Sunday, November 12, 2023

பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு 19/11/2023

 பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு 19/11/2023

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

நிதிமொழிகள் 31: 10-13,41-43,.45,54-57
1 தெசலோனிக்கர் 5: 1-6
மத்தேயு 25: 14-30

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பொதுக்காலத்தின் 33ஆம் ஞாயிறுத் திருப்பலிப் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறோம்.

குறைகள், நிறைகள் இரண்டும் ஒவ்வொரு மனிதருக்கும் தரப்பட்டுள்ள கொடைகள். குறைகள்...கொடைகளா? என்ற கேள்வி எழலாம். ஆம், குறைகளும் கொடைகள்தாம். குறைகளையும் நிறைகளாக மாற்றும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. நமக்குள்ள குறையைப் பெரிதுபடுத்தி, நம்மிடம் உள்ள மற்றக் கொடைகளையும் பயன்படுத்தாமல் புதைத்து விடுகிறோமா என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புகிறது இன்றைய நற்செய்தி. நமக்குத் தரப்பட்டுள்ள கொடைகள் அனைத்திற்கும் நாம் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று இன்றைய நற்செய்தி நமக்கு இடித்துரைக்கிறது.

ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் நாம் மேற்கொள்ளும் ஒரு முயற்சி கணக்கு வழக்குகளை முடித்து ஒப்படைப்பது. வழிபாட்டு ஆண்டின் இறுதியில் இருக்கும் நாம் கணக்கு வழக்குகளை முடித்து, கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை நினைவுறுத்த இன்றைய நற்செய்தியில் தாலந்து உவமை நமக்குத் தரப்பட்டுள்ளது. கணக்கு-வழக்கு என்பது நாம் பயன்படுத்தும் ஒரு பொதுவான சொற்றொடர். நமது வரவுச் செலவு கணக்குச் சரியாக இருந்தால், அங்கு வழக்குத் தேவையில்லை. எப்போது கணக்குச் சரிவர அமையாமல் இருக்கிறதோ, அங்குக் கணக்கைவிட வழக்கு அதிகமாகி விடும். இன்றைய நற்செய்தி கணக்கையும் சொல்கிறது, அதற்கு மேல் வழக்கையும் நடத்துகிறது.

நம் திறமைகள், கொடைகளில் நம் கவனத்தைத் திருப்பி, அவைகளைப் புதைத்து விடாமல், பலருக்கும் பல மடங்காகப் பயன்தரும் வகையில் நம் திறமைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே வழக்குகளில் சிக்காமல் கணக்கை நிறைவாக முடிக்கத் தேவையான வரங்களை வேண்டி இன்றைய திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய வாசகம் கடினமாக உழைக்கின்ற மனையாளைப் பற்றிப் பேசுகின்றது. கம்பிளி, சணல் ஆகியவற்றைத் தானே தேடிக் கொள்பவளாக, இராட்டினத்தைத் தானே தன் விரலால் திரிப்பவளாக இருப்பவரே மனத்திடமுள்ள மனையாள் என்று நீதிகொழிகள் புத்தகம் பறைச்சாற்றுகிறது. வெற்றி இனிப்பானது. அதன் இரகசியம் வியர்வையாகும் என வலியுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
திபா 128: 1-2. 3. 4-5

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி

உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.பல்லவி

ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் நற்செய்திப் பணி புரிந்த நேரம் போக, கூடாரம் அடிக்கும் தொழில்மூலம் தன்னுடைய சுய தேவைகளைப் பூர்த்திச் செய்து கொண்டார். என்னுடைய தேவைகளுக்காகவும், என்னோடிருந்தவர்களின் தேவைக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள் என்கிறார். எனவே தான் உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது என்று அவரால் உறுதியாகக் கூறமுடிந்த இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் நிறைவாகப் பெற்றுள்ள கொடைகளைத் திறமையாகப் பயன்படுத்தி உம் இறையரசை அறிவிக்கத் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2 வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! எங்கள் குடும்பத்தினர்கள் தங்கள் குறைகளை எல்லாம் மறந்துத் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளத் தேவையான ஞானத்தையும் அறிவையும அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் மரிந்தவர்கள் அனைவரையும் நினைவுக் கூர்கின்றோம். அவர்கள் அனைவரும் புனிதர்களின் திருக்கூட்டத்தில் சேர்த்துக்கொண்டு உம்மைப் போற்றிப் புகழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! பாகுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த இந்த மனிதச் சமுதாயத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் தனித் திறமை உடையவர்கள். எமது குறைகளையும் திறமைகளாக மாற்றும் வழிகள் உண்டு. குறைகளைத் திறமைகளாக மாற்றித் எங்களையும், பிறரையும் வளர்ப்பவர்களாய் மாறிட உம் ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment