Monday, October 21, 2024

 ஆண்டின் பொதுக்காலம் 30 ஆம் ஞாயிறு - ஆண்டு 2

மறைபரப்பு ஞாயிறு
Bible Skit Healing of the Blind Man

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எரேமியா 31:7-9
எபிரேயர் 5:1-6
மாற்கு 10:46-52

திருப்பலி முன்னுரை:

பார்வையில்‌ பயணிக்க விரும்பும்‌ அன்பு சகோதரர்‌ சகோதரிகளே, இன்றைய திருவழிபாடு நமக்குச் சிறப்புச் செயல்‌பாட்டளர்களாக நாம்‌ வாழ அழைப்பு விடுக்கிறது. தந்தை தம்‌
தலைப்பிள்ளையைப்‌ பேணிப்‌ பாதுகாப்பது போல நமது வானகத் தந்தையும்‌ நம்மை ஒன்றாகக்‌ கூட்டி சேர்த்து கரிசனையுடன்‌ காத்து வருகின்றார்‌. அவர்‌ தம்‌ மகன்‌ இயேசுவை நமக்குத்‌ தன்னிகரற்ற தலைமைக்‌ குருவாக வழங்கியுள்ளார்‌. அவர்‌ வழியாக நம்மைப்‌ பல்வேறு இன்னல்கள்‌ மற்றும்‌ இடையூறுகளிலிருந்து விடுதலை பெறும்‌ விதத்தில்‌
வழிநடத்தி வருகிறார்‌.
தேவையிலிருக்கும்‌ பார்வையற்றவரான பர்த்திமேயுவை இயேசு தம்மிடம்‌ அழைத்து வரச்‌ செய்து, அக - புற தடைகளை அகற்றி, அவருக்குப்‌ பார்வையளித்துப் புதுப்‌பாதையைக்‌ காட்டுகிறார்‌. பார்வையற்றவரிடமிருந்த நம்பிக்கை அவரைக்‌ குணப்படுத்தியதுபோல நாமும்‌ ஆண்டவர்‌ இயேசுவிடம்‌ எல்லாச்‌ சூழ்நிலைகளிலும்‌ நம்பிக்கை கொள்வோம்‌. அவரிடமிருந்து பெறும்‌ அனைத்து நலன்களையும்‌ பிறரோடு பகிர்ந்து வாழ நல்மனம்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ பங்கேற்போம்‌.

வாசக முன்னுரை :

முதல்‌ வாசக முன்னுரை :

வளமையோடும்‌ வலிமையோடும்‌ நாம்‌ நாளும்‌ வாழ நிறைவு நோக்கி நம்மை வழிநடத்துபவர்‌ நம்‌ ஆண்டவர்‌. அவரது செயலை நாம்‌ மகிழ்ந்து ஆர்ப்பரிக்க வேண்டும்‌. துன்பத்தில்‌ ஆறுதலும்‌ வறுமையில்‌ வளமையும்‌ வழங்கிச் சீரான பாதையில்‌ நம்மை நடத்தும்‌ ஆண்டவரைப்‌ புகழ்ந்தவண்ணம் இன்றைய முதல்‌ வாசகத்தைக்‌ கேட்போம்‌...

பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2. 2-3. 4-5. 6
பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.
1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவுக் கண்டவர்போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; -பல்லவி

2 "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி

3 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி

4 விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :

ஆரோனைத்‌ தலைமைக்‌ குருவாக ஆண்டவர்‌ தேர்ந்தெடுத்தார்‌. இவர்‌ வலுவின்மைக்கு ஆளானவர்‌. இவர்‌ கடவுள்‌ விதித்த நியமங்களின்படி பணி செய்யக்‌ கடமைப்பட்டிருக்கிறார்‌. இயேசுவைக்‌ கடவுள்தான்‌ தலைமைக்‌ குருவாக அழைத்து மேன்மைப்‌ படுத்தியுள்ளார்‌. இந்த இயேசு மெல்கிசெதேக்கின்‌ முறைப்படி என்றென்றும்‌ குரு என்பதை விளக்கும்‌ இன்றைய இரண்டாவது வாசகத்திற்குச்‌ செவிசாய்ப்போம்‌. சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற இரண்டாம் வாசகம் அழைக்கின்றது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்:

மறைபரப்பு ஞாயிறு சிறப்பு மன்றாட்டுகள்:

ஒவ்வொரு மன்றாட்டிற்குப் பிறகும், 'ஆண்டவரே! எம்மன்றாட்டைக் கேட்டு எம்மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்' என்று சொல்லவும்.

அகில உலகத் திருஅவைக்காகவும் அவர்தம் தலைவர்களுக்காகவும் மன்றாடுவோம்.

1. கிறிஸ்துவின் அன்பை அறிவிக்கும் நற்செய்தியாளர்களாக வாழும் பேரார்வத்தை மரபுரிமையாகப் பெற்றிருக்கும் நமது திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினருக்காக மன்றாடுவோம். இவர்கள் ஒளிக்கு சான்று பகிர்ந்திட தேவையான உதவியினையும் நல் உடல் உடல்நலத்தையும் தந்து அவர்களை வலிமைப்படுத்த இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஆண்டவரே! எம்மன்றாட்டைக் கேட்டு எம்மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.

மறைபரப்புப் பணியாளர்களுக்காகவும், மறைப்பணித் தளங்களுக்காகவும் மன்றாடுவோம்.

2. ஒவ்வொரு மறைத்தூது தளத்திலும் மறைத்தூதுப் பணியை மேற்கொள்கின்ற மறைத்தூதுப் பணியாளர்களுக்காகவும் மன்றாடுவோம். அவர்கள் உமது வார்த்தையை முதல் முறையாகக் கேட்பவர்களிடம் உம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட அன்பையும் இரக்கத்தையும் கருணையையும் அனுபவிக்கவும் பகிரவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஆண்டவரே! எம்மன்றாட்டைக் கேட்டு எம்மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.

மறைபரப்பு பணிக்கு உதவிபுரியும் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.

3. எங்கள் நல்லாயனே! மறைத்தூது பணிக்காகத் தாராளமாகப் பங்களிப்புச் செய்யும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். ஆரோக்கியத்தையும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வையும் அவர்கள் அனுபவிக்கும்பொருட்டு அவர்களை மேன் மேலும் ஆசிர்வதிக்க உம்மிடம் மன்றாடுகிறோம். மேலும் எல்லாவிதமான அடக்கமுறைகள், தீமைகள் மற்றும் துன்பங்களிலிருந்து பாதுகாத்திடவும் இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

ஆண்டவரே! எம்மன்றாட்டைக் கேட்டு எம்மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.


இத்திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் நம் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.

4. உமது அன்பையும், இரக்கத்தையும், கருணையையும் அனுபவிக்க எங்களுக்கு உதவிபுரியும். எங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தும்; நாங்கள் புரிகின்ற சின்னஞ்சிறிய செயல்களிலும், பேச்சிலும் உம்மைப் பறைசாற்றவும் எமக்கு உதவும். சிறப்பாக வாழ்வின் இருள் சூழ்ந்துள்ள இடங்களில் உமது ஒளியைத் தாங்குபவர்களாக எம்மை மாற்றிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆண்டவரே! எம்மன்றாட்டைக் கேட்டு எம்மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.

இறந்துபோன மறைபரப்பு பணியாளர்களுக்காக உம்மை மன்றாடுவோம்.

5:உமது திராட்சைத் தோட்டத்தில்  ப யாற்றும்போது, மரித்த மறைபரப்புப்  பணியாளர்களுடைய, சிறப்பாக, சரியான உணவும்  மருந்தும் எவ்வித அடிப்படை வசதிகள் ஏதுமின்றி,  நோய்வாய்பட்டு, சிறையில் இருந்தவர்களுடைய  ஆன்மாக்களை உம்மிடம் ஒப்படைக்கிறோம்.  அவர்களது மறைத்தூதப் பணிக்கான ஆர்வத்திற்கு  கைமாறு அளித்து, உமது வானக அரசில் உம்மோடு  இருக்க, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  

 ஆண்டவரே! எம்மன்றாட்டைக் கேட்டு எம்மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.
 
            

அல்லது


 1.அனைத்தையும் படைத்தாளும் எம் இறைவா!   எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவியர்கள், பொதுநிலையினர்   திருஅவையோடு மறைப்பணியச் சிறப்புடன் செய்யத் தேவையான ஞானத்தையும்,  விவேகத்தையும் பெற்றிடவும், சுயநலன்களை நோக்காமல், இயேசுவைப் பின்பற்றவும், மற்றவர்களுக்குச் சேவை புரியவும் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்கள் நம்பிக்கையான எம் இறைவா! நமக்கு எதிராக இருப்பவர்களைக் கடவுள் நம் சார்பாக மாற்றுவார். நம் குடும்பம், நண்பர்கள், ஏன் இந்த உலகமே நமக்கு எதிராக இருந்தாலும், நாம் கடவுளை இறுகப் பற்றிக்கொண்டால் அவர் எல்லாவற்றையும் நம் சார்பாக மாற்றிப்போடுவார் என்ற மேலான நம்பிக்கையும், மேலானதொன்று கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும் என்ற உயரிய எண்ணங்களைப் பெற்றிட வேண்டிய வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.ஏழைகளின் நண்பனே எம் இறைவாதேவையான இறைஅழைத்தல் தந்திடவும், அனைத்து கிறிஸ்தவர்களும் நற்செய்தியை அறிவுக்கும் கருவியாக மாறவும், அதற்குதேவையான ஞானத்தையும், மன உறுதியும் தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.இன்றைய நவீன காலத்தில் உலகில் ஏற்படும் நவீன மாற்றத்திற்குத் தங்களையே சுயத்தை இழந்துக் கலாச்சாரச் சீர்கேடுகள், சமூகத்திற்கு எதிரான தீயச் சிந்தனைகள் இளமையில் இறைபிரசன்னத்தை உணராமல் எதிர்கால வாழ்வை இழந்த எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைப் பின்பற்றி உமது சாட்சிகளாய் வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எமக்கு இரங்கும் தாவீதின் மகனே, எம் இறைவா! தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுதலைப் பெறவும், வருங்காலத்தில் எம்சந்ததினர் நற்சுகமும், மனபலமும், பொருளாதார வளர்ச்சியும் பெற்று இவ்வுலகில் உமது செய்வீரர்களாய் பணிசெய்திட அவர்களுக்கு ஞானத்தையும், திடமான நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment