Thursday, May 21, 2020

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

 ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர்பணிகள் 1: 1-11
எபேசியர் 1:17-23
மத்தேயு 28:16-20

திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
உயிர்ப்புப் பெருவிழா முடிந்தப் பின், வந்த ஏழாம் ஞாயிறான இன்று இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட ஆலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வாழ்த்துகிறோம்
இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன. எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நடந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப் பார்க்கும் தூய ஆவியாரின் விழாவும் மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.இருபது நூற்றாண்டுகள் மேலாகியும், இந்த விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?... இவை முதல் முறைக்கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன.
இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்துத் தொடர்ந்து கனித் தந்துக் கொண்டிருக்கின்றன.அன்று வேரூன்றய மரங்கள் திக்கெங்கும் பல்கிப்பெருகி இறையரசைப் பறைச்சாற்றி வருகிறது. இன்று இயேசுவின் அழைப்பை ஏற்று நாம் அவரின் சீடர்களாய் அவர் பணிகள் செய்திட, வாழ்ந்திட, அன்பு பாரட்டத் தூயஆவியின் கனிகளைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் வேண்டிடுவோம்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் லூக்கா இயேசுவின் விண்ணேற்றத்தை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். இயேசு திருத்தூதர்களுக்குத் தனக்குப்பின் அவர்களின் பணி என்ன என்பதை விளக்கிகூறியபின் விண்ணேற்றம் அடைந்தார். இயேசு விண்ணில் மறைந்தபின் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்களிடம் வானதூதர்கள் “என்ன வானத்தையே பார்க்கிறீர்கள்! போதும்! கீழே பாருங்கள்!“ என்று உலகைக் காண்பித்து “அவர் பணித்த பணிகளைச் செய்ய உலகின் கடைகோடிவரைச் செல்லுங்கள்“ என்று அவர் இட்டப்பணியை உணர்ந்துச் செல்லப்படுவோம்.வாரீர்!

இரண்டாம் வாசக முன்னுரை


இன்றைய இரண்டாம் வாசகத்தில் தந்தையாம் கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! இறைமக்களுக்கு அவர் தரும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்று கட்டவுளின் ஆற்றலை விளக்கும் பவுலடியார் கிறிஸ்துவுக்கு அனைவரையும் அடிபணியச் செய்து அனைத்துக்கும் மேலாகத் திருச்சபையின் தலையாகவும் திருச்சபையை அவரது உடலாகவும் தந்துள்ளதைத் தெளிவாகக் கூறுவதை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
திருப்பாடல் 47: 1-2. 5-6. 7-8

1.மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி
2.ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி
3.ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே இறைவா! இயேசு விட்டுச் சென்ற இறையரசுப் பணியைக் காலத்தின் அறிகுறிகளுக்கேற்பவும் மக்களின் தேவைகளுக்கு ஏற்பவும் தொடர்ந்து ஆற்றிடத் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் தேவையான ஞானத்தையும், உறுதியான நம்பிக்கையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பும் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.விண்ணில் வாழ்பவராம் இறைவா, எங்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் சாட்சிகளாக வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்க்கை மூலமாகவும் வெளிப்படுத்தவும், இயேசுவின் சிந்தனைகள், பணிவாழ்வு, இறுதி இலக்கு இவற்றை எமதாக்கி இருக்குமிடத்தில் விண்ணகத்தை உருவாக்கத் தேவையான நல்வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அமைதித் தருபவரே இறைவா, உலகெங்கும் துன்புரும் உம் திருச்சபைக் கண்நோக்கியருளும். அவர்கள் தீவிரவாதம், அடக்குமுறை, தொற்றுநோய், பசி, வறுமைப் போன்றவற்றால் தங்கள் வாழவாதரங்களை இழந்து மனம் உடைந்து உம்மில் நம்பிக்கை இழக்காமல் இருக்க அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உன்னதரான தந்தையே! திருஅவையின் தூண்களாக வளர்ந்து வரும் எம் இளையோர்கள் உலகில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, அவை தரும் வாக்குறுதியால் தவறான பாதையில் போகாமல், உமது வாக்குறுதிகள் அவாகளின் வாழ்க்கைப் பாதைக்கு வழிக்காட்டி என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை அவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.நோய் நீக்கும் அருமருந்தே! எம் இறைவா! தொற்று நோயின் தாக்கத்தால் தங்கள் உடமைகளை, உறவுகளை, வாழ்வை இழந்துத் தவிக்கும் உலக மக்கள் அனைவரையும் கண்ணோகியருளும். விரைவில் இத்தாக்கத்திலிருந்து மீட்டு அனைவருக்கும் புதுவாழ்வு அளிக்க இறைவா உம்மை அன்றாடுகிறோம்.
                                               www.anbinmadal.org

No comments:

Post a Comment