Tuesday, May 14, 2019

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருத்தூதர் பணிகள் 14:21ஆ-27
திருவெளிப்பாடு 21:1-5அ
யோவான் 13:31-33அ, 34-35

திருப்பலி முன்னுரை:


அன்பு சகோதர சகோதரிகளே! பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறுக் கொண்டாடங்களில் கலந்து இயேசுவின் புதிய கட்டளையை அறிந்து கொள்ள ஆவலுடன் வந்துள்ள உங்கள் அனைவருக்கும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!

நம் வாழ்க்கையே ஒரு பயணம் தான். இந்தப்பயணத்தில் நாம் மகிழ்வோடு பயணிக்க வேண்டுமென்றால் தியாக அன்பு நம் அனைவரிலும் இருக்க வேண்டும். “நான் உங்களை அன்புச் செய்தது போல நீங்களும் ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள்” என்ற இயேசுவின் அன்புக் கட்டளையை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கின்றது.

பர்னபா, பவுல் இவர்களின் வெற்றியின் காரணம், பர்னபா பவுலடியார் மீது கொண்டுள்ள தன்னலமற்ற அன்பையும், தியாக அன்பையும் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் அழைப்பை ஏற்ற அவரது அடிச்சுவட்டில் வாழ நம்மையே இறைவனுக்கு அர்ப்பணிப்போம். அதற்கான இறையருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:முதல் வாசகமுன்னுரை:


 பவுலும் பர்னபாவும் மனம் தளர்ந்தவர்களுக்குத் 'துன்பங்கள் வழியே தாம் இறையரசுக்குள் நுழைய முடியும்' எனக் கற்பிக்கின்றனர். 'செபித்து, நோன்பிருந்து, இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து'த் தலைவர்களை நியமிக்கின்றனர். இதில் இவர்கள் தங்கள் மக்கள்மேல் கொண்டிருந்த அக்கறையும், பொறுப்புணர்வும் தெரிகிறது.  இப்படியாக, இயேசுவின் புதிய கட்டளையை வாழ்ந்துக் காட்டி, அன்பின் வழியாகத் தாங்கள் இயேசுவின் சீடர்கள் என்பதற்குச் சான்றுப் பகர்கின்றத்  திருத்தூதர் பணிகள் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகமுன்னுரை:


இந்த அன்புக் கட்டளையை நாம் எப்படி வாழ்வது? என்ற கேள்விக்குப் பதில் தருகிறது இன்றைய இரண்டாம் வாசகம் (திவெ 21:1-5அ). இன்றைய இரண்டாம் வாசகத்தில், 'புதிய வானகமும், புதிய வையகமும் இறங்கி வருவதைக்' காட்சியில் காண்கின்றார் யோவான். அவர் கூறும் ஐந்து கருத்துக்கள். 1. அன்பின் முதற்படித் தீமைக் களைவது. 2. 'இதோ நான் அனைத்தையும் புதியனவாக்குகிறேன்'. 3. 'இனி கடவுளின் கூடாரம் மனிதர்கள் நடுவே!' . 4. 'இறைவன் அவர்களோடு!'  5. . 'அவர்கள் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.' அன்பின் கரம் கண்ணீர் துடைக்க வேண்டும். இந்த வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்


பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்!
திருப்பாடல்: 145: 8-13.


ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர். தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும். உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள். உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு. உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! `ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

 

நம்பிக்கையாளின் மன்றாட்டுகள்:

1.அன்பின் இறைவா! உம் அன்புக் குழந்தைகளாகிய திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்றுப் பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.எம்மோடு என்றும் பயணிக்கும் எம் இறைவா, எங்கள் வாழ்க்கையில் எல்லாநிலைகளிலும் கலப்படங்களையே பார்த்துப் பழகிய நாங்கள் களங்மில்லாத, கலப்படமற்ற அன்பை எங்கள் குடும்பங்களிலும், நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தில் விதைத்துப் புதியதொரு விண்ணகத்தை இன்றே இவ்வையகத்தில் கண்டு மகிழத் தேவையான அருள் வரங்களை அன்புடன் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. 'அன்புத் தீவினையில் மகிழ்வுறாது' என்ற பவுலடியார் வார்த்தைகளுக்கு இணங்க உலகில் உள்ள தீவிரவாதிகள் இயேசுவின் அன்பான ஆழமும், அகலமும், நிபந்தனையும், எல்லையும் இல்லா அன்பை உய்த்து உணர்ந்துத் தீவிரவாதத்தைக் கைவிட்டு அனைவரும் அமைதியில் வாழத் தேவையான மனமாற்றத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. நம்மை அன்பு செய்வதும், நாம் செய்யும் வேலையை அன்பு செய்வதும், நம் படிப்பை அன்பு செய்வதும், நம் பயணங்களை அன்பு செய்வதும், நம் இலக்கை அன்பு செய்வதும், நம் வெற்றியை அன்பு செய்வதும் போன்ற இவற்றின் மூலம் அடுத்தவர்களை அன்பு செய்து 'நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்துக் கொள்வர்' என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை வாழ்வாக்க உமது அன்பு மழையைப் பொழியவேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

No comments:

Post a Comment