Thursday, July 21, 2016

பொதுக்காலம் ஆண்டின் 17வது ஞாயிறு: 24-07-2016

பொதுக்காலம் ஆண்டின் 17வது ஞாயிறு:lords prayer

இன்றைய வாசகங்கள்:


தொடக்க நூல் 18:20-32
கொலோசையர் 2:12-14
லூக்கா 11:1-13திருப்பலி முன்னுரை:


 பொதுக்காலம் ஆண்டின் 17 ஆம் ஞாயிறுத் திருப்பலியில் பங்குக்கொள்ள ஆர்வமுடன் ஆலயம் வந்துள்ள இறைஇயேசுவின் அன்பர்களை அன்புடன் வரவேற்கிறோம். நல்ஆசானாக இருந்து செபிக்கக் கற்றுத்தருகிறார் நம் இயேசு. இறைவேண்டல் என்பது இறை-மனிதத் தொடர்பு சாதனமாகும். செபமே கிறிஸ்துவ வாழ்வின் அடிப்படையும் ஆணிவேருமாகும். இதனைச் சரியாகப் புரிந்துக் கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு உதவுகின்றன. ஆபிரகாமின் இறைவேண்டுதலைக் கேட்ட இறைவன் நல்லவர்களுக்காகத் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவைக்க முன்வருகிறார். நம்மைப்போலப் பழிவாங்கும் உணர்வு இறைவனிடம் இல்லை. தயாளமுள்ள இறைவனிடம் நம் செபங்களுக்கு எதிர்ப்பார்ப்பதைக் காட்டிலும் சிறப்பாக நம்மை நன்மைகளால் நிரப்புகிறார். கிறிஸ்துவின் வழியாக மாந்தர்க்கும் இறைவனுக்கும் இருந்த இடைவெளி நீங்கியது. தந்தை என்று அழைத்துச் செபிக்கக் கற்றுத் தந்த இயேசு நம் வாழ்வில் எது நடந்தாலும் மனநிறைவோடு வாழும் வரம் தான் சிறந்தது என்று உணர்த்துகின்றார். இதையே புனிதப் பவுலடிகளார் நாமனைவரையும்” இடைவிடாது செபியுங்கள். என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசுவில் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே! என்று அழைக்கின்றார். இதனை உணர்ந்தவர்களாக இணைந்துச் செபிப்போம் இத்திருப்பலிக் கொண்டாடத்தில், நிறைவாழ்வு நம் உள்ளத்தில் இல்லத்தில் நிறைந்திட....

வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாமைச் சந்தித்த மனிதர்கள் நேராக சோதோம், கொமோரா நகரங்கள் நோக்கிச் செல்கின்றனர். அந்த இரண்டு நகரங்களிலும் பாவம், குறிப்பாக பாலியல் பிறழ்வு பெருகியிருந்ததால், அதை அழிக்கப் புறப்பட்டுச் செல்கின்றனர் இந்த இறைமனிதர்கள். அவர்கள் அவ்விதம் போய்க் கொண்டிருக்க, சோதோம்-கொமோரா அழிவைப் பற்றி கடவுள் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துவதும், அந்நகரங்களின் நீதிமான்களுக்காக ஆபிரகாம் இறைவனிடம் பரிந்து பேசுவதுமே இன்றைய முதல் வாசகம்.ஆபிரகாமின் இந்த உரையாடல் அல்லது செபம், அவருக்கும் இறைவனுக்கும் இருந்த உறவின் நெருக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்ற இவ்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகமுன்னுரை:

ஆபிரகாம் கடவுளின் முன்னிலையில் நின்று இறைவனிடம் பரிந்து பேசினாலும், கடவுளுக்கும் அவருக்கும் இடையே ஒரு திரை இருக்கின்றது. இந்தத் திரை இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாக அகற்றப்பட்டு விட்டது என்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் . 'கிறிஸ்துவால் வரும் நிறைவாழ்வு' பற்றி கொலோசை நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவோடு இறந்தவர்கள், அவரோடு உயிர் பெற்று எழுந்துள்ளார்கள் எனவும் சொல்லிவிட்டு, 'இறப்பு', 'கடன் பத்திரம்' என்ற இரண்டு உருவகங்கள் வழியாக, இறைவனுக்கும் மனிதருக்கும் நடுவே இருக்கும் திரை அகற்றப்பட்டதை விளக்குகின்றார்.இவ்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2. 2b-3. 6-7. 7-8
பல்லவி: ஆண்டவரே, நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்.

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.  உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். -பல்லவி

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.  நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி

ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்;ஆனால், செருக்குற்றோரைத் தொலையில் இருந்தே அறிந்து கொள்கின்றீர்.  நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; -பல்லவி

உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.  நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். -பல்லவி

மன்றாட்டுகள்:-


1. மேன்மையானவராக இருக்கும் எம் வானகத் தந்தையே!இறைவா! உம் திருஅவையிலுள்ள அனைவரும் ஒருவர் ஒருவருக்காய் பரிந்துரைத்துச் செபிக்கவும், உம் திருப்பணியின் நிமித்தம் தீவிரவாதிகளிடம் துன்புறும் எண்ணற்ற எம் திருஅவையின் திருப்பணியாளர்களுக்கு உறுதியாக விசுவாத்தையும், பாதுகாப்பையும் நல்கிடவும், இறையாட்சி அனைவர் உள்ளத்திலும் நிறைந்திடத் தேவையான வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. எமக்காய் எப்பொழுதும் கரம் விரித்துக் காத்திருக்கும் என் இறைவா! செபம் என்பது உமக்கும்  எமக்கும் உள்ள உன்னத உரையாடல். அதில் கேட்டும் கிடைக்காமல் போனதும் உண்டு. கேட்காமல் நீர் வாரிவழங்கியது பலவும் உண்டு என்பதனை உணர்ந்து என்ன நேர்த்தாலும் நன்றியோடு உம்மைப் போற்றிட, தன்னலம் பாராமல் அனைவருக்குமாய் செபித்திட நல்மனம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.நாம் இயேசுவைப் பின்பற்றி, தூய ஆவியாரின் துணையோடு, தந்தையைப் போல் இரக்கமுள்ளவராக மாறவும், ஏழைகள், தேவையில் இருப்போர் மற்றும் ஒதுக்கப்பட்டோருக்குத் தேவையான பிறரண்புப் பணிகளைப் புரியும் நல் மனதையும், எம் இளையோர் மனங்களில் விதைத்திடவும், தாம் பெற்றத்திறமைகளை நல்வழியில் பயன்படுத்தி நீர் விரும்புப் புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டிய வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்புத்தந்தையே இறைவா! உம்முடைய பிள்ளைகளாகும் அருளை எங்களுக்குத் தந்து கிறிஸ்துவின் ஒளியில் நடக்க எங்களை அழைத்துள்ளீர். பொய்மை என்னும் இருளில் நாங்கள் சிக்கிக் கொள்ளாமல், உண்மையின் பேரொளியில் நிலைத்து நின்றிட எங்களுக்கு அருள் புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.No comments:

Post a Comment