Thursday, January 28, 2016

ஆண்டின் பொதுக்காலம் நான்காம் ஞாயிறு 31/01/2016


பொதுக்காலம் நான்காம் ஞாயிறுஇன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எரேமியா: 1:4-5,17-191
கொரி 12:31-13:13
லூக்கா 4:21-30


முன்னுரை:


இறைமகன் இயேசுவில் பிரியமானவர்களே!  ஆண்டின் நான்காம் ஞாயிறு திருவழிபாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறோம்.. அன்பே கடவுள்! இன்றைய வழிபாட்டின் மையக்கருத்து அன்பு. நற்செய்தியும் இறைவாக்கினர் பணி எவ்வளவு துன்பங்கள் நிறைந்தது என்றும்,  ஒரு உண்மையான இறைவாக்கினருக்கு அளவற்ற பிறரன்பு தேவைப்படுகின்றது என்பதையும் இன்றைய முதல் வாசகம்  எடுத்துரைக்கின்றது. பவுலடியார் அன்பின் பரிமணங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறார். அன்பு தான் இந்த உலகிலேயே மிகச் சிறந்த பண்பு என்று விளக்குகிறார்.

எரேமியா இறைவாக்கினரும், இறைமகன் இயேசுவும் இக்கட்டான நேரங்களில் இறைவனின் துணையை இறுதிவரைக் தங்கள் வாழ்வில் உணர்ந்த காரணத்தால்தான் எல்லா சவால்களையும் எதிர்கொண்டு துணிச்சலோடு தங்கள் பணி வாழ்வில் முன்னேற முடிந்தது.அன்பே உருவான இறைவன் அன்புச் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இந்த அவனிக்கு வந்தார். அவர் இந்த அன்பே எடுத்துரைக்கும் பணியாளராக அன்று போல் இன்றும்  திருமுழுக்கு மற்றும் மற்ற திருவருட்சாதனங்கள் வழியாக நம்மையும் அழைக்கிறார். நம்மில் எத்தனைபேர் இந்த அழைப்பை ஏற்று வாழ முன் வருகிறோம்?  சிந்தித்து நம் வாழ்வில் அன்பின் அழைப்பை ஏற்றுக் கொள்ள இறையருளை வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் மன்றாடுவோம். வாரீர்.

 

வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில்  எரேமியா இறைவாக்கினர் வழியாக "தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்." என்று நம் அனைவருக்கும் விடுக்கும் செய்தி என்னவெனில் இறைவனின் தூதனாய் இறையரசை அறிவிப்பதுதான். இவ்வாசகத்திற்கு செவிமெடுத்து ஆண்டவரின் அழைப்பையும், அவரின் உடனிருப்பை உணர்ந்துக் கொள்வோம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் அன்பின் பரிமாணங்களை பற்றிக் கூறும் போது அன்பு தான் எல்லாவற்றிலும் மிகச் சிறந்தது. அனைத்தும் அன்பின் அடிப்படையில் அமையாமல், போட்டி, தற்புகழ்ச்சி, பெருமை இவற்றின் அடிப்படையில் அமைந்தால் அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதை மிகத் தெளிவாக சித்தரித்துள்ள இந்த அன்பின் கவிதையை கேட்டு மனதின் ஆழத்தில் பதிவுச் செய்து மகிழ்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 71: 1-2. 3-4. 5-6. 15,17

பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.

ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். -பல்லவி

 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.  என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். -பல்லவி

 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.  பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். -பல்லவி

என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும்  எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும்  நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். -பல்லவி

மன்றாட்டுகள்:


1.திருப்பொழிவு செய்யப்பட்டவர்களை, அனைத்து தீங்கிலிருந்தும் விடுவித்துக் காப்பவரே எம் இறைவா!   திருத்தந்தை முதல்  பொதுநிலையினர் வரை அனைவரையும் உமது இறைதூதுப்பணியாளராக நீர் விடுத்த அழைப்பை நன்கு உணர்ந்து உமது அன்பும்,  உடனிருப்பே எங்களுக்கு இவ்வுலகில் எல்லா வெற்றிகளையும் தேடித்தரும் என்பதை உணர்ந்துச் செயலாற்ற  வேண்டிய நல்ல வரங்களை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.உயர்ந்த இடத்தில் எம்மை நிலையாய் நிற்கச் செய்யும் இறைவனே! எங்கள் குடும்பங்கள் உமது அன்பை நிறைவாய் பொழிந்து, நாங்கள் உம்மால் தேர்ந்துக் கொள்ளப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தவர்களாக வாழவும், உமது அன்பின் சாட்சிகளாக இவ்வுலகில் வலம் வரவும், இறையரசை அறிவிப்பவர்களாகவும் வாழவேண்டிய அருள்வரங்களை நிறைவாய் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நீதியோடும், நேர்மையோடும் செயலாற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றவரே எம் தந்தையே இறைவா! அன்பே பிரதானம் என்பதை எம்  நாட்டு தலைவர்களும் மக்களும் உணர்ந்திடவும்;  பொறுமை, பரிவு போன்ற அன்பின் விழுமியங்களை தங்கள் வாழ்வில் பெற்று சமத்துவ சமுதாயத்தை அமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பே உருவான இயேசுவே, இன்றைய நாட்களில் உலகமெங்கும் நிலவும் போட்டிகளுக்கும், பயங்கரவாதத்திவிற்கும் முக்கிய காரணமான அன்பில்லாமையைப் போக்கிடவும், அகதிகளாய் பிறநாடுகளுக்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு வேண்டி அடைக்கலமும், அவர்களின் தனித்தன்மைகள் போற்றப்படவும், எல்லோரையும் தம் சகோதர சகோதரிகளாய் ஏற்றுக்கொள்ள நல் எண்ணங்களை அருளவேண்டி உம்மை மன்றாடுகிறோம்.

Visit www.anbinmadal.org

No comments:

Post a Comment