Sunday, October 29, 2017

அனைத்துப் புனிதர்களின் பெருவிழா - 01-11-2017

அனைத்துப் புனிதர்களின் பெருவிழா


திருப்பலி முன்னுரை


    நமதாண்டவர் இயேசு நமக்கு அருட்பெருங்கொடைகளாக - பரிந்துரைக்கும் திருத்தாய் மரியாளையும், நம்மை ஞானத்தில்  பயிற்றுவிக்கும் ஒன்றாக, திருச்சபையையும் வழங்கியிருக்கின்றார். ‘புனிதர்களுடைய சமூக உறவை விசுவசிக்கின்றேன்” என்பது நம்மை வழிநடத்தும் திருச்சபையால் வரையறை செய்யப்பட்ட விசுவாச சத்தியங்களில் ஒன்று. இந்த விசுவாச சத்தியத்தை நாம் விழா எடுத்துச் சிறப்பிக்கும் நாளே இன்று.     ஆராதனையும், வழிபாடுகளும் ஆண்டவராம் கடவுளுக்கு மட்டுமே உரியன என்பதை நாம் அறிந்தே இருக்கின்றோம்.     புனிதர்களின் இணக்கமான தோழமையை நாம் நாடுவதற்கும், வணக்கத்துடன் கூடிய புகழ்ந்தேற்றலை அவர்களுக்கு புரிவதற்கும் அவர்களின் முன்மாதிரிகை மற்றும் நன்னெறி விட்டு விலகாத தூய வாழ்க்கையுமே காரணங்கள். மறைசாட்சிகளையும், மற்றுமுள்ள அனைத்துப் புனிதர்களையும் நாம் நினைவு கூர்ந்து கொண்டாடும் செயல், மனுக்குமாரன் இயேசுவின் மகத்துவத்தை மண்ணுலகு எங்கும் இன்னும் அதிகமாய், நற்செய்தியை பரப்பும் பணிக்கு தூண்டுகோல் ஆகிறது; துணை நிற்கின்றது; வலுச்சேர்க்கின்றது.

அன்று தங்களை உயர்ந்தவர்களாக நினைத்துக் கொண்டு வாழ்ந்திருந்த சதுசேயர் மற்றும் பரிசேயர் கும்பல்; மீட்பா; இயேசுவைப் பற்றி என்ன எண்ணங்களை கொண்டிருந்திருக்கும்?  சிலுவைச் சாவிற்கு கையளித்து, நசரேத்தூர் இயேசுவின் வாழ்வை முடித்துவிட்டோம்;    உயிருக்கு பயந்த சீடர்களை எங்கெங்கோ ஓடி ஒளிந்து கொள்ளச் செய்துவிட்டோம். செயல் வடிவம் பெறமுடியாது இயேசுவின் திட்டங்களை சிதைத்துப் போட்டுவிட்டோம் - இப்படித்தான் எண்ணியிருப்பார்கள்.     ஆனால் நிகழ்ந்திருப்பதென்ன?
    ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் அசைவுறாக் கோட்டையாய், விண் முகட்டை தொடும் உன்னத கோபுரமாய் தாய்த்திருச்சபை தனித்து ஒளிர்வதை அல்லவா இந்த உலகம் கண்டு வியக்கிறது!  இத்தகு மாற்றத்திற்கு கடவுளின் கருவிகளாக பயன்பட்டவர்கள் மறு கிறிஸ்துவாக வாழ்ந்து மரித்திருக்கும் மறைசாட்சிகளும், புனிதர்களுமே!  புவிதனில் வாழும் மனிதர் ஒவ்வொருவருக்குள்ளும் புனிதம் விதையாக புதையுண்டு தான் கிடக்கின்றது. அவ்விதைக்கு அன்பு நீர்ப்பாய்ச்சி, அறச்செயல்களால் உரமிட்டு, விசுவாச வேலி அடைத்துக் காத்து நிற்போம் எனின் இம்மையிலும், மறுமையிலும் மேன்மையை காண்போம். புனிதர் என்ற நிலைக்கு புவியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் உயர்த்தப்படுவது சாத்தியமா?
    விடை இதோ!  
அன்று இயேசு மார்த்தாவிற்கு கூறிய அறிவுரையை கடைபிடித்தும், மரியா அன்று கடைபிடித்த வாழ்க்கையை பின்பற்றியும் வாழ்வோர் புனிதராக உயர்த்தப்படுவது சாத்தியமே! காரியங்கள் பலவற்றைக் குறித்து கவலையும், உள்ளத்தில் கலக்கமும் கொள்ளாதிருக்க மார்த்தாவிற்கு கற்பிக்கின்றார் இயேசு.  இறைவார்த்தைகளை கருத்தாய்க் கேட்பதில் காலத்தை மரியா பயன்படுத்தியது இயேசுவால் பாராட்டப்படுகிறது. இறைவார்த்தைகளை சிந்தையில் இறுத்திச் செயலாற்றும் நல்ல பங்கினைத் தேர்ந்தவர்களாய் வாழ்ந்து சிறக்கும் வரம்வேண்டி, இத்திருப்பலியை ஒப்புக்கொடுத்து வேண்டுவோம்.


முதல் வாசக முன்னுரை (திருவெளிப்பாடு 7:2-4, 9-14)

கிறிஸ்தவ விசுவாசிகள் அச்சுறுத்தவும், துன்புறுத்தவும்பட்ட  வேதகலாப்பனை காலத்து நூலான திருவெளிப்பாட்டிலிருந்து நாம் முதல் வாசகம் கேட்கயிருக்கின்றோம்.  அன்றைய காலச்சூழல் கருத்தில் கொள்ளப்பட்டு அடையாளங்கள் மற்றும் காட்சிகள் மூலம் செய்திகள் தரப்பட்டுள்ளன. திருச்சபை ஒரு இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் என்ற எண் கொண்டும், கிறிஸ்து இயேசுவை ஆட்டுக்குட்டி என்றும், மறைசாட்சிகளை வெண்ணாடை அணிந்தவர்கள் என்றும் அடையாளப்படுத்தும் வாசகம் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (1 யோவான் 3:1-3)

இரண்டாம் வாசகமாக நாம் இப்போது கேட்க இருப்பது திருத்தூதர் புனித யோவானின் முதல் திருமுகத்திலிருந்து தரப்பட்டிருக்கிறது. இந்த திருமுகம் அன்புகூர்தலுக்கு முக்கியத்துவம் தருவதால் இதனை அன்புக் கடிதம் என்று அழைக்கின்ற சிறப்பினைப் பெற்றிருக்கிறது. தம் மக்கள் என்று நம்மை அன்பொழுக இறை தந்தை அழைப்பதோடு, நாம் தூயவர்களாய் திகழவும், ஆவலாய் அவரை எதிர்நோக்கவும் அழைப்பு விடுகிறது வாசகம். அதனை செவியேற்கும் ஆர்வம் மேலோங்கட்டும் நமக்கு.


விசுவாசிகளின் மன்றாட்டு - 1

இனிய இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா!
நீரோடைகளை வாஞ்சித்து தேடும் கலைமான்களிலும் மேலாக உம்மை நேசித்ததாலும் - வாழ்வளிக்கும் இறைவார்த்தைகளை ஆழ்ந்து தியானிப்பதில் அகமகிழ்வு கொண்டதாலும் எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர், இன்று விண்ணகப் புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.எங்கள் ஆண்டவரும், மீட்பருமான உமது அருளால் இறை ஞானத்திலும், இறையன்பிலும் நாங்கள் மென்மேலும் வளரும் வரம் வேண்டி திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.            

விசுவாசிகளின் மன்றாட்டு - 2

இனிய  இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா!
தங்களுக்கு தரப்பட்டிருந்த தாலந்துகளை தக்க விதமாய் பயன்படுத்தியதாலும் - சிறிய பொறுப்புகளில் சிந்தையோடு செயல்பட்டு, நம்பிக்கைக்கு உரிய நல்ல ஊழியர்களாய் சிறந்ததாலும், எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர், இன்று விண்ணகப் புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஆண்டவரும், மீட்பருமான உமது அருளால் எங்கள் வலுவின்மையில் உமது வல்லமை பரிபூரணமாக நிறைந்து பயனுள்ள ஊழியர்களாக நாங்கள் சிறக்கும் வரம்வேண்டி திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.

விசுவாசிகளின் மன்றாட்டு - 3

இனிய  இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா!
இடுக்கமும், குறுகலுமான வாழ்வின் வழியை கண்டுபிடித்து, தொடர்ந்து அதில் நடக்கத் துணிந்ததாலும் -  எதிர்பட்ட இடையூறுகளை ஏற்க துணிந்ததோடு, வாட்டிய உடல் வருத்தங்களை சகித்து, தடைபடாது ஆற்றிய கடமையினாலும், எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர், இன்று விண்ணகப் புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எங்கள் ஆண்டவரும், மீட்பருமான உம் வழியாய் உள்ளே செல்லும், வெளியே வரும் மற்றும் மேய்ச்சல் நிலத்தை கண்டுபிடித்து நிறைவடையும் வரம்வேண்டி திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.

விசுவாசிகளின் மன்றாட்டு - 4
இனிய  இயேசுவே - எங்கள் நேசரே - எம் இறைவா!
புரிந்த பல நற்செயல்களால் மக்களிடையே சுடராக ஒளிரிந்ததாலும் - அதனால் மக்கள் இறைதந்தையைப் போற்றி அவரின் மனதை குளிர்வித்ததாலும் எம்மிடையே மண்ணகத்தில் வாழ்ந்த பலர் இன்று விண்ணகப் புனிதர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். நற்செயல்கள் புரியும் அருங்குணத்தினை புனிதர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளவும், உலகின் ஒளியாகிய உம்மிடமிருந்து வாழ்விற்கு வழிகாட்டும் ஒளியை பெற்றுக் கொள்ளவும் வரம்வேண்டி திருச்சுதனே - உம்மை மன்றாடுகிறோம்.


நன்றி திரு MM.லூயிஸ் சாலிகிராமம் சென்னை

No comments:

Post a Comment