Wednesday, September 28, 2016

பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு 02/10/2016

பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:




அபாக்கூக்கு 1:2-3, 2:2-4 
 2திமோத்தேயு 1:6-8,13-14 
 லூக்கா 17:5-10

முன்னுரை:


இறைஇயேசுவில் விசுவாசம் கொண்டு பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
நம்பிக்கை தான் வாழக்கை! இறைஇயேசுவின் மீதுள்ள நம்பிக்கை தான் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை.இந்த நம்பிக்கை -விசுவாசம் இவற்றைப் பற்றியே இன்றைய வாசங்கள் அமைந்துள்ளன.
இன்றைய முதல் வாசகம் நம்பிக்கையின் மேன்மைப் பற்றியே பேசுகிறது. தன் சமகாலத்தில் நிலவிய வன்முறை மற்றும் அநீதிகளைக் கண்டு கடவுளிடம் முறையிடுகின்றார் இறைவாக்கினர் அபக்கூக்கு. 'நம்பாதவர் உள்ளத்தில் நேர்மையற்றவராய் இருப்பர். நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்' என்று அவருக்கு வெளிப்படுத்துகிறார் ஆண்டவராகிய கடவுள். இந்த இறைவாக்கின் இரண்டாம் பகுதியைத்தான் தூய பவுலடியார் உரோமையருக்கு எழுதும் திருமுகத்தில் இந்த இறைவாக்கு நம்பிக்கை அதைக் கொண்டிருப்பவருக்கு வாழ்வளிக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
சீடர்கள் 'இன்னும் கொஞ்சம் நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்!' என இயேசுவிடம் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், இயேசு அதற்கு இடம் கொடுக்கவில்லை. உள்ளதே போதும் - இதைக் கொண்டே நீங்கள் அரிய பெரிய காரியங்கள் செய்யலாம் என்கிறார். தாழ்ச்சி, மன்னிப்பு என வாழ்வியல் பாடங்களை வழங்கும் இயேசு அவற்றின் ஒரு பகுதியாக நம்பிக்கைப் பற்றியும் சொல்கின்றார். இறைவன் தான் நம் வாழ்வின் உரிமையாளர் எனவும், நாம் அதன் பணியாளர் எனவும் நினைக்கும்போது தேவையற்றக் கவலைகள் மறைந்து விடுகின்றன என்பதை மனதில் கொண்டு. இயேசுவின் சீடர்களாய் இத்திருப்பலியில் இணைந்து செபித்திடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகம்  நம்பிக்கையின் மேன்மை பற்றியே பேசுகிறது. அபக்கூக்கு அவர்களின் காலத்தில் நிலவிய வன்முறை மற்றும் அநீதிகளைக் கண்டு கடவுளிடம் முறையிடுகின்றார் இறைவாக்கினர் அபக்கூக்கு. 'நம்பாதவர் உள்ளத்தில் நேர்மையற்றவராய் இருப்பர். நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்' என்று அவருக்கு வெளிப்படுத்துகிறார் ஆண்டவராகிய கடவுள்.  இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வரும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


தூய பவுலடியார் உரோமையருக்கு எழுதும் திருமுகத்தில் ”இறைவாக்கு நம்பிக்கை அதைக் கொண்டிருப்பவருக்கு வாழ்வளிக்கும்” என்பதைத் அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றார். இதே நம்பிக்கையின் செய்தியைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார் திமொத்தேயுவுக்கு எழுதுகின்றார்: 'கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு...' திமோத்தேயுவின் வாழ்வு அனைத்திற்கும் அடிநாதமாக இருக்க வேண்டியது நம்பிக்கை என்ற ஒன்றே என்று அறிவுறுத்தும் திமொத்தேயுவுக்கு எமுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b)

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.


வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;  நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.   நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;  புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.  அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;  நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! -பல்லவி

அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி


மன்றாட்டுகள்:


1. அன்புத் தந்தையே எம் இறைவா! எம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை அவரோடு உடன் உழைக்கும் அனைத்து திருஆட்சியாளர்கள், அருட்பணியாளர்கள், துறவியர் ஆகிய அனைவரும் அளவற்ற கருணையால் இவ்வுலகம் தழைத்தோங்க பணி புரியவும், உம் ஞானத்தின் துணைக் கொண்டு உலகப் பற்றுகளைத் துறந்து உம்மை மட்டும் நம்பி வாழும் வரத்தினை நிறைவாய் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா! இன்று நாட்டில் ஏழைகளுக்கான அனைத்து வழிகளும் செல்வந்தர்களாலும், அரசியல்வாதிகளாலும் அடைக்கப்பட்டு வாழ வழியின்றித் தவிக்கும் எம் அன்புச் சகோதர சகோதரிகளுக்கு உம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. மூவொரு இறைவனே எம் இறைவா! எம் நாட்டில் நிலவும் கொலை, வன்முறை, தீவிரவாதம், பாலியல் வன்முறைகள், இனக்கலவரம், சாதி வேறுபாடு, தீண்டாமை அவைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் சிக்கித் தவிக்கும் எம் உடன்பிறவா சகோதர சகோதரிகள், முதியோர் ஆகிய அனைவரும் மீதும் உம் கருணையின் பார்வையைப் பொழிந்து நிம்மதியோடும், சமாதானத்தோடும் வாழ வழிவகைச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நீதியின் கதிரவனே! எம் இறைவா! இன்று தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையினால் ஏற்படும் விவசாயப் பாதிப்புகளை, அதனால் எம் விவசாயிகள் படும் வேதனைகளை நீர் கண்ணேக்கி எகிப்தில் என் மக்கள் படும் வேதனைகளை நான் கண்ணாரக் கண்டேன் என்று அவர்களுக்கு விடுதலை வாழ்வை அளித்த போல எம் மக்களின் துயரைப் போக்கி நல்ல மழையைப் பெய்வித்து, அதனைப் பாதுகாத்து, அதனால் நாங்கள் அனைவரும் கொருளாதாரத்தில் முன்னேறத் தேவையான அருளை வழங்கி வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.எம் குடும்பத்தில் உள்ள பெற்றோர், பெரியோர் ஆகிய  அனைவரையும் நாங்கள் ஒரு சுமையாகக் கருதாமல் அவர்கள் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட உம் ஆசீர்வாதங்களை எங்கள் பிள்ளைகளுக்கும் தலைமுறையினருக்கும் கொண்டு செல்லக் கூட்டுகுடும்பத்தின் நன்மைகளை அறிந்துச் சாட்சிய வாழ்வு வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

                                           www.anbinmadal.org

Tuesday, September 20, 2016

பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு 25/09/2016



பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு 





இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


ஆமோஸ் 6:1,3-7
1திமோத்தேயு 6:11-16
லூக்கா 16:19-31


முன்னுரை:

இறைஇயேசுவின் இனிய நண்பர்களே! விசுவாச வாழ்வில் வெற்றியைத் தேடிப் பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
இந்த உலகவாழ்வில் ஆடம்பரத்திலும், இன்பங்களிலும் செலவிடும்போது அடுத்திருப்பவரின் துன்பதுயரங்களில் பங்கு கொள்ள மனமில்லாமல் அவர்களை வெறுத்து ஒதுக்கி வாழ்பவரின் நிலையை அருமையாகப் படம் பிடித்துக்காட்டுகின்றார் இறைமகன் இயேசு. இறைவன் கொடுத்த செல்வங்களையும், திறமையையும் அடுத்தவரின் நலனுக்காகப் பயன்படுத்தாவிடினும் அச்செயல்கள் இறைவனுக்கு எதிரானதாகவே கருதப்படுகிறது. இதனை வலியுறுத்தும் செல்வந்தர், இலாசர் உவமையே இன்றைய நற்செய்தி வாசகமாகும்.
ஏழைகளிடம் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் யூதர்களை யாவே கடவுள் கடிந்து கொண்டு அவர்களுக்கு நிகழப்போகும் அவலங்களை எடுத்துரைக்கின்றார். நிலை வாழ்வைப் பற்றிக்கொள்ள விசுவாச வாழ்வில் போராட்டம் நடத்திட திருத்தூதர் பவுலடிகளார் நம்மை அழைக்கின்றார்.
பொருளாசையிலிருந்து விலகிச் செல்லவும், இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி ஆகியவற்றை நாடி நிலைவாழ்வைப் பற்றிக்கொள்ளவும், நாம் பெற்ற செல்வங்களையும் திறமைகளையும் அடுத்தவரின் நலனுக்காகப் பயன்படுத்திடவும், இயேசுகிறிஸ்துவைப் போல் விசுவாசத்தின் சாட்சிகளாக இவ்வுலகில் வலம் வர இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம்.. பேரின்பம் பெற்றிடுவோம்.


வாசகமுன்னுரை:



முதல் வாசக முன்னுரை:


பழைய ஏற்பாட்டின் காலத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக கடவுள் கடின உள்ளத்தை கொண்ட இஸ்ரயேல் மக்களின் மேல் சினம் கொள்ளுகிறார். உண்டு கொழுத்து ஆடம்பரத்திலும், சொகுசான வாழ்விலும் திளைத்து போன மாந்தர்களை மனம் மாற, அவர்களுக்கு நேரப்போகும் அவலங்களையும் தண்டனையையும் எடுத்துக் கூறியுள்ளார். இந்நிலை மாற இறைவனின் அழைப்பை எடுத்துரைக்கும்இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வரும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை:

 

இன்றைய இரண்டாவது வாசகத்தில், "விசுவாசத்திற்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும்" என்று கூறுகிறது.  யாரோடு போட்டி போடுகிறோம்? நம்மோடு நம் விசுவாசத்திற்காக. நீ நேற்றை விட, இன்று பரிசுத்தமாகவும், அதிகம் தாராளமாகவும் இருக்கிறாயா? நீ தேங்கிய நிலையில், அழுகிய நிலையில் இருக்கிறாயா? அல்லது, பரிசுத்த வாழ்வில், வலிமையோடு உங்கள் பாவங்களிலிருந்து மாற முயற்சி செய்கிறீர்களா? நம்மை நாம் சோதிக்க திருத்தூதர் பவுல் அழைக்கின்றார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர் என்று போற்றி புகழ்ந்திடும் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..



பதிலுரைப்பாடல் 

 


திபா 146: 7. 8-9. 9-10
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு .

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலை நாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி
 
அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி



மன்றாட்டுகள்:




1. அனைத்தையும் ஆண்டு நடத்தும் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் அடுத்தவருடன் பகிர்ந்துத் தன்னலமற்ற தொண்டுள்ளத்தோடு உம் பணியைச் சிறப்புச் செய்திடவும், உம் உண்மைச் சீடராய் வாழ்ந்திடவும், ஏழைகளின் மகிழ்ச்சியில் இறைஇரக்கத்தின் சாயலாக இயேசுவைக் காண உமது ஆற்றலைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



2. எம் மகிழ்ச்சியும், எம் புதையலுமாய் உள்ளவரே எம் இறைவா! எம்மை உம் இறையரசில் செல்வந்தராய் மாற்றிடும், உம்மிடம் நாங்கள் பெற்ற ஆன்மீக மற்றும் பொருளாதர வளங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து, தீயை வெறுத்து நன்மைகள் செய்யும் தாராள மனதைத் தருமாறும், அதனால் ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெற்றவும், நிலைவாழ்வில் இடம் பெறவும் அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.





3. எத்தகைய இடுக்கண்களில் உம்மைக் கூவி அழைத்தவருக்குச் செவிசாய்ப்பவரே, எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ளவர்கள் தங்களின் திறமைகளை அறிந்து அதற்கேற்ப எம் பங்கு நிகழ்வுகளில் பங்கேற்று உம்மை மகிமைப்படுத்தவும், எங்களைச் சுற்றியுள்ளவர்களின் துன்பதுயரவேளைகளில் சொல்லாலும், பொருள் உதவியாலும் இவர்களை ஆற்றுப்படுத்தும் நல்ல இதயங்களை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



4. என்றும் வாழும் எல்லாம் வல்ல எம் இறைவா! எம் நாட்டில் நடைபெறும் தீவிரவாதச் செயல்களால் ஏற்படும் குழப்பங்கள், மனக்கசப்புகள், பொருளாதார இழப்புகள் மற்றும் உயிர் இழப்புகள் ஆகியவற்றால் பரிதவிக்கும் மக்களுக்காய் உம்மை இறைஞ்சுகிறோம். அவர்களுக்குத் தேற்றுதலும் ஆற்றுதலுமாய் இருந்து நிம்மதியான, மனநிறைவான, அமைதியான வாழ்க்கை வாழவும், மக்களை வழி நடத்தும் எம் அரசியல் தலைவர்கள் அனைத்தையும் உணர்ந்துச் சமத்துவச் சமூதாயத்தை உருவாக்க அருள் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

                        www.anbinmadal.org

Monday, September 12, 2016

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு 18/09/2016



பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு




இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


ஆமோஸ் 8:4-7
1திமோத்தேயு 2:1-8
லூக்கா 16:1-13


முன்னுரை:

இறைஇயேசுவின் அன்பர்களே! நிலைவாழ்வைத் தேடிப் பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
யாருக்குப்பணி செய்வது?, நிறைவாழ்வு அடைய தேவையான முன்மதி என்ன?, செல்வத்திற்காக விவேகத்துடன் வாழ தெரிந்த நாம் அருள் வாழ்வு வாழ எடுக்கும் முயற்சி என்ன? நம் வாழ்வின் இலக்கு - பணமா? இறைவனா? என்று பல கேள்விகளுக்கு இன்றைய வாசகங்கள் பதில் தேட உதவுகின்றது.
வாழ்க்கைக்குப் பணம் தேவை. ஆனால் விவேகமாய்ப் பணம் தேடும்போது நாம் அருள்வாழ்வை இழந்து விடுகிறோம். நாம் எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம். நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்வதை விட, சொத்துக்களை சேர்ப்பது, நம்முடைய குறிக்கோளாக இருந்தால், கடவுள் நமது தலைவர் அல்ல. இந்த உண்மை, நம்மிடம் உள்ளச் சொத்துக்களுக்கும் மட்டுமல்ல, நம்மிடம் உள்ள மற்றத் திறமைகளையும் சேர்த்து தான் குறிப்பிடப்படுகிறது. நாம் எல்லாரும், ஏதாவது ஓரு திறமையோடு, ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்தத் திறமைகளை எப்படி மற்றவர்களுக்காக உபயோகிக்கப் போகிறோம்?
நிரந்தரமற்ற இவ்வுலகப் பொருள்களையும், நிலைவாழ்வுக்குரிய திடமான நம்பிக்கை, ஞானம், நம்பிக்கை அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, நமது நம்பகத்தன்மை உறுதிபடுத்தப் படுகிறது. இந்த நாளில் இறைவனுக்குப் பணிசெய்யும் மக்களாக மாறிடப் பொறுப்புள்ள பணியாளராக வாழ்ந்திட இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம்.. நம்பதக்கவராய், பெறுப்புள்ள பணியாளராய் வாழ்ந்திடுவோம்...

வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


பழைய ஏற்பாட்டின் காலத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இறைவாக்கினர் ஆமோஸ் இஸ்ரயேலரிடமிருந்த சமுதாயச் சீர்கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். வறியோரை ஏமாற்றி அவர்களைக் கொள்ளையடித்தவர்களுக்கு, கள்ளத் தராசினை பயன்படுத்துவோர்க்கு எதிராக யாவே கடவுள் தனது கோபத்தைக் வெளிக்காட்டுகின்றார். எச்சரிக்கை விடுக்கின்றார். அதே நிலையில் தான் இன்றும் நம்மில் பலர் தங்கள் வாழ்க்கையை நடத்தி, அடுத்தவரை ஏமாற்றுபவர்களுக்குக் கடவுளின் கோபத்தை எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் பவுல் நாம் நம்மைச் சுற்றியிருக்கும் அனைவருக்காகவும் பரிந்துரைத்து இறைவனை மன்றாட, நன்றிக் கூறிட அன்புடன் அழைக்கின்றார். இதுவே நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்படையதாமாகும் என்கிறார். கடவுளுக்கும் மானிடருக்கும் இடையே அமைந்துள்ள பாலம் தான் இறைமகன் இயேசுகிறிஸ்து. இயேசு கிறிஸ்துவின் திருத்தூதராகவும், நற்செய்தி போதகராகவும் பணியாற்றும் திருத்தூதர் பவுல் தூய உள்ளத்தோடு, கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்ய அழைக்கும் திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..


பதிலுரைப்பாடல்


ஏழைகளைத் தூக்கிவிடும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
திருப்பாடல் 113: 1-2. 4-6. 7-8

ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி 

மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி 

ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; உயர்குடிமக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே - அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி


மன்றாட்டுகள்:




1. எங்கள் மீட்பராகிய இறைவா! வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது என்ற இறைவாக்குக்கு இணங்க செயல்படும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையும் தீயசக்திகளிடமிருந்து பாதுகாத்து நல்ல உடல் சுகத்தையும் ஆன்மீகப் பலத்தையும் பாதுகாப்பையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




2. கல்வாரியை நோக்கி வாருங்கள், கல்வாரியை பாருங்கள் என்று புனித எஞ்சலினா கூறியதுபோல் நாங்கள் உம் கல்வாரி நோக்கி வரவும், நல்ல கள்வனின் சிலுவையில் மீட்பு பெற்றது போல நாங்களும் மீட்படையவும், சிலுவையை உற்று நோக்கிப் பாவங்களிலிருந்தும், நோயிலிருந்தும் விடுதலை அடையவும் அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.





3. எங்களுக்காகக் காத்திருக்கும் எம் இறைவா! நாங்கள் உம் ஞானத்தையும், இரக்கத்தையும், உம் அன்பையும் தேடக்கூடியவர்களாய், நிலையற்றச் செல்வத்தை விடுத்து நிலையான உம் இறையரசை நாடவும், நீர் எமக்குக் கொடுத்த திறமைகளைப் பிறருக்காய் பயன்படுத்தவும் அதற்குத் தேவையான ஞானத்தை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




4. அமைதியை என்றும் எமக்கு வழங்கும் எம் இறைவா! தண்ணீருக்காய் எம் நாடு பிளவுப்பட்டு, வன்முறையால் மக்கள் துன்புறும் நிலை மாற்றிடவும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழவும், இயற்கையைப் பேணிப்பாதுகாத்து வளம் பெறவும் தேவையான ஞானத்தை எம் அரசியல் தலைவர்களுக்கும், மக்களுக்கும் வழங்கிட வேண்மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


                        www.anbinmadal.org

Monday, September 5, 2016

பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறு 11/09/2016



பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறு





இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



விடுதலைப் பயணம் 32:7-11,13-14
1திமோத்தேயு 1:12-17
லூக்கா 15:1-32


முன்னுரை:

 காணாமல் போன ஆட்டைக் கண்டு மனமகிழ்ச்சி கொள்ளும் இறைவனைத் தேடி இன்று ஆலயம் வந்துள்ள இறைஇயேசுவின் மகிழ்ச்சிக்குரிய அன்பர்களே! உங்கள் அனைவரையும் பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் மனமாற்றத்தோடு, மன்னிப்பையும் பெற அன்புடன் வரவேற்கின்றோம்.

பொதுவாக நாம் ஒரு பொருள் காணாமல் போய், மீண்டும் தேடிக் கண்டு, அதைப் பெறும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்படி இருக்கத் தான் படைத்த மானிடர் தன்னை விட்டு வெகுதூரம் சென்றவர் மீண்டும் மனமாற்றம் அடைந்துத் தன்னிடம் வருதைக் காணும் தந்தையாம் கடவுளின் மகிழ்ச்சிக்கு எப்படி இருக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் தெள்ளத்தெளிவாகப் பதிவு செய்கின்றன.

விடுதலைப் பயணநூலில் மோசே கடவுளின் கோபம் இஸ்ரயேல் மக்களின் மேல் உள்ளதை அறிந்து அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவுட்டி மக்களைக் காப்பாற்றினார். திருத்தூதர் பவுல் இயேசுவிற்கு எதிராய் நடந்தாலும் கடவுள் தனக்காக மனமிரங்கியதை நினைவுகூர்கின்றார்.

இந்த நாளில் இறைவனின் மகிழ்ச்சிக்குக் காரணமான நம் மனமாற்றத்தையும் அதன் பலனாக மன்னிப்பையும் பெற்றுக் கொள்ள இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம்.. இறைஇரக்கத்தை வேண்டுவோம்..

வாசகமுன்னுரை:



முதல் வாசக முன்னுரை:



இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுளுக்கு எதிராகக் கன்றுக்குட்டியை வழிபாட ஆரம்பித்தனர். உண்மை கடவுளிடமிருந்து வெகுதொலைவுக்குச் சென்றனர். எனவே கோபம் கொண்ட கடவுள் மோசேயிடம் தன் மக்களை அழிக்கப்போவதாகக் கூறியபோது, மோசே கடவுளிடம் அவரின் அன்புக்குரிய இறையடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் நினைவுக் கூர்ந்து மக்களுக்காக மன்றாடி தண்டனையிலிருந்து காப்பாற்றியதை எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் பவுல் இயேசு கிறிஸ்துவுக்கு எதிராய் நடத்திய போரட்டத்தை உணர்ந்தும் கடவுள் அவருக்குக் காட்டிய இரக்கத்தை நன்றியோடு பதிவுச் செய்கிறார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு அவர் முன்மாதிரியாய் விளங்க அருள் புரிந்ததைப் பெருமிதத்துடன் நமக்கு விவரிக்கும் இன்றைய இரண்டாம் வாசகமான திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்தலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..



பதிலுரைப்பாடல்



திருப்பாடல் 51:1-2,10-11,15,17
பல்லவி: நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்.

கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.  என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்-பல்லவி

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.  உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி

என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.  -பல்லவி


மன்றாட்டுகள்:




1. என்றென்றும் இரக்கமுள்ள எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உமது இரக்கத்தையும், மன்னிப்பின் மாண்பையும் உணர்ந்தவர்களாய், இந்த இறைஇரக்கத்தின் ஆண்டில் அடுத்திருப்பவர்களை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் தந்தையின் மனபாக்குவத்தையும், அன்பையையும் பெற்றுச் சாடசியவாழவு வாழத் தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அருளே உருவான எம் இறைவா! புனித அன்னை தெரசாள் போல் நற்கருணையில் வீற்றிருக்கும் உம்மீது அளவில்லா அன்பும், நம்பிக்கையும் கொண்டு தன்னலமற்ற சேவையில் அவரைப் போல் எமக்கு அடுத்திருப்பவர்களை இறைமகன் இயேசுவாகப் பாவித்துத் தொண்டுள்ளம் தொண்டவர்களாய் பணிவிடை செய்து வாழ்ந்திட அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! கைவிடப்பட்ட சிறார், நோயாளர், வயதானவர்கள், உணவு அல்லது வேலையின்றி இருப்போர், வீடற்றவர், கைதிகள், அகதிகள், புலம்பெயர்ந்தோர், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோர் என, உதவி தேவைப்படும் அனைவருக்கும் பணிபுரிந்துவருபவர்கள் நல்ல ஆரோக்கியத்தையும், பொருளாதார உதவிகளைப் பற்றிடவும், உம் மேல் தளராத நம்பிக்கையும்,எம் அன்பில் என்றும் நிலைத்திருந்து பணியாற்றிட வேண்டிய நல்ல சூழல் அமைந்திடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் என்றும் வாழும் எம் இறைவா! எங்கள் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். தேவையில் இருக்கும் எம் சகோதர, சகோதரிகள் முன்பாக, எங்கள் பார்வையைக் குறைத்து, எம் இதயங்களைக் கடினப்படுத்தும் தன்னலத்தைத் தோற்கடிக்கவும், குடும்பங்களில் ஆரோக்கியமும், நட்புறவும், சமாதானமும், ஒற்றுமையும் ஓங்கி வளர்ந்திட வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.