Wednesday, November 22, 2017

பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு 26/11/2017


 திருவழிப்பாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு
கிறிஸ்து அரசர் பெருவிழா





*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


எசேக்கியேல் 34: 11-12,15-17

1 தெசலோனிக்கர் 15: 20-26,28
மத்தேயு 25: 31-46

 *முன்னுரை*


அன்புடையீர்,
மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அதன் விளைவாக, அம்மக்களின் மனம் எனும் அரியணையில் அமரும் இயேசு என்ற மன்னரைக் கொண்டாடவே இந்தக் கிறிஸ்து அரசர் திருநாள். இத்திருப்பலிப் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
இயேசுவும் ஓர் அரசர். அவர் நிறுவிய அரசுக்கு நிலபரப்புக் கிடையாது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, இதைப் பாதுகாக்கக் கோட்டை, கொத்தளங்கள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை, உயிர்பலி தேவையில்லை...எதுவுமே தேவையில்லை. ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு எதுவுமே தேவையில்லை.
இறைவன் ஒருவரே தேவை, வேறெதுவுமே தேவையில்லை, என்று சொல்லக்கூடிய மனங்கள் மட்டுமே இந்த அரசுக்குச் சொந்தமான நிலம். அத்தகைய மனங்களில் தந்தையை அரியணை ஏற்றுவதுதான் இயேசுவின் முக்கியப் பணி..
இந்த அரசருக்கு முன் நிற்க, முக்கியமாக அவரது வலதுப் பக்கம் நிற்க நாம் தகுதியுள்ளவர்களாய் இருக்கிறோமா? இந்த அரசனால் ஆசீர்பெறப் போகிறோமா? அல்லது விரட்டி அடிக்கப்படுவோமா?
தேவைகள் உள்ள மக்களில் இந்த அரசனின் உருவைக் கண்டு,உதவிக்கரம் நீட்டியிருந்தால், வலது பக்கம் நிற்கும் வாய்ப்பு பெறுவோம். கிறிஸ்து அரசர் வழங்கும் ஆசீரைப் பெற்றுக்கொள்ள இப்பெருவிழாவில் இறைவனை மனதுருக மன்றாடுவோம். .

வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


இன்றைய வாசகத்தில் இறைவன் தன்னே ஓர் ஆயனாக உருவகப்படுத்திக் கொண்டு, அந்த ஆயன் எவ்வாறு தன் மந்தையைப் பாதுகாத்துப் பேணிவளர்ப்பார்?, அவற்றை எவ்வாறு இளைப்பாறுவார்?ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக்கிடாய்க்கும், வெள்ளாட்டுக்கிடாய்களுக்கும் இடையேயும் எவ்வாறு நீதியை வழங்குவார்? என்பதை எசேக்கியேல் மூலம் எடுத்துரைக்கும் இன்றைய வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசு உயிருடன் எழுப்பப்பட்டது போல நாமும் எழுப்படுவோம் என்றும், ஆதாமினால் வந்த சாவு கிறிஸ்துவின் மூலம் அழிக்கப்பட்டது என்றும், இயேசு அனைத்துப் பகைவரையும் அடிபணிய வைத்து விட்டு கடவுளுக்கு அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார் என்பதை எடுத்துக்கூறும் பவுல் அடியாரின் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்
 

*பதிலுரைப்பாடல்*

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
திருப்பாடல் 23: 1-2. 3. 5. 6

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.  பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். பல்லவி
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். பல்லவி 

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! . அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1.அன்பு தந்தையே!  எம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் அவர் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அருள்கொடைகளை, செல்வங்களை, அனைத்து மாந்தர்க்கும் வேறுபாடுகள் இன்றி நிறைவாக வழங்கிட வேண்டுமென்று கிறிஸ்து அரசர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2 நற்செய்தியின் ஒளியே! எம் இறைவா! இன்று உலகில் நிகழும் சுயநலம், ஆணவம், அகந்தை, செருக்கு, வன்முறை இவைகள் ஒழிந்து, உம் இறையரசின் மதிப்பீடுகளை, தம் சொல்லாலும், செயல்களாலும், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் போதிப்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல் செயல்படுத்தும் கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று கிறிஸ்து அரசர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா! உம் நற்செய்தியை வாழ்வாக்கிய எம் புனிதை தெரேசாவைப் போன்று நாங்களும் ஏழைகளை வெறும் வேடிக்கைப் பொருளாக பார்த்திடாமல் அவர்களும் எம் சக உடன்பிறப்புக்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட நல் மனம் வேண்டுமென்று கிறிஸ்து அரசா வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நல்ஆயனே எம் இறைவா! எம் சிறுவர்கள்,  இளையோர் இவ்வுலக வாழ்வின் நவீன அறிவியல் வளர்ச்சியின் மாயைகளில் சிக்கி சிதறுண்டு தவிக்கும் இவ்வேளையில், உம் இறைவார்த்தை அவர்களுக்கு உறுதுணை என்பதை அறியும் வரத்தையும் இறைஅச்சத்தையும்  அருள வேண்டுமென்று கிறிஸ்து அரசர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
                 
                                                          www.anbinmadal.org

No comments:

Post a Comment