Thursday, July 14, 2016

ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு 17/07/2016

பொதுக்காலம் 16ஆம் ஞாயிறுஇன்றைய வாசகங்கள்:-

தொநூ 18:1-10
கொலோசையர் 1:24-28
லூக்கா 10:38-42

திருப்பலி முன்னுரை:-

பிரியமானவர்களே! பொதுக்காலம் 16ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்!

இன்றைய வழிப்பாட்டு வாசகங்கள் நமக்கு விருந்தோம்புதல் பற்றிக் கூறும் அதேவேளையில் நாம் முதலில் நிலைவாழ்வுக்குத் தேவையான நல்லதை நம்மில் பெற்றுக்கொள்வது என்பதையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

தன் கூடாரத்தின் வாயிலில் அமர்ந்திருக்கும் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க 'மூன்று மனிதர்கள் நிற்கின்றார்கள்.' இந்த 'மூன்று மனிதர்கள்'தாம் 'மூவொரு இறைவனின்' முதல் அடையாளம் என்கிறது நம் கத்தோலிக்க இறையியல். தொடக்கக் காலச் சமூகத்தில், 'விருந்தோம்பல்' முதன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டது. இங்கு விருந்தோம்புதலை ஆபிரகாமும் சாராளும் இணைந்துப் பகிர்ந்துக் கொண்டார்கள். இந்த உலகிற்கு விருந்தினராக வந்த இயேசு கிறிஸ்து இந்த உலகின் மக்களுக்காகத் தாமே விருந்தாகின்றார். விருந்தினராக வந்தவர் தன் சிலுவைப் பாடுகள் மற்றும் இறப்பின் வழியாக விருந்தோம்புதலை நிறைவேற்றுகிறார். தன் உயிரையே கொடுக்கும் அளவிற்குத் துணிந்து நிற்கிறது இயேசுவின் விருந்தோம்பல்.இன்றைய நற்செய்தி வாசகம் நல்ல சமாரியன் எடுத்துக்காட்டின்'  தொடர்ச்சியாக இருக்கிறது. பிறரன்புக் கட்டளையின் விளக்கமாக 'நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு' இருக்கிறது என்றால், 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் ஆண்டவரை அன்புச் செய்வாயாக என்ற இறையன்புக் கட்டளையின் விளக்கமாக இருக்கிறது 'மார்த்தா-மரியா எடுத்துக்காட்டு.' இந்த உலகிற்கு வெறுங்கையராய் வரும் நாம் அனைவருமே விருந்தினர்கள் தாம். நமக்கு விருந்துப் படைக்கும் இயேசுவிடம் இவ்வுலகில் நல்விருந்தினராய் வாழ்ந்திட இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:-முதல் வாசக முன்னுரை:-


'தேவதாரு மரங்களருகே ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தோன்றினார்' என்று தொடங்குகின்ற இன்றைய முதல் வாசகமான தொடக்கசுலில். “ஆபிரகாமின் காத்திருத்தல்“ பற்றி வாசிக்கின்ற நமக்கு இரண்டு விடயங்கள் புரிகின்றன: (1) ஆபிரகாம் வாழ்வில் ஏதோ முக்கிமான நிகழ்வு ஒன்று நடக்கப் போகிறது. (2) ஆபிரகாமின் காத்திருத்தல் அவரின் விருந்தோம்பல் பண்புக்குச் சான்றாக அமைகிறது. ஆபிரகாம் தன்னிடம் வந்த விருந்தினர்களுக்கு, காளையும், வெண்ணெயும், பாலும், தேனும், அப்பமும் விருந்தளித்தார். ஆனால், வந்திருந்த இறைவன் அவருக்கு ஒரு மகனை வாக்களித்து விருந்தோம்பலுக்குப் பதில் தருகின்றார். இறைவனின் இந்த வாக்குறுதி என்னும் விருந்தோம்பல்ஆபிராகமின் விருந்தோம்பலையும் மிஞ்சி விடுகிறது. ஆபிரகாம் வாழ்வில் நடைப்பெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:-


  இன்றைய இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்துவின் துன்பம் மற்றும் மாட்சி பற்றிய இறையியலைக் கொலோசை நகரத் திருஅவைக்கு எழுதும் பவுல், தான் இந்தநேரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் துன்பமும், திருஅவையினர் பட்டுக்கொண்டிருக்கும் துன்பமும் கிறிஸ்துவில் அவர்கள் இணைந்திருப்பதற்கான அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டி, துன்பத்தைப்போல மாட்சியும் பின்தொடரும் என வாக்குறுதியை தருகின்றார். இவ்வாறாக, கிறிஸ்துவின் விருந்தோம்பல் அவரின் தற்கையளிப்பிலும், அவர் தன் மக்களுக்குத் தரும் மாட்சிமையிலும் அடங்கியிருக்கிறது என்பதைத் தெளிவுப்படுத்தும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.பதிலுரைப் பாடல்

திபா 15: 2. 3-4. 5
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

மாசற்றவராய் நடப்போரே! இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமாற உண்மை பேசுவர். -பல்லவி

தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்;தம் அடுத்தவரைப் பழித்துரையார்.நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்;
ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்;தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். -பல்லவி

தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்;இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி

மன்றாட்டுகள்:-


1. இறைத்தந்தையே எம் இறைவா! முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக நீர் செய்த அனைத்துவியத்தகுச் செயல்களை நினைவு கூர்ந்துத் திருஅவை, புதிய ஆற்றலோடு அனைத்து மாந்தருக்கும் உம் இறையரசை வழங்கிடத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.   விருந்தோம்பல் என்பது 'முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் செய்யப்படும்' ஒரு செயல். இந்த நான்கில் ஒன்று தவறினாலும் விருந்தினர் முகம் சுளிக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்து எங்களை நாடி வரும் எங்கள் உறவினர்களையும், விருந்தினரையும் அன்புடனும், மகிழ்ச்சியுடன் நடத்திக் செல்லத் தேவையான பரந்த மனதினை அருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.  'நீ இன்று ஒருவருக்குக் கொடுக்கும் தண்ணீரை நாளை உனக்கு வேறொருவருக்குக் கொடுப்பார்' என்ற அனுபவமொழியினை மனதில் ஏற்று ஏழை,பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளைக் களைந்துத் தேவையில் இருப்பவர்களுக்குப் பரந்த உள்ளத்தோடு தன்னலமற்ற சேவைப் புரியவும்,இதையே இயேசுவின் சவாலாக ஏற்று வெற்றிப் பெற இறைஇரக்கத்தின் ஆண்டில் சிறப்புடன் பணிப் புரிய உமது அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.  இக்காலத்தில் நாங்கள் படும் துன்பங்கள் , எதிர்காலத்தில் வரப்போகும் மாட்சிமைக்காக என்பதனை உணர்ந்து நாங்கள் உலகில் நிலவும் சாதி, இனம், மொழி, சமயம் இவற்றால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து மனுக்குலம் முழுவதும் சமத்துவம், சகோதரத்துவம் நிலவிட வேண்டி உம் ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org


No comments:

Post a Comment