Tuesday, May 1, 2018

பாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறு

பாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறு

 

 இன்றைய வாசகங்கள்

திப 10:25-26, 34-35, 44-48
1யோவா 4:7-10
யோவா 15:9-17

திருப்பலி முன்னுரை:




வாசக முன்னுரை:

அன்பார்ந்த இறைமக்களே!

இன்று பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு. மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டும் உரித்தான தனி உடமை அல்ல; அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொது உடமை என்பது இன்றைய முதல் வாசகத்தில் தெளிவாக உணர்த்தப்படுகிறது. பேதுரு அறிந்து, அறிவித்த உண்மை : "கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்"

நாம் திருமுழுக்குப் பெற்றிருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் மீட்படைய முடியாது. திருச்சபையில் இருந்தால் மட்டும் போதாது, அன்பில் நிலைத்திருக்க வேண்டும். சென்ற ஞாயிற்றுக்கிழமை நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியின் தொடர்ச்சியான இன்றைய நற்செய்தியில் தம் ஆண்டவர் அன்பை வலியுறுத்துகின்றார்,

இயேசு நம்மை அன்பு செய்தது போன்று ஒருவர் மற்றவரை அன்புசெய்கின்றபோது இறைவன் நமக்கு எத்தகைய கைம்மாறு தருவார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டிக்கட்டத் தவறவில்லை

இந்த இடத்தில் தூய அகுஸ்தினார் உண்மையான அன்பு என்பதற்கு கூறுகின்ற விளக்கத்தினை நம்முடைய சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்போம். “அன்புக்குக் கைகள் உண்டு, அவை அழுவோரின் கண்ணீர் துடைப்பதாக இருக்கும்; அன்புக்குக் கால்கள் அவை அவலநிலையில் இருப்போருக்கு உதவிட விரைவதாக இருக்கும். அன்புக்குக் கண்கள் உண்டு; அவை அல்லல்படுவோர்மீது பரிவு கொள்வதாய் இருக்கும்; அன்புக்கு காதுகள் உண்டு. அவை அண்டிவருவோரின் குறைகள் கேட்பதாய் இருக்கும். அன்பிற்கு இதயம் உண்டு. அது அயலானுக்காகவும், அடுத்திருப்பவருக்காக துடிப்பதாக இருக்கும்” என்று அவர் கூறுவார். ஆம், உண்மையான அன்பு என்பது வெறும் சொல்லல்ல, அது செயல்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று ஒருவர் மற்றவரை அன்பு செய்வோம், எல்லாருக்கும் இரங்குவோம், அதன்வழியாக இறைவனின் அன்பு மக்களாக வாழ்வோம்.

 

முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும், ஆள் பார்த்துச் செயல்படாத கடவுளைப் போல் வாழ முற்படுவதே கடவுளின் குழந்தைகளுக்கு அழகு என்பதை உணர்த்தியவாறு, கடவுளுக்கு அஞ்சி நேர்மையாக நடப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் என்று கூறி நம்மையும் நேர்மையாக நடந்திட அழைக்கும் திருத்தூதர்பணிகளிலிருந்து வரும் இவ்வாசகத்திற்குச் செவிமேடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை:


திருத்தூதர் யோவான் எழுதியுள்ள இன்றைய இரண்டாம் வாசகத்தில் அன்பே கடவுள். அது கடவுளிடமிருந்த வருகிறது. அன்பே வடிவான கடவுள் தன் அன்பின் வெளிப்பாடாக தன் மகனை நம் பாவங்களுக்கு பரிகாரமாக நமக்களித்துள்ளார். நமது பகைவர்களையும் அன்பு செய்வது இயேசுவின் அன்பு; அது நம்மை இயேசுவுக்குள் வாழவைக்கும்  என்பதை தெளிவுர எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமேடுப்போம்.


பதிலுரைப்பாடல்


பல்லவி: பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
பதிலுரைப்பாடல் திபா. 98:1-4

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.  பல்லவி
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்: பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.  உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!  மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.  பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1 .எங்களுக்கு முடிவில்லா வாழ்வளிக்கு இறைவா! எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள், பொதுநிலையினர் அனைவரும் உம் அன்பின் இறையரசைப் பரப்பத் தங்கள் வார்த்தையாலும் வாழ்க்கையாலும் சாட்சியம் பகர அருள்வரங்ளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்புடன் எங்களை ஆதரிக்கும் இறைவா! வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ள நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் சகோதர சகோதரிகளின் வறுமையைப் போக்கி அவர்கள் குடும்பங்கள் வளமான புது வாழ்வுப் பெற்றிட அருள்வரங்ளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வானகத்தந்தையே எம் இறைவா! நோயினாலும், பொருளாதாரத்தினாலும் ஒதுக்கப்பட்டுள்ள வயோதியர்கள், அனாதைக் குழந்தைகள், அகதிகள் அனைவரும் உம் பரிவிரக்கத்தால் நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழத் தேவையான வரங்களை அளித்தட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உறவை வளர்க்கும் இறைவா! நீர் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை உணர்ந்து எங்கள் குடும்பங்களிலும், உறவுகளிடமும் அன்புப் பாராட்டவும். ஒற்றுமையாய் அன்பு உள்ளங்களைப் பகிர்ந்து கொண்டு எம் இல்லங்களில் மகிழ்ச்சிப் பொங்க வரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இறைஞ்சுவோருக்கு இரங்கிடும் இறைவா! தங்கள் இறுதிக் கட்டப்படிப்புகளை முடித்த விட்டு, மேற்படிப்பிற்காகத் தங்களைத் தயாரித்து வரும் எம் பிள்ளைகள் பெற்றோர்களின் கவலைகளை உணர்ந்து, படித்துச் சிறப்புடன் தேர்வுப் பெற்றிட ஞானத்தையும், அறிவையும் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. நிலை வாழ்வு அளித்திடும் எம் இறைவா! உம் குடும்பங்களில் கிறிஸ்துவில் மரித்த விசுவாசிகள் அனைவரும் நித்திய இளைப்பாற்றி அடையவும், உம் புனிதர்களில் திருக்கூட்டத்தில் அவர்களை இணைத்திடவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

No comments:

Post a Comment