Wednesday, October 12, 2016

பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு 16/10/2016

பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


விடுதலைப் பயணம் 17:8-13
2திமோத்தேயு 3:14-4:2
லூக்கா 18:1-8

முன்னுரை


திருவழிபாட்டின் பொதுக்காலம் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைமக்களே! உங்கள் அனைவரையும் இறைஇயேசுவின் அன்பில் வரவேற்கின்றோம். இன்றைய வார்த்தை வழிபாடு ‘இடைவிடாத செபம் இறையருளைப் பெற்றுத் தரும்’ என்ற சீரியக் கருத்தை நமக்கு வழங்குகின்றது.
விடுதலைப் பயணநூலில் மோசேயின் கரங்கள் உயர்ந்திருந்தபோது இஸ்ரயேல் மக்கள் வெற்றியைக் கண்டனர். இறைஇயேசு உவமைகளின் மூலம் நம்மைத் தொடர்ந்து செபிக்க அழைக்கின்றார்.

கைம்பெண் தன்னுடைய விடாமுயற்சியினால் நேர்மையற்ற நடுவரிடமிருந்து நல்ல தீர்ப்பைப் பெறுகிறார். இவ்வாறு நீதியுள்ள இரக்கமுள்ள கடவுள் தம்மிடம் இடைவிடாது மன்றாடுவோரின் மன்றாட்டை நிச்சயமாக் கேட்பார் என்பது உறுதி.
இயேசு தன் பணிவாழ்வு முழுவதும் தந்தையோடு செப உறவில் நிலைத்திருந்தார். காலையிலும் மாலையிலும், ஒவ்வொரு நிகழ்வைத் தொடங்கும் முன்பும் செபித்தார். எனவே தான் திருத்தூதர் பவுல் கூறுகிறார், இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் என்று.நமது கிறஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற ஆயுதங்களால் மட்டுமே வெற்றி அடையமுடியும் என்பதை உணர்த்துகின்றது. இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் இடைவிடாது செபிக்க, கடவுளிடம் நம்பிக்கையும், தன்னம்பிக்கையுடன் அவரை நாடவும் வேண்டிய வரங்களைப் பெற்றிட நம்பிக்கையுடன் பங்கு கொள்வோம்.

வாசகமுன்னுரை



முதல் வாசக முன்னுரை


விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியரோடு போர் தொடுக்கிறார்கள். அப்படிப் போர்தொடுக்கும்போது மோசேயின் கை உயர்ந்திருக்கும் போதேல்லாம் இஸ்ரயேல் மக்கள் வெற்றி பெற்றார்கள். மோசேயின் கைத்தளர்ந்தபோது ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமும் அவருடைய கையைத் தாங்கிப்பிடித்து, இஸ்ரேயல் மக்கள் எதிரிகளிடமிருந்து வெற்றிபெற உதவிபுரிகிறார்கள்.இங்கே அவர்களின் விடாமுயற்சி அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த விடாமுயற்சி எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை


தூய பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில், “அன்புக்குரியவரே! நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்” என்று வாசிக்கின்றோம். எதில் நிலைத்திருப்பது? என்று சிந்தித்துப் பார்க்கும்போது, நமது விடாமுயற்சியில் நிலைத்திருப்பது என்பதுதான் அதற்கான பதிலாக இருக்கின்றது. என்றைக்கு நாம் நமது விடாமுயற்சியில் நிலைத்து நிற்கின்றோமோ, அன்றைக்கு நாம் நினைத்த காரியத்தில் வெற்றியைப் பெறுவோம் என்பது உண்மையாக இருக்கின்றது. சில நேரங்களில் நமது முதல் முயற்சியிலேயே நாம் வெற்றியைப் பெற்று விடுவதில்லை. தொடர் உழைப்பினால், விடாமுயற்சியினால் தான் நாம் அந்த வெற்றியைப் பெற முடியும் என்ற உண்மையை உணர்த்தும் வாசகத்தைக் கருத்துடன் கவனித்து உள்ளத்தில் பதிவு செய்வோம்.

 

பதிலுரைப்பாடல்


திருப்பாடல்: 121: 1-2, 3-4, 5-6, 7-8.

விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரே எனக்கு உதவி. 
மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். பல்லவி
அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்: உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை: உறங்குவதும் இல்லை. பல்லவி

ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்: அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: அவரே உமக்கு நிழல் ஆவார்! பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது: இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. பல்லவி

ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்: அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். பல்லவி 



மன்றாட்டுகள்:


1. பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூடியவரே!எம் இறைவா! எம் திருஅவையை நடத்திவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், இடைவிடாத நம்பிக்கையில் உறுதியும் உம் பணிச் செய்திடவும் ஆற்றல் தருவது செபமே என்பதை உணர்ந்து இடைவிடாது செபிக்க வேண்டிய அருளைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. உலகின் கடை எல்லைவரை நற்செய்தியை அறிவிக்க அழைத்த எம் இறைவா! மறைபோதக ஞாயிறுவிழாவைக் கொண்டாடும் நாங்கள் உம் சீடர்கள் போல் நாங்களும் சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வரவும், எம் பங்களிப்பால் உமது பணியாளர்களைத் தாங்கிக் கொள்ளும் நல்மனதையும், எளியோருக்கு நல்ல சமாரியனாக மாறி உம்மை அவர்களில் காணும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. எம்மை உமது உரிமைச் சொத்தாய் ஏற்றுக் கொண்ட எம் இறைவா! உலகமெங்கும் எங்கும் அமைதி நிலவும் சூழலைத் தந்து, எல்லா இனத்தரும் உமது படைப்பின் நன்மைகளை உய்த்துணர்ந்து வாழ, உமது இரக்கம் எம் மீது பொழிந்தட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


4. இடைவிடாது செபிக்க அழைத்த எம் தந்தையே இறைவா! செபமே ஜெயம் என்பதை நாளும் உணர்ந்தவர்களாய் தொடர்ந்து சோர்வில்லாமல் செபிக்கவும், பரிந்துரைச் செபத்தால் எமக்கு அடுத்திருப்பவர்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுக்காகச் செபித்து அவர்களை ஆற்றுப்படுத்தும் உள்ளத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

                                           www.anbinmadal.org


No comments:

Post a Comment