Wednesday, June 22, 2016

பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு 26/06/2016

பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருப்பலி முன்னுரை:


பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறை பொதுநிலையினரின் ஞாயிறாக் கொண்டாட திருஅவை அழைக்கும் இவ்வேளையில் நம் ஆலயத்தில் ஒருமனதோராய் குழுமியிருக்கும் இறைமக்களாகிய உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
கலப்பை, நுகம் என்ற வார்த்தைகள் இன்றைய வாசகங்களை அலங்கரிக்கும் சொற்கள். இன்றைய முதல் வாசகத்தில், கலப்பை பிடித்து உழுது கொண்டிருந்த எலிசாவைத் தேடி வந்து தன் சீடராக எடுத்துக் கொள்கின்றார் இறைவாக்கினர் எலியா. நற்செய்தி வாசகத்தில் 'கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல' என இறையாட்சிக்கான சீடத்துவத்தின் பண்பு பற்றிச் சொல்கின்றார் இயேசு. கிறிஸ்துவில் உயிர்பெற்றெழுந்த கலாத்திய திருஅவை மக்கள் மீண்டும் அடிமைத்தனம் என்னும் 'நுகத்தை' ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று இரண்டாம் வாசகத்தில் அறிவுறுத்துகின்றார் பவுல். கலப்பை களத்தில் இறங்கினால்தான் கலப்பையின் நோக்கமும், உழுபவரின் நோக்கமும், விவசாய நிலத்தின் நோக்கமும் நிறைவேறுகிறது. இவைகளின்  நோக்கம் நிறைவேறவில்லை என்றால் விதை விதைப்பதும், விதை விளைச்சல் தருவதும் சாத்தியமல்ல. நம் சிந்தனையில் இறைவார்த்தைகளால் நம் உள்ளத்தை உழுது நிலைவாழ்வு என்னும் விளச்சலை அடைய ஈடுபாடு உள்ள கிறிஸ்துவ வாழ்வை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள இத்திருப்பலிக் கொண்டாடங்களில் உளமாறப் பங்குக்கொண்டு செபிப்போம்.


வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில், கலப்பை பிடித்து உழுது கொண்டிருந்த எலிசாவைத் தேடி வந்து தன் சீடராக எடுத்துக் கொள்கின்றார் இறைவாக்கினர் எலியா. எலிசா, 'நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும் என்று கேட்க  'சென்று வா!' என அனுமதிக்கின்றார் எலியா. எலிசாவும் தன் இல்லம் சென்று தன் மாடுகளைப் பிடித்து அடித்து, தன் கலப்பையை நெருப்பிட்டு, இறைச்சியைச் சமைத்து தன் இல்லத்தாரோடு விருந்துண்டு அவர்களிடம் விடைபெறுகின்றார். ஆக, தான் செய்த விவசாயப் பணியை அடியோடு ஒழித்து தன் இறந்தகாலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றார் எலிசா. இறைஅழைத்தலை ஏற்ற நம்மை அழைக்கும் இந்த வாசிகத்திற்குக்  கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

 இன்றைய இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர் பெற்றுள்ள உரிமை வாழ்வு பற்றி பேசும் திருத்தூதர் பவுலடியார், அந்த உரிமை வாழ்வில் இணைந்த ஒருவர் தான் கொண்டிருந்த இறந்த காலத்தை, திருச்சட்டத்தின் அடிமை வாழ்வை, அதற்குத் துணை போகும் ஊனியல்பை முற்றிலும் தூக்கி எறிய வேண்டும் என அறிவுறுத்துகின்றார். இறந்த காலத்தையும், ஊனியல்பையும் கழுத்தை அமுக்கும் நுகம் என்று உருவகிக்கும் பவுல், 'மீண்டும் அடிமைத் தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்'  எனக் கட்டளையிடுகின்றார். கிறிஸ்துவில் உயிர்பெற்றெழுந்த கலாத்திய திருஅவை மக்கள் மீண்டும் அடிமைத்தனம் என்னும் 'நுகத்தை' ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கருத்துடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 16: 1-2, 5. 7-8. 9-10. 11

பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.


இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்' என்று சொன்னேன்.  ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.  ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். பல்லவி
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி

 மன்றாட்டுகள்:


1.  அன்புத் தந்தையே! எம் இறைவா!  அருட்பணியாளர்களும், பொதுநிலையினரும் இணைந்து செயல்பட்டால் அங்குத்  திருச்சபை நிறுவப்படுகின்றது என்ற மொழிக்கேற்ப எம் திருஅவையில் அருள் வாழ்வில் பொதுநிலையினர், குருநிலையினர் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் கிறிஸ்துவின் மாண்பிலும், மகத்துவத்திலும் இறையாட்சி பணியினை தமது சொல்லாலும், செயலாலும் சான்று பகிர்ந்திட வரமருள வேணடுமென்று பொதுநிலையினர் ஞாயிறு ஆன இன்று புனித தாமஸ்மூர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஏழைகளைத் தேடிவந்த எம் அன்பு தெய்வமே! இன்றைய உலகில் பாவத்தைக் குறித்த பயமோ கவலையோ அச்ச உணர்வற்ற இக்ககாலத்தில் அறிவியல் முன்னேற்றங்கள் போன்ற சில மாயைகளை மனத்தில் கொண்டு உம்மோடு ஒப்புறவாக தூய மனச்சான்றுடன் எங்கள் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்திட எங்களை நல்வழி கொணர வேண்டுமென்று பொதுநிலையினர் ஞாயிறு ஆன இன்று புனித தாமஸ்மூர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நல்ஆயனே எம் இறைவா இக்கால விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் தொழில் முன்னேற்றங்கள் இவைகளால் ஏற்படும் அறிவு சார்ந்த செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இறைஅச்சம் குறைந்தவர்களாய் உலகம் போக்கிலான வழிகாட்டுதலில் தங்கள் வாழ்வை இழந்த  எம் இளையோர் சிறுவர், சிறுமிகள் ஆகிய அனைவரும் உண்மையை உணர்ந்தவர்களாக இறைஅச்சமே ஞானத்தின் தொடக்கம் என்பதை உணர்ந்து வாழ தேவையான அருளை பொழிய வேண்டுமென்று பொதுநிலையினர் ஞாயிறு ஆன இன்று புனித தாமஸ்மூர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நலன்களின் நாயகனே  எம்  இறைவா! இன்றைய உலகில் பரவிவரும்  புதிய நோய்கள், புதிய மருந்துகள் இவைகளினால் மனுகுலம் வலுவிழந்து அநேக பாவத்தினால் வரக்கூடிய வியாதிகளிலிருந்தும் உமது குணமளிக்கும் ஆற்றலினால் நாமே உம்மை குணமாக்கும் ஆண்டவர் என்ற இறைவாத்தைக்கு ஏற்ப  எம் மனித சமுதாயத்தை உம் இரக்கத்தினால் தொட்டு குணமளிக்க  வேண்டுமென்று  பொதுநிலையினர் ஞாயிறு ஆன இன்று  புனித தாமஸ்மூர் வழியாக  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எம் இறைவா! எம் வாழ்வில்  நாங்கள் சந்தித்த அனைத்து போராட்டங்களும், படும் வேதனைகளும் எதிர்காலத்தில் எமக்கு கிடைக்கும் வெற்றிவாகை என்பதைனை உணர்ந்து குடும்பவாழ்வில் தனிமை, வருத்தம், நெருக்கடி, தோல்வி, வேதனை இவைகளிலிருந்து மீண்டும் எழுந்திட குடும்பத்த்தில் அன்பும் ஒற்றுமையும் தழைத்து ஓங்க  வேண்டுமென்று பொதுநிலையினர் ஞாயிறு ஆன இன்று  புனித தாமஸ்மூர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


No comments:

Post a Comment