Thursday, October 27, 2016

பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு 30/10/2016


 பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு

 

 

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

முன்னுரை


திருவழிப்பாட்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைகுலமே! உங்கள் அனைவரையும் இறை இயேசுவின் நாமத்தில் அன்புடன் வரவேற்கிறோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு, இரு கண்களாக நம் மனமாற்றம், இறைவனின் மீட்பு இவ்விரண்டையும் நம் சிந்தனைக்கு விருந்தாகத் தருகின்றது! ஒன்று சக்கேயுவின் கண்கள் மற்றென்று இயேசுவின் கண்கள். கண்கள் சந்தித்தன. மனமாற்றம் விரைவாக ஏற்பட்டது. இயேசுவின் வரவால் அவர் இல்லத்திற்கு மீட்பு உண்டானது. குள்ளமான சக்கேயு இன்று உயர்த்தப் பட்டார். எழுந்து நின்று தவறுகளை ஏற்றுக்கொண்டு அதற்குக் கைம்மாறுச் செய்யவும் தயாரானார். சக்கேயு காட்டு மரத்தில் ஏறினார் எரிக்கோவில். இயேசு கல்வாரி மரத்தில் ஏறினார் எருசலேமில். சக்கேயு ஏறியதால் அவருக்கு மீட்பு கிடைத்தது. இயேசு ஏறியதால் மனுக்குலம் அனைத்திற்கும் மீட்பு கிடைத்தது.

இறைஇரக்கத்தின் யூபிலி ஆண்டின் இறுதி கட்டத்திருக்கும் நமக்கு இந்நிகழ்வுகள் எத்துணை அற்புதமாக உணர்வுகளைத் தருகின்றது. இரக்கத்தின் யூபிலி ஆண்டின் இலச்சினையில் இயேசுவின் கண்களில் ஒன்றும், மனிதரின் கண்களில் ஒன்றும் ஒன்றோடொன்று பொருந்தி நிற்பதாக இருக்கிறது. இந்த நிலை வர வேண்டுமென்றால் முதலில் இயேசுவின் கண்களும், நம் கண்களும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். அதற்காக இத்திருப்பலியில் நற்கருணை நாதரை உற்று நோக்குவோம். நிலைவாழ்வுக்கான மீட்பை அவரிடம் பெற்றிடுவோம்.


வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை

இறைவனின் கண்பார்வை மனுக்குலத்தின் மேல் உள்ளது. தீமை, பாவம், குற்றம் என விரிசல் விழும் நேரங்களில் அங்கே அவரின் பரிவிரக்கம் நிறைவையும், முழுமையையும் கொண்டுவருகிறது. உயிர்கள் மீது அன்பு கூர்கின்றவர் எல்லாவற்றையும் வாழ விடுகின்றார். தவறு செய்பவர்களை மெல்ல மெல்ல திருந்த அவகாசம் தருகிறார் என்று சாலமோன் கடவுளின் பரிவிரக்கத்தை எடுத்துரைக்கும் சாலமோன் ஞானநூலிலிருந்து வரும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காக எதிர்நோக்குடன் காத்திருந்த தெசலோனிக்கிய திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுலும் இன்று உங்கள் அழைப்புக்கு ஏற்ப உங்களைத் தகுதியாக்குங்கள் என்றும் நல்லெண்ணத்தால் தூண்டப்பெறும் நற்செயல்களில் நிலைத்திருங்கள். ஆண்டவரின் நாள் வந்துவிட்டது என்ற கூறினால் உள்ளம் கலங்கவேண்டாம் எனவும் இன்றைய இரண்டாம் வாசகத்தில்  எழுதுகின்றார். தூய பவுலடியாரின் இவ்வேண்டுகோளைக் கவனமுடன் கேட்போம். 


பதிலுரைப்பாடல்

என் கடவுளே, என் அரசே! உம் பெயரை என்றும் போற்றுவேன்.

திருப்பாடல்145: 1-2. 8-9. 10-11. 13

என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.  நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.  பல்லவி

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.  ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.   பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.  அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.  தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். பல்லவி


மன்றாட்டுகள்


1. அன்பு இறைவா! எம் திருஅவை தனது சொல்லாலும் செயலாலும் மன் கடமையிலும், நெறிதவராது, இவ்வுலகில் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் கிறிஸ்த வாழ்ந்த வாழ்வை இவ்வலகிற்குப் பிரதிபலிக்கக் கூடியவர்களாகத் தங்களைப் புதுபித்துக் கொள்ளத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.2. நேர்மையின் நாயகனான எம் இறைவா! எங்கள் நாட்டில் நிலவும் மதம், மொழி, இனவேறுபாடுகள் இவைகளைக் களைந்து நாட்டு நலனில் அக்கறை கொண்டு மக்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான, வேலைவாய்ப்புகள், கல்வியறிவு, இயற்கை வளங்களைப் பாதுகாத்துச் சமத்துவச் சகோதரத்துவ வாழ்வு துலங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.3. உலகில் நிலவும் பஞ்சம் கொலை, கொள்ளை, தீவிரவாதம், மதச்சண்டைகள் இவை அனைத்தும் மனிதனின் சுயநலத்திற்காக. இப்படிபட்ட தீமையான செயல்களில் தங்களை ஈடுபடுத்தாமல் அமைதியோடும், சமாதானத்தோடும் வாழத் தேவையான நல்ல மனதினைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


4. ஒளியான எம் இறைவா! இளைஞர், இளம்பெண்கள்தங்கள் வாழவில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கி மவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.                                                       www.anbinmadal.org

Thursday, October 20, 2016

பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு 23/10/2016

*பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு 23/10/2016*
*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

சீராக் : 35: 12-14, 16-18
2திமோத்தேயு 4: 6-8, 16-18
லூக்கா 18:9-14 *முன்னுரை*


திருவழிபாட்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைகுலமே! உங்கள் அனைவரையும் இறை இயேசுவின் நாமத்தில் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய வார்த்தை வழிபாடு இறைவனுக்கு ஏற்புடையோரின் மன்றாட்டைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்கின்றது.
ஆண்டவர் நடுவராய் உள்ளார். அவரிடம் ஒரு தலைச்சார்பு இல்லை. அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறுப் பணிபுரிவரின் மன்றாட்டு முகில்களை எட்டும் என்பதைச் சீராக் ஞான நூல் எடுத்துரைக்கின்றது.  திருத்தூதர் பவுலடியார் தனது பணியை முடித்து விட்ட மகிழ்ச்சியில் ஆண்டவரின் ஆற்றல் தன்னை எவ்வாறு வழிநடத்தியது என்பதை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்.
இறைமகன் இயேசு பரிசேயர் – வரிதண்டுபவர் உவமை மூலம் இறைவன் முன்னிலையில் எப்படி நம் செபங்களை அவருக்கு ஏற்புடையவனாக அமைப்பது என்று நல் ஆசானாகப் போதிக்கின்றார். தன்னையே உயர்த்தித் தம்பட்டம் அடித்து பெருமையுடன் செபிப்பதைக் காட்டிலும் தாழ்ச்சியுடன் தன்னைப் பாவி என்று தாழ்த்திச் செபித்த செபமே இறைவனுக்கு ஏற்புடையது. அதுவே முகில்களை ஊடுருவி செல்லும். இக்கருத்துகளை மனதில் பதிவு செய்து இன்றைய வழிபாட்டில் தாழ்ச்சியுடன் நம்மையே இறைவனிடம் ஒப்புக் கொடுத்து அவரின் ஆற்றலை வேண்டி நம்பிக்கையுடன் பங்கு கொள்வோம்.

*வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*

முதல் ஏற்பாட்டில் முதல் சகோதரர்கள் காயினும், ஆபேலும் கடவுள்முன் காணிக்கைகள் கொண்டுவருகின்றனர். ஆபேல் ஏற்புடையவராகிறார். காயின் ஆகவில்லை. ஒருவரை ஏற்புடையவராக்குவது கடவுளே அன்றி, தனிநபரின் செயல்கள் அல்ல.  இன்றைய முதல் வாசகத்தில் சீராக்கும், 'ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிசெய்வோர் ஏற்றுக் கொள்ளப்படுவர். அவர்களின் மன்றாட்டு முகில்களை எட்டும்' என்று சொல்கின்றார்.  ஆண்டவரின் விருப்பத்தை புரிந்தவர்களாய் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*

தூய பவுலடியார் தன் நண்பர் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில் தனக்கு அளிக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்கிறார். திமொத்தேயுவுக்கான தன் அறிவுரையை நிறைவுச் செய்யும் பவுலடியார், 'மற்றவர்கள் தன்னைவிட்டு அகன்றாலும், இறைவனின் அருட்கரம் தன்னை வழிநடத்தியதற்காக நன்றி நவில்கின்றார். விண்ணரசில் சேர்வதற்கான மீட்பைப் பெற்றுவிட்டதை நம்பிக்கையுடன் இங்குப் பதிவுச் செய்கிறார். இந்த வெற்றி வாகையைப் பகிர்ந்து கொள்ளும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம். 


*பதிலுரைப்பாடல்*


இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

திருப்பாடல் 34: 1-2. 16-17. 18,22


ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர் பல்லவி
ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

*மன்றாட்டுகள்*

1. செம்மையான வழியை எமக்குக் காட்டும் எம் இறைவா! எம் திருஅவையை நடத்திவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் திருதூதர் பவுலடியார் தம் பணியைச் சிறப்பாக முடித்து வெற்றிவாகைப் பெற்றவும், அவரைபோல் இறைபணியில் தாங்களையே பலியாக அர்ப்பணிக்கவும் தேவையான ஞானத்தை, ஆற்றலையையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைவருக்கும் நீதி வழங்கும் எம் இறைவா! ஒருவர் நேர்மையாளர் என்பது அவரின் நற்செயல்களில் அல்ல. மாறாக, அவர் கடவுளுக்கு ஏற்புடையவரா என்பதில்தான் அடங்கியிருக்கிறது என்பதை எங்களில் குடும்பத்தில் அனைவரும் உணர்ந்து அதன்படி தாங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவும், நேர்மையாளராக இருக்கவும் நல்மனதினைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அருளும் இரக்கமும் கொண்ட எம் இறைவா! தாழ்ச்சியுள்ள இதயத்தோடு செபிக்கும் எங்கள் அனைவரின் செபத்தை ஏற்று எங்கள் வாழ்வு நலமும் வளமும் அடையவும், எம் தலைவர்கள்  தம் மக்களின் மீது தொண்டுள்ளம் கொண்டு தன்னலமற்றுப் பணியாற்றிட தேவையான ஆற்றலையும், உமது இரக்கம் எம் மீது பொழிந்தட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. என் வேண்டுதலை உற்றுக் கேட்பவரே! எம் இறைவா! தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், கைம்பெண்கள், புலம்பெயர்ந்து வாழ்வோர், அநாதைகள் ஆகியோருக்காக உம்மை மன்றாடுகிறோம். இவர்களின் வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்திடவும், உடல் நலத்திலும் பொருள் வளத்திலும் ஏற்றம் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  


                                    www.anbinmadal.org

Wednesday, October 12, 2016

பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு 16/10/2016

பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


விடுதலைப் பயணம் 17:8-13
2திமோத்தேயு 3:14-4:2
லூக்கா 18:1-8

முன்னுரை


திருவழிபாட்டின் பொதுக்காலம் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைமக்களே! உங்கள் அனைவரையும் இறைஇயேசுவின் அன்பில் வரவேற்கின்றோம். இன்றைய வார்த்தை வழிபாடு ‘இடைவிடாத செபம் இறையருளைப் பெற்றுத் தரும்’ என்ற சீரியக் கருத்தை நமக்கு வழங்குகின்றது.
விடுதலைப் பயணநூலில் மோசேயின் கரங்கள் உயர்ந்திருந்தபோது இஸ்ரயேல் மக்கள் வெற்றியைக் கண்டனர். இறைஇயேசு உவமைகளின் மூலம் நம்மைத் தொடர்ந்து செபிக்க அழைக்கின்றார்.

கைம்பெண் தன்னுடைய விடாமுயற்சியினால் நேர்மையற்ற நடுவரிடமிருந்து நல்ல தீர்ப்பைப் பெறுகிறார். இவ்வாறு நீதியுள்ள இரக்கமுள்ள கடவுள் தம்மிடம் இடைவிடாது மன்றாடுவோரின் மன்றாட்டை நிச்சயமாக் கேட்பார் என்பது உறுதி.
இயேசு தன் பணிவாழ்வு முழுவதும் தந்தையோடு செப உறவில் நிலைத்திருந்தார். காலையிலும் மாலையிலும், ஒவ்வொரு நிகழ்வைத் தொடங்கும் முன்பும் செபித்தார். எனவே தான் திருத்தூதர் பவுல் கூறுகிறார், இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் என்று.நமது கிறஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற ஆயுதங்களால் மட்டுமே வெற்றி அடையமுடியும் என்பதை உணர்த்துகின்றது. இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் இடைவிடாது செபிக்க, கடவுளிடம் நம்பிக்கையும், தன்னம்பிக்கையுடன் அவரை நாடவும் வேண்டிய வரங்களைப் பெற்றிட நம்பிக்கையுடன் பங்கு கொள்வோம்.

வாசகமுன்னுரைமுதல் வாசக முன்னுரை


விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியரோடு போர் தொடுக்கிறார்கள். அப்படிப் போர்தொடுக்கும்போது மோசேயின் கை உயர்ந்திருக்கும் போதேல்லாம் இஸ்ரயேல் மக்கள் வெற்றி பெற்றார்கள். மோசேயின் கைத்தளர்ந்தபோது ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமும் அவருடைய கையைத் தாங்கிப்பிடித்து, இஸ்ரேயல் மக்கள் எதிரிகளிடமிருந்து வெற்றிபெற உதவிபுரிகிறார்கள்.இங்கே அவர்களின் விடாமுயற்சி அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த விடாமுயற்சி எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை


தூய பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில், “அன்புக்குரியவரே! நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்” என்று வாசிக்கின்றோம். எதில் நிலைத்திருப்பது? என்று சிந்தித்துப் பார்க்கும்போது, நமது விடாமுயற்சியில் நிலைத்திருப்பது என்பதுதான் அதற்கான பதிலாக இருக்கின்றது. என்றைக்கு நாம் நமது விடாமுயற்சியில் நிலைத்து நிற்கின்றோமோ, அன்றைக்கு நாம் நினைத்த காரியத்தில் வெற்றியைப் பெறுவோம் என்பது உண்மையாக இருக்கின்றது. சில நேரங்களில் நமது முதல் முயற்சியிலேயே நாம் வெற்றியைப் பெற்று விடுவதில்லை. தொடர் உழைப்பினால், விடாமுயற்சியினால் தான் நாம் அந்த வெற்றியைப் பெற முடியும் என்ற உண்மையை உணர்த்தும் வாசகத்தைக் கருத்துடன் கவனித்து உள்ளத்தில் பதிவு செய்வோம்.

 

பதிலுரைப்பாடல்


திருப்பாடல்: 121: 1-2, 3-4, 5-6, 7-8.

விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரே எனக்கு உதவி. 
மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். பல்லவி
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்: உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை: உறங்குவதும் இல்லை. பல்லவி

ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்: அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: அவரே உமக்கு நிழல் ஆவார்! பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது: இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. பல்லவி

ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்: அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். பல்லவி மன்றாட்டுகள்:


1. பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூடியவரே!எம் இறைவா! எம் திருஅவையை நடத்திவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், இடைவிடாத நம்பிக்கையில் உறுதியும் உம் பணிச் செய்திடவும் ஆற்றல் தருவது செபமே என்பதை உணர்ந்து இடைவிடாது செபிக்க வேண்டிய அருளைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. உலகின் கடை எல்லைவரை நற்செய்தியை அறிவிக்க அழைத்த எம் இறைவா! மறைபோதக ஞாயிறுவிழாவைக் கொண்டாடும் நாங்கள் உம் சீடர்கள் போல் நாங்களும் சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வரவும், எம் பங்களிப்பால் உமது பணியாளர்களைத் தாங்கிக் கொள்ளும் நல்மனதையும், எளியோருக்கு நல்ல சமாரியனாக மாறி உம்மை அவர்களில் காணும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. எம்மை உமது உரிமைச் சொத்தாய் ஏற்றுக் கொண்ட எம் இறைவா! உலகமெங்கும் எங்கும் அமைதி நிலவும் சூழலைத் தந்து, எல்லா இனத்தரும் உமது படைப்பின் நன்மைகளை உய்த்துணர்ந்து வாழ, உமது இரக்கம் எம் மீது பொழிந்தட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


4. இடைவிடாது செபிக்க அழைத்த எம் தந்தையே இறைவா! செபமே ஜெயம் என்பதை நாளும் உணர்ந்தவர்களாய் தொடர்ந்து சோர்வில்லாமல் செபிக்கவும், பரிந்துரைச் செபத்தால் எமக்கு அடுத்திருப்பவர்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுக்காகச் செபித்து அவர்களை ஆற்றுப்படுத்தும் உள்ளத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

                                           www.anbinmadal.org


Wednesday, October 5, 2016

பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு 09/10/2016பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு இன்றைய நற்செய்தி வாசகங்கள்

முன்னுரை

  பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாடத்தில் கலந்து கொள்ள வந்துள்ள இறைமக்களே உங்கள் அனைவரையும் எல்லாப் பெயர்களுக்கும் மேலான இறைமகன் இயேசுவின் பெயரால் அன்புடன் வரவேற்கின்றோம்.
சிரியாஅரசனின் படைத்தலைவனான நாமானின் நம்பிக்கை அவரது நோயிலிருந்து விடுதலைக் கொடுத்தது. இஸ்ரயேலரின் கடவுள் யாவே தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை என்று அறிக்கையிடுகிறார். இயேசுவோடு நாம் இறந்தால் அவரோடு வாழவோம். அவரோடு நிலைத்திருந்தால் அவரோடு ஆட்சி செய்வோம். என்று தன் ஆழமாக நம்பிக்கையை உறுதியாகப் பதிவுசெய்கிறார் பவுலடியார்.
இயேசுவின் மீது வைத்த விசுவாசம் தொழுநோயுற்ற சமாரியரின் உடலையும், ஆன்மாவையும் காப்பாற்றியது. அவரது குறைகள் குணப்படுத்தப்பட்டது. சமாரியரான அவர் தன்னை யார் குணப்படுத்தினாரோ அவரைப் பாராட்டினார், நன்றி கூறினார். கடவுளுக்கு அவராலே அவருக்குக் கொடுக்க முடியாத ஒன்று நம் எல்லாரிடமும் இருக்கிறது: அவருக்கு வாழ்த்துக்களும், போற்றுதலும், வேண்டுதலும், நன்றியும் நம்மிடமிருந்து வரவேண்டும். இயேசு திவ்ய நற்கருணை வழியாக உங்களிடத்தில் வருவதற்கு, நாம் இயேசுவுக்கு நன்றியும், போற்றுதலும் கூறுகிறோமா? நன்றி மட்டுமே விரும்பும் அவருக்கு நாம் செய்யும் கைம்மாறுத் தான் என்ன? சிந்திப்போம்.
இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் நன்றியோடு இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, மகிழ்வுடன் பங்கு கொள்வோம். 

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

எலிசாவின் வாக்கிற்கு இணங்கி, தனது வேலைக்காரனின் வேண்டுதலின் பேரில் சிரியா நாட்டு அரசனின் படைத்தலைவனான நாமான் யோர்தான் ஆற்றில் ழுழ்கித் தன் தொழுநோயிலிருந்து விடுதலைப் பெற்றான். வேற்றினத்தவரான நாமான் யாவே ஒருவரே கடவுள். உண்மையின் கடவுள் என்று நம்பினான். எது உண்மை? பலி அல்ல. கீழ்படிதலே சிறந்தது எனக் கூறும் இரண்டு அரசர்கள் நூலிலிருந்து எடுக்கப்பட இம்முதல் வாசகத்திற்கு உள்ளம் திறந்துச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாவது வாசகத்தில், " இயேசுகிறிஸ்து தாவீதின் வழி வித்து எனவும், இறந்த இயேசுகிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார்என்பது தனது நற்செய்தி என அறிவிக்கிறார். எனவே தன் வேதனைகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் இயேசுகிறிஸ்துவுக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் புனித பவுலடியாரின் மனநிலை நமக்குள் நிலைக்கவும், இயேசுகிறிஸ்துவின் போதனைகளை எவராலும் ஒருபோதும் சிறைபடுத்த முடியாது என்பதையும் உணர்ந்தவர்களாய் திமொத்தேயுவுக்கு எமுதிய இரண்டாவது திருமுகத்திலிருந்து வரும் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்..ஆண்டவர் தம் மீட்பை மக்களினத்தார் காண வெளிப்படுத்தினார்.
திருப்பாடல் 98: 1. 2-3-4
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார் பல்லவி

உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே எம் இறைவா! இன்றைய சூழ்நிலையில் கிறிஸ்தவ சமூகங்களுக்கும், மானிட வாழ்விற்கும், இறைமனித உறவிற்கும் எதிராக நடைபெறும் அனைத்துப் பிரச்சனைகளுக்கு இயேசுகிறிஸ்துவின் மனநிலையோடு எம் திருஅவையை நடத்திவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் பாதையில் பயணம் செய்ய தேவையான ஞானத்தையும், உடல் நலத்தையும் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைவருக்கும் ஒரே நீதியை வழங்கிடும் எம் இறைவா! இன்று எம் நாட்டில் நிலவும், சுயநலம், மற்றவர்களை அடிமைப்படுத்துக்கூடிய ஆணவம் இவைகளை மறந்து எல்லா மாநிலமும் தங்களிடம் உள்ளத் தேவைக்கு அதிகமான அனைத்தையும் ஒருவர் மற்றவர்களுடன் பகிர்ந்துப் பிரிவு, மனப்பான்மைக்கு இடந்தராமல், சமத்துவச் சகோதரத்துவ வாழ்வு சிறந்து விளங்கிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. ஏழைகளின் நாயகனே எம் இறைவா! இன்ற உலகளவில் நவீன பொருளாதாரச் சீர்கேடுகள், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவர் என்ற வேற்றுமை நிலைக் களைந்து ஒற்றுமையோடு செயல்படவும், ஒன்றுபட்டால் நம் அனைவருக்கும் வாழ்வு உண்டு என்று, உம் உன்னத மனநிலையோடு ஏழைகளுக்கு இரங்குகின்றவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கின்றான் என்ற விவிலியசிந்தனையை உணர்ந்து உமது இரக்கம் எமை மீது பொழியப் பட வேண்டுமென்ற இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. நீதியினிமித்தம் துன்புறுத்துப்படுவோர் பேறுபெற்றோர் என்னும் கூற்றுக்கு இணங்க இன்று சமூகத்தில் நிலவும் அவலங்கள், கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, தீவிரவாத செயல்கள் இவற்றிலிருந்து மக்கள் அனைவரைப் பாதுகாத்துப் பெண்கள் சமூகத்தில் மாண்புடன் நடத்தப்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

                                              www.anbinmadal.org