* (பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு 30.07.2017) *
*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*
*முன்னுரை*
அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு. புதையலையும், நல்முத்தயையும் தேடிக் கண்டுபிடிக்க
இறைஇயேசுவின் அழைப்பை ஏற்று நம் ஆலயம் வந்துள்ள இறைமக்களை இனிதே வரவேற்கிறோம்.
இன்றைய நற்செய்தியில் மூன்று உவமைகளைக் காண்கிறோம். புதையல், முத்து, மீன்கள் நிறைந்த வலை என்ற இம்மூன்று
உவமைகளையும் இறையரசுக்கு ஒப்புமைப்படுத்துகிறார் இயேசு. புதையல், முத்து, வலை என்ற மூன்று உருவகங்களும்
பல்வேறு சிந்தனைகளை மனதில் எழுப்புகின்றன. நன்னெறிகளுக்கு எதிராக, உத்தரவின்றி நுழையும் எதிர்மறை
எண்ணங்களையும், கருத்துக்களையும், இறையரசு என்ற சிப்பி, அழகிய முத்தாக மாற்றும் வலிமை
பெற்றது என்பதை, நாம்
முத்து உவமையிலிருந்து கற்றுக் கொள்கிறோம்
உள்ளார்ந்த உண்மை மதிப்பை உணர்ந்தால், அதற்காக எதையும் இழக்க நாம் துணிவு கொள்வோம்.
பெரும்பாலான நேரங்களில் நம்மிடம் புதைந்துள்ள, நம் குடும்பங்களில் புதைந்துள்ள மதிப்புக்களை உணராமல், நாம் வாழ்ந்து வருகிறோம். நம்
கண்முன்னே முத்துக்களும், புதையல்களும்
அடிக்கடித் தோன்றினாலும், அவற்றைக்
காணும் பக்குவம் இல்லாமல், நாம்
குழம்பி நிற்கிறோம்.
இதன் மூலம் நாம் அறிவது என்ன என்றால், கடவுளின் ஞானம் இறையரசிற்காக இந்தச்
செல்வத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று நமக்கு வழிகாட்டும். எது உண்மையான
மதிப்புள்ள பொருள், செயல்
என்று நம்மால் கண்டு பிடிக்க முடியும். அதன் மூலம் இறைவன் தரும் புதையலாம்
இறையரசைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
*வாசகமுன்னுரை*
*முதல் வாசக முன்னுரை*
தாவீதின் மகன் சாலமோன் கடவுளிடம் இஸ்ரயேல் மக்களுக்கு நல்லாட்சி செய்ய நல்ல ஞானத்தை மட்டுமே தனக்கு வரமாகக் கேட்டார். கடவுளும் அவர் கேட்டதை உடனே அருளியது, மட்டுமல்லாமல் இவ்வுலக்கைச் சார்ந்த எதையும் கேட்கவில்லை என்பதால் இனி அவரைப்போல எவரும் இருக்கவே முடியாது ஆசிகூறினார். உண்மையான ஞானம் இறைவனைப் புரியவும், அறிந்துக் கொள்ளவும் செய்கிறது. எது தேவை, எது தேவையில்லை என்று தெளிவாக்குகிறது. எதைத் தேட வேண்டும், எதை விலக்க வேண்டும் என்ற அறிவுறுத்துகின்ற இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
*இரண்டாம் வாசக முன்னுரை*
மனிதன் எவ்வளவு தான் பொருள் கொண்டிருந்தாலும் விண்ணரசில்
செல்வத்தைச் சேர்த்து வைக்க மறந்து விடக்கூடாது. கடவுளின் அன்புக்கு உரியவராகும்
போது ஆவியானவரின் ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்கின்றது. தான் அழைத்தவரைத் தனக்கு
ஏற்புடையவராகித் தம் மாட்சிமையில் பங்கு கொள்ளச் செய்வார் என்பதைப் பவுலடியார்
இன்றைய இரண்டாம் வாசகத்தின் மூலம் தெளிவுப்படுத்துகின்றார். இவ்வாசகத்திற்குக்
கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக்
கொண்டுள்ளேன்!
திபா 119: 57,72. 76-77. 127-128. 129-130
திபா 119: 57,72. 76-77. 127-128. 129-130
ஆண்டவரே!
நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன். நீர் திருவாய்
மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான
பொன், வெள்ளிக்
காசுகளை விட எனக்கு மேலானது.
பல்லவி
எனக்கு
ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி
அளித்தீர் அன்றோ! நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். பல்லவி
பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். உம்
நியமங்களை எல்லாம்
நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன்;
பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். பல்லவி
உம் ஒழுங்குமுறைகள்
வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு
நுண்ணறிவு ஊட்டுகிறது.
*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் அல்லேலூயா!
*மன்றாட்டுகள்*
1. இறையரசு எனும் புதையலைத் தந்த எம் இறைவா! உம் திருஅவையை
வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும், நல்லாட்சி செய்யத் தேவையான
ஞானத்தைக் கொடுத்து, எம்மை
அரிய நல்முத்தாம் இறையரசில் கொண்டு சேர்க்க தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று
இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
2. அமைதியின் இறைவா! இவ்வுலகில் அமைதி ஆட்சி செய்யவேண்டுமெனில், ஆட்சியில் இருப்போர், அமைதி பெறவேண்டும். அமைதியின் சக்தியை உணரும் அறிவுத்திறன்
பெறவேண்டும்.. மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த
உள்ளத்தைத் தந்தருளும். எங்கள் தலைவர்கள் உண்மையான ஞானம் பெறவேண்டும் என்று மனமுருகி இறைவா!
உம்மை மன்றாடுகின்றோம்
.
3. வானாளாவிய இரக்கம் கொண்ட எம்
இறைவா! எம் கிறிஸ்துவ வாழ்வு, மிகுதியான செல்வத்தைக் கொண்டுள்ளது, எம்மிடம் ஒன்றுக்கும் உதவாத பொருள்களை அகற்றி
விட்டு, விலை மதிப்புள்ள பொருளளாகிய இறையரசிற்குத் தயார் படுத்தவும், குடும்பத்தினர் அனைவரும் உண்மையான மதிப்பை
அறிந்திடவும் ஞானத்தையும், இறைப்பற்றையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
4. . விசுவசிப்போருக்கு
வாழ்வாகிய எம் இறைவா! பூமியில் நிலவும் மிக உயர்ந்த அழுத்தம், மிக அதிகமான வெப்பநிலை ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வைரமாக மாறிடும் நிலக்கரிபோல் எம் இளையோர்கள்
இவ்வுலகம் தரும் அழுத்ததாலும், வெப்பத்தாலும் திட்டப்பட்டு உம் மணிமுடியில் மின்னிடும்
வைரமாய்த் திகழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment