Wednesday, May 23, 2018

மூவொரு இறைவன் திருவிழா

மூவொரு இறைவன் திருவிழா


இன்றைய வாசகங்கள் :


இணைச்சட்டம் 4: 32-34, 39-40
உரோமையர் 8: 14-17
மத்தேயு 28: 16-20

திருப்பலி முன்னுரை:


இன்று மனித அறிவுக்கு எட்டாத மறை உண்மையாம் மூவொரு கடவுள் என்ற பேருண்மையை ஊய்த்துணர நம் திருஅவை மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாட நம்மை அழைத்துள்ளது.

மூவொரு இறைவன் என்ற பெருங்கடலில், ஒரு குழந்தையின் குதூகலத்துடன் குளித்து மகிழ்வதற்குப் பதில், அக்கடலைத் தன் சிந்தனைக் குழிக்குள் சிறைப்படுத்த முயன்ற புனித அகுஸ்தின் பற்றிய கதை நமக்கு நினைவிருக்கலாம்.

நம் இறைவன், தனிமையில், தானாய் உறைந்திருக்கும் ஒருவராக அல்ல, மாறாக, மூவராக உறவுகொண்டிருப்பவர் என்ற பாடத்தை நமக்குச் சொல்லித் தந்தவர், இயேசு. அவர் இவ்விதம் இறைவனை அறிமுகம் செய்தது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரைக் கோபத்தில் ஆழ்த்தியது. தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டு உறவாய், குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு.

இயேசு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவனின் இலக்கணமே உறவு தான். நம் இறைவன் உறவுகளின் ஊற்று. அப்படி இருக்க உறவுகளுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடத்தைத் தந்திருக்கிறோமா என்பதை ஆராய்ந்துப் பார்க்க இன்று நாம் கொண்டாடும் மூவொரு இறைவன் பெருவிழா நல்லதொரு தருணம்.

உறவுகளை வளர்ப்பதைவிட, மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை, உறவுகளின் ஊற்றாய் விளங்கும் மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்று இன்றைய திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:



முதல் வாசக முன்னுரை:


உலகில் மானிடனைப் படைத்த நாள்முதல் தேனும் பாலும் ஓடிய கானான் நாட்டிற்கு இஸ்ரயேல் மக்கள் வரும் வரை அவர்களை வழி நடத்திய ஆண்டவரே கடவுள். அவரைத் தவிர வேறு எவரும் இலர் என மனதில் இருத்தி நாமும் நமது தலைமுறைகளும் இறைவன் காட்டும் வழியில் நடக்கும்போது, அவரது ஆசீரால் நிறைவோம் என்பதை மோசே இன்றைய முதல் வாசகமான இணையச்சட்ட நூலில் கூறுகிறார். மோசே தரும் ஆசி மொழிகளுடன் வரும் இவ்வாசகத்தை நம் சிந்தனைகளில் பதிவுச் செய்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். கடவுளை அப்பா, தந்தை என்று அழைக்கும்போது நம்முடன் இணைந்து நாம் கடவுளின் பிள்ளைகள் என்று சாட்சி பகர்கிறார். இவ்வாறு இயேசுவின் பங்காளிகளான நாம் அவரோடு துன்பத்தில் பங்கு பெறும்போது அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம் என்பதை எடுத்துரைக்கும் திருத்தூதர் பவுலடியாரின் வார்த்தைகளை கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்:

திபா 33: 4-5. 6,9. 18-19. 20,22
பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான் கோள்கள் எல்லாம் உருவாயின. அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது. -பல்லவி

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா. 


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா! திருஅவையின் திருத்தந்தை முதல் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் மூவொரு கடவுளைப் போன்று ஒற்றுமையின் அடையாளமாகவும், சமத்துவத்தின் சங்கம்மாகவும் ஒருங்கிணைந்த செயல்பாட வேண்டிய ஞானத்தையும் புரிதலையும் பெற்றுத் திருஅவைச் சிறப்புடன் திகழத் தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2.அருளிலும், அன்பிலும், நட்புறவிலும் ஒன்றிணைந்திருக்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறையருளின் துணையோடு இறையனுபவத்தைப் பெற்றிட, உம்மைப் போல் ஒன்றாய் ஒற்றுமையுடன் வாழவும், உண்மையான கிறிஸ்தவராக எப்போதும் கடவுளோடும், பிறரோடும், உறவோடு வாழ எமக்குத் தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.கருணைக் கடலே எம் இறைவா! நாட்டை ஆளும் தலைவர்கள் அவரவர் இடத்தைப் பற்றிக் கொள்ள சுயநலத்தை நிலை நாட்டிக் கொள்ளாமல் உம் மக்களின் தேவைகளை உணர்ந்துப் பணிச் செய்யும் உத்வேகத்தை எம் நாட்டுத் தலைவர்களுக்கு வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

4.மனிதன் பாங்குடன் வாழ இயற்தையைப் படைத்து ஆளும் எம் இறைவா! எங்கு நோக்கினும் இயற்கையை அழித்து மனிதனுக்குத் தேவையான காற்று நீர், நிலம், ஆகாயம், பூமி ஆகியவற்றை வீணடிக்கும் வீணர்களிடமிருந்து காத்திடவும், மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதரங்கள் காக்கப்படவும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

5.உறவுகளின் ஊற்றான இறைவன்! இப்புதிய கல்வியாண்டில் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் எம் இளையோர் அனைவரையும் புதுப்படைப்பாய் மாற்றி, தங்கள் பெற்றோர்களின் துயரங்களை உணர்ந்துப் படிப்பிலும், நல்லெழுக்கத்திலும் சிறந்து விளங்க ஞானத்தையும் புத்தியையும் அன்பையும் அவர்களுக்கு வழங்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



www.anbinmadal.org

No comments:

Post a Comment