Thursday, October 15, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 18-10-2015


ஆண்டின்  29ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எசாயா 53:10-11
எபிரேயர் 4:14-16
மாற்கு 10:35-45


முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு.  இந்த ஞாயிறு இறை வழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை நம் அன்பு நாயகன் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். இன்றைய நற்செய்தி பதவி மோகத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. எசாயா ஆன்டவரின் துன்புறும் ஊழியரைப் பற்றி எடுத்துரைக்கிறது. எசாயாவின் வார்த்தைகளைக் கொண்டே இயேசு தன் சீடர்களின் தவறான எண்ணங்களை மாற்றினார். இத்தகைய சவால் நிறைந்த கடுமையான வாழ்வை யாரால் வாழமுடியும்? இது சாத்தியமா? என்ற கேள்விக்கு பதிலாக இரண்டாம் வாசகம் அமைந்திருப்பதை காண்கிறோம்.

 இயேசு தன் பாடுகளைப் பற்றி  மூன்று முறை மாற்கு நற்செய்தியில்  எடுத்துரைக்கின்றார். ஆனால் அவரின் சீடர்கள் அதை  தவறாக புரிந்துக் கொண்டு அவருக்கு அருகில் யார் இருப்பது  என்பதையே விவாதித்து வருகிறார்கள்.  ஆனால் மனுமகனோ பணிவிடை ஏற்பதற்கு அன்று பணிவிடைப் புரியவே வந்தேன் என்றார். தன்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னைப் போல் பாடுகள் படவேண்டுமென்றும், உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர்கள் உங்கள் தொண்டராய் இருக்கட்டும் என்று  தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். பணிவிடை புரிவது என்பது மற்றவர்களின் சுமைகளைப் பகிர்ந்துகொள்வதிலும், தாழ்ச்சிளோடு ஆறுதல் சொல்வதிலும் தான் அடங்கியுள்ளது என்பதை நன்கு உணர்வோம். இதைச் செயல்படுத்துவதில்  நாம் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை நம் ஆண்டவரிடம் ஒப்படைப்போம் . அவரே நம்மை நல்வழிப்படுத்துவார். எனவே இவற்றை
உணர்த்தும் இன்றைய திருப்பலி வழிபாட்டில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எசாயாவிடமிருந்து  எடுக்கப்பட்டது. எசாயா இறைவாக்கினர் துன்புறும் ஊழியனைப் பற்றி நான்கு இடங்களில் குறிப்பிடுகின்றார். அவர் சிறுமைப்படுத்தப்பட்டலும்  வாயைத் திறவாதிருந்தார்.அவர் தம் உயிரைக் குற்ற நீக்கப்பலியாகத் தந்தார். ஆண்டவர்திருவுளம் அவர் கையில் சிறப்புறும்  என்ற இயேசுவின் பாடுகளைப்பற்றி முன்னுரைக்கின்றார்.இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம் .

இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில்  நமது தலைமைக்குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவுக் கூடிய அருளைக் கண்டையவும் அருள் நிறைந்த இறைஅரியணைத் துணிவுடன் அணுகிச் செல்வோம். இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின்  இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்


திபா 33: 4-5. 18-19. 20,22

பல்லவி: உம்மையே நாங்கள் நம்புவதால், உம் பேரன்பு எம்மீது இருப்பதாக!

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;
அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்;
அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக்
காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்;
அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;
அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,
உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி

மன்றாட்டுகள்:


திருச்சபைக்காக:

உம் பேரன்பால் எமக்கு துணையும் கேடயமும் இருக்கின்ற எம் இறைவா!  எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள்,  அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள்  அனைவரும் பணிவிடை ஏற்பதற்கு அன்று பணிவிடைப் புரிவதில் தான் தலைமைப் பண்பு அடங்கியிருக்கின்றது என்ற இயேசுவின் அழைப்பை உணர்ந்தவர்களாய் கிறிஸ்துவின் சீடர்களாய்  இவ்வுலகில் வாழ வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம் குடும்பங்களுக்கா:

உம் பேரன்பால் பூவுலகை  நிறைந்துள்ள எம் இறைவா! சவால்கள் நிறைந்த எம் இல்லற வாழ்க்கையில்  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உம் மைந்தனைப்போல  பணிகளை செய்திடவும், சிலுவை இன்றி வெற்றி இல்லை என்ற இயேசுவின் மொழிகளை மனதில் பதிவு செய்து, அவரின் உடனிருப்பை உணர்ந்து வாழ  வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

நாட்டு தலைவர்களுக்காக:

உம் பேரன்பால் உறவுகளை பேணிக்காக்கும்  உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் உமது விழுமியங்களை உணர்ந்து பணி செய்யவே என்ற உன்னத நோக்கத்தை வாழ்வில் கடைபிடித்து  மக்களின் நல்வாழ்வில் சுயநலமின்றி கவனம் செலுத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

துன்புறும் திருஅவைக்காக:

உம் பேரன்பால் அனைவரையும் வழிநடத்தும் அன்புத்தந்தையே! இயேசுகிறிஸ்துவின் சீடர்கள் என்பதால் மத்தியகிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கொடுமைகளுக்கு ஆளாகி நாட்டையே விட்டு வெளியேறி  நாடற்றவர்களாக, எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தால் தவிக்கும் எம் திருஅவை கண்ணோக்கும். அவர்கள் எந்த பயம் இன்றி இவ்வுலகில் வாழவும் ஏற்றவேளையில் உதவுக் கூடிய அருளைக்கண்டையவும் அருள்புரியமாறு  இறைவா உம்மை மன்றாடுகிறோம்

No comments:

Post a Comment