Tuesday, January 22, 2019

பொதுக்காலம் ஆண்டின் மூன்றாம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின்  மூன்றாம் ஞாயிறுஇன்றைய நற்செய்தி வாசகங்கள்.


நெகேமியா 8:2-6,8-10 1
கொரிந்தியர் 12:12-30
லூக்கா 1:1-4,14-21

திருப்பலி முன்னுரை:


இறைமகன் இயேசுவின் அன்பிற்கு இனியவர்களே! அன்பு வாழ்த்துக்கள். இன்று ஆண்டின் மூன்றாம் ஞாயிறு. இயேசுவின் முதல் அறிக்கை! அவரின் பொதுவாழ்வில் தனது பணி என்ன? அஃது எப்படிப்பட்டதாக இருக்கும்? தான் யாருக்காகத் தரணிக்கு வந்தார்? என்னவெல்லாம் நடக்கும் என்பதை இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு வழியாக வெளிப்படுத்துகிறார். அவர் திருமுழுக்குப் பெற்றுத் தூயஆவியாரின் வல்லமையால் அதிகாரத்தெனியுடன் இறையரசை அறிவிக்கும் பணியின் தொடக்க நிகழ்வுகளாக இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.


இன்றைய முதல் வாசகம் கூறும் இறைவார்த்தையின் வடிவில் விளங்கும் இறைவனின் மகிழ்ச்சியே இஸ்ரயேல் மக்களின் வலிமையாக இருக்கப் போகிறது. அந்த 'ஆண்டவரின் மகிழ்வு' இன்று நம்மிடையே இருக்கின்றதா? திருஅவையின் உறுப்பினர்கள் பலராக இருந்தாலும், அவர்களை ஒன்றிணைப்பது தூயஆவியாரும், அவரின் கொடைகளுமே என்று சொல்லும் பவுலடியார் வார்த்தைகளையும் நம் மனத்தில் பதிவுச்செய்து சிந்தித்து நம் வாழ்வில் மாற்றங்களைக் காண இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் முழு உள்ளத்தோடு கலந்து கொண்டு மன்றாடுவோம். வாரீர்.

 

வாசகமுன்னுரை:

 

முதல்  வாசகமுன்னுரை:

 
இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோனிலிருந்து அடிமையாக இருந்த இஸ்ரயேல் மக்கள் விடுதலைப் பெற்று தங்கள் நாட்டிற்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் தங்களுக்குள் மக்கள் வேறுப்பட்டுக் கிடந்தாலும், அவர்களின் வெறுமை மற்றும் அடிமைத்தன அனுபவம் எல்லோரையும் ஒன்றுக்கூட்டியது. நெகேமியா மற்றும் எஸ்ரா தலைமையில் இறைவார்த்தைகளை முதல்முறையாகக் கேட்டார்கள்.  ஆண்டவர் நம் காதுகளில் விழும் வார்த்தையாக மாறிவிட்டார் என்று ஆண்டவர் உடனிருப்பை உணர்ந்ததால் அழுகின்றனர்! ஆண்டவரின் மகிழ்வு அவர்களிடையே இருந்ததை அவர்கள் உணர்ந்தது போல நாமும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுத்து ஆண்டவரின் உடனிருப்பை உணர்ந்து கொள்வோம்.


இரண்டாம் வாசக முன்னுரை

 

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருஅவையின் உறுப்பினர்கள் பலராக இருந்தாலும், அவர்களை ஒன்றிணைப்பது தூய ஆவியாரும், அவரின் கொடைகளுமே என்று சொல்லும் பவுலடியார், உடலும், உறுப்புகளும் என்ற உருவகத்தை முன்வைத்து, திருஅவையில் துலங்க வேண்டிய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கொரிந்து நகர மக்களுக்கு அறிவுறுத்துகின்றார். நாம் கிறிஸ்துவின் உடல். அதாவது, நாம் அனைவரும் இணைந்து வந்தாலே அது கிறிஸ்துவின் உடலாக மாறிவிடுகிறது. உறுப்புகளின் ஒருங்கிணைப்பே உடல் எனக் கூறும் இவ்வாசகத்தைக் கவனமுடன் மனம் திறந்துக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்திபா 19: 7. 8. 9. 14


பல்லவி: ஆண்டவரே! உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. -பல்லவி


ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. -பல்லவி


ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி


என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.என்றும் மாறாத மிகுந்த இரக்கமுள்ள இறைவனே! திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரும்  கடவுளால் அன்பு செய்யப்படுபவர்களாகவும், நாங்கள் அனைவரும் ஓன்றிணைந்து வாழ்ந்தலே, அது கிறிஸ்துவின் உடலாக மாறிவிடும் என்பதை உணர்ந்தவர்களாக வாழ வரங்கள் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எம்மை கைப் பிடித்து நடத்தும் தந்தையே! எம் இறைவா! எங்கள் குடும்பங்கள் இயேசுவின் மறைஉடலில் இணைந்திருக்கவும், ஒருவரை ஒருவர் அன்பிலும், செபத்திலும் தாங்கிக் கொள்ளவும், துன்பங்களில் ஆறுதலாக இருக்கவும், மகிழ்ச்சிப் பெருமையோடு பகிர்ந்துக் கொள்ளவும், குடும்பங்களில் உமதருள் நிறைந்திருக்கவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உம் வருங்காலம் வளமானதாயிருக்கும், உன் நம்பிக்கை வீண் போகாது என்று உறுதி அளித்த எம் இறைவா! எம் நாட்டுதலைவர்களின் சகிப்புத்தன்மை மேன்மேலும் வளர்ந்திடவும், மக்களின் நலத்திட்டங்கள் அனைத்துத்தரப்பு மக்களையும் குறிப்பாக வாழ்வாதரங்கள் இழந்துத் தவிக்கும் ஏழைஎளிய மக்களுக்குச் சென்று அடையவும், அனைவரும் நலமுடன் வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உமது பணித்திட்ட அறிக்கை, உமது இலக்கின்  தெளிவாகக் காட்டகிறது. இறைக்குலமாகிய நாங்களும் உம்மைப் போல, பணி இலக்குகளை உருவாக்கி, அவற்றைச் செயல்படுத்த அருள்தாரும். இன்று நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை, நாம் வைத்திருக்கும் இறைவார்த்தையில் இருக்கின்றது. அந்த இறைவார்த்தையை வாசிக்கவும், கேட்கவும் நாங்களும் முயற்சி செய்ய இறைவா அருள் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


No comments:

Post a Comment