Wednesday, May 11, 2016

தூய ஆவியாரின் பெருவிழா 15/05/2016



தூய ஆவியாரின் பெருவிழா







இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருப்பலி முன்னுரை:

அன்புச் சகோதரச் சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசுவின் துணையாளராம் தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாட அன்று மாடியில் கூடியிருந்தத் திருத்தூதர்கள் போல நம் ஆலயத்தில் ஒன்றிணைந்து ஆவலுடன் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள்!
மரியாளோடு
ஒரு மனத்தோடுகூடிச் செபிக்கும்வேளையில் துணையாளராம் தூய ஆவியின் அருட்பொழிவைப் பெற்றுக்கொண்டனர் சீடர்கள். பல வல்லசெயல்கள் அரங்கேறியது. கூடியிருந்த மக்கள் தத்தம் மொழிகளில் சீடர்கள் பேசியதைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தனர். புதிய ஆற்றல் பெற்றுப் புதுபொலிவுடன் பயம் தெளிந்தச் சீடர்கள் இறையரசை அறிவிக்க உலகெங்கும் புறப்பட்டுச் சென்றார்கள்.
தூய
ஆவியானவரின் வருகை நமக்குச் சொல்வது இதுதான். தூய ஆவியானவர் நம்மைத் தழுவிக்கொடுக்கும் தென்றல் அல்ல. மாறாக அவர் நம்மை வாரிச் சுருட்டும் சூறாவளி. தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட நம்மில் இன்னும் இவை இருக்கின்றது என்றால் இன்னொரு சூறாவளி நமக்கும் அவசியம்! அவற்றைப் பெற இன்றையத் திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய வாசகத்தில் திருத்தூதர்கள் தூய ஆவியானவரின் அருட்பொழிவுக்குப் பின் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்: அ. அவர்களின் நாக் கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்கள் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்குகின்றனர். மொழி அவர்களுக்கு இனி தடையல்ல. ஆ. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. 'எல்லாம் முடிந்தது!' எனப் பயந்து கொண்டு, விரக்தியிலும், கவலையிலும் சோர்ந்திருந்தவர்கள் தங்களின் கதவுகளைத் திறந்து வெளியே வருகின்றனர். இனி யாரும் அவர்களை அடைத்து வைக்கவோ, அவர்களின் வேகத்திற்குத் தடைப் போடவோ முடியாது. இந்தத் துணிச்சலை இவ்வாசகத்தின் மூலம் நாம் பெற அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

  இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் உரோமைத் திருஅவைப் பெற வேண்டிய மற்றொரு துணிச்சலை எடுத்தியம்புகின்றார். பவுலின் தூய ஆவியானவர் பற்றிய புரிதலை இங்கே காண்கின்றோம். 1.அவர் நம் உயிராக இருக்கிறார். 2. இந்த ஆவியானவரே இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர். இவரே நம்மையும் உயிர்த்தெழச் செய்வார். 3.நம் உடலின் தீச்செயல்களைச் சாகடிக்க இவரின் துணை நமக்குத் தேவைப்படுகிறது. 4.இவரால் தான் நாம் கடவுளின் மக்கள் என்ற அடையாளம் பெறுகின்றோம். 5.இவரின் துணையோடுதான் நாம் 'அப்பா, தந்தையே' என்று கடவுளை அழைக்க முடிகிறது. இவ்வாறாக, 'அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை விடுத்துக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற நமக்கு உறுதுணையாக இருப்பவர் தூய ஆவியார் என்று விளக்கமளிக்கும் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 104: 1,24. 29-30. 31,34

பல்லவி
: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எத்துணை மேன்மைமிக்கவர்
! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! -பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்
. உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்
. -பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக
! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!
நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்
. -பல்லவி

மன்றாட்டுகள்:


1.நாங்கள் செல்லும் இடமெல்லாமெம்மோடு பயணிக்கும் எம் இறைவா! திருஅவையின் அங்கத்தினர் அனைவரும் நீ தந்தத் தூய ஆவியால் தீமைகளை எரித்திடும் சுடராய், இருளகற்றி ஒளியுட்டு நன்மைப் பயக்கும் சுடராய், எம் பாதைக்கு வழிகாட்டும் அகல்விளக்காய், அமைதியின் ஒளிச்சுடராம் இயேசுவின் இறையரசை அறிவிக்கும் தீபங்களாய் இவ்வுலகில் அவரின் விழுமியங்களை வாழ்ந்துக் காட்டிடும் சீடர்களாய் நாங்கள் இருக்கத் தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

  பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!

2.உம் பேரருளால் எம்மை வழிநடத்தும்
எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூயஆவியை எழுந்தருள் செய்யும். எங்களை உருக்கித் துரு நீக்கி உங்களை உருமாற்றும். இயேசுவின் திருவுருவை எங்களின் உள்ளத்தில் உருவாக்கும். எம்மை ஆவியின் அக்னியால் நிரப்பும். அவரின் வரங்களாலும், கொடைகளாலும், கனிகளாலும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அருட்பொழிவு செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!

3. சாவின் இருள் சூழ்ப் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தால் எம்மைப் பாதுக்காக்கும் இறைவா! எம்மை வழி நடத்தும் அரசியல் தலைவர்களின் எண்ணங்களைப் புனிதம் பெறச் செய்யும். அவர்களின் இதயத்தில் உம் அன்புத் தீயை மூட்டும். அனைவரையும் அன்புச் செய்யும் உள்ளத்தைக் கொடுத்தருளும். அவர்கள் செய்யும் பணிகளில் சமுக நீதியை நிலைநாட்டவும், மக்கள் பேணிக்காத்திட வேண்டிய நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!

4. எம் கால் கல்லில் மோதாதபடித் தூதர்களால் எம்மைத் தாங்கிக் கொள்ளும் எம் இறைவா! தூய ஆவியின் ஒளியால் எங்கள் பங்கிலுள்ள இளையோரின் இதயங்களுக்கு அறிவூட்டும். அவர்கள் சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், ஞானக்கதிர்களை அவர்கள் மேல் பொழியுமாறும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!

No comments:

Post a Comment