Wednesday, March 29, 2017

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு 02.04.2017

*தவக்காலம்  ஐந்தாம் ஞாயிறு  02.04.2017**இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


எசேக்கியேல் 37:12-14

உரோமையர் 8:8-11
யோவான் 11:1-45


*முன்னுரை*


அன்புடையீர்,
தவக்காலம் ஐந்தாம் ஞாயிறான இன்று நம் சகோதரப் பாசம் நம்மில் எந்த நிலையில் இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க அழைப்பு விடுக்கும் இறைமகன் இயேசுவின் திருவடி நாடி வந்துள்ள அவரின் பாசத்திற்குரிய இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உயிர்ப்பித்த்து  இலாசரை மட்டுமல்ல, நம்பிக்கைகொள்ளாமல் இருந்த தன் சீடர்களையும் தான் என்பதை மறந்து விடக்கூடாது. தன்னோடு கூட இருந்தும் தன் மீது நம்பிக்கைக் கொள்ளாமல் இருந்த சீடர்களைக் குறித்து இயேசு வேதனை அடைந்திருக்க வேண்டும். அவர்களை எவ்வாறு நம்பிக்கைகொள்ள வைப்பது என்று சிந்தித்திருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் இலாசரின் இறப்பு சிறந்த வாய்ப்பாக இருப்பதை இயேசு உணர்கின்றார். எனவே தான் “நான் அங்கு இல்லாமல் போனது பற்றி உங்கள் பொருட்டு மகிழ்கின்றேன். நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது” என்றார்.

கடவுளின் மீது நம்பிக்கை இழந்து வாழ்வோர், உயிரோடு வாழ்ந்தாலும் அவர்கள் செத்தவர்களே ஆவர். உணவு இல்லாமல்  இரண்டு நாட்கள் தாக்குப் பிடிக்கலாம். ஏன் காற்று இல்லாமல் கூட சில நிமிடங்கள் இருந்து விடலாம். ஆனால் நம்பிக்கையில்லாமல் வாழ்வு என்பதே சாத்தியமில்லை. மனிதனின் பலம் நம்பிக்கையே! எனவே, நம் வாழ்வில் எச்சூழலிலும் நம்பிக்கை இழக்காமல் இருக்கும் வரத்தைத் தரவேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்.

*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


இஸ்ரயேல் மக்கள் இறைவனது கட்டளையை மீறியதன் காரணமாக அடிமைகளாக்கப்பட்டனர். பபிலோனியவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு ஒட்டுமொத்த இனமே மற்றொரு நாட்டில் அடிமையாகிக் கிடந்த்து. இது சாவுக்கு இணையானது என்பதை இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் எடுத்துரைக்கின்றார்.  அடிமைத்தனங்களில் வாழ்வோரின் நிலை செத்துப் போன மனிதர்களின் நிலையைவிட மேலானதல்ல. ஆனால் இத்தகைய மக்களுக்கும் வாழ்வதற்கு வழி உண்டு என்ற நம்பிக்கையை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


அடிமைத்தனத்தின் ஊற்றக இருப்பதுதான் பாவ வாழ்வு.  ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியாது என்றும், பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாகும் என்றும் குறிப்பிடுகிறார். இதன் உச்சக்கட்டமே தான் பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவு. இத்தகைய பாவ அடிமைத்தனத்திலிருந்து, அதனால் வரும் சாவிலிருந்து நமக்கு விடுதலை கொடுக்கவே இயேசு வந்தார் என்ற செய்தியைத் திருத்தூதர் பவுலடியார் அழகுடன் எடுத்தெய்ம்பும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.

*பதிலுரைப்பாடல் *

பல்லவி : ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது.
திருப்பாடல்: 130: 1- 8.

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை உம் முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர். மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின் றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். பல்லவி

விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி

பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


உயிர்த்தெழுதலும் வாழ்வு நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் எவரும் என்றுமே சாகமாட்டார்" என்கிறார் ஆண்டவர்.

*மன்றாட்டுகள்*

1 அன்புத் தந்தையே எம் இறைவா! திருஅவையில் உள்ள அனைவரும் ஓப்புறவு அருட்சாதனத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கின்ற தவறான கண்ணோட்டங்களைக் களைந்து, நல்ல ஒப்புறவு அருட்சாதனத்தில் பங்குகொண்டு இத்தவக்கால பலன்களை முழுமையாக அனுபவிக்கவும், இயேசுவின் உயிர்ப்பில் இணைந்திட வேண்டிய உறுதியான மனநிலையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கருணைக் கடலே எம் இறைவா! நாட்டை ஆளும் தலைவர்கள் அவரவர் இடத்தை பற்றிக் கொள்ள சுயநலத்தை நிலை நாட்டிக் கொள்ளாமல் உம் மக்களின் தேவைகளை உணர்ந்து பணி செய்யும் உத்வேகத்தை எம் நாட்டு தலைவர்களுக்கு வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3 அன்புத் தந்தையே எம் இறைவா! மாந்தர்களின் பேராசையால் நாங்கள் இழந்த இயற்கைச் செல்வங்களை மீண்டும் பெற்று வளமுடன் வாழவும், ஏழ்மையை எதிர்நோக்கித் தள்ளப்படும் விவசாய மக்களின் வாழ்வாதாரங்கள் மேன்மைபடவும், நீர் ஆதாரங்கள் செழித்தோங்க வேண்டிய மழையைப் பெற்றிடவும் அருள்மாரிப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 4 வெற்றி வேந்தனே எம்இறைவா! தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களை கிடைக்கப் பெற்று அதில் சாதனைப் படைத்திட தூயஆவியாரின் துணை வேண்டியும், அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டியும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  

No comments:

Post a Comment