Wednesday, June 1, 2016

பொதுக்காலம் ஆண்டின் பத்தாம் ஞாயிறு 05/06/2016

பொதுக்காலம் ஆண்டின் பத்தாம் ஞாயிறு  05/06/2016

 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.திருப்பலி முன்னுரை:


இறைஇயேசுவில் அன்பார்ந்த மக்களே! பொதுக்காலம் ஆண்டின் பத்தாம் ஞாயிறைக் கொண்டாட நம் ஆலயத்தில் கூடியிருக்கும் இறைமக்களாகிய உங்களை வாழ்த்தி அன்புடன் வரவேற்கின்றோம்.

இயேசு கைம்பெண்ணைக் கண்டு அவர் மீது மனமிரங்கி அழாதே என்றார். இந்த இறைவன் இரக்கம்தான் நம் துன்ப வேளையில் துணை நிற்கிறது. இரக்கத்தை இறைவனிடமிருந்து பெறுகின்ற நாம் பிறருக்கும் இரக்கம் காட்டும் மக்களாக வாழ வேண்டும் என்று இன்றைய இறைவாக்குகள் மூலம் இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

இறை இரக்க ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் இத்தகைய உணர்வு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்த்துச் செயல்பட இயேசு நம்மை அழைக்கிறார். இந்த இரக்க குணமும், இரக்கச் செயல்பாடுகளும் மட்டும்தான் நம் வாழ்வின் இறுதிவரை ஏன் நம் இறப்புக்குப் பின்னும் நம்மோடு கூட வரும் என்பதை மறந்துவிடக்கூடாது.

நாமனைவரும் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக இயேசு தன் வாழ்வையே நமக்கு தந்தார். அந்த வாழ்வை நாம் பெற்றுக் கொள்ள இத்திருப்பலிக் கொண்டாடங்களில் உளமாறப் பங்குக்கொண்டு செபிப்போம். அவர் தரும் நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்வோம்.வாசக முன்னுரை:முதல் வாசக முன்னுரை:


இறைவாக்கினர் எலியா தங்கியிருந்த வீட்டுத்தலைவியான கைம்பெண்ணின் மகன் இறந்தவிட அப்பெண்மணி எலியாவிடம் தனது துயரத்தையும் இழப்பையும் தெரிவிக்கிறார். இறைவாக்கினர் எலியா தந்தையாம் கடவுளிடம் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர் அளிக்குமாறு வேண்டினார். இறைவனும் மனமிரங்கி அந்த மகனுக்கு உயிர் அளித்த்தார். அப்பெண் எலியாவை கடவுளின்  அடியவர். உண்மை கடவுளின் வார்த்தைகளை எடுத்துரைப்பவர் என்று நம்புகிறார். இச்சம்பவத்தை இன்றைய முதல் வாசகம் ஒன்று அரசர்கள் நூலிலிருந்து வாசிக்க அதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:


 இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் தன்னைப் பற்றிய சுயவிளக்கம் அளிக்கின்றார். யூதகுலத்தில் பிறந்து யூதநெறிகளை சிறுவயது முதலே சிறப்பாக கடைபிடித்து வந்ததையும், இறைவன் அவர் பிறக்கும் முன்பே அவரை பிறவினத்தருக்கு நற்செய்தி அறிவிக்கும் பணிக்குத் தேர்ந்து கொண்டதையும், அவர் வழங்கி வந்த செய்திகள் அனைத்தும் இறைமகன் இயேசு அவருக்கு அளித்தது என்றும் இதுவரை தான் எந்த திருத்தூதர்களையும் சந்திக்கவில்லை என்றும் பதிவு செய்கிறார்.  இயேசுவால் அழைக்கப்பட்டதை ஏடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கருத்துடன் செவிமெடுப்போம்.பதிலுரைப்பாடல். திபா. 30: 1,3-5,10-12.பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன். ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன். ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர். என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர். சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்.
பல்லவி:

இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள். தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும். அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும். மாலையில் அழுகை. காலையிலோ ஆர்ப்பரிப்பு.
பல்லவி:

ஆண்டவரே. எனக்குச் செவிசாயும். என்மீது இரங்கும். ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர். என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.
பல்லவி:

 

மன்றாட்டுகள்:


1.  நீ பிறக்கும் முன்னே நான் உன்னை தேர்ந்துக் கொண்டேன் என்றுரைத்த எம் இறைவா!  திருஅவையின் திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை அனைவரும் உமது அழைப்பை ஏற்று தங்கள் இருக்கும் நிலையே இருந்து திருத்தூதர் பவுலடியார் போல நற்செய்தி அறிவிக்கும் பணியில் சிறந்து விளங்கவும், உமது அழைப்பை ஏற்று தங்கள் வாழ்வை செம்மையாகிக் கொள்ள தேவையான ஞானத்தையும் ஆற்றலையும் நிறைவாக பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.2. ஆற்றல்மிக்க உம் இறைவார்த்தைகளை நாள்தோறும் எம்மைத் தேற்றி வரும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இருளின் பிடியிலிருக்கும் அனைவரையும் தொட்டு, அவர்களை மீண்டும் உயிர் பெறச் செய்து, உமது இரக்கத்தின் இறையனுபவத்தை பெற்றிடவும், இரக்கத்தின் நற்செய்தியினை அனைவருக்கும் அறிவித்திடவும் எமக்கு தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.3இரக்கமும் பேரன்புமிக்க எம் இறைவா!  எங்கள் மாணவ செல்வங்கள் புதிய கல்வி ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில்  அவர்களுக்கு நல்ல அறிவையும், பக்தியையும், சிறந்த நினைவாற்றலையும், நல்லொழுக்கத்தையும், அவர்களின் பெற்றோர்களுக்கு  நல்ல முடிவெடுக்கும் ஞானத்தையும், பொருளாதரத்தையும் தந்து உமது அருளை பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. அன்புறவுக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஊற்றாகிய இறைவா! எம்மை ஆளும்  தலைவர்கள் அனைவரையும் பிறர் அன்பிலும், சகோதரத்துவத்திலும், சுயநலமின்றி அனைத்து மக்களின் நலன்களுக்காக உழைப்பவர்களாகவும், தீவிரவாதத்திலிருந்து காக்கும் நல்ல உள்ளங்கள் கொண்டவர்களாக வாழ்ந்து மனிதம் மேன்பட உழைப்பவர்களாக மாறிட இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment