Tuesday, August 21, 2018

ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு


ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்

யோசுவா 24:1-2, 15-18
எபேசியர். 5:21-32
யோவான். 6:60-69திருப்பலிமுன்னுரை ஆண்டின் பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இயேசுவின் இனிய நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.

இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் வழியே நமக்கு உணர்த்தப்படும் ஒரு மனிதத் திறமை... அதுதான், முடிவெடுக்கும் திறமை. மனிதக் குலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்தத் திறமையை நமக்கு நினைவுறுத்துவது... இன்றைய வாசகங்களில், யோசுவா, மற்றும் புனித பேதுரு ஆகியோர் கூறும் இரு கூற்றுகள்:

"நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்று யோசுவா சொல்கிறார்.ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" என்ற புகழ்பெற்ற வார்த்தைகளைப் பதிலாகச் சொல்கிறார், சீமோன் பேதுரு. உறுதிகொண்ட நெஞ்சுடன் இருவர் எடுத்த முடிவைப் பறைசாற்றும் கூற்றுகள் இவை.

சீடர்கள் வாழ்ந்துவந்த அந்தப் பாதுகாப்பான வாழ்வை விட, இயேசுவுடன் வாழ்ந்தப் பாதுகாப்பற்ற வாழ்வு அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பைக் கொடுத்தது. இந்த உணர்வுகளைத்தான் பேதுருவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. பேதுருவும், ஏனைய சீடர்களும், இயேசுவுடன் தங்குவதற்கு எடுத்த அந்த முடிவு, சக்திமிகுந்த சாட்சிகளாக இன்றும் வாழ்கின்றனர்.

யோசுவாவைப் போல, பேதுருவைப் போல இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்து நம் வாழ்வின் முடிவுகள் அமைய இறையருளை இறைஞ்சுவோம்.


வாசக முன்னுரைமுதல் வாசக முன்னுரை


இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இனத்தெய்வங்களையும் வழிபட்டு, இருமனத்தோராய் திகழ்ந்தனர். இந்நிலையில் யோசுவா அம்மக்களிடம், "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்" என்று திட்டவட்டமாகக் கூறினார். இதைக் கேட்ட மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கேட்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை


திருத்தூதர் பவுலடியார் இன்றைய வாசகத்தில் எபேசிய மக்களிடம் கிறிஸ்துவையும், திருஅவையையும் கணவன் மனைவியுடன் ஒப்பிட்டு, எவ்வாறு நாம் அன்பு செய்ய வேண்டுமென்று கற்றுக் கொடுக்கின்றார்.
இயேசு கிறிஸ்துவும் திருஅவைப் போல இனிதே வாழ்ந்திடக் கணவன் மனைவியர்க்கு விடுக்கும் அழைப்பைக் கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 15-16. 17-18. 19-20. 21-22


பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். -பல்லவி

நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். -பல்லவி

நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. -பல்லவி

தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; ஆண்டவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.


1.அன்பின் இறைவா! எம் திருஅவையிலுள்ள அனைவரும் முழுமனதுடனும், உறுதியுடனும் ஒருவரை ஒருவர் அன்புச் செய்யவும், அவர்கள் எடுக்கும் முடிவுகளைத் திறம்படச் செய்து இறை இயேசுவின் அன்புச் சீடர்களாகச் சான்றுப் பகரும் வாழ்க்கை வாழத் தேவையான அருள் வளங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.

2.அன்பின் இறைவா! மனிதக் குலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள முடிவெடுக்கும் இந்தத் திறமையை எமக்கு நினைவுறுத்திய யோசுவாவைப் போல, பேதுருவைப் போல எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்து அதனை வெற்றிகரமாகச் செயலாக்க வேண்டிய ஞானத்தையும், நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

3.அன்பின் இறைவா! வாழ்வின் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் இளையோர்களை இப்போது உம் திருபாதத்திற்குக் கொணர்ந்துள்ளோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்துத் தம் வாழ்வின் முடிவுகள் நிலைவாழ்விற்கு வழி வகுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

4.அன்பின் இறைவா! இச்சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமையில் வாடும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகளால் விரட்டப்பட்ட பெற்றோர்கள்! நல்ல உடல்நலனையும், உள்ள அமைதியையும், பாதுகாப்பையும், அன்பையும் பெற்று மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதிநாட்கள் வரை வாழ இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

5.அன்பின் இறைவா! பெரும் மழையால் இன்னலுக்கு உள்ளாகி உடமைகளையும், உறவுகளையும் இழந்துத் தவிக்கும் கேரள மக்களைக் கண்நோக்கியரும். அவர்கள் விரைவில் தங்களின் வாழ்வை நலமுடனும் வளமுடனும் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.                                                          www.anbinmadal.org

No comments:

Post a Comment