின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.




பதிலுரைப்பாடல் ஒலிவடிவில் இசையமைத்துப் பாடியவர் திரு எக்ஸ்.பால்ராஜ்

பதிலுரைப்பாடல்

அகமகிழ்வோடு  ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
திருப்பாடல்122: 1-2, 4-5, 6-7, 8-9

"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.  எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்..  பல்லவி

 ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.  அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி

எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; "உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!  உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!  பல்லவி

 
உன்னுள் சமாதானம் நிலவுவதாக!" என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.  நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். பல்லவி



நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. உம்மை எதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார் என்றுரைத்த  எம் இறைவா!  உம் இரண்டாம் வருகையை எதிர்நோக்கியிருக்கும் இத்திருஅவை உமது ஒளியில் பயணிக்கும் திருஅவையாய், இறைமகன் இயேசுவை அணிந்தவர்களாய், ஊனியல்பின் நாட்டங்களை விடுத்து, விழிப்புடன் இருந்து,  உம்மை வரவேற்க ஆயத்தமாய் இருக்க வேண்டிய ஞானத்தையும், அருளையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்களின் நலமும் வளமும் நிலைவாழ்வுமான எம் இறைவா! புதிய திருவழிபாட்டு ஆண்டில் வரவிருக்கும் உமது வருகைக்குத் தயாராகவும், கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு எங்களைத் தகுந்த முறையில் தயார்படுத்திக் கொள்ளவும், தன்னலமற்றுப் பிறருடன் பெற்ற வளங்களைப் பகிர்ந்திடவும், நற்செயல்களால் ஏழைஎளியோர்களின் நலங்களைப் பேணும் உறுதியான நல்மனதினை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உமது அளவற்ற இரக்கத்தால் எம்மை ஆட்கொண்ட  எம் இறைவா! நாங்கள் ஒப்புரவு மற்றும் மன்னிப்பிற்கான கதவுகளை ஒரு நாளும் மூடாமல், மற்றவர்க்கு நம்பிக்கையின் பாதையாகச் செயல்படவும், நாங்கள் பெற்றுக் கொண்ட கொடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து இறைஇயேசுவின் சீடர்களாய் தொடர்ந்து வாழ்ந்திடத்  தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பு இறைவா! வரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும் வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீகத் தயாரிப்புகளில் எங்களைப் புதுப்பித்துக் கொண்டு உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எல்லா நலன்களுக்கும் ஊற்றான அன்புத் தந்தையே! திருவருகைக் காலக் கொண்டாட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் எங்கள் அனைவரையும் உண்மையின் திருவடிவாம் இயேசுவைப்பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வத்தை அளித்தருளும். எங்கள் வாழ்வின் மையம் என்றும் இறைமகன் இயேசுவே என்பதை உணர்ந்து அவரது வருகையை எதிர்நோக்கி வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



www.anbinmadal.org

திருவருகைக்காலத் தினசரி சிந்தனைக்கு
அன்பின்மடல் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும்

 

Monday, November 18, 2019

கிறிஸ்து அரசர் பெருவிழா

*பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு *

*கிறிஸ்து அரசர் பெருவிழா*


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

2 சாமுவேல் 5:1-3
கொலேசையர் 1:12-20
லூக்கா 23: 35-43

*திருப்பலி முன்னுரை*

கிறிஸ்து அரசரின் அன்பில் வளர்ந்த இறைகுலமே! ஆண்டின் பொதுக்காலம் 34ஆம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ள அனைவரின் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்று கிறிஸ்து அரசர் பெருவிழாவைத் தாய்த் திருச்சபைக் கொண்டாடி மகிழ்கின்றது. கிறிஸ்துவின் திருப்பாடுகளின் நினைவுக் கூறப்படுகின்ற வேளையில் அன்று “நீ யூதரின் அரசனானால் உன்னையே நீ விடுவித்துக் கொள்“ என்று எள்ளி நகையாடியக் காட்சியை நாம் நினைவுகூறுகின்றோம். “இவர் யூதர்களின் அரசன்” என்று கிறிஸ்து அரசருக்கு அன்றே முடிச் சூட்டி அவரது சிலுவையில் எழுதி வைத்தார்கள். அதனை நினைவுகூறும் வகையில் பொதுக் காலம் இறுதிநாளில் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். என்றும் அரசர் கிறிஸ்துவின் பெயரைச் சொன்னால் மூவுலகமும் ஆர்ப்பரிக்கும். கிறிஸ்து அரசர் பெருவிழாப் பொருளுள்ளதாகவும், பொருத்தமானதாகவும் அமைந்திருக்கின்றது என்பதை நமது மனதில் பதிவு செய்து திருவருகைக் காலத்தை வரவேற்க ஆயத்தமாவோம்.

கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் இயேசுவை நம் தலைவராக ஏற்று ஏழைகளின் வாழ்வு ஏற்றம் பெற இன்றைய திருப்பலியில் முழுமையாகக் கலந்துக் கிறிஸ்து அரசரின் நல்லாசீர் பெறச் செபிப்போம். வாரீர்.

*வாசக முன்னுரை*

 

*முதல் வாசக முன்னுரை*


தாவீதை இஸ்ரயேலின் அரசராக இஸ்ரயேலின் பெரியவர்கள் திருப்பொழிவுச் செய்கின்றனர். அரசர் என்பவர் ஆள்பவர், தலைவர், வழிகாட்டி, வழிநடத்துபவர் என்ற பொருள் கொள்ள வேண்டும். ஆள்பவர்கள் சுயநலமில்லாமல் ஆண்டவரின் உதவியோடு தலைமைத் தாங்கி வழிநடத்தும் நல்ல ஆயனாகச் செயல்பட முன்வர வேண்டும். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வாசகத்தைக் கவனமுடன் மனதினில் பதிவுசெய்வோம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


பிளவுகளும், பரிவுகளும் ஏற்படுவதைத் தவிர்த்து இயேசுவை முன் மாதிரியாக் கொண்டு தன்னையே அர்ப்பணித்த உடைந்துபோன உறவுகளைப் புதுப்பித்து ஒப்புரவுப் பணியில் ஈடுபட வேண்டும். இந்தக் கருத்தைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது. புனித பவுலடியாரின் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் கேட்டு நாமும் இறையரசில் நுழைவோம்.

*பதிலுரைப்பாடல்*

*அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.*
திருப்பாடல் 122: 1-2, 4-5

"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்  எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். *பல்லவி*

ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.  அங்கே நீதி வழங்க அரிணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். *பல்லவி*

*நற்செய்திக்கு முன் வாழ்த்துரை*

 

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக. வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப் பெறுக! அல்லேலூயா.


*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*


1.    உலகைப் படைத்தாளும் இறைவா! உமது திருஅவையிலுள்ள அனைவரும் இயேசு கிறிஸ்துவைத் தம் இதய அரசராக ஏற்று, அவரின் இறையரசு இவ்வுலகின் எத்திசையிலும் பறைசாற்றவும், உலகமக்கள் அனைவரையும் அவரின் அரசில் இணைத்திட ஒரு மனதினராய் உழைக்கத் தேவையான வரங்களைப் பொழிந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.    அனைவருக்கும் வாழ்வளிக்கும் இறைவா! நம் பங்கிலுள்ள குடும்பங்களில் உள்ள அனைவரும் உமது மகத்துவத்தை அறிந்து உம்மைத் தங்கள் இல்லங்ளின் அரசராக ஏற்றுத் தங்களின் வாழ்க்கை முறையால் தமக்கு அருகில் இருப்போருக்கு உம் இறையரசின் சாட்சிகளாய் வாழ்ந்துக் காட்டிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.    அன்புக்கும் ஒற்றுமைக்கும் ஊற்றான இறைவா! புனிதர்கள் மற்றும் மரித்த ஆன்மாக்களை நினைவுகூறும் இந்நாள்களில் எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும், தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பே உருவான எம் இறைவா! இயற்கைப் பேரிடராலும், பொருளாதார மாற்றங்களால் அவதிபடும் மக்களுக்கு நலமும் வளமும் நிறைவான வாழ்வும் கிடைத்திடவும், ஆள்வோரின் கரிசனையும், பாதுகாப்பும் பெற்றடவும், சிரம்மின்றிப் பொருளாதார ஏற்றம் பெற்றடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இஸ்ரவேலின் மேய்ப்பரே எம் இறைவா! இறைமகன் இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளியின் வேண்டுகோளைக் கேட்டது போல எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும். நாங்கள் அனைவரும் ஒரு நாள் உமது இல்லம் வந்தடைய தேவையான எல்லா வரங்களையும் தூயஆவியின் வழியாக அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

Tuesday, November 12, 2019

பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு


 

 *இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


மலாக்கி 4: 1-2
2தெசலோனிக்கர் 3: 7-12
லூக்கா 21: 5-19

*திருப்பலி முன்னுரை*


இறைமகன் இயேசுவின் அன்பில் மலர்ந்த இறைகுலமே! ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ள அனைவரின் வரவு நல்வரவு ஆகுக…

இறைவாக்கு வழிபாடு இன்று நம் முன்வைக்கும் கருத்துகள் யாதெனில் இறைவனில் மனஉறுதியடன் கடைசிவரை இருந்தால் நிலைவாழ்வு என்னும் வெற்றியைப் பெறமுடியும் என்பதே…

இதையே மலாக்கி இறைவாக்கினர் கூறுகிறார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள் மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கையில் நலம் தரும் மருந்து இருக்கும். என்று…உழைத்து உண்ணப் பவுலடியார் கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிடுகிறார்.

எருசலேம் ஆலயத்திற்கு வரவிருக்கும் பேரழிவை எடுத்துரைக்குக் கிறிஸ்து, அவரின் முன்னிட்டு நமக்கு வரும் நிந்தனைகளைப் பற்றியும், அதை எப்படி எதிர்க்கொள்வது என்பதைப் பற்றியும் ஆழமாகப் பதிவுச் செய்கிறார். அதேவேளையில் அவர் நமக்கு நாவன்மையையும், ஞானத்தையும் தந்துப் பலப்படுத்துவதைப் பற்றி எடுத்துரைக்கும் அவர் நாம் மன உறுதியோடு இருந்து நம் வாழ்வைக் காத்துக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். ஆண்டவரில் மன உறுதியுடன் இருந்து நிலைவாழ்வைக் காத்துக் கொள்ள இன்றைய திருப்பலியில் முழுமையாகக் கலந்து இறைஇயேசுவின் ஆசீர் பெறச் செபிப்போம். வாரீர்.



*வாசக முன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


இன்றைய முதல் வாசகத்தில் மலாக்கி ஆண்டவரின் நாள் வருவதைப்பற்றி முன்னுரைக்கின்றார். இரு கருத்துகளை நம் கண் முன்னே வரைகின்றார். இவற்றை எடுத்துரைக்கும் இந்தச் சிறிய வாசகம் சரியான பாதையில் உறுதியுடன் நடந்தால் வெற்றி நமதே என்று விளக்கிக் கூறுவதைக் கவனமுடன் மனதினில் பதிவுசெய்வோம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*


இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் உழைக்காதவன் உண்ணலாகாது. நாங்கள் உழைப்பது போல் நீங்களும் உழைக்க வேண்டுமென்று அறிவுறுத்துகின்றார். பிறர் உழைப்பில் வாழ்வதைக் கண்டிக்கும் அவர், அனைவரையும் உழைத்து உண்ண வேண்டுமென்று கட்டளையிடும் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்டு நம் வாழ்வை வளமாக்குவோம்.

*பதிலுரைப்பாடல்*

*மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.*


திருப்பாடல் 98: 5-6, 7-8, 9

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.  ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள், *பல்லவி*

கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!  ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள்;  *பல்லவி*

ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.  *பல்லவி*



*நற்செய்திக்கு முன் வாழ்த்துரை*

 

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.


*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*


1. நீதியின் கதிரவனை எம் மேல் எழச் செய்யும் இறைவா! உம் திருஅவை இயேசு கிறிஸ்துவின் பெயரின் நிமித்தம் எதிர்க்கொள்ளும் எல்லாவிதமான நிந்தனைகளையும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் கடந்து எம் திருத்தந்தை, ஆயர்கள், திருப்பணியாளர்கள் அனைவரையும் காத்து, அவர்களுக்கு வேண்டிய மன உறுதியையும், ஞானத்தையும் அருள்மாரிப் பொழிந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நாவன்மையையும் ஞானத்தையும் எம் மேல் பொழியும் இறைவா! உங்கள் பங்கிலுள்ள குடும்பங்களில் உள்ள அனைவரும் தம் சொந்த உழைப்பில் வாழவும், அதில் உண்மையுடனும் நேர்மையுடனும் இருந்து உமது விழுமியங்களை வாழ்வாக்கவும், உழைக்கமுடியாத நிலையிலுள்ளவர்களைப் பேணிக்காக்கவும், மனித மாண்பை நிலைநாட்டவும் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அருட்கொடைவள்ளலே இறைவா! புனிதர்கள் மற்றும் மரித்த ஆன்மாக்களை நினைவுகூறும் இந்நாள்களில் புனிதர்களின் வாழ்விலிருந்து நல்லவற்றை நாங்கள் எங்கள் வாழ்வில் கடைபிடிக்கவும், உத்திரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்கள் விரைவில் ஈடேற்றம் பெற்று உமது புனிதர்களின் கூட்டத்தில் இணைந்து உம்மைப் போற்றிட வேண்டிய அருள் வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. புனிதர்களின் பேரின்பமாகிய எம் இறைவா! எங்கள் அருகிலுள்ள ஏழைகள், துயருறுவோர், தனிமையில் விடப்பட்டோர், நோயாளிகள், அனைவருக்கும் இறைவனின் அன்பையும் பரிவையும் அளிக்கும் அன்புக் கருவியாக எம் இளைய சமுதாயம் மாறிவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா என்றுரைத்த இயேசுவே அழிவுக்குரியவற்றைத் தேடி எங்கள் வாழ்வை வீணாக்கிவிடாமல், அழியா வாழ்வுத் தரும் உம் வார்த்தைகளைப் பின்பற்றி மற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும் வாழ்ந்திடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org

Wednesday, November 6, 2019

பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்

 

2மக்கபேயர் 7:1-2,9-14
2 தெசலோனிக்கர் 2:16-3:5
லூக்கா 20:27-38

திருப்பலி முன்னுரை

 

திருவழிப்பாட்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க மறுவாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரையும் இயேசுவின் அன்பில் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு, மறுவாழ்வு பற்றிய சீரியக் கருத்துகளை நம் முன் வைக்கின்றது. கடந்த இரு வார வாசகங்களில் பரிசேயர்களைப் பற்றியும், வரிதண்டுபவர் பற்றியும் அறிந்த நமக்கு, இன்று சதுசேயர்களின் கேள்விகள் மூலம் உயிர்தெழுதலைப் பற்றியும், மறூலக வாழ்வைப் பற்றியும் இயேசு நலாசானாகப் போதிக்கின்றார்.

இவ்வுலக வாழ்வில் திருமணம் - பிள்ளைபேறு இவை உண்டு. ஆனால் மறுமையில் அங்கே உறவுகள் இல்லை. அனைவரும் இறைவனில் ஒன்றே. அங்கே கொடுப்பதுமில்லை. வாங்குவதுமில்லை. அங்கு அனைவரும் சமம் என்பதைப் பதிவு செய்கின்றார். இவ்வுலக வாழ்வின் அடிதளமே நமது மறுமையின் அளவுகோல். எனவே இவ்வுலகில் வாழும்போதே அறச்செயல்களினால் மறுமைவாழ்வின் மேன்மைக்கு அடிதளமிடுபோம். நாம் வாழ்வோரின் கடவுளைக் கொண்டுள்ளோம் நம் நிலைவாழ்வில் என்பதை உள்ளத்தில் பதிவு செய்துகொள்வோம்.

உயிர்த்தெழுதலும், வாழ்வு நானே என்ற இயேசுவிடம் மறு உலகில் நிலைவாழ்வைப் பெற்றிட உருக்கமுடன் வேண்டி இத்திருப்பலியில் பங்குகொள்வோம்.


வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


உயிர்த்தெழுதலில் நம்பிக்கைக் அடிப்படையில் தான் அன்று யூத வீரத்தாயும், அவரது ஏழு மகன்களும் பன்றி இறைச்சியை உண்ண மறுத்துத் தாங்கள் சாகத் தயங்கவில்லை. இரண்டாவது மகன் பலியாகுமுன் இறந்தபின், என்றென்றும் வாழும் அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார் என்று வீர முழக்கமிட்டு மடிந்ததைப் பதிவுச் செய்யும் மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வரும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*


ஆண்டவரின் மீது நம்பிக்கைக் கொண்ட நாம் நல்லதையே சொல்லவும், செய்யவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று பவுலடியா நம்மை ஊக்கப்படுத்துகின்றார். நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை. ஆகால் ஆணடவர் நம்பிக்கைக்குரியவர். கடவுளின் அன்பும், கிறிஸ்துவின் மனஉறுதியும் நம்மிடையே இருக்கவேண்டும் என்று ஆவலாய் வேண்டும் தூய பவுலடியாரின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

 பதிலுரைப்பாடல்

திருப்பாடல்17: 1, 5-6, 8, 15
விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.


ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.  பல்லவி

என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும். பல்லவி
உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.   பல்லவி

நற்செய்திக்க முன் வாழ்த்தொலி:-

அல்லேலூயா அல்லேலூயா! கிறிஸ்துவே இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர் .இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன.. அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்



1. ஆதியும் அந்தமும் ஆன எம் இறைவா! இன்றைய காலக்கட்டத்தில் திருச்சபையில் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்நிலைச் சார்ந்த அனைவரும் எதிர்கொள்ளும், பிரச்சினைகளால் உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வேதனையுறும் எம் அருள்நிலைத் தலைவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வாரி வழங்கிப் பாதுகாத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்களைக் காத்துப் பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா! இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்

3. எங்களை நீதியுடன் வழிநடத்தும் வெற்றி வேந்தனே! இன்றைய சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் நீங்கிச் சோம்பித் திரியாமல் எங்கள் கடின உழைப்பின் மூலம் குடும்பங்களின் வாழ்வு மலரவும், எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நல்லவராய் வாழ்ந்துத் தண்டனைத் தீர்ப்பிலிருந்து விடுபட்ட உமக்குரியவர்களாக வேண்டிய வரங்களைத் தரும்படியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4இளையோரின் ஆற்றலே எம் இறைவா! இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைவனைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து, அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின் அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. நிறைவாழ்வை வழங்கிய எம் இறைவா எம் குடும்பங்களில் உள்ள முதியேவர்கள் தனிமைபடுத்தப்பட்டு, சுதந்திர இழந்து அகதிகளாக அவர்கள் படும் வேதனைகளை, உம் பார்வையினால் அவர்களின் வாழ்வுத் துலங்கவும் ஊதியம் இல்லாத வேலைக்காரர்களாக அவர்களைப் பயன்படுத்தும் அவலநிலை மாறி, அவர்கள் அமைதியோடும், நிம்மதியோடும் உம் திருஇல்லம் வந்து சேரத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org