Thursday, June 21, 2018

திருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா.

*திருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா.**இன்றைய வாசகங்கள்*


*திருப்பலி முன்னுரை:*


திருஅவையின் பாரம்பரியத்தில்  மூவருக்கு மட்டும் மண்ணுலகில் அவர்கள் பிறந்தநாட்கள் கொண்டாடப்படுகின்றன. அவைகள் 1.இயேசுவின் பிறந்தநாள், 2.அன்னை மரியாவின் பிறந்தநாள், 3. திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள்.

இன்று திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவான் ஒரு வைரம்... பாலை நிலத்தில் தவத்திலும், துன்பத்திலும் தன்னைத்தானே பட்டைத் தீட்டிக்கொண்ட ஒரு வைரம். இயேசு என்ற ஒளியில் இந்த வைரம் பல கோணங்களில், பல வண்ணங்களில் மின்னியது. "மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை" என்று இயேசுவால் புகழப்பட்ட வைரம் இவர். இறுதியாக இரத்தம் சிந்திச் சான்று பகர்ந்தவர். இவ்வாறு மீட்பு வரலாற்றில் அவர் தனியிடமும் தனித்துவமும் பெற்றதே இன்றைய விழாவிற்கான சிறப்புக் காரணமாகும்.

வயதுமுதிர்ந்த காலத்தில், செக்கரியா, எலிசபெத்து இருவருக்கும் இறைவனின் கருணையால் குழந்தை பிறந்ததால், இக்குழந்தைக்கு 'யோவான்' என்று பெயரிடும்படி தலைமைத் தூதர் கபிரியேல் பணித்திருந்தார். இறைவன் இக்குழந்தைக்குத் தந்த 'யோவான்' என்ற பெயருக்கு 'யாவே அருள் வழங்கினார்' என்று பொருள். 'யோவான்', தன் பெயருக்கேற்ப வாழ்ந்தார். அவர் மட்டும் அருளால் நிறையவில்லை. அவர் பணிகளால், நாம் அனைவரும் அருளுக்கு மேல் அருள் பெற்றுள்ளோம்.

இறையருளை மக்களுக்கு அள்ளித்தந்தத் திருமுழுக்கு யோவான், நமக்கும் இறைவனிடமிருந்து அருள்வளங்களைப் பெற்றுத்தர இத்திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.


*வாசகமுன்னுரை:*


*முதல் வாசக முன்னுரை*:

கடவுள் இறைவாக்கினர்களைத் தனிப்பட்ட முறையில் சிறப்பு அருளால் தேர்ந்துகொள்கிறார். இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, "கருப்பையில் இருக்கும் போதே ஆண்டவர் என்னை அழைத்தார். தாயின் வயிற்றில் உருவாகும் போதே என்னைப் பெயர்ச் சொல்லி அழைத்தார்" என்கிறார். உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கும் ஒளியாகவும் ஏற்படுத்துவேன் என்று முன்பாகவே அறிவித்தது இன்றைய விழா நாயகன் திருமுழுக்கு யோவானைத் தான் என்பதை நமக்கும் விளக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் நம்மையும் கடவுள் எவ்வாறு தேர்ந்தெடுத்து அவர் தம் திருப்பணிக்கு அழைத்துள்ளார் என்பதைக் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவின் வருகைக்கு முன்பே இன்றைய விழா நாயகன் திருமுழுக்கு யோவான் சமுதாய அவலங்களையும், அநீதிகளையும் கடிந்து எதிர்குரல் எழுப்புகிறார், நற்செய்தியை மக்கள் அனைவருக்கும் பறைசாற்றினார். கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத் தான் அனுப்பப்பட்டுள்ளது என்று நம்மை மீட்பின் செய்தியை அறிவிக்க அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

*பதிலுரைப்பாடல்* :

பல்லவி*: வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்:
பதிலுரைப்பாடல்: திபா. 139: 1-3, 13-14, 15

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்: என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். *பல்லவி*

நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்: என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. *பல்லவி*

ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் என க்கு உருதந்தவர் நீரே! அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்த தால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்: உம் செயல்கள் வியக்கத்தக்கவை என் பதை என் மனம் முற்றிலும் அறியும். *பல்லவி*

என் எலும்பு உமக்கு மறைவானதன்று: மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர்.* பல்லவி*

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! *குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் என ப்படுவாய்: ஏனெனில் ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்.* அல்லேலூயா *நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:*


1.அன்புத் தந்தையே! எம் இறைவா! இன்றைய சூழலில் திருஅவை எதிர்கொள்ளும் அனைத்துச் சவால்களைக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ற அன்பின் பாதையில் வழிநடந்துச் செல்லவும், எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர்கள், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் மீட்பைப் பறைசாற்றிடவும், சமுதாய அவலங்களையும், அநீதிகளையும் களைந்திடவும் தேவையான தூயஆவியின் ஆற்றலையும் இறைஞானத்தையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2.எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம் இறைவா! எங்கள் பங்கை, எம் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். எங்கள் அனைவரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும், இயேசுவின் சீடராய் மாறிட அடிப்படைத் தேவையான அர்ப்பணிப்பு வாழ்வு, அதன் மூலம் உம் அன்பின் ஒளியாய் சுடர் விட்டுப் பணியாளராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உறவின் ஊற்றாகிய இறைவா! இன்றைய சூழலில் கிறிஸ்துவத்திற்கு எதிராக எழுப்பப்படும் அநீதிகள், வன்முறைகள், கொலைகள் , தீவிரவாத செயல்கள் இவை அனைத்திலிருந்தும் விடுதலைப் பெற்று, உமது கருணைமிகு இரக்கத்தால் அனைவரும் ஒற்றுமையோடும், நீதி, நேர்மையோடும், ஒருவர் ஒருவரைப் புரிந்து கொண்டு மனித மாண்புகள் செழிக்க உமது ஆற்றல் மிகு அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. காலங்களைக் கடந்த எம் இறைவா! எம் நாட்டில் உள்ள அனைத்து இளையோர்கள் தங்கள் இளமைக் காலங்களில் உம் தூய ஆவியின் துணையை நாடி ஞானத்தைப் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் விசுவாச வாழ்வில் திருமுழுக்கு யோவானைப் போல் சாட்சிகளாகத் திகழத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5 அன்புத் தந்தையே எம் இறைவா! உலகில் ஏழைப் பணக்காரன் என்ற வேறுபாடுகளைக் களைந்துச் செல்வம் படைத்தவர்கள் தங்கள் செல்வத்தைக் கொண்டு ஏழைகளின் வாழ்வு வளம் பெற உதவிப் புரியவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் அனைத்து மாந்தருக்கும் சாதி, மத வேறுபாடுகள் களைந்துத் தன்னலமற்றவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


           www.anbinmadala.org

No comments:

Post a Comment