Wednesday, November 28, 2018

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு - ஆண்டு 3

       

 திருவருகைக் காலம்  முதல் ஞாயிறு

 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

 

எரேமியா 33:14-161
தெசலோ. 3:12 - 4:2
லூக்கா 21:25-28. 34-36

 

திருப்பலி முன்னுரை:


இன்று திருவழிபாட்டு ஆண்டின் முதலாம் ஞாயிறு. இந்த ஞாயிறிலிருந்து தான் திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்தைத் திருவருகைக் காலத்தோடு தொடங்குகிறோம். இது நம்பிக்கையின் ஞாயிறு. அன்று இஸ்ரயேல் மக்களைத் தளைகளிலிருந்து விடுவிக்க மெசியாப் பிறப்பார் என ஆவலோடு காத்திருந்தார்கள். இயேசுவின் வருகைக்குப் பின் தொடக்கக் காலத்திருச்சபை இயேசுவின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாக இம்மண்ணிலே அவதரித்த இயேசு மீண்டும் மனிதனாக மண்ணிலே பிறக்கமாட்டார். மாறாக அவர் நம்மைத் தீர்ப்பிட வெற்றியின் அரசாராக மீண்டும் வர இருக்கிறார். தேர்வு எழுதிய பின்பு அதன் முடிவுக்காகக் காத்திருக்கவேண்டும். இவ்வாறு காத்திருத்தல் என்பது நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்றாகும். காத்திருத்தல் அனைத்தும் நமக்குச் சுகமாக அமைவதில்லை. ஆனால், காத்திருத்தலின் சுகம் யாருக்காக எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது.

எனவே, இத்திருவருகைக் காலத்தில் தாய்த்திருச்சபை நாம் நம் ஆண்டவர் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூர்ந்துக் கொண்டாடினாலும் அவரது இரண்டாம் வருகைக்காக நம்மைத் தயார்படுத்த நம்மைத் தூண்டுகிறது. இதனை மனதில் இருத்தி இத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசகம்


இன்றைய முதல் வாசகத்தில் “யூதா விடுதலைப் பெறும், எருசலேம் விடுதலையோடும், பாதுகாப்போடும் வாழும்” என்ற வார்த்தைகள் இஸ்ரயேல் மக்களக்கு நம்பிக்கைத் தந்தன. புதிய வாழ்வைத் தந்தது. விடுதலை வாழ்வை அவர்களுக்கு வழங்கியது. இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்ப்பார்த்திருக்கும் நமக்குப் புதிய வாழ்வைப் பற்றிய நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகம்


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் “நம் ஆண்டவர் இயேசு, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!” என்று நம்மை வாழ்த்துகின்றார். நம்பிக்கையோடும், விழிப்போடும் இருந்து அவர்களின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 25: 4-5. 8-9. 10,14
பல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
1.ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;  உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.  உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி
2.ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி
3.ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்;  அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். –பல்லவி

நம்பிக்கையாளின் மன்றாட்டுகள்:1.வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா! திருச்சபை இன்று தொடங்கும் திருவழிபாட்டு ஆண்டில் எம் திருத்தந்தைத் தொடங்கிப் பொதுநிலையினர் வரை அனைவரும் வரும் நாட்களில் எதிர்நோக்கியிருக்கும் வருகையின் போது இறைவன் திருமுன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு எங்களை நாங்கள் தயாரித்துக் கொள்ள இந்தத் திருவருகைக் காலத்தைச் சரியாக முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டிய ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.நீதியின் ஒளியே எம் இறைவா! இன்று உலகில் நிலவும் மனிதகுலத்திற்கு எதிராகப் பயங்கரவாதம் ஒழிந்து எங்கும் அமைதி நிலவ, ஏற்றத்தாழ்வுகள் நீக்கி ஒற்றுமையுடன் வாழத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா! மழையினால் பாதிக்கப்பட்ட எல்லாக் கிராமங்களிலும் பொருள் சேதம், மனௌளச்சல், வேதனைகள், உயிர் சேதம் இவற்றின் விளைவாக வாழ்வையே இழந்துத் தவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் துயர்துடைக்க உம் கரம் பற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.உன்னைப் படைத்தவரை உன் வாலிப நட்களில் நினை என்று சொன்ன எம் இறைவா! இளையோர் தங்கள் வாழ்வில் நல்ல சிந்தனைகளையும்,
நற்செயல்களிலும், விசுவாச வாழ்வில் நிலைத்து நின்றுக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளைத் தங்கள் வாழ்வில் எந்நாளும் சான்றுபகரத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்பு இறைவா வரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீகத் தயாரிப்புகளில் எங்களைப் புதுப்பித்துக் கொண்டு, உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 www.anbinmadal.org

Tuesday, November 20, 2018

கிறிஸ்து அரசர் பெருவிழா

கிறிஸ்து அரசர் பெருவிழா


இன்றைய வாசகங்கள்தானியேல்     7:13-14
திருவெளிப்பாடு  1:5-8
யோவான்     18:33-37

திருப்பலி முன்னுரை:


கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே!
இன்று திருவழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிறு. உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துஅரசரின் பெயரால் நல் வாழ்த்துக்கள்! 

உலகெங்கும் முடியாட்சி மாறி மக்களாட்சி மாறும் காலகட்டத்தில் நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

பிலாத்துக் கிறிஸ்துவிடம் 'நீ யூதர்களின் அரசரா?' என்று கேட்டப்போது அவர் 'என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல' என்று கூறினார். அவர் உலக மக்களுக்காகத் தன்னையே கொடுத்து நிலையாட்சிக்கு அழைத்துச் செல்லவே வந்தார்.

அவர் நம் அரசர். ஆம்! ஏழ்மையின் அரசர். அன்பின் அரசர்! பணிவின் அரசர்! தாழ்ச்சியின் அரசர்! எனவே தான் அவர் மாளிமையில் பிறக்கவில்லை. தன் சீடர்களின் கால்களைக் கழுவிப் பிறர்க்குப் பணிச் செய்து தன் அன்பின் ஆட்சியை அறிவித்தார். அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்: அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்துப் போகாது.

மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்: இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே. தொடக்கமும் முடிவும் ஆன அவரின் வருகையை எதிர்கொள்ள நம்மையே நாம் தயாரிக்க அவரோடு மனம் ஓன்றித்து இன்றைய திருப்பலி வழிபாட்டுக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மன்றாடுவோம். இந்த வழிபாட்டு ஆண்டில் நாம் பெற்ற ஆசீர்களுக்காக நன்றி கூறுவோம்.

வாசக முன்னுரை:


 முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் தானியேல் தான் கண்டக் காட்சி இங்கே விவரிக்கிறார். மானிட மகனின் வருகையையும், கடவுளின் அரசு எத்தகையது? யாருக்குரியது? அஃது எப்படி இருக்கும்? என்பதைப் பற்றி எடுத்துரைக்கிறார். மானிடமகன் முடிவற்ற அரசையும் மகிமையையும் பெறுகின்றார். இறையரசைப் பற்றிய நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யோவான் தனது திருவெளிப்பாடு நூலில் இயேசுவை மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர் என்று அறிவிக்கிறார். இயேசுவின் தலைமை என்பது அன்பின் வழி விடுதலைப் பெற்றுத் தருவதாகும். கிறிஸ்து அரசர் தன்னை முதன்மைப்படுத்தி மக்களை வாழ வழிவகுத்தார். மக்கள் அரசைரைத் தேடிச் செல்கின்றனர். ஆனால் கிறிஸ்து அரசரோ மக்களைத் தேடிச்சென்றார். இதனைத் தெளிவுப்படுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


 பதிலுரைப் பாடல்


திபா 93: 1. 1-2. 5

பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார் அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார். ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். -பல்லவி
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார் அது அசைவுறாது. உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். -பல்லவி

உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை ஆண்டவரே!  என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். -பல்லவிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக!  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.அன்புத் தந்தையே எம் இறைவா! திருஅவையில் தலைமைஆயர் தொடங்கிப் பொதுநிலையினர் வரை திருஅவைக்காக உழைத்தவர்கள், இன்றும் உழைக்கின்றவர்கள், உழைத்து மரித்தவர்கள் அகிய அனைவரையும் உமக்கு அர்ப்பணிக்கின்றோம். அவர்களின் ஆன்மீகக் கருத்துக்கள் ஈடேற்றம் அடைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் கிறிஸ்துவின் மதிப்பீடுகளைப் பின்பற்றித் தங்களை வெறும் மக்களை ஆளுகின்ற வர்க்கமாக இல்லாமல், மக்களின் பணிசெய்வதற்கே என்ற மனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.இப்பொழுது எம் தமிழகத்திலுள்ள கஜா புயலால் பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளில் தங்கள் இருப்பிடம் இழந்து, உறவுகளை இழந்து, வேதனையில் தவிக்கும் எம் சகோதர, சகோதரிகளுக்கு நீரே ஆறுதலாய் இருந்து, அவர்களைத் தேற்றி, மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கைத் திரும்ப வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் நுழைய முடியாது என்று கூறிய எம் இறைவா இந்த மழையினால் டெங்குகாய்ச்சல், காலரா போன்ற தொற்று நோயிகள் பரவாமல், குழந்தைகளை நிறைவாக ஆகீர்வதித்து அவர்களை உம் சிறகுகளின் கீழ் அரவணைத்த பாதுகாத்திட வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கிறிஸ்து அரசர் பெருவிழா ஆன இன்று யாரும் நினையாத உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் அனைவரையும் உம் பாதத்தில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் விரைவாக உம் இல்லத்தில் அழைத்து, பரிசுத்தர்கள் கூட்டத்தில் சேர்த்து, உம்மைப் போற்றிப் புகழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.www.anbinmadal.org

Monday, November 5, 2018

பொதுக்காலம் ஆண்டின் 32-ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 32-ஆம் ஞாயிறுஇன்றைய வாசகங்கள்


1அரசர்கள் 17:10-16; 

எபிரேயர் 9:24-28 
மாற்கு 12:38-44

திருப்பலி முன்னுரை:


இன்று ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களைக் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.

 இன்றைய நற்செய்தியிலே வருகின்ற ஏழைக் கைம்பெண் அவரிடம் உள்ளதையெல்லாம் கடவுளுக்குக் கொடுத்து இயேசுவின் புகழ்ச்சிக்கு உரியவராகின்றார். நம்மில் யார் யார் தங்களிடம் உள்ளதிலிருந்து அல்லது உள்ளதையெல்லாம் தர்மம் செய்கின்றார்களோ அவர்களெல்லாம் கடவுளால் தவறாமல் உயர்த்தப்படுவார்கள்.

இந்த உண்மையைச் சுட்டிக்காட்ட விவிலியத்திலிருந்து இதோ இரு உதாரணங்கள். பழைய ஏற்பாட்டுக் காலத்திலே கடவுள் சாரிபாத்திலிருந்த ஒரு கைம்பெண்ணின் வாழ்க்கையை மட்டும்தான் உயர்த்திப் பிடித்தார். காரணம் அவர் உள்ளதிலிருந்து கொடுத்தார். புதிய ஏற்பாட்டில் எத்தனையோ பெண்கள் வாழ்ந்திருந்தாலும் ஒரே ஒரு பெண்ணை மட்டும் கடவுள் பெண்களுக்குள் ஆசிப் பெற்றவராக (லூக் 1:42), எல்லாத் தலைமுறையினரின் போற்றுதலுக்கும் உரியவராக உயர்த்தினார். 


 இறைவார்த்தையில் நம்பிக்கைக் கொண்டு அன்பால் உள்ளத்திலிருந்து, உள்ளதையெல்லாம் கொடுத்தால் இரு ஏழைக் கைம்பெண்களும், அன்னை மரியாளும் இறைவனால் உயர்த்தப்பட்டது போல் நாமும் உயர்த்தப்பட வேண்டும். எனவே இறைவார்த்தையில் நம்பிக்கையுடன் நாம்  வாழ இன்றைய திருப்பலி வழிபாட்டில் சிறப்பாக மன்றாடுவோம்.


வாசகமுன்னுரை:முதல் வாசக முன்னுரை


பழைய ஏற்பாட்டுக் காலத்திலே பாதிக்கப்பட்டஇஸ்ரயேல் மக்கள் சாரிபாத்து நகரில் வாழ்ந்தார்கள். ஆனால் கடவுள்  கைம்பெண்ணின் வாழ்க்கையை மட்டும்தான் உயர்த்திப் பிடித்தார். காரணம் அவர் உள்ளதிலிருந்து கொடுத்தார்.  தன்னைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல் கடவுளின் வார்த்தைகளை நம்பினாள். உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்" (எரே 49:11) என்று கடவுள் எரேமியா வாயிலாகக் கூறியது சாரிபாத் கைம்பெண் வாழ்வில் நிறைவேறுகிறது. இறைவார்த்தை நம்மில் நிறைவேற இவ்வாசகத்தை நம்பிக்கையுடன் நம் மனங்களில் பதிவுச் செய்திடுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை


அன்று மோசே இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து ஈசோப்புச் செடியால் உடன்படிக்கை ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்; . இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறைத் தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார் என்று எடுத்துரைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் கேட்டு அவரின் வருகைக்காகக் காத்திருப்போம்.பதிலுரைப் பாடல்

திபா 146: 7. 8-9. 9-10

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். -பல்லவி

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:


அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.எம் அன்புத் தந்தையாம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப, திருஅவையை வழிநடத்தவும், பணி வாழ்வே திருஅவையின் மையம் என்னும் மனநிலை திருஅவையில் மலரவும் உம் ஆவியாரின் கொடைகளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்களை நீதியுடன் வழிநடத்தும் வெற்றி வேந்தனே! இன்றைய சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் நீங்கி, கடின உழைப்பின் மூலம் எங்கள் குடும்பங்களின் வாழ்வு மலரவும், எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நல்லவராய் வாழ்ந்து உமக்குரியவர்களாகத் தேர்ந்துக் கொள்ளப்படவும், உம் பணியாளராக வாழவும் வேண்டிய வரங்களைத் தர ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3.இளமை வாழ்வதற்காக என்று மொழிந்த எம் இறைவா! இளையோர் திருஅவைக்காக, திருஅவை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேடி, ஞானத்தை நிறைவாகப் பெற்று, தங்கள் ஆன்மீக வாழ்விலும், சமுதாயத்தில் பண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த
விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்ற இறைவா! நாங்கள் நீர் கொடுத்த தூய்மை என்னும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி,  உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப் புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.பேரின்ப வீட்டில் எங்களுக்கு இடம் தரும் எம் அன்பு இறைவா! மரணத்தறுவாயிலுள்ள துன்புரும் அன்பர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவின் நிலையான அமைதியையும், பேரின்பவீட்டின் இன்பத்தையும் முழுமையாகப் பெற்றிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org