தூய ஆவியாரின் வருகை பெருவிழா
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
திருத்தூதர்பணிகள் 2: 1-11,
1 கொரிந்தியர் 12: 3-7, 12-13,
யோவான் 20:19-23
திருப்பலி முன்னுரை
அன்புடையீர்,
தூயஆவியின் ஞாயிறு, திருச்சபையின் பிறந்த நாளை, புதுப்பிக்கப்பட்ட நாளை குறிக்கிறது. அருட்சாதனங்களின் மூலம், திருச்சபையில் நம்மை ஒரு அங்கத்தினராகச் சேர்ந்துக் கொண்டதைக் குறிக்கிறது இந்நாள் பெருவிழா. நாம் எல்லோரும் சேர்ந்துக் கொண்டாடும் இந்நாள், நாம் பெற்ற தூயஆவியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவும், ஆவியின் உடனிருப்பை உறுதிபடுத்தும் இவ்விழாவில் பங்கேற்க இறைகுலமே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
கிறிஸ்துவின் ஆவியின் சக்தியும், அதன் பிரசன்னமும் இவ்வுலகில் இல்லை என்றால், , கிறிஸ்தவன் இந்த உலகை மாற்ற முடியாது. ஆவியின் சக்தி இல்லை என்றால், இந்த இரண்டாயிரம் வருடங்களாக, பல்வேறு ஊழலிலும் , தடைகளையும் தாண்டிக் கிறிஸ்தவம் வளர்ந்திருக்காது.
கடவுள் “எவ்வாறு இந்த உலகை மாற்றப் போகிறார் ? “நம் மூலம்! தந்தை கடவுள் அவரின் தூயஆவியை, அவரின் மகனுக்குக் கொடுத்து இந்த உலகின் இறைபணியாற்ற அனுப்பினார். இயேசு அதே ஆவியை நமக்குக் கொடுத்தார். அதன் மூலம் நாம் தூயவாழ்வில் வளர்ந்து, இந்த உலகின் மாற்றத்திற்கான ஆயத்தப் பணிகளில் நாம் ஈடுபடலாம். கடவுளின் ஆவி உங்களில் இருந்து குறைகளை நீக்கி நிறைகளாக்கும், தொடர்ந்து இந்த நம்பிக்கையோடு திருப்பலியில் பங்கேற்போம்.!.ஆவியின் கொடைகளைப் பெற்றுக் கொள்வோம். தொற்று நோயின் தாக்கத்திலிருந்து நம்மை விடுவிக்க மன்றாடுவோம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் பெந்தகோஸ்தே நாளில் தூயஆவியால் நிரப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறது. ஆவியானவர் இயேசுவின் வார்த்தையால் இவ்வுலகை ஒரு புதுப்படைப்பாக மாற்றுகிறார். இன்று சீனாய் மலையில் நெருப்புவடிவில் தோன்றிப் பத்துக்கட்டளைகளை மோயீசனுக்குக் கொடுத்தார் கடவுள் . இன்று தூயஆவி நெருப்பு நாக்கு வடிவில் புதிய உடன்படிக்கையை உருவாக்கினார். இன்று மொழியாலும், இனத்தாலும் பல்வேறு வேறுபாடுகளாலும் பிரித்திருந்த மனிதக் குலத்தைக் கடவுள் தூய ஆவியின் வழியாக இன்று சேர்க்கின்றார். சீடர்கள் பெற்ற மகிழ்ச்சியை நாம் பெற இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.இரண்டாம் வாசக முன்னுரை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாரவது கிறிஸ்தவ விசுவாசத்திற்குச் சான்று பகரவில்லை என்றாலும், திருச்சபையின் பணிக்காகத் தங்களது கொடைகளைப் பகிரவில்லையென்றாலும் அவர்களிடம் தூய ஆவியின் கொடை இல்லை என்பதைத் தெளிவுப்படுத்திகின்றார். தூய ஆவியானவர் கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை வழி நடத்துவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார். எனவே ஒவ்வொரு கிறிஸ்துவனும் தான் பெற்ற ஆவியானவரின் கொடைகள் வழியாக ஒன்றிணைந்த கிறிஸ்தவச் சமூகமாக மாற்ற வேண்டும் என்று அழைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.பதிலுரைப்பாடல்
பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்திருப்பாடல் 104: 1,24. 29-30. 31,34
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.பல்லவி
நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர் பல்லவி
ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி
தூயஆவியின் தொடர் பாடல் : ஒலிவடிவில் (வாசக நூல் 1, பக்.524)
தூயஆவியின் தொடர் பாடல் : (வாசக நூல் 1, பக்.524)
தூய ஆவியே, எழுந்தருள்வீர்,வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்
இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! "தூய ஆவியே எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும். அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயாநம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1.இயேசுவின் துணையாளராம் தூய ஆவியை எமக்களித்த இறைவா! திருஅவையின் அங்கத்தினர் அனைவரும் நீ தந்தத் தூய ஆவியால் தீமைகளை எரித்திடும் சுடராய், இருளகற்றி ஒளியுட்டு நன்மைப் பயக்கும் சுடராய், எம் பாதைக்கு வழிகாட்டும் அகல்விளக்காய், அமைதியின் ஒளிச்சுடராம் இயேசுவின் இறையரசை அறிவிக்கும் தீபங்களாய் இவ்வுலகில் அவரின் விழுமியங்களை வாழ்ந்துக் காட்டிடும் சீடர்களாய் நாங்கள் இருக்கத் தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
2.வானகக் கொடைகளை வழங்கி வரும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூயஆவியை எழுந்தருள் செய்யும். எங்களை உருக்கித் துரு நீக்கி எங்களை உருமாற்றும். இயேசுவின் திருவுருவை எங்களின் உள்ளத்தில் உருவாக்கும். எம்மை ஆவியின் அக்னியால் நிரப்பும். அவரின் வரங்களாலும், கொடைகளாலும், கனிகளாலும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அருட்பொழிவு செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அருட்கொடை வள்ளலே எம் இறைவா! எம்மை வழி நடத்தும் அரசியல் தலைவர்களின் எண்ணங்களைப் புனிதம் பெறச் செய்யும். அவர்களின் இதயத்தில் உம் அன்புத் தீயை மூட்டும். அனைவரையும் அன்புச் செய்யும் உள்ளத்தைக் கொடுத்தருளும். அவர்கள் செய்யும் பணிகளில் சமுக நீதியை நிலைநாட்டவும், மக்கள் பேணிக்காத்திட வேண்டிய நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அன்பு நிறைந்த எம் இறைவா! தூய ஆவியின் ஒளியால் எங்கள் பங்கிலுள்ள இளையோரின் இதயங்களுக்கு அறிவூட்டும். அவர்கள் சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், ஞானக்கதிர்களை அவர்கள் மேல் பொழியுமாறும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. எம் அன்பு தந்தையே! இறைவா! உலகமெங்கும் பரவிய இத்தொற்று நோயின் தாக்கத்திலிருந்து உம் அன்பு மக்களைக் காத்தருளும். அவர்கள் குடும்பங்களில் அன்பிலும் பாசப்பிணைப்பிலும் ஒன்றிணைந்து புதிய வாழ்வு தொடங்கிட நலமும், வளமும் அளித்து காத்தருளும். இப்போராட்டத்தில் தன்னலம் பாராமல் ஈடுபட்டுள்ள அனைவரையும் உமது வல்லமையான கரத்தால் காத்தருளும். இவற்றையெல்லாம் எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment