Wednesday, August 15, 2018

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் வாரம்

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் வாரம்


இன்றைய வாசகங்கள்:


நீதிமொழிகள் 9: 1-6
எபேசியர் 5: 15-20
யோவான் 6: 51-58

திருப்பலி முன்னுரை:


ஒவ்வோர் ஆண்டும், இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்துவரும் ஞாயிறை, இந்தியத் திருஅவை, ‘நீதி ஞாயிறு’ எனக் கடைபிடித்து வருகிறது. ஆகஸ்ட் 19, இஞ்ஞாயிறன்று, நீதி ஞாயிறைக் கடைபிடிக்கும் வேளையில், நீதிதேவன் இயேசுவின் பெயரால் நல்வாழ்த்துகள்!
நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில், அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெளி மாற்றங்கள் நிகழ்ந்தால், அஃது எந்தப் பயனும் அளிக்காது.
வாழ்வின் பிரச்சனைகளுக்கு மேலோட்டமான, எளிதானத் தீர்வுகளைத் தேடிவந்த இஸ்ரயேல் மக்களிடம் "உலக மீட்புக்காக, சமுதாய மாற்றத்திற்காக நான் என்னையே உங்கள் உணவாக்குகிறேன். என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகி, என் தியாக வாழ்வில் நீங்களும் பங்கேற்றால், நீங்கள் எதிர்பார்க்கும் சமபந்தி ஒவ்வொரு நாளும் நடக்கும், ஒவ்வொருவருக்கும் வாழ்வு நிறைவாகும், ஒவ்வொருவரும் நிறைவுற்றதுபோக, மீதமும் இருக்கும்" என்ற உண்மையை இயேசு சென்ற வாரமும், இந்த வாரமும் சொல்கிறார்.
சமுதாய மாற்றங்களை, நீதி நிறைந்த சமுதாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மிடமும் இந்த மாற்றங்களை உருவாக்க, உன் சதையை, இரத்தத்தை நீ இழக்க வேண்டியிருக்கலாம்... என்ற சவால்களை இயேசு இன்று நம்முன் வைக்கிறார். இயேசுவின் எதிர்பார்ப்புகள் நம்மில் நிகழ நீதி ஞாயிறு, நம் உள்ளங்களில் ஒளிவீசிட இறைவனை இறைஞ்சுவோம்.

வாசக முன்னுரை:முதல் வாசக முன்னுரை:


ஞானம் இறைவனின் கொடை. கடவுளை அன்பு செய்வோர் ஞானத்தைக் கொடையாகப் பெறுவர். அந்த இறை ஞானத்தைச் சுவைத்து மகிழ, பேதமை நீங்கிப் பேரின்ப வாழ்வு வாழ நம்மை அழைக்கும் நீதிமொழிகள் நூலிலிருந்து வரும் முதல் வாசகத்தை கவனமுடன் கேட்டு இறைஞானத்தைப் பெற்றிடுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


இரண்டாம் வாசகத்திலும், தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு, ஆண்டவரின் திருவுளத்திற்கேற்ப நாம் வாழ்வும், இந்த பொல்லாத நாட்களில் ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்துடன் வாழவும், இசையுடன் ஆண்டவரைப் போற்றி நன்றி செலுத்தி வாழவும் நம்மை அழைக்கிறார் புனித பவுல். 


பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 9-10. 11-12. 13-14

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. -பல்லவி

வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? -பல்லவி

அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு! தீமையை விட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.இன்று நீதியின் ஞாயறைக் கொண்டாடும் எம் திருஅவை நீதிக்குச் சாட்சியாகவும், இயேசுவின் வார்த்தையின்படி அக இருள் அகற்றி ஞான ஒளி எங்கும் ஏற்றிட தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.வாழ்நாள் முழுவதும் நிரந்தர மகிழ்ச்சியைத் தேடும் எங்களுக்கு இயேசுவின் உடலும் இரத்தமும் எங்கள் உள்ளத்திற்கும், உடலுக்கும் அரும்மருந்தாக மட்டுமல்லாமல், நிறை வாழ்வைத் தரும் என்பதனை உணர்ந்திட இறை ஞானத்தைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.சூழ்நிலையின் கைதிகளாகி துயரக் கடலில் வீழ்ந்து, நிலை வாழ்வைத் தேடும் நமக்குத் தேவையான நல்ல வழியை நற்கருணை ஆண்டவர் காட்டுகின்றார் என்பதனை உணர்ந்து, எம் இளைய சமுதாயம் உம்மை நாடிவர தேவையான இறைஅச்சத்தையும், ஞானத்தையும் வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.தம் வாழ்வில் வறுமை, நோய் நோக்காடு, உறவின் முறிவுகள், விரிசல்கள். பிசகுகள், மனஇறுக்கங்கள், பாவங்கள், பலவீனங்கள் போன்றவற்றால் வாழ்விழந்த  எளியோரை கரம் தூக்கிவிட எமக்கு நல்மனதினையும், அவர்தம் வாழ்வு ஏற்றம் பெறவும் உமது அருளைப் பொழிந்தட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.காலத்தை முற்றும் பயன்படுத்தி உமது நற்செய்திக்குச் சான்று பகரும் வகையில் நாங்கள் வாழவும், பிறரை அவ்வாறு வாழ நாங்கள் தூண்டும் நற்சாட்சிகளாய் வாழவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


No comments:

Post a Comment