Thursday, October 22, 2020

பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு

  பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்


விடுதலைப் பயண நூல் 22: 21-27
1 தெசலோனிக்கர் 1:  5–10
மத்தேயு 22: 34-40

 திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பொதுக்காலத்தின் 30ஆம் ஞாயிறுத் திருப்பலி பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்போடு வாழ்த்துகிறோம்.
நமக்குத் தெரியாததைத் தெரிந்து கொள்ள கேட்கப்படும் கேள்விகள் நம் அறிவை வளர்க்கும். இதற்கு மாறாக, பதில்களைத் தெரிந்துகொண்டு, அடுத்தவருக்கு நம்மைவிட குறைவாகத் தெரிகிறதென்பதை இடித்துச் சொல்வதற்காக கேள்விகள் கேட்கும்போது, நமது பெருமை கலந்த அறியாமை அங்கு பறைசாற்றப்படும். தனக்குத் தெரியும் என்ற இறுமாப்பில் இயேசுவை அணுகி கேள்வி கேட்ட ஓர் அறிஞரைப் பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்
தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் திருச்சட்டநூல் அறிஞரிடமிருந்து கேள்வி கேட்கப்பட்டாலும், அந்தக் கேள்வி மிக அழகான, ஆழமான ஒரு கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்கு பதில் சொல்கிறார்.  இயேசு தந்த பதில், காலத்தால் அழியாத ஒரு பதில்.. திருச்சட்டங்களின் அடிப்படை நியதிகளைப் பற்றி கேள்விகள் கேட்டு, அறிவுப்பூர்வமான பதில்களை அறிந்து கொள்வது முக்கியமல்ல அவைகளில் சொல்லப்பட்டிருக்கும் இறையன்பு, பிறரன்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதே முக்கியம் என்பதை இயேசுவின் இந்தக் கூற்று தெளிவுபடுத்துகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் நமது கடமைகளைப் பற்றி, நாம் ஆற்றவேண்டிய பணிகளைப் பற்றி இறைவன் இதற்கு மேலும் தெளிவாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இரக்கம் நிறைந்த அந்த இறைவனின் வார்த்தைகள் நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்குமா? இயேசு சொன்னதுபோல், இறையன்பையும், பிறரன்பையும் நாம் வாழ்வில் செயல்படுத்த முடியுமா? முயன்றால் முடியும். அதற்கு தேவையான அருளை வேண்டி இன்றைய திருப்பலியில் உளமாற மன்றாடுவோம்.வாரீர்!

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை


அனைவரும் அன்னியராக மாறிவருவதால், ஒருவரை ஒருவர் வெல்வதும், கொல்வதும் நாளுக்கு நாள் கூடிவருகின்றன. . இச்சூழலில், அன்னியர், அநாதை, கைம்பெண் இவர்களைப் பற்றி சிந்திப்பதற்கு இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கிறது. அதுவும், இங்கு கூறப்பட்டுள்ள வார்த்தைகள் யாவும் இறைவனே நம்மிடம் கூறும் வார்த்தைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் தரும் அழைப்பு, ஓர் எச்சரிக்கையாக, கட்டளையாக ஒலிக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


 பதிலுரைப்பாடல்

பல்லவி: எனது ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்
பதிலுரைப்பாடல். திபா. 18: 1-2,2-3,46.50

என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன். ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர். பல்லவி

என் இறைவன்: நான் புகலிடம் தேடும் மலை அவரே: என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண். போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன. என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப் பட்டேன். பல்லவி

ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவராக! தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர், தாம் திருப் பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கர்களை தன் மனதார பாராட்டி வாழ்த்துகிறார். எனெனில் அவர்கள் திருத்தூதரை இனிதே வரவேற்று, மகிழ்வோடு இறைவார்த்தைகளை ஏற்று கொண்டு, புனித வாழ்க்கை வாழ்வதையும், மற்ற மக்களுக்கு முன்மாதிரியாக இருப்பதைப் பற்றியும், இயேசுவின் வருகைக்காய் காத்திருப்பதைப் பற்றியும் மகிழ்ந்து பாராட்டியதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்”  என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. என் ஆற்றலாகிய தந்தையே இறைவா! உமது திருச்சபையிலுள்ள திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரையுள்ள நாங்கள் அனைவரும், எம் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் எம் ஆண்டவராகிய உம்மையும், எம் அயலாரையும் அன்புச் செய்யவும், அன்பு, இரக்கம், நற்பண்புகள் ஆகியவற்றோடு வாழவும், வளரவும் வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2 போற்றுதலுகுரிய ஆண்டவரே எம் இறைவா! பல்வேறு கருவிகள் மூலம் தொடர்புகளை வலுப்படுத்தும் வர்த்தக உலகம், தொடர்புச் சாதன உலகம், எம்மைச் சுயநலச் சிறைகளுக்குள் தள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இவ்வேளையில் நாங்கள் எமக்கடுத்திருக்கும் ஏழை, எளியவர், கைவிடப்பட்டோர், அனாதைகள், விதவைகள் ஆகியோர் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு உதவிடும் நல்மனதினைத் தர வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்

3. ஒரே கடவுளும் எங்கள் அன்புத் தந்தையுமாகிய எம் இறைவா! உமது அன்புக்கட்டளையைக் கடைப்பிடிப்பதே எங்கள் வாழ்வுக்கு வழி என்பதை உணர்ந்து உமது கட்டளைகளைக் கடைபிடித்து வாழும் தாராளமான மனத்தை எங்கள் இளையோர்களுக்குத் தந்து அதன் மூலம் அவர்கள் வாழ்வுச் சிறப்புற, உமது அன்பின் சாட்சிகளாய் திகழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வானகக் கொடைகளை வழங்கிவரும் எம் இறைவா! எம் நாட்டில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலில் எம்மை ஆளும் தலைவர்கள் உமது அன்பின் கட்டளைகளை ஏற்று, எங்களின் அடிப்படை உரிமைகள், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் நாட்டையும், எங்கள் மக்களையும் வழி நடத்த தூயஆவியின் வழியாக ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. நலமளிக்கும் வல்லவரே! எம் இறைவா! தொற்றுநோய்க்கு எதிரான எங்கள் போராட்டத்தில் எங்களோடு துணை நின்று போராடும் மருத்துவர்களுக்கு நல்ல ஞானத்தையும், நற்சுகத்தையும் அளித்து அவர்கள் விரைவில் நோய் அகற்றும் சிறந்த மருந்தை கண்டுபிடிக்க தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 


 www.anbinmadal.org

No comments:

Post a Comment