Wednesday, May 3, 2017

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு 07.05.2017



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*



திருத்தூதர் பணிகள் 2:14அ  ,36-41
1 பேதுரு 2:20ஆ-25
யோவான்: 10:1-10

*முன்னுரை*


அன்புடையீர்,
உயிர்ப்பின் காலம் நான்காம் ஞாயிறான இன்று நல்லஆயன் ஞாயிறாகக் கொண்டாட இறைவனின் திருவடி நாடி நம் ஆலயம் வந்துள்ள இயேசுவின் அன்பார்ந்த இறைமக்களே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

இயேசு தன் ஆடுகளுக்கு முன்னே பாதுகாப்பாகச் செல்லும் நல்ல ஆயனாக இருக்கின்றார். இந்த நல்ல ஆயன் மானிடராகிய நம் வாழ்விற்காகத் தன்னையே தியாகம் செய்யும் தாயுள்ளம் படைத்தவராகத் தான் இருப்பதை இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியில் பதிவு செய்கின்றார்.

இயேசுவின் அன்புக்கு உரிய நாம் அவருடைய குரலைக் கேட்கின்றோம். அவர் நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். அவரது அழைப்பை ஏற்று நாமும் இயேசுவைப் போல் தந்தையுடன் இறைவேணடலில் நிலைத்திருந்து அவரின் சீரியப் பார்வையில் நம்மிடம் காணப்படும் அனைத்து வேறுபாடுகளைக் களைந்து இணைந்துச் செயல்படுவோம் இறையரசை அறிவிக்க..

இறையழைத்தல் ஞாயிறான இன்று அவரவர் இருக்கும் நிலையில் இருந்து இறைவனின் அழைத்தலை உணர்ந்து எத்தனை தோல்விகள் வந்து வாட்டினாலும் அதனை வெற்றிக்கொள்ள இத்திருப்பலியின் வழியாக நம் ஆயனாம் இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம் ஒர் அணியாக...


*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*

இறைமகன் இயேசுவைக் கொலைச் செய்த  இஸ்ரயேல் மக்களுக்குச் சீடர்கள் விடுக்கும் அழைப்பான ”மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும் பொருட்டுத் திருமுழுக்குப் பெறுங்கள். அப்போது தூயஆவியைப் பெற்றுக்கொள்ளவீர்கள் என்பதே ஆகும். இவ்வாறு மனம் மாற இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கின்றது. இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


நன்மை செய்தும் துன்பத்திற்கு ஆளாகும் நாம் அதைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும் போது அவை கடவுளுக்கு ஏற்றதாக உள்ளது. இவ்வாறே இயேசுவும் துன்புற்று ஒரு மாதிரியை விட்டுக் சென்றுள்ளார். இதைப் பின்பற்றி நீதிக்காகவே வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் வந்துள்ளோம் என்பதை எடுத்துக்கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் மனத்தில் உள்வாங்கிச் சிந்திப்போம்.


*பதிலுரைப்பாடல்*

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
திருப்பாடல் 23: 1-3a. 3b-4. 5. 6.

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.  பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.  அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். *பல்லவி*

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்.  மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். *பல்லவி*

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. *பல்லவி*

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். *பல்லவி*


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா




*மன்றாட்டுகள்*


1. நல்லஆயன் நானே என்ற இறைமகனின் திருப்பயணத்தில் இணைந்து இறைபணியாற்றிடத் திருப்பொழிவு செய்து தேர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், ஆயாகள், திருப்பணியாளர்கள் அருட் சகோதரர்கள், சகோதரிகள் பொதுநிலையினர் அனைவரும் நல்ல மேய்ப்பனாகத் தன் ஆடுகளுக்காகத் தன்னையே தருகின்ற ஆற்றல் கொண்டவர்களாகிட, தங்களின் அழைப்பை உணர்ந்து உழைத்திட வேண்டிய அருள்வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மை ஆளும் எம் தலைவா! நாட்டில் செயல்படும் தலைமை பொறுப்பாளர்கள் சுயநலம் கருதாமல் பொதுநலம் காணவும் ஏற்ற தாழ்வு இல்லா சமத்துவ சமுதாயம் படைத்திட அவர்களுக்கு போதுமான ஞானத்தையும் அருள் வாழ்வையும் அவர்கள் மீது பொழிந்து  உம் மக்களை பேணி காக்கும் நல்ல ஆயனாக செயல்படவேண்டிய வரத்திற்காக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை என்று இயம்பிய இயேசுவே! உமது திருப்பணியாளர்கள் சமுதாயத்தல் ஏற்படும் பிரச்சனைகளை வெகுவாக ஏற்றுக் கொண்டு உம் திருப்பணியைத் திறம்பட ஆற்றிட உம் துணையாளரின் துணை அவர்களோடு இணைந்து இறைமக்களை இறைவனிடம் அழைத்துச் செல்லும் ஆற்றலை இவர்களுக்கு நிறைவாய் பொழிந்து அவர்கள் உம் சாட்சிகளாய் வாழ்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன் என்றுரைத்த இயேசுவே! இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை நாங்கள் உணர்ந்து உம்பாதம் அவர்களை அர்ப்பணிக்கின்றோம். இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறையழைத்தலை உணர்ந்து நல்ல கனி தரும் உமது ஊழயர்களாக அவர்கள் வளர்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.                  
            
.
www.anbinmadal.org

No comments:

Post a Comment