Wednesday, March 22, 2017

தவக்காலம் நான்காம் ஞாயிறு 26.03.2017

*தவக்காலம்  நான்காம் ஞாயிறு  26.03.2017*



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*
1 சாமுவேல் 16:1ஆ,6-7,10-13அ
1 எபேசியா 5:8-14
யோவான் 9:1-41


*முன்னுரை*

அன்புடையீர்,
தவக்காலம் நான்காம் ஞாயிறான இன்று உலகின் ஒளியாம் இயேசு கிறிஸ்துவின் அருளை நாடி ஆலயம் வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
பார்வையற்றவர் ஒருவர் இயேசுவால் தொடப்பட்டுகின்றார். பிறவியிலிருந்தே பார்வை இல்லாமல் போனது யார் குற்றம்? என்பதை அறிய சீடர்கள் ஆர்வம் கொள்கின்றனர். ஆனால் இயேசு இறைவனின் செயல்பாடுகள் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே அவருக்கு இப்படி நேர்ந்தது என்று கூறுகிறார். ஆம் பார்வை பெற்றவர் இறைமகன் இயேசுவிற்குச் சான்று பகர்கின்றார். ஆனால் அவரைச் சூழந்து கொண்டு கேள்விகள் கேட்டும் யூதர்களோ தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு இறைமகனுக்கு எதிராகக் குற்றம் காண விழைகின்றார்கள். பார்வையற்றவரோ யூதர்களுக்கு அஞ்சாமல் இயேசுவை மீட்பராக நம்பினார்.
கடந்த வாரம் வந்த சமாரியப்பெண்ணைப் போலவும், இந்த வாரம் வரும் பார்வையற்றவரைப் போலும் நாம் நேரடி அனுபவம் பெறவில்லை என்றாலும் இறைமகன் இயேசுவின் உடனிருப்பை எப்பொழுதும் உணரமுடியும். மேலே கூறப்பட்ட இருவரின் குறைகளிலிருந்து மீட்டு அவர்களுக்குப் புதிய வாழ்வை தந்தார். இதுபோல் அவர் தன் கரங்களை நீட்டி நம்மையும் மீட்கக் காத்துக்கொண்டிருக்கிறார். ஒளியின் மக்களாக வாழ அழைப்பு விடுக்கும் இன்றைய வாசங்களை உணர்ந்து புதுப் பார்வை பெற்று ஒளியின் மக்களாய் இன்றைய திருப்பலியில் கருத்துடன் பங்குகொண்டு நம்மில் புதுவாழ்வு மலரச் செபிப்போம். வாரீர்..

*வாசகமுன்னுரை*

*முதல் வாசக முன்னுரை*

இஸ்ரயேல் மக்களுக்கு அரசரை தேர்ந்தேடுக்கக் கடவுள் இறைவாக்கினர் சாமுவேலை அனுப்புகின்றார். மனிதன் பார்ப்பது, தீர்மானிப்பது ஒருவிதம். இறைவன் பார்ப்பது, தீர்மானிப்பது வேறுவிதம். மனிதன் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே பார்க்கின்றான். இறைவனோ இதயத்தைப் பார்க்கின்றார். எனவே தான் ஈசாயின் கடைசி மகன் தாவீதை அரசனாகத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. இவ்வாறு இஸ்ரயேல் மக்களின் அரசர் தெரிந்துக்கொள்ளப்பட்ட நிகழ்வுகளைப் பதிவுச் செய்தச் சாமுவேல் முதல் நூலிலிருந்து வரும் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் கூறுவது என்னவென்றால் யூதர்களைப் போல ஒளிதரும் மெசியாவை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டக்கூடாது. அவர்களைப் போல வெளித்தோற்றத்தை மட்டுமே பார்க்காமல், இதயத்தையும் பார்க்க வேண்டும். இதயம் இருண்டு போனால் ஒளி எங்கிருந்து வரும்? ஆண்டவருக்கு உகந்தது எதுவோ, நல்லது எதுவோ என்பதை ஆராய்ந்து பார்த்தது செயல்பட வேண்டும் என அழைப்பு விடுக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.


*பதிலுரைப் பாடல்*

பல்லவி : ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை!
திருப்பாடல்கள்: 23: 1-3, 3-4,5,6

ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார், அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார், மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன், உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.   பல்லவி


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் ' என்கிறார் ஆண்டவர்!


*மன்றாட்டுகள்*

1 உலகில் தோன்றும்  ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கும் எம் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், பொது நிலையினர் ஆகிய அனைவரும் உலகின் ஒளியாம் இறைஇயேசுவின் வார்த்தையாலும் உணவாலும் ஊட்டம் பெற்று உமக்கு உகந்தவராகவும், பணிவாழ்வில் உமக்கு உகந்தவற்றையே நாடவும் பிறரை நேர்மையான உள்ளத்தோடு அன்பு செய்து வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2. உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கும் எம் இறைவா! இருளில் மூழ்கி இருக்கும் எம் குடும்பங்கள் இத்தவக்காலத்தில் உம்மோடு ஒப்புரவாகி, பார்வை பெற்று இறைஇயேசுவின் உடனிருப்பை உணர்ந்தவர்களாவும், செபித்திருந்து உம் வல்லமையைப் பெற்றவர்களாகவும், இயேசுவின் சீடர்களாய் எமக்கு அடுத்திருப்பவர்கள் உம்மை எம்மில் கண்டு விசுவாசம் கொள்ள வேண்டிய வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3 உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கும் எம் இறைவா! மாந்தர்களின் பேராசையால் நாங்கள் இழந்த இயற்கைச் செல்வங்களை மீண்டும் பெற்ற வளமுடன் வாழவும், ஏழ்மையை எதிர்நோக்கித் தள்ளப்படும் விவசாய மக்களின் வாழ்வாதாரங்கள் மேன்மைபடவும், நீர் ஆதாரங்கள் செழித்தோங்க வேண்டிய மழையைப் பெற்றிடவும் அருள்மாரிப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4 உலகில் தோன்றும்  ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கும் எம் இறைவா! “ என்னோடு இல்லாதவர், எனக்கு எதிரியே” என்கிறார் இயேசு. நாம் அவரின் மக்கள் எனில், அவர் வழியில் நடப்பவர் எனில், நம் வாய் திறப்போம். சமூக அவலங்களுக்குக் குரல் கொடுப்போம். மக்கள் உரிமைகள் மறுக்கப்படும்போது, குரல் கொடுப்போம். இன்றைய சமூகச் சூழலில், நீதிக்காகக் குரல் கொடுப்பதும், ஒரு சாட்சிய வாழ்வே. எனவே நாமும் வாய் திறந்து  நீதிக்காகக் குரல் கொடுக்கவும், இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்படவும் வேண்டிய வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்...

              www.anbinmadal.org

No comments:

Post a Comment