Thursday, February 11, 2016

தவக்காலத்தின் முதல் ஞாயிறு 14-02-2016

தவக்காலத்தின் முதல் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


இணைச் சட்டம் 26:4-10
உரோமையர் 10:8-13
லூக்கா 4:1-13

முன்னுரை:


இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவர்களே!  தவக்காலத்தின் முதல் ஞாயிறு திருவழிபாட்டிற்கு வந்துள்ள உங்கள் வரவு நல்வரவு ஆகுக. வருடம் ஒரு முறை திருச்சபை இயேசுவின் பாடுகளை மனதில் சிந்தித்து நம்மை மனமாற்றத்திற்கு மீண்டுமாய் அழைக்கிறது.  இறை மனித உறவைப் புதுப்பிக்கும் காலம். இருகிப்போன இதயங்கள் அன்பில் மீண்டும் துளிர்க்கும் காலம். ஆணவமும், சுயநலங்களும்  களையப்பட்டு புதிய வாழ்வு பெற அழைக்கப்படும் காலம். நாற்பது நாட்கள் என்ற காலக்கட்டம் விவிலியத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பின்னிப்பிணைந்துள்ளதை நாம் காணலாம். இந்த நாற்பது நாட்களின் முடிவில் கிடைத்த வெற்றி அனுபவங்களை நாமும் பெற்று மகிழ அழைக்கப்படுகிறோம்.

உணவும், பாதுகாப்பும் இல்லாமல் நாடோடியாக நாற்பது ஆண்டு காலம் பயணித்திருந்த இருந்த இஸ்ரயேல் இனம் இன்று கைகளில் பழக்கூடைகளை ஏந்தி ஆலயத்தின் வாசலில் நிற்கிறதென்றால் அதற்குக் காரணம் இறைவனின் அருள். நம்பிக்கை அறிக்கையை உரோமைத் திருச்சபைக்கு வழங்குகிறார் பவுல். இந்த நம்பிக்கை ஒரு வாக்கியம்தான்: 'இயேசு ஆண்டவர்.' நன்மை - தீமை என்பது மனிதரின் தொடக்கமுதல் இருந்துவரும் ஒரு தேடல். எதற்காக இயேசு 'எங்களுக்குச் சோதனைகள் வேண்டாம்' என்று கற்பிப்பதற்குப்  பதில் 'எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்' என்று இறைவேண்டலைக் கற்பிக்கின்றார். நன்மையும், அன்பும் உருவான எல்லாம் வல்ல கடவுள் ஏன் தீமையை அனுமதிக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாம் நம் உள்ளத்தில் எழக்கூடியவை. இந்தக் கேள்விகளுக்கு பதிலாக வருபவை அல்ல இயேசுவின் சோதனைகள். இதை ஒரு பாலைவன நிகழ்வாக மட்டும் பார்க்காமல் நம் உள்ளத்தில் நிகழும் நன்மைக்கும் - தீமைக்கும் எதிரான போராட்டமாகவும் பார்க்கலாம். சாத்தனின் போராட்டங்களை வென்று வெற்றி பெறுவோம். இவற்றிக்கு தேவையான இறையருளையும் சாத்தனை வெல்ல உறுதியான மனத்திடதையும் வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.

 

வாசகமுன்னுரை:


இஸ்ராயேல் மக்கள் தங்கள் முதற்கனிகளை இறைவனிடம் காணிக்கையாக எடுத்து வரும் போது, அவர்கள் செய்யவேண்டியவற்றையும், சொல்ல வேண்டியவற்றையும் இன்றைய முதல்வாசகம் குறித்துக் காட்டுகிறது. வேர்கள் கசப்பானாலும், கனிகள் இனிமையானவை. நம் கைகளில் பழக்கூடைகளை நாம் ஏந்தி நிற்க வேண்டுமெனில், நாம் மண்ணில் கசப்பான வேர்படர்ந்து நிற்கவேண்டியது அவசியம். இஸ்ரயேல் இனம் பட்ட கஷ்டத்தின், அடிமைத்தனத்தின் பலன்தான் இன்று அவர்கள் ருசிக்கும் கனிகள். ஆக, நம் கசப்பான வேர்களையும், நம் கஷ்டங்களையும் நினைத்து நாம் கலங்கத் தேவையில்லை. இவ்வாறு இறையருளைப் பெற்ற நிகழ்வுகளை எடுத்துரைக்கும் முதல் வாசகமான இணைச்சட்டம் நூல் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

முதல் வாசகத்தில் உள்ள நம்பிக்கை அறிக்கையைப் போலவே இன்னொரு நம்பிக்கை அறிக்கையை உரோமைத் திருச்சபைக்கு  வழங்குகிறார் பவுலடியார். இந்த நம்பிக்கை ஒற்றை வாக்கியம்தான்: 'இயேசு ஆண்டவர்.' முதல் ஏற்பாட்டு இறைவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவித்து, பாலும், தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்துச் சென்றார். இரண்டாம் ஏற்பாட்டு இறைவன் பாவம் என்னும் அடிமைத்தனம் விடுத்து, மக்களை புதிய வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். இயேசுவில் கடவுள் இன்னும் அதிகம் நெருங்கி வருகின்றார் மனுக்குலத்தோடு. இயேசுவின் வருகை மனிதர்நடுவில் உள்ள அனைத்து பிரிவுகளையும் அழித்துவிடுகிறது. இவற்றை உணர்த்தும்  திருத்தூதர் பவுலடியார் திருமடலில் பதிவுச் செய்த இறைவார்த்தைகளை நம்பிக்கையுடன்  செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 91: 1-2. 10-11. 12-13. 14-15

பல்லவி: துன்ப வேளையில் என்னோடு இருந்தருளும், ஆண்டவரே.


உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். -பல்லவி

தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். -பல்லவி

உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன் பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். -பல்லவி

அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்;அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்;அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்'. -பல்லவி

மன்றாட்டுகள்:


1.எங்களுக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாக இருப்பவரே! எம் இறைவா!  தவக்காலத்தை தொடங்கியுள்ள உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் என எல்லோரும் நீர் அளித்த அருட்சாதனங்களின் மேன்தைகளை உணர்ந்து, அதன் வழியாக உமது இறையரசை அடைய வேண்டிய மனமாற்றத்தையும், அதற்கான தவவாழ்க்கையை மேற்க்கொள்ள திறந்த மனதையும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்களை உமது உரிமைச் சொத்தாகத் தேர்ந்து கொண்ட இறைவா! எங்கள் குடும்பங்கள் தன்னலம் மறந்து உம்மைப் போல் அடுத்தவர்களின் வாழ்வு மலர  உளமாற உழைக்கவும், உமது நற்செயல்களை எங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வாழவும், மற்றவர்களையும் உமது இறையரசில் அழைத்து வர நற்சாட்சிகளாக மாறவும் வேண்டிய வரங்களை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உள்ளத்து உண்மையை விரும்பும் எம் இறைவா!  அரசியல் தலைவர்களின் விருப்பு வெறுப்புகளக்கு பலியாகி தங்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும், சொந்தங்களையும், சொத்துக்களையும் இழந்து அநாதையாகவும், அகதிகளாகவும் நிற்க்கும் அபலை மக்களுக்காக உம்மை வேண்டுகிறோம். அவர்கள் இழந்ததை மீண்டும் பெற்று அமைதியிலும், அன்பிலும், வளமையிலும், உடல்நலத்திலும் சிறப்புற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அருட்கொடைகளை வாரிவழங்கிடும் எம் இறைவா! இயற்கை என்னும் பெரும்கொடையை எங்களுக்கு கொடையாக, இலவசமாக  கொடுத்ததை, நாங்கள் சரியான முறையில் கையளும் திறமையின்றி, சுயநலவாதிகளின் தவறான வழிகாட்டுதலால் எல்லா இயற்கை செல்வங்களை இழந்து எங்களுக்கு நாங்களே இழைத்த தவறுகளுக்காக வருந்தும் இத்தருணத்தில் எங்களை மன்னித்து, எங்கள் வருங்கால தலைமுறையினருக்கு உமது இயற்கை கொடைகளை நல்லமுறையில் வழங்கிட வேண்டிய வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



No comments:

Post a Comment