Sunday, September 27, 2026

பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு 04.10.2026

 பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு 04.10.2026

The Prophetic Parable of the Vine-Growers

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 5: 1-7
பிலிப்பியர் 4: 6-9
மத்தேயு 21: 33-43

திருப்பலி முன்னுரை

பாசத்திற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 27-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு "திராட்சைத் தோட்டம்" என்ற உருவகத்தின் வழியாக இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவைச் சிந்தித்துப் பார்க்க அழைக்கிறது. முதல் வாசகத்தில், அன்புக்குரியவர் தன் திராட்சைத் தோட்டத்தைப் பண்படுத்திப் பாதுகாத்தப் பிறகும், அது கசப்பான கனிகளையே தந்தது என்று ஏசாயா இறைவாக்கினர் வருத்தத்தோடு கூறுகிறார். நற்செய்தியில், திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் அனுப்பிய பணியாளர்களையும், இறுதியில் அவரது மகனையும் குத்தகைக்காரர்கள் கொன்றுவிட்ட கொடுமையைக் காண்கிறோம்.
நாமும் இறைவனால் அன்புடனும் அக்கறையுடனும் வளர்க்கப்படும் திராட்சைத் தோட்டம். நம்மிடமிருந்து இறைவன் நீதியையும் நேர்மையையும் கனிகளாக எதிர்பார்க்கிறார். "எதைப் பற்றியும் கவலைப்படாமல் நன்றியுடன் செபியுங்கள்" என்று இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடியார் நமக்கு ஊக்கமளிக்கிறார். நாம் இறைவனுக்குக் கசப்பான கனிகளைத் தருகிறோமா அல்லது அவர் விரும்பும் நற்கனிகளைத் தருகிறோமா? என ஆராய்ந்து பார்த்து, உரிய காலத்தில் கனிகளைத் தரும் நல் நிலமாக மாற வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் இஸ்ரயேல் மக்களைத் தமக்குரிய திராட்சைத் தோட்டமாக அன்பு கூர்ந்து வளர்த்தார். அவர் அதனிடமிருந்து நீதியையும் நேர்மையையும் எதிர்பார்த்தார். ஆனால் அந்தத் தோட்டம் அநீதியையும் இரத்தக் கூச்சலையுமே கனிகளாகத் தந்தது. இறைவனின் அன்புக்குப் பதில் அன்பு செய்யத் தவறிய மக்களின் நிலையை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே.
பதிலுரைப்பாடல். திபா. 25:4-5, 6-7, 8-9
1. எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர்அதன் கொடிகள் கடல்வரையும் அதன் தளிர்கள் பேராறுவரையும் பரவின.; பல்லவி
 

பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச்செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே! காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன.பல்லவி

படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

புனித பவுல் அடியார் பிலிப்பியர்களுக்கு வழங்கும் அறிவுரை, அமைதியான வாழ்விற்கான திறவுகோலாகும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் நன்றியோடு செபிக்குமாறும், தூய்மையானவை மற்றும் புகழுக்குரியவை எவையோ அவற்றையே சிந்தித்து வாழுமாறும் அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். . அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்  மன்றாட்டுகள் 

1. நாங்கள் கனி தரவும், நாங்கள் தருகிற கனி நிலைத்திருக்கவும் எங்களை ஏற்படுத்திய இறைவா, தாயாம் திருஅவையும், எங்களை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர்கள், அருள் பணியாளர்கள் துறவியர், இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும், நிறைந்த கனி தந்து உம்மை மகிழ்விக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்” என்கிற பவுலடியாரின் ஆசி இந்த அகிலத்திற்கு அமைதியையும் நல்வாழ்வையும் தரவேண்டுமென்றும், ஆட்சியாளர்களும் மக்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டு, புனித பிரான்சிஸ் அசிசியார் வேண்டியது போல, அமைதியின் கருவிகளாய் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆண்டவரின் திராட்சை தோட்டமான இஸ்ராயேல் இறைவனுக்கு ஏமாற்றம் தந்தது போல் அல்லாமல், இறைமக்களாகிய நாங்கள், எங்கள் சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றால் இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழவும், எங்கள் குழந்தைகளையும், இளையோரையும் நற்கனி தரும் மனிதர்களாக உருவாக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பல்வேறு சோதனைகளிலும், எண்ணற்ற இடர்களிலும் சிக்குண்டு தவிப்போர் அனைவரும், கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதையுணர்ந்து, நன்றியோடு கூடிய இறைவேண்டல் மற்றும் நம்பிக்கை நிறைந்த மன்றாட்டு மூலமாகக் கடவுளிடம் விண்ணப்பங்களைத் தெரிவித்து, மன அமைதி மற்றும் உடல், உள்ள, ஆன்ம பாதுகாப்பு பெற்று வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்
.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்கு உரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்தி, மேன்மையான வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, September 21, 2026

பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு 27.09.2026

பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு 27.09.2026


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசேக்கியேல் 18: 25-28
பிலிப்பியர் 2 :1-11
மத்தேயு 21: 28-32

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 26-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு "மனமாற்றம்" மற்றும் "செயல்வடிவம் பெறும் விசுவாசம்" குறித்து நமக்கு அறிவுறுத்துகிறது. நற்செய்தியில் வரும் இரண்டு மகன்களின் உவமை, நாம் கடவுளுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளைவிட, நமது செயல்களே முக்கியம் என்பதை உணர்த்துகிறது. "போகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போகாத மகனைப் போல நாம் வெறும் உதட்டளவிலான விசுவாசம் கொண்டிருக்கிறோமா? அல்லது முதலில் மறுத்தாலும் பின்னர் மனம் மாறித் தந்தையின் விருப்பத்தைச் செய்த மகனைப் போல இருக்கிறோமா? எனச் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
"ஆண்டவருடைய வழி நேர்மையற்றது" என்று முணுமுணுக்கும் மக்களுக்கு, இறைவனின் நீதி எத்தகையது என்பதை எசேக்கியேல் இறைவாக்கினர் முதல் வாசகத்தில் தெளிவுபடுத்துகிறார். "கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே மனநிலையை நீங்களும் கொண்டிருங்கள்" என்று புனித பவுல் இரண்டாம் வாசகத்தில் நமக்கு அறைகூவல் விடுக்கிறார். நமது தற்பெருமையைக் களைந்து, தாழ்மையோடும் கீழ்ப்படிதலோடும் இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் உழைக்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை 

இறைவனுடைய நீதி தவறானது என்று கருதிய இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் பதில் அளிக்கிறார். ஒரு நீதிமான் நீதியை விட்டு விலகிப் பாவம் செய்தால் அவர் சாவார்; ஆனால் ஒரு தீயவன் தன் தீய வழியை விட்டு மனம் மாறி நீதியுடன் நடந்தால் அவர் வாழ்வார். நமது கடந்த காலத் தவறுகளைவிட, இன்றைய மனமாற்றமே வாழ்வைத் தீர்மானிக்கிறது என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

புனித பவுல் அடியார் பிலிப்பியர்களுக்கு எழுதிய இக்கடிதம், கிறிஸ்துவின் தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் மிக அழகாக எடுத்துரைக்கிறது. கடவுள் வடிவில் இருந்த கிறிஸ்து, தம்மையே வெறுமையாக்கி அடிமையின் உருவை ஏற்றுச் சிலுவைச் சாவுவரை கீழ்ப்படிந்திருந்தார். நாமும் அதே ஒருமனப்பாட்டோடும் தாழ்மையோடும் வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் 

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும், ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும், கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து இறையரசுக்கு சான்றுபகர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. இந்த உலகிலும், எங்கள் நாட்டிலும் நிகழ்கிற வன்செயல்கள், அநீதிகள், போர்கள் இயற்கை சீற்றங்கள், பேரழிவுகள் ஆகியவற்றைக் கண்டு ‘கடவுளின் வழி செம்மையானதாக இல்லை’ என்று புலம்புகிற நாங்கள் ‘எங்கள் வழிகள் தான் நேர்மையற்றவை! என்று உணரவும், எமையாளும் தலைவர்களும், மக்களாகிய நாங்களும், நீதியையும் நேர்மையையும் கடைப்பிடிப்பதன் மூலம், அமைதி நிறை நல்வாழ்வை பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் பங்குகளிலும், அன்பியங்களிலும், நாங்கள்   கட்சி மனப்பான்மைக்கும், வீண் பெருமைக்கும் இடம் தராமல், மனத் தாழ்மையோடு மற்றவர்களை எங்களிலும் உயர்ந்தவராகக் கருதவும், நாங்கள் யாவரும் எங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொண்டு, அன்புநிறை சமூகத்தையும், பண்பான குடும்பங்களையும் உருவாக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. பொல்லாரும் வாழ வேண்டும், யாருமே அழிவுறக் கூடாது என்ற இறைவிருப்பதை உணர்ந்தவர்களாய், நாங்கள் அனைவரும், எங்கள் தீய வழிகளிலிருந்து விலகி, ஒருவர் ஒருவரை மன்னித்தும், தவறு செய்கிறபோது மன்னிப்புக் கேட்டும், இறைவனிடமும், மற்றவர்களிடமும் ஒப்புரவுடன் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையையே கொண்டிருக்கவும், இறைத்தந்தையின் விருப்பத்திற்கு தாழ்ச்சியுடன் பணிந்திருக்கவும், நற்செய்தி உவமையில் வருகிற இளைய மகன்போல வாய்ச்சொல் வீரராக அல்லாமல், மூத்த மகன்போலச் செயல் வீரராகத் திகழ்ந்து, எங்கள் கிறிஸ்தவ, சமூக, குடும்பக் கடமைகள் அனைத்தையும் முழுமனதோடு நிறைவேற்ற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, September 14, 2026

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு 20.09.2026

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு  20.09.2026

PARABLE OF THE WORKERS IN THE VINEYARD | A CHRISTIAN PILGRIMAGE

இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-

ஏசாயா 55: 6-9
பிலிப்பியர் 1: 20c-24, 27a
மத்தேயு 20: 1-16

திருப்பலி முன்னுரை:- 

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 25-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில் "திராட்சைத் தோட்ட வேலையாட்கள்" உவமையின் வழியாக இறைவனின் கணக்கு மனிதக் கணக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை இயேசு நமக்கு உணர்த்துகிறார். முதலில் வந்தவர்களுக்கும், இறுதியில் வந்தவர்களுக்கும் ஒரே கூலியைக் கொடுக்கும் தோட்ட உரிமையாளர், அநீதி இழைப்பவர் அல்ல; மாறாக அவர் தாராள குணமும் இரக்கமும் கொண்டவர்.
"என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகள் அல்ல" என்று ஏசாயா இறைவாக்கினர் முதல் வாசகத்தில் கூறுகிறார். "வாழ்வது கிறிஸ்துவே" என்ற உயர் இலட்சியத்தைப் புனித பவுல் இரண்டாம் வாசகத்தில் நமக்கு முன்வைக்கிறார். நாம் எவ்வளவு காலம் உழைக்கிறோம் என்பதை விட, எவ்வளவு ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் இறைவனோடு இணைந்து வாழ்கிறோம் என்பதே முக்கியம். பொறாமை மற்றும் குறுகிய மனப்பான்மையைக் களைந்துவிட்டு, இறைவனின் தாராளமான அருளைப் போற்றிப் புகழ வரம்கேட்டு, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசக முன்னுரைகள்:- 

முதல் வாசக முன்னுரை :-

ஆண்டவரைக் காணக்கூடிய காலத்தில் அவரைத் தேடுங்கள் என்று ஏசாயா இறைவாக்கினர் அழைக்கிறார். தீயவர்கள் தங்கள் வழியை விட்டுத் திரும்பி வந்தால், இறைவன் அவர்களுக்கு நிறைவாக மன்னிப்பு வழங்குவார். இறைவனின் எண்ணங்களும் வழிகளும் மனித அறிவுக்கு எட்டாத உயரத்தில் இருப்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்:-

பல்லவி: தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
திபா 145: 2-3. 8-9. 17-18
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. பல்லவி
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :-

வாழ்ந்தாலும் சரி, செத்தாலும் சரி, கிறிஸ்து என் வாழ்வில் மாட்சிபெற வேண்டும் என்பதே என் விருப்பம் என்று புனித பவுல் அடியார் கூறுகிறார். "வாழ்வது கிறிஸ்துவே, சாவு எனக்கு ஆதாயமே" என்ற உன்னத விசுவாச அறிக்கையையும், கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தகுந்தபடி வாழுமாறு விடுக்கப்படும் அழைப்பையும் இவ்வாசகத்தில் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும்…அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:- 

1. “வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன்” எனச் சூளுரைத்த பவுலடியாரைப் போல, தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும் கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்து, பயனுள்ள பணி செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. போர் பதட்டகங்களாலும், வன்முறைச் சூழல்களாலும், அமைதியிழந்து தவிக்கிற இவ்வுலகில், “கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக” என்கிற ஏசாயாவின் இறைவாக்கு நிறைவேறவும், இவ்வுலகை ஆள்பவர்களும், எங்கள் நாடு மற்றும் மாநிலத்தின் தலைவர்களும், மக்களின் நலன்களைக் காப்பதிலும், அமைதியான நல்வாழ்வை உறுதிப்படுத்துவதிலும் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன” என்கிற இறைவாக்கின் பொருளுணர்ந்து, எம் இளையோரும், குழந்தைகளும், மனம் போன போக்கிலும், கவர்ச்சிக்குப்பின்னும் செல்லாமல், ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுகிறவர்களாய் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்” என்று தியானப்பாடலின் பதிலுரையில் பகர்ந்த நாங்கள், எங்களில் வலுவற்றோருக்காகவும், நலிவுற்றோருக்காகவும், நோயுற்றோருக்காகவும், தனிமைப் பட்டோருக்காகவும், எதிர்காலத்திற்கான வழிதெரியாது தவிப்போருக்காகவும் உம்மை நோக்கி மன்றாடுகிறோம். அவர்கள்மீது நீர் தாமே இரக்கம் காட்டி, ஈடேற்ற    வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், நற்செய்தி உவமையில் தென்படுகிற அநீதிகுறித்து கேள்வி எழுப்புவதில் காட்டுகிற ஆர்வத்தை, நாங்கள் வாழுகிற இன்றைய சமூகத்தில் நிலவுகிற அநீதிகளைக் களைய எங்களால் இயன்றதைத் துணிவுடன் செய்வதில் காட்டவும், எங்கள் தனிப்பட்ட வாழ்வில், நீதியுள்ளவர்களாகவும் பரிவுள்ளவர்களாகவும் விளங்கி, கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள, அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
   

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, September 6, 2026

பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறு 13.09.2023


பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறு 13.09.2023


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-

சீராக்   27:30-28:7
உரோமையர் 14:7-9
மத்தேயு 18: 21-35

திருப்பலி முன்னுரை:-

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 24-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு "மன்னிப்பு" என்ற உன்னதமான நற்பண்பைப் பற்றிச் சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. "ஆண்டவரே, என் சகோதரர் எனக்கு எதிராகப் பாவம் செய்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறையா?" என்று கேட்ட பேதுருவிடம், இயேசு "எழுபது முறை ஏழு முறை" என்று பதிலளித்து, மன்னிப்பிற்கு எல்லை கிடையாது என்பதை உணர்த்துகிறார்.
சீராக் நூலிலிருந்து வாசிக்கப்படும் முதல் வாசகம், ஒருவன் தன் அடுத்திருப்பவர் மீது சீற்றம் கொண்டால், அவனால் எப்படிக் கடவுளிடம் மன்னிப்பை எதிர்பார்க்க முடியும்? எனக் கேள்வி எழுப்புகிறது. நாம் வாழ்ந்தாலும் செத்தாலும் ஆண்டவருக்கே உரியவர்கள் என இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடியார் விளக்குகிறார். இறைவனிடம் நாம் பெற்றுக்கொண்ட மன்னிப்பு மிகப்பெரியது; அந்த மன்னிப்பை நாமும் பிறருக்குக் கொடுக்கும்போதுதான் இறைவனின் பிள்ளைகளாகிறோம். நம் இதயத்தில் இருக்கும் கசப்புகளையும், பழிவாங்கும் எண்ணங்களையும் களைந்துவிட்டு, ஒருவரையொருவர் மன்னிக்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:-

சினம் மற்றும் சீற்றம் ஆகியவற்றை இறைவன் வெறுக்கிறார். ஒருவன் தன் அடுத்திருப்பவரிடம் கருணை காட்டாமல், கடவுளிடம் மட்டும் இரக்கத்தை எதிர்பார்ப்பது வீண் செயல். நாம் மண்ணுக்குத் திரும்புபவர்கள் என்பதை நினைவில் கொண்டு, அடுத்திருப்பவர் செய்த குற்றங்களை மன்னிக்குமாறு அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.


பதிலுரைப்பாடல்:-

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
திருப்பாடல் 103: 1-2, 3-4, 9-10, 11-12

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. மேற்கினின்று கிழக்கு எத்துணைத்; தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:- 

நம்மில் எவரும் தனக்கென வாழ்வதில்லை; தனக்கெனச் சாவதுமில்லை. நாம் வாழ்ந்தாலும் செத்தாலும் ஆண்டவருக்கே உரியவர்கள். வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் ஆண்டவராக இருக்கவே கிறிஸ்து இறந்து உயிர்த்தார் என்பதை விளக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-

1.    திருச்சபைக்கும் மன்னிப்பின் பணிக்கும்: எம்திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள் மற்றும் குருக்கள் அனைவரும், மன்னிப்பு மற்றும் ஒப்புரவுப் பணியின் வழியாகப் பிளவுபட்டிருக்கும் உலகை இறைவனிடம் சேர்த்து வைக்கும் கருவிகளாகத் திகழ இறைவா உம்மை மன்றாடுகிறோம். பதில்: இரக்கமுள்ள ஆண்டவரே, எம்மன்றாட்டைக் கேட்டருளும்.

2.    பரிபூரண மன்னிப்பைப் பெற்றிட: மற்றவர்கள் செய்த தவறுகளைச் சாகுமட்டும் இதயத்தில் சுமக்காமல், "எழுபது முறை ஏழு முறை" மன்னித்த இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, எம்பங்கு மக்கள் பிறரை முழுமனதோடு மன்னிக்கத் தேவையான அருளைத் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.    குடும்ப உறவுகளுக்காக: குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையிலும், பிள்ளைகள் பெற்றோரிடையிலும் ஏற்படும் மனக்கசப்புகள் நீங்கவும், ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு விட்டுக் கொடுத்து வாழும் நல்லிணக்கத்தை வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.    இறந்தோருக்கும் வாழ்வோருக்கும் ஆண்டவரே: இரண்டாம் வாசகத்தில் சொன்னது போல, நாம் வாழ்ந்தாலும் செத்தாலும் உமக்கே உரியவர்கள் என்பதை உணர்ந்து, எம்மக்கள் தங்கள் வாழ்வை உமது மகிமைக்காக அர்ப்பணிக்க இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.    பழிவாங்கும் எண்ணம் மறைய: இன்றையச் சமூகத்தில் நிலவும் வன்முறைகள், பழிவாங்கும் கலாச்சாரம் மற்றும் கசப்புணர்வுகள் மறைந்து, மக்கள் ஒருவரையொருவர் மன்னித்துச் சகோதரத்துவத்துடன் வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, September 2, 2026

பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு 06-09-2026

 பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு 06-09-2026

இன்றைய வாசகங்கள்

எசேக்கியேல் 33: 7-9
உரோமையர் 13: 8-10
மத் 18: 15-20

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 23-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு "சகோதரத் திருத்தம்"  மற்றும் "அன்பு" ஆகிய இரண்டு முக்கியக் கருத்துகளை நமக்கு முன்வைக்கிறது. ஒரு சகோதரர் தவறு செய்யும்போது, அவரை ஒதுக்கிவிடாமல் அன்போடு திருத்தி நல்வழிப்படுத்த வேண்டியது நமது கடமை என்பதை முதல் வாசகமும் நற்செய்தியும் வலியுறுத்துகின்றன. மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய ஒரே கடன் "அன்பு செலுத்துவது" மட்டுமேயென இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடியார் விளக்குகிறார்.
"உங்களில் இருவர் மண்ணுலகில் ஒருமனப்பட்டு எதைக் கேட்டாலும் என் தந்தை அதைத் தருவார்" என்ற இயேசுவின் வாக்குறுதி, திருச்சபையின் ஒற்றுமைக்குத் தரும் பெரிய அங்கீகாரம். நாம் மற்றவர்களைக் தீர்ப்பிடுபவர்களாக இல்லாமல், அவர்களை அன்பு செய்து மீட்பின் பாதைக்கு அழைத்துச் செல்பவர்களாக மாற வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை 

ஆண்டவர் எசேக்கியேலை இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு 'காவற்காரராக' நியமிக்கிறார். தீயவர்கள் தங்கள் தீய வழியிலிருந்து விலகி வாழ எச்சரிக்கை செய்ய வேண்டியது ஒரு இறைப்பணியாளரின் கடமை. அந்த எச்சரிக்கையைத் தரத் தவறினால் அந்தக் குற்றத்திற்கு நாமே பொறுப்பேற்க நேரிடும் என்ற எச்சரிக்கையைத் தரும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
திபா 95: 1-2. 6-7. 8-9
வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.  பல்லவி

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!  பல்லவி

அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.  பல்லவி      

இரண்டாம் வாசக முன்னுரை 

"உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" என்ற கட்டளைக்குள் மற்ற அனைத்துக் கட்டளைகளும் அடங்கியுள்ளன. அன்பு பிறருக்குத் தீமை செய்யாது; எனவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு என்பதைப் பறைசாற்றும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாகத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார்.அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் 

 1. “என் பெயரின் பொருட்டு ஒன்றாகக் கூடியிருக்கின்றவர்களிடையே நான் இருக்கிறேன்” என்றுரைத்த இறைவா, உம் திருப்பெயரின் பொருட்டு ஒன்றாகக் கூடியிருக்கும் திருஅவை மீதும், எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், இறைமக்கள் ஆகிய அனைவர் மீதும், உமது அருளாசியைப் பொழிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உலகாளும் தலைவர்களும், எமை ஆள்பவர்களும் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாமல், அமைதியை விரும்புகிறவர்களாகவும், வளர்ச்சிக்கு வித்திடுபவர்களாகவும் விளங்கிட வேண்டுமென்றும், எங்கள் தாய்த் திருநாடும், தமிழகமும், எல்லா வளமும் பெற்று முன்னேற்றப் பாதையில் பயணிக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பிறரை நல்வழிப்படுத்துதலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிற இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களுக்குச் செவிமடுத்த நாங்கள், ஆசிரியப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்காகவும் ஜெபிக்கின்றோம்.  தம்மிடம் ஒப்படைக்கப் பட்டவர்களை, தம் சொல்லலும், செயலாலும், கற்பித்தலாலும், முன்மாதிரியினாலும் வழிநடத்துகிற ஆற்றலை அவர்கள் பெற்றிட வேண்டுமென்றும், மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற மந்திரத்தின்படி வாழுகிற நல்லொழுக்கம் உள்ளவர்களாய் நாங்கள் விளங்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘அன்பே திருச்சட்டத்தின் நிறைவு’ என்பதை உணர்ந்து, எங்கள் குடும்பங்களில் ஏற்படுகிற பிணக்குகள் அனைத்தையும், புரிதல் மற்றும் விட்டுக்கொடுத்தல் நிறைந்த பேச்சுவார்த்தையினாலும், மன்னித்து மறத்தல் என்கிற நற்பண்பினாலும் தீர்த்து, உறவுகளைப் பேணுகிறப் பண்பான குடும்பங்களாக மாற்றிட, வரமருள   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், யாருக்கும் எதிலும் கடன்படாதிருக்கவும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நாங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் கொண்டு வாழவும், அனைத்து கட்டளைகளும், அடுத்திருப்பவர் மீது அன்பு கூர்வதில் அடங்கியுள்ளன என்பதை உணர்ந்து, மனமொத்து சிந்திக்கவும், ஜெபிக்கவும், வாழவும் வரம்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, August 23, 2026

பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு 30.08.2026

  பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு 30.08.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எரேமியா 20: 7-9
உரோமையர் 12:1-2
மத்தேயு 16:21-27

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 22-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
சென்ற வாரம் இயேசுவை "மெசியா" என்று அறிக்கையிட்ட பேதுரு, இன்று இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஏற்க மறுக்கிறார். மானிடச் சிந்தனையோடு இருந்த பேதுருவைக் கடிந்துகொள்ளும் இயேசு, "என்னைத் பின்செல்ல விரும்பும் எவரும் தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்செல்லட்டும்" என்று சீடத்துவத்திற்குரிய நிபந்தனையை விதிக்கிறார்.
முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் இறைப்பணியில் வரும் துன்பங்களைக் கண்டு புலம்பினாலும், இறைவார்த்தை அவர் இதயத்தில் "எரியும் நெருப்பாய்" இருப்பதை உணர்கிறார். இரண்டாம் வாசகத்தில், "இவ்வுலகின் போக்கின்படி வாழாமல், உங்களையே உயிருள்ள பலியாக ஒப்புக்கொடுங்கள்" என்று பவுல் அடியார் நமக்கு அழைப்பு விடுக்கிறார். வாழ்வைப் பற்றிக் கொண்டிருப்பவர் அதை இழப்பார்; கிறிஸ்துவுக்காக வாழ்வை இழப்பவர் அதைக் கண்டடைவார். இந்த மேலான உண்மையை உணர்ந்து, நம் சிலுவைகளைத் துணிவுடன் சுமக்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசக முன்னுரை 

முதல் வாசக முன்னுரை 

இறைவார்த்தையை அறிவித்ததால் எரேமியா இறைவாக்கினர் ஏளனத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார். "இனி ஆண்டவரைப் பற்றிப் பேசமாட்டேன்" என்று அவர் நினைத்தாலும், இறைவார்த்தை அவர் எலும்புகளுக்குள் எரியும் நெருப்பைப் போலத் தூண்டுகிறது. இறைவனின் அழைப்பிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 63: 1. 2-3. 4-5. 7-8
பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -பல்லவி
உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.  ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி
என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.   அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். -பல்லவி
ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.  நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 12: 1-2)

புனித பவுல் அடியார் நம்மை ஒரு புதிய வழிபாட்டிற்கு அழைக்கிறார். விலங்குகளைப் பலியிடுவதற்குப் பதிலாக, நம்மையே 'தூய, உயிருள்ள பலியாக' இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்கிறார். இவ்வுலகின் மாயைகளுக்கு அடிமையாகாமல், கடவுளுக்கு உகந்தது எது என ஆய்ந்தறிய அழைப்பு விடுக்கப்படும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும், மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணாமல், கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணவும், பேசவும், செயல்படவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பரந்த இவ்வுலகு, எம்பாரதத் திருநாடு மற்றும் எங்கள் மாநிலம் ஆகியவற்றை ஆளுகிற தலைவர்களும், குடிமக்களாகிய நாங்களும், எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதைத் தேர்ந்து தெளிந்து, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வளர்க்கிற நேரிய பாதையில் பயணிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உலகின் கவர்ச்சிகளால் சுண்டியிழுக்கப்படும் எம்பிள்ளைகளும், இளையோரும், உலகத்தின் போக்கின்படி ஒழுகாமல், உள்ளம் புதுப்பிக்கப்பெற்று கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிந்து, தங்கள் எதிர்கால வாழ்வை சீரிய முறையில் கட்டமைக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பொருள் ஈட்டுவதிலும், உயர் பதவிகள் பெறுவதிலும், வசதிகளைப் பெருக்குவதிலும், வெளிநாடுகளில் குடியேறுவதிலும் தான் மகிழ்ச்சி அடங்கியுள்ளது எனக் கருதி, குடும்ப உறவுகளுடனும், கடவுளாம் உம்முடனும் காட்ட வேண்டிய நெருக்கத்தை தொலைத்துவிடுகிற அனைவரும், “உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழந்தால் கிடைக்கும் பயன் என்ன?” என்பதை உணர்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஞாயிறு மற்றும் கடன் திருநாள் அனுசரிப்பில் மட்டுமே எங்கள் நம்பிக்கை என்று வாழ்வை குறுக்கிக் கொள்ளாமல், கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக எங்களையே படைத்து, தன்னலம் துறந்து, எங்கள் சிலுவையைத் தூக்கிக்கொண்டு உம்மைப் பின்பற்றும் உள்ளார்ந்த வழிபாடு செய்திடும் துணிவு பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, August 17, 2026

பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 23.08.2026

 பொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 23.08.2026
Jesus é o Senhor!: EVANGELHO SÃO MATEUS 16:13-20 - 21° DOMINGO O TEMPO  COMUM - ANO "A" 2014 - 24/08/2014

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 22:19-25,
உரோமையர் 11:33-36,
மத்தேயு 16:13-20.

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 21-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு "அதிகாரம்" மற்றும் "அறிக்கை" ஆகிய இரண்டு முக்கியக் கருத்துகளை நமக்குத் தருகிறது. நற்செய்தியில், "மானிட மகனை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற இயேசுவின் கேள்விக்கு, பேதுரு "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று மிகச்சிறந்த விசுவாச அறிக்கையைச் செய்கிறார். இதற்காக இயேசு பேதுருவைப் பாராட்டி, திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பையும், விண்ணரசின் திறவுகோல்களையும் அவரிடம் ஒப்படைக்கிறார்.
முதல் வாசகத்தில், தகுதியற்ற செபுனாவிடமிருந்து அதிகாரம் பறிக்கப்பட்டு, எலியாக்கிமிடம் ஒப்படைக்கப்படுவதைக் காண்கிறோம். அதிகாரம் என்பது ஆதிக்கம் செலுத்துவதற்கல்ல, அது பொறுப்புடன் சேவை செய்வதற்கே வழங்கப்படுகிறது. கடவுளின் ஞானம் அளவிட முடியாதது என இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் வியக்கிறார். நாம் இயேசுவை எப்படி அடையாளம் காண்கிறோம்? அவரே என் வாழ்வின் மெசியா என்று சொல்லும் துணிவை வேண்டிக் கொண்டு, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

எருசலேமின் மேலாளராக இருந்த செபுனா தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதால், ஆண்டவர் அவரைப் பதவியிறக்கம் செய்கிறார். அவருக்குப் பதிலாக எலியாக்கிம் என்பவரைத் தேர்ந்தெடுத்து, அதிகாரம் மற்றும் பொறுப்பின் அடையாளமாகத் தாவீது குடும்பத்தின் திறவுகோலை அவர் தோள்மேல் வைக்கிறார். அதிகாரம் என்பது கடவுள் தரும் கொடை என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 138: 1-2அ. 2-3. 6,8
பல்லவி : ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு.

ஆண்டவரே! என் முழு மனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.  உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி
உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.  நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி
ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;
ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.  ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளின் செல்வம், ஞானம் மற்றும் அறிவு ஆகியவற்றின் ஆழத்தை யாரால் அளவிட முடியும்? அவரது முடிவுகள் யாராலும் ஆராய முடியாதவை. அவரிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன என்று கடவுளின் மாட்சியைப் புனித பவுல் அடியார் போற்றும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. “இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா” என்கிற வாக்குறுதியோடு திருஅவையை நிறுவிய இறைவா! எங்கள் திருத்தந்தை லியோ அவர்களையும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், இறைமக்கள் ஆகிய எங்கள் அனைவரையும், தீமை அனைத்திலுமிருந்து விடுவித்து, நம்பிக்கையிலும், எதிர்நோக்கிலும், அன்பிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அனைத்துலகின் அரசரே இறைவா! அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தன; உம்மாலேயே உண்டாயின; உமக்காகவே இருக்கின்றன என்பதை உணர்ந்து, எமை ஆளும் தலைவர்களும், குடிமக்களாகிய நாங்களும், உமக்கே பணிந்து வாழவும், நீதி, நேர்மை, வாய்மை ஆகிய விழுமியங்களைப் பேணி, பகைமையற்ற அமைதியான உலகை உருவாக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் முன்னெடுப்புகளால், மனிதமும் புனிதமும் மங்கி வருகின்ற இவ்வேளையில், “கடவுளின் ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை!” என்பதை உணர்ந்து, எம்பிள்ளைகளும், இளையோரும், கருத்தாய் கற்று வாழ்வில் உயர்வதோடு நில்லாமல், அறிவைக் கடந்த ஞானத்தையும், ஞானத்தின் தொடக்கமாகிய இறையச்சத்தையும் கொண்டு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. விண்ணகத்தின் திறவுகோலையும், மன்னிக்கும் அதிகாரத்தையும் திருஅவைக்கு தந்தருளிய இறைவா! குட்டித் திருஅவையாகிய ஒவ்வொரு குடும்பத்திலும், மன்னித்தலும், விட்டுக்கொடுத்தலும்    புரிந்துகொள்ளுதலும் இருந்தால் மகிழ்ச்சியின் திறவுகோலும் எம்மிடம் இருக்கும் என்கிற உணர்வோடு, நாங்கள் அனைவரும், எங்கள் குடும்பங்களையும், அன்பியங்களையும், பங்குத்தளத்தையும் அன்பிலும் ஒப்புரவிலும் கட்டியெழுப்ப  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. “ஆண்டவரே! நீர் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர்” என்கிற திருப்பாடல் வரிகளைத் தியானப்பாடலாக ஜெபித்த எங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வேண்டுதல்களையும், இங்கே கூடியுள்ள எங்கள் அனைவரது அவசரத் தேவைகளையும் நீர் தாமே சந்தித்து, ஆசி அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, August 10, 2026

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 16.08.2026

 பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 16.08.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்


எசாயா 56:1,6-7
உரோமையர் 11:13-15,29-32
மத்தேயு 15: 21-28
 

திருப்பலி முன்னுரை 

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 20-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய நற்செய்தி விசுவாசத்தின் வலிமையையும், கடவுளின் அன்பு எல்லைகளற்றது என்பதையும் பறைசாற்றுகிறது. ஒரு கானானியப் பெண் தன் மகளுக்காக இயேசுவிடம் வந்து மன்றாடுகிறார். அவர் இஸ்ரயேல் இனத்தைச் சார்ந்தவர் அல்ல என்றாலும், அவரது தளராத விசுவாசத்தைக் கண்டு இயேசு வியந்து போகிறார். "அம்மா, உமது விசுவாசம் பெரிது!" என்று பாராட்டி, அவரது மகளைக் குணமாக்குகிறார்.

இறைவனின் இல்லம் "எல்லா மக்களுக்கும் செப இல்லம்" என்று அழைக்கப்படும் என முதல் வாசகத்திலும், கடவுள் எல்லாருக்கும் இரக்கம் காட்டவே அனைவரையும் கீழ்ப்படியாமையில் இருக்கச் செய்தாரென இரண்டாம் வாசகத்திலும் வாசிக்கிறோம். மீட்பு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது மொழிக்கோ உரியது அல்ல; அது இறைவனைத் தேடும் ஒவ்வொரு இதயத்திற்கும் உரியது. அந்தப் பெண்மணியைப் போல நாமும் சோர்ந்து போகாத விசுவாசத்தைப் பெற்றிடவும், எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவரையும் அன்பு செய்யவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை 

இறைவனைத் தேடி வரும் அன்னியர்களையும் இறைவன் கைவிடுவதில்லை. அவர்கள் ஆண்டவரின் பெயருக்கு அன்பு காட்டி, அவரது உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால், அவர்களைத் தமது புனித மலைக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியூட்டுவதாக ஆண்டவர் வாக்குறுதி அளிக்கிறார். இறைவனின் இல்லம் எல்லா மக்களுக்கும் உரியது என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்


திபா 67: 1-2. 4. 5,7
பல்லவி : கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.

1. கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். - பல்லவி  

2. வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில்,
நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி  

3. கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி 

இரண்டாம் வாசக முன்னுரை 

புனித பவுல் அடியார் பிற இனத்தாருக்குத் திருத்தூதராகத் தான் பணியாற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறார். இஸ்ரயேல் மக்கள் புறக்கணித்ததால் உலகம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டது. கடவுள் தமக்குக் கீழ்ப்படியாதவர்கள் மீதும் இரக்கம் காட்டுகிறார் என்ற உன்னத உண்மையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா!

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் 

1. உமக்குத் திருப்பணி செய்வதற்கும், உமது பெயர்மீது அன்புகூர்வதற்கும், உம் ஊழியராய் இருப்பதற்கும், நீர் தெரிந்துகொண்ட எங்கள் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், ஆகிய அனைவரும், “விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளாத” உம்மைப் போலவே, பிரமாணிக்கம் தவறாது இருக்கவேண்டுமென்றும், இறைமக்களாகிய எங்களையும் பிரமாணிக்கத்தின் பாதையில் வழிநடத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்னையின் விண்ணேற்புப் பெருவிழாவையும் எம் இந்தியத் திருநாட்டின் விடுதலைத் திருநாளையும் நேற்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்த நாங்கள். “நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும்” என்று இறைவாக்கினர் ஏசாயா வழியாக நீர் தரும் வாக்குறுதியில் நம்பிக்கை கொள்ளவும், எமை ஆளும் தலைவர்கள் “நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள்” என்கிற உமது அறிவுறையை ஏற்று ஆட்சி செய்யவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்” என்றுரைத்து, அனைத்து மக்களையும் அரவணைக்கத் துடிக்கும் உம்மைப் பின்பற்றி, நாங்கள் அனைவரும், சாதி, சமய, மொழி, இன ஏற்றத்தாழ்வு கருதாமல், அனைவரோடும் அன்புறவோடு வாழவும், சமயச்சார்பற்ற, சமூகநீதி தழைக்கிற செழுமையான ஒரு சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவும், உலகம் கடவுளோடு ஒப்புரவாகவும், தம் சொந்த மகனையும் தாரை வார்த்த தந்தையே, நாங்கள் எத்தகையோராய் இருந்தாலும் எங்களைக் கண்ணோக்கி, உமக்கு உரியவர்களாய் மாற்ற வேண்டுமென்றும், நவீன உலகின் மாயக் கவர்ச்சிகளில் சிக்கித் தவிக்கும் எம் இளையோரை நல்வழிப்படுத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இன்றைய நற்செய்தியிலே வருகிற கனானேயப் பெண்போல, உம்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, எவ்வளவு துன்பப்பட்டாலும், எவ்வளவு அவமானப்பட்டாலும், தொடர்ந்து ஜெபிக்கவும், இடைவிடாது உழைக்கவும், இதன் வழியாக அற்புதங்களை அனுபவிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, August 3, 2026

பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு 09.08.2026

பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு 09.08.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1 அரசர்கள் 19:9அ,11-13அ
உரோமையர் 9:1-5
மத்தேயு 14: 22-33

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 19-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
வாழ்க்கைப் பயணத்தில் எதிர்பாராமல் வரும் புயல்களையும், போராட்டங்களையும் நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்? இன்றைய திருவழிபாடு இக்கேள்விக்கு விடை தருகிறது. முதல் வாசகத்தில், எலியா இறைவாக்கினர் கடும் காற்றிலோ, நிலநடுக்கத்திலோ, நெருப்பிலோ இறைவனைக் காணவில்லை; மாறாக, மென்மையான தென்றல் காற்றில் இறைவனின் பிரசன்னத்தை உணர்கிறார்.
நற்செய்தியில், சீடர்கள் கடலில் புயலால் அலைக்கழிக்கப்படும்போது, இயேசு நீரின் மேல் நடந்து வருகிறார். பயத்தினால் சீடர்கள் அலறும்போது, "நான்தான், அஞ்சாதீர்கள்" என்று தைரியம் கூறுகிறார். பேதுருவின் விசுவாசம் தடுமாறும்போது, இயேசு தம் கரம் நீட்டி அவரைக் காப்பாற்றுகிறார். நம் வாழ்வின் புயல்கள் நம்மை மூழ்கடிக்கப் பார்க்கும்போதெல்லாம், ஆண்டவர் அருகில் இருக்கிறார் என்ற நம்பிக்கையை இன்றைய மறைவாக்குகள் நமக்குத் தருகின்றன. புயலின் நடுவே அமைதி தரும் அந்த இறைவனைச் சந்திக்க, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (1 அரசர்கள் 19: 9a, 11-13a)

இறைவாக்கினர் எலியா தன் உயிருக்கு அஞ்சி ஓடி, ஒரு குகையில் தஞ்சம் புகுகிறார். ஆர்ப்பரிக்கும் இயற்கைச் சீற்றங்களுக்கு மத்தியில் அல்ல, மாறாக அமைதியான, மென்மையான ஒரு தென்றல் காற்றில் இறைவன் தம்மை வெளிப்படுத்துகிறார். இறைவன் ஆரவாரத்தில் இல்லை, அமைதியிலேயே இருக்கிறார் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
திருப்பாடல்: 85: 8-13

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன். தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி. நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். நீதியும் நிறைவாழ்வும் ஒன்றை யொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும். விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும். அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 9: 1-5)

தன் சொந்த இனமாகிய இஸ்ரயேல் மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதது குறித்து புனித பவுல் அடியார் பெரும் மனவேதனையோடு பேசுகிறார். அவர்களின் மீட்பிற்காகத் தான் சாபத்திற்கு உள்ளாகவும் அவர் தயாராக இருக்கிறார். கிறிஸ்துவின் வழியாகக் கிடைத்த உன்னதப் பேறுகளை விவரிக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன் அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், உம் பேரன்பையும், மீட்பையும், நிறைவாழ்வையும் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் வாக்களிக்கிறீர் என்பதை உணர்ந்து, இன்றைய பதிலுரை பாடலில் சொன்னது போல, ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்டு எம்வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இன்றைய தியானப் பாடலாக அமைந்த திருப்பாடல் எண்பத்து ஐந்து கூறுவது போல, இவ்வுலகிலும், எம்நாட்டிலும், ஆண்டவரின் மாட்சி குடிகொள்ளவும், பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கவும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடவும், மண்ணினின்று உண்மை முளைத்தெழவும், நல்விளைவை எம்நாடு நல்கவும், தலைவர்களும் குடிமக்களும் இவற்றிற்காகப் பொறுப்புடன் செயலாற்றவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தன் சொந்த இனத்தைச் சேர்ந்த சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக எந்தத் தியாகத்தையும் பழியையும் ஏற்கத் தயாராக இருந்த பவுலடியாரை பின்பற்றி, மதவாதமும், சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடுகளில் வேகமும் அதிகரித்திருக்கும் இன்றையச் சூழலில், எம் இந்திய தேசம் உண்மை ஒளியாம் உம்மை ஏற்கவும், அதற்காக நாங்கள் அனைவரும் ஊக்கத்தோடு செயல்பட்டு, எங்கள் சாட்சிய வாழ்வின் மூலமும், துணிவான அறிக்கையிடுதல் வழியாகவும் மீட்பிற்கான வழியைப் பறைசாற்ற  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. புயல் சூழ்ந்த துன்பச்சூழல்களால் எங்கள் வாழ்க்கைப் படகு அலைக்கழிக்கப்பட்டு, நாங்கள் திகிலுற்று தவிக்கும்போது, “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்கிற உமது உடனிருப்பை உணர்ந்து கொள்ளவும், இன்றைய முதல் வாசகத்தில் வருகிற இறைவாக்கினர் எலியா, மெல்லிய தென்றலில் உம து குரலொலியை கேட்டது போல, நாங்களும் பிரமாண்டங்களுக்காகக் காத்திராமல், எங்களது தினசரி வாழ்வின் எதார்த்தங்களிலும், அமைதியான எங்கள் தனிப்பட்ட இறைவேண்டலிலும் உம்மைக் கண்டுணர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்று கூறி, படகிலிருந்து இறங்கி, கடல்மீது நடந்து உம்மை நோக்கி வந்த பேதுருவைப் போல, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எதற்கும் அஞ்சாமல் உம்மையே நம்பி வாழவும், உம்மையே நோக்கி வரவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, July 27, 2026

பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 55:1-3
உரோமையர் 8: 35,37-39
மத்தேயு 14: 13-21

திருப்பலி முன்னுரை:

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 18-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய திருவழிபாடு இறைவனின் எல்லையற்ற தாராள குணத்தையும், அவர் நம் மீது கொண்டுள்ள பிரிக்க முடியாத அன்பையும் பறைசாற்றுகிறது. "தாகமாய் இருப்பவர்களே, நீர்நிலைகளுக்கு வாருங்கள்; காசில்லாதவர்களே, வந்து வாங்கி உண்ணுங்கள்" என்று ஏசாயா இறைவாக்கினர் முதல் வாசகத்தில் அழைப்பு விடுக்கிறார். இது இறைவன் தரும் இலவசமான, நிறைவான வாழ்விற்கான அழைப்பு.

நற்செய்தியில், ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இயேசு உணவளிக்கும் அதிசயத்தைக் காண்கிறோம். திரண்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு இயேசு பரிவு கொள்கிறார். நம்மிடம் உள்ள மிகச் சிறிய காரியங்களைக் கடவுளிடம் ஒப்படைத்தால், அவர் அதனை ஆசீர்வதித்துப் பலமடங்காக மாற்ற வல்லவர் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது. கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்ற பவுல் அடியாரின் நம்பிக்கையை இரண்டாம் வாசகத்தில் கேட்கிறோம். அந்தப் பேரன்பில் திளைக்கவும், பிறரோடு பகிர்ந்து வாழவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (ஏசாயா 55: 1-3)

இறைவன் தரும் அருட்கொடைகள் விலையற்றவை. தாகத்தோடும் பசியோடும் இருப்பவர்கள் இறைவனிடம் வந்து தாராளமாக அருளைப் பெற்றுக்கொள்ள ஏசாயா இறைவாக்கினர் அழைக்கிறார். அழியும் உணவுக்காக உழைப்பதை விடுத்து, நிலைவாழ்வு தரும் இறைவார்த்தைக்குச் செவிசாய்க்க அழைப்பு விடுக்கப்படும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 145: 8-9. 15-16. 17-18. (பல்லவி: 16)
பல்லவி: ஆண்டவரே எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி

எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். - பல்லவி

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - 
பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 35, 37-39)

கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை யாரால் பிரிக்க முடியும்? துன்பமோ, வறுமையோ, அச்சுறுத்தலோ அல்லது சாவோ எதுவுமே நம்மை இறை அன்பிலிருந்து பிரிக்க முடியாது என்று புனித பவுல் உறுதியாகக் கூறுகிறார். எதிலும் வெற்றி வாகை சூடச் செய்யும் அந்தத் தெய்வீக அன்பை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாம் தெரிந்துகொண்ட இஸ்ராயேல் இனத்தாரோடு “என்றுமுள 
உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்” என்றுரைத்த தந்தையே! தாயாம் திருஅவையை வழிநடத்த நீர் தெரிந்தெடுத்துள்ள திருத்தந்தை லியோ அவர்கள்மீதும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவர்மீதும், மாறாத பேரன்பை காட்டிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மீண்டும் மீண்டும் தலைதூக்கும் போர்களாலும், அடுத்தடுத்து நடக்கும் வன்முறைகளாலும், இடைவிடாது நடைபெறும் தீச்செயல்களாலும் துயருறும் இவ்வுலகிற்கும், எம்நாட்டிற்கும் அமைதிநிறை நல்வாழ்வை அருள வேண்டுமென்றும், தலைவர்களுக்கும், குடிமக்களாகிய எங்களுக்கும் சரியானதை தேர்வு செய்து, நேரிய வழியில் நடந்திடும் ஞானத்தை தந்தருள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இன்றைய முதல் வாசகத்தின் உட்பொருளை உணர்ந்து, நிறைவு தராத ஒன்றிற்காய் எங்கள் உழைப்பை வீணாக்காமல் இருக்கவும், கண்டவற்றின் மீது தாகம் கொண்டு அலையாமல் இருக்கவும், உமக்குக் கவனமாய் செவிகொடுத்து, உமது வார்த்தை எனும் நல்லுணவை உண்டு, வாழ்வடைய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பெருந்திரளான மக்கள்மீது பரிவு கொண்டு, உடல் நலமற்றோருக்கு குணம் தந்து, பசித்திருந்தோருக்கு உணவைப் பகிர்ந்தளித்து, உமது பேரன்பையும் கருணையையும் எண்பித்த இறைவா, நாங்களும் பசித்தோருக்கு உணவளித்து, நலிந்தோருக்கு உதவி புரிந்து, தனிமையில் தவிப்போருக்கு துணையிருந்து, எங்கள் அறச்செயல்களாலும், பிறரன்புச் செயல்களாலும், எங்களையே நல்ல கிறித்தவ மக்களாக எண்பிக்க  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பவுலடியாரின் நம்பிக்கையைப் பகிர்ந்தவர்களாக, வேதனையோ நெருக்கடியோ, இன்னலோ, பட்டினியோ ஆடையின்மையோ, இடரோ, சாவோ, எதுவும் கிறிஸ்துவின் அன்பிலிருந்து எம்மைப் பிரிக்க முடியாது என்கிற உறுதியான நம்பிக்கை கொண்டு வாழவும், எம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாங்கள் வெற்றிமேல் வெற்றி அடைய வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, July 20, 2026

பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு 26-07-026

 பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு 

What does Matthew 13:45-46 mean? | Bible Art

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1.அரசர்கள். 12:13, 16-19
உரோமையர் 8: 28 -30
மத்தேயு 13: 44-52

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 17-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு 'ஞானம்' மற்றும் 'மதிப்புமிக்கத் தேர்வு' குறித்த சிந்தனைகளை நமக்கு முன்வைக்கிறது. முதல் வாசகத்தில், சாலமோன் அரசர் இறைவனிடம் செல்வத்தையோ அல்லது நீண்ட ஆயுளையோ கேட்காமல், நீதியோடு ஆட்சி செய்யத் தேவையான 'ஞானத்தை' மட்டுமே கேட்கிறார்.
நற்செய்தியில் இயேசு, விண்ணரசை நிலத்தில் மறைந்திருக்கும் புதையலுக்கும், விலைஉயர்ந்த முத்துக்களுக்கும் ஒப்பிடுகிறார். அந்தப் புதையலைப் பெறுவதற்காகத் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்கத் துணிந்த அந்த மனிதனைப் போல, நாமும் இறைவார்த்தையையும் இறையாட்சியையும் நமது வாழ்வின் முதன்மையான செல்வமாகக் கருத அழைக்கப்படுகிறோம். உலகப் பொருள்கள் தரும் தற்காலிக மகிழ்ச்சியை விட, இறைவனின் அன்பு தரும் நிலையான மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கத் தேவையான ஞானம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (1 அரசர்கள் 3: 5, 7-12)

இளம் வயதில் அரசராகப் பொறுப்பேற்ற சாலமோனிடம், "உனக்கு என்ன வேண்டும்?" என்று ஆண்டவர் கேட்கிறார். சாலமோன் உலகச் செல்வங்களைக் கேட்காமல், நன்மை தீமை எதுவென்று ஆய்ந்தறியும் 'ஞானத்தை'க் கேட்கிறார். சாலமோனின் இந்தத் தாழ்மையான வேண்டுதலால் மகிழ்ந்த ஆண்டவர், அவருக்கு நிகரற்ற ஞானத்தை வழங்கியதை விவரிக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
திபா 119: 57,72. 76-77. 127-128. 129-130

ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன். நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது. பல்லவி
எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். பல்லவி
பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். பல்லவி
உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன். உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. 
பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 28-30)

கடவுளிடம் அன்புகூருபவர்களுக்கும், அவருடைய திட்டத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும் எல்லாமே நன்மைக்கே நடக்கும் என்று புனித பவுல் உறுதி கூறுகிறார். நாம் அவருடைய மகனின் சாயலுக்கு ஏற்ப உருமாற்றப்பட வேண்டும் என்பதே கடவுளின் திட்டம் என்பதை விளக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம். 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாம் முன்குறித்து வைத்தோரை அழைப்பவரும், தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்குபவருமான கடவுள், தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களையும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. சாலமோன் அரசனுக்கு நீர் அருளியதுபோலவே, உலகாளும் தலைவர்களுக்கும், எம்நாட்டையும், தமிழ் நாட்டையும் ஆட்சி செய்கின்றவர்களுக்கும் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்துள்ள மறைப்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும், தம் அழைத்தலுக்கு ஏற்ற வாழ்வை மேற்கொள்வும், மேலும் பல இளைஞர், இளம்பெண்கள் இறை அழைத்தலுக்கு செவிமடுத்து, பணிவாழ்வில் சிறக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நாங்கள் அனைவரும் எத்தகைய இடர்கள் நிறைந்த சூழலில் இருந்தாலும், இடுக்கண் நிறைந்த வாழ்வை மேற்கொண்டாலும், கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்கிற உண்மையை உணர்ந்தவர்களாக, நம்பிக்கையுடனும் துணிவுடனும் செயல்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், நிலத்தில் மறைந்திருக்கும் புதையலை கண்டுபிடிப்பவர் போலவும், விலை உயர்ந்த ஒரு முத்தைத் தனதாக்க  அனைத்தையும் இழக்கத் தயாராயிருப்பவர் போலவும், விண்ணரசை உரிமையாக்கிக்கொள்ள உம்மையும், உமக்குரியவற்றையும் மட்டுமே நாடுகின்ற நல்லுள்ளம் பெற்றவர்களாய் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, July 13, 2026

பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு 19-07-2026

 பொதுக்காலம் ஆண்டின்  16-ஆம் ஞாயிறு 


இன்றைய வாசகங்கள்:-

சாலமோனின் ஞானம் 12: 13, 16-19
உரோமையர் 8: 26-27
மத்தேயு 13: 24-43

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 16-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு கோதுமையும் களைகளும் உவமையின் வழியாக இறைவனின் எல்லையற்ற பொறுமையையும் நீதியையும் நமக்கு எடுத்துரைக்கிறார். தீமையை உடனடியாக வேரோடு பிடுங்கி எறியாமல், கோதுமை மணிகள் வளர்ந்து பலன் தரும் வரை இறைவன் காத்திருக்கிறார். இது நாம் மனம் மாற அவர் தரும் வாய்ப்பு.
கடவுள் வலிமை மிக்கவராக இருந்தாலும், அவர் நீதியோடும் கனிவோடும் தீர்ப்பு வழங்குகிறார் என்பதை முதல் வாசகத்திலும், நமது பலவீனங்களில் தூய ஆவியானவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்பதை இரண்டாம் வாசகத்திலும் கேட்கிறோம். தீய எண்ணங்கள் என்னும் களைகள் நம் இதயத்தில் வளர இடம் கொடுக்காமல், கோதுமை மணிகளாக இறைவனின் களஞ்சியத்தில் சேரத் தேவையான அருளை வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசகமுன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (சாலமோனின் ஞானம் 12: 13, 16-19)

ஆண்டவர் எல்லாவற்றிற்கும் மேலான அதிகாரம் கொண்டவர். இருப்பினும், அவர் தம் வலிமையைக் கடுமையாகப் பயன்படுத்தாமல், மிகுந்த கனிவோடும் பொறுமையோடும் நம்மை ஆளுகிறார். நாம் பாவம் செய்தாலும் மனம் வருந்தித் திரும்பி வர அவர் வழிவகை செய்கிறார் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 86: 5-6. 9-10. 15-16
பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர். 

என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். -பல்லவி

என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! -பல்லவி

என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள்மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 26-27)

நாம் எப்படிச் செபிக்க வேண்டும் என்று தெரியாமல் தவிக்கும்போது, தூய ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்குத் துணையாக வருகிறார். அவர் சொல்வதற்கரிய பெருமூச்சுகளோடு நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்று கூறும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே,  உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்” எனச் சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசிக்கப்பட்ட முதல் வாசக கூற்றுப்படி தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், நன்னம்பிக்கையால் நிரப்பப்பட்டு, எதிர்நோக்கினால் உந்தப்பட்டு, அன்புச்செயல்களில் ஈடுபட்டு, இறையரசை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைத்தின் மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமையிலும் நீதியின் ஊற்ற்றாகிய உமது ஆற்றலிலும் நம்பிக்கை கொண்டு, போர்கள் இல்லாத உலகிற்காகவும் ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகத்கிற்காகவும் மன்றாடுகிறோம். இந்த உலகையும், எம்நாட்டையும், தமிழ் நாட்டையும் ஆட்சி செய்கின்றவர்கள் நல்லாட்சியை வழங்க நீர் தாமே அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆற்றல் மிக்கவராகவும், கனிவோடு தீர்ப்பு வழங்குகிறவராகவும் நீர் இருப்பதால்-தான் நாங்கள் மன்னிப்புப்பெற்றவர்களாகவும், ஆசி பெற்றவர்களாகவும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து, நாங்களும், அனைவருடனும் கனிவோடு நடந்துகொள்ளவும், எமது ஆற்றலை, ஆணவச் செயல்களுக்கும், வன்செயல்களுக்கும் பயன்படுத்தாமல் அன்புச்செயல்களுக்காகவும் அறச்செயல்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்தவும், வன்கொடுமைகளுக்கு ஆளாவோருக்கு ஆறுதலாக, ஆதரவாக இருக்கவும் நல்மனம் தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. துன்பங்களாலும் துயர்களாலும் நோய்களாலும் தனிமையினாலும், வறுமையினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும், பொருளாதார பிரச்சனைகளாலும் கடன் தொல்லைகளாலும், வேதனையுற்று, வலுவற்ற நிலையில் உள்ளோரின் உள்ளங்களைத் துருவி ஆய்பவரும் துணைநிற்பவருமான தூய ஆவியாரை அனுப்பி, அவர்களது வாழ்வை, நீர் தாமே மேம்படுத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், சிறு கடுகாகவும், புளிப்பு மாவு போன்றவர்களாகவும் இருந்தாலும், விண்ணரசுக்கு நாங்களும் இன்றியமையாதவர்கள் என்பதை உணர்ந்து செயலாற்றவும், தீயோன் விதைக்கும் களைகளுக்கு இடம் கொடுக்காமல், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்களாகவே வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, July 7, 2026

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 14.07.2026

 பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 14.07.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள் 

எசாயா 55:10-11
உரோமையர் 8: 18-23 
மத்தேயு 13: 1-23

திருப்பலி முன்னுரை :-

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 15-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு "இறைவார்த்தை" என்னும் விதையைப் பற்றியும், அதை ஏற்கும் "இதயம்" என்னும் நிலத்தைப் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கிறது. வானிலிருந்து பொழியும் மழையும் பனியும் நிலத்தை நனைக்காமல் திரும்புவதில்லை என்று ஏசாயா இறைவாக்கினர் முதல் வாசகத்தில் கூறுகிறார். அதுபோலவே, ஆண்டவரின் வாயிலிருந்து புறப்படும் வார்த்தையும் அவரது திருவுளத்தை நிறைவேற்றாமல் அவரிடம் திரும்புவதில்லை.
நற்செய்தியில், இயேசு விதைப்பவர் உவமையைக் கூறி, நம் இதயம் எப்படிப்பட்ட நிலமாக இருக்கிறது எனச் சிந்திக்க அழைக்கிறார். வழி ஓரமா? பாறை நிலமா? முட்செடி சூழ்ந்த இடமா? அல்லது நூறு மடங்குப் பலன் தரும் நல்ல நிலமா? நாம் உலகக் கவலைகளிலும் செல்வம் என்னும் மாயையிலும் சிக்கி இறைவார்த்தையை நசுக்கிவிடாமல், அதை ஆழமாக ஏற்றுப் பலன் தரும் நல்ல நிலமாக மாறத் தேவையான அருளை வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை 

முதல் வாசக முன்னுரை (ஏசாயா 55: 10-11)

மழையும் பனியும் நிலத்தை நனைத்து, பயிர்கள் வளரச் செய்து, விதைப்பவருக்கு விதையையும் உண்பவருக்கு உணவையும் தருகின்றன. அதுபோலவே, இறைவனின் திருவாயிலிருந்து வரும் வார்த்தையும் தமக்குரிய பணியைச் செம்மையாக நிறைவேற்றும் என ஆண்டவர் உறுதியளிக்கிறார். இறைவார்த்தையின் வல்லமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல் 

பல்லவி: நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன.
திருப்பாடல்: 65:9.9-10.11-12.13 
மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. பல்லவி
நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிரு துவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். பல்லவி
ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி
புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங் களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 18-23)

இக்காலத்தில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள், இனி நம்மிடம் வெளிப்படப்போகும் மாட்சியோடு ஒப்பிடத்தக்கவை அல்ல என்று புனித பவுல் கூறுகிறார். படைப்பு அனைத்தும் அழிவுக்கு உட்பட்டிருந்தாலும், கடவுளின் பிள்ளைகளாகிய நாமும், ஒட்டுமொத்தப் படைப்பும் மீட்புக்காகவும் விடுதலையாகவும் ஏங்கித் தவிப்பதை விளக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் பெற்றுக்கொள்ளும் எதிர்நோக்கோடு பயணிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றுரைத்த இறைவா, போர்கள் இல்லாத உலகிற்கான ஏக்கக்குரல்களையும், ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகத்துக்கான  பெரு-மூச்சுகளையும், வன்கொடுமை இல்லாத மாநிலத்துக்கான கதறல்களையும், கேட்கச் செவியுள்ளவர்களாக, இந்த உலகையும், எம்நாட்டையும், தமிழ் நாட்டையும் ஆட்சி செய்கின்றவர்களை மாற்றி, அனைவருக்குமான நல்லாட்சியை வழங்க அவர்களுக்கு நீர் தாமே ஞானத்தை அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அதீத அறிவியல் வளர்ச்சி, எந்திரமயமாக்கல், வணிகவயமாக்கல், நகரமயமாக்கல், கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாச்சாரம், நெகிழிப்பயன்பாடு போன்ற செயலகளால் “படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது” என்கிற பவுலடியாரின் கூற்று, இந்த நவீன உலகின் அவலத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.  மாந்தர் அனைவரும் சமூகப் பொறுப்புடனும், சுற்றுச்சூழலைப் பேணுகிற அக்கறையுடனும் செயல்பட்டு, எங்கள் எதிர்கால சந்ததியரும் வாழத் தகுந்த உலகை விட்டுச்செல்ல   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்கிற வான்மழை தவறாது பெய்யவும், தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக்கூடிய பிரமாநில தடுப்பு அணைத் திட்டங்கள் தடுக்கப்படவும், வேளாண் பெருமக்கள் வாழ்வு சிறக்க வேண்டுமென்றும், ஏனைய தொழிலாளர்கள், உழைக்கும் வர்கத்தினர், விளிம்பு நிலையில் வாழ்வோர் ஆகிய அனைவருமே நிறை வாழ்வைப் பெற   வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இக்காலத்தில் படுகிற துன்பங்கள் எதிர்காலத்தில் வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என்பதை உணர்ந்து, துன்பதுயரங்களைக் கண்டு துவண்டுபோகாமல், துணிவுடன் செயலாற்றவும், பலன் தராத பாறை நிலமாகவோ, வழியோரமாகவோ, முட்புதராகவோ எங்கள் வாழ்க்கையை வீணாக்காமல், நூறு மடங்கு பலன்தருகிற நல்ல நிலமாக நாங்கள் திகழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

வருகின்ற ஞாயிறு 12.07.2026 நற்செய்தி மத்தேயு 13:1-23 விதை விதைப்பவன் உவமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பழைய பாடல்