Wednesday, June 19, 2019

இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா

 இயேசுவின் திருவுடல் திருஇரத்தம்  பெருவிழா

 

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


தொடக்க நூல் 14:18-20 
1 கொரிந்தியர் 11:23-26
லூக்கா 9:11-17

திருப்பலி முன்னுரை:


இறைஇயேசுவில் அன்பார்ந்த மக்களே! இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா ஞாயிறைக் கொண்டாட நம் ஆலயத்தில் கூடியிருக்கும் இறைமக்களாகிய உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

சக்கேயு தன்னிடம் மிகுதியாக உள்ளதைக் கொடுத்தான். ஏழைக் கைம்பெண்ணோ தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்தாள். இயேசுவோ உள்ளதையும் கொடுத்து ஏன் தன்னையும் பகிர்ந்துக் கொடுத்தார். மனிதக் குலத்தைத் தனியாய் விட்டுச் செல்ல மனமில்லாதவராய்த் தன்னை அப்பத்திலும் இரசத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். மானிட சமூகத்தின் மீது கொண்ட அன்பின், உறவின், பகிர்வின் உச்சகட்டமே இயேசு தன்னேயே கொடுத்த நிகழ்வாகும்.

பாலைவனத்தில் மன்னாவை உணவாகக் கொடுத்த இறைவன் பரிசுத்த திருச்சபைக்கு இயேசுவின் திருவுடல் திருஇரத்தத்தை வாழ்வளிக்கும் உணவாகக் கொடுத்தார். கொடுக்கும் போதும் பகிரும் போதும், கொடுப்பவனும் பெறுபவனும் மனநிறைவுப் பெறுகின்றனர். அந்த நிறைவில் மகிழ்வைத் தேட இறைவன் நம்மை இன்று அழைக்கின்றார். இதனை உணர்ந்துத் திருப்பலிக் கொண்டாடங்களில் உளமாறப் பங்குக்கொள்வோம்.

வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் தொடக்கநூலின் பதிவாகிய ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்தவர்களையும் வென்று வந்தற்கு நன்றி பலியாக உன்னதக் குருவும், இயேசுவின் முன்னோடியுமான மெல்கிசெதேக் அப்பத்தையும் இரசத்தையும் இறைவனுக்குக் காணிக்கையாக அர்ப்பணித்த நன்றிப்பலியைப் பற்றி வாசிக்க, அதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


நற்கருணை நம்மைக் கிறிஸ்துவோடு மட்டுமல்ல, உறவின் அடிப்படையில் நம் அனைவரையும் இணைக்கிறது. அப்பம் ஒன்றே ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கின்றோம். எனென்றால் நாம் அனைவரும் ஒரே அப்பத்தில் தான் பங்கு பெறுகிறோம். இயேசுவின் திருவுடலும் திருஇரத்தமும் நம்மை இயேசுவோடு ஒன்றிணைக்கிறது. இக்கருத்துகளை ஏடுத்துரைக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 110: 1. 2. 3. 4


பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.

1 ஆண்டவர் என் தலைவரிடம், `நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். பல்லவி...
 
2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி..
 
3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்! பல்லவி..

4 "மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார்.  பல்லவி..

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் இறைஇரக்கத்தின் உடனிருப்பு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உம் சீடர்களோடு இருந்ததுபோல இன்று எம் திருஅவையில் உமது ஆற்றலினால் உத்வேகத்தோடு தங்கள் வாழ்வால் திருத்தந்தை முதல் கடைநிலைப் பொதுநிலையினர் வரை அனைவரும் நற்செய்தியின் தூதுவர்களாகத் திருஅவையை வழி நடத்த வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஏழைகளின் நாயகனே எம் இறைவா! உமது இரக்கத்தில் வாழ்ந்து வரும் நாங்கள் அனைவரும் ஏழைகளுக்கும் வறியோருக்கும், அநாதைகளுக்கும், கைம்பெண்களுக்கும் தனிமையில் வாடுவோருக்கும் சாதி, மதம், இனம், மொழி ஆகிய வேறுபாடுகள் இன்றி உதவிபுரியத் தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இயற்கையைப் படைத்து இவை அனைத்தையும் உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள் என்ற எம் இறைவா! இன்றைய உலகலாவிய புவியின் வெப்பமையமாதல் பல்வேறு இயற்கை மாற்றங்களால் மனித வாழ்வில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் என அனைத்து நிலையினருக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நாங்கள் முற்றிலுமாக விடுபட நாங்கள் இயற்கைக்கு எதிராகச் செய்தத் தவற்றை நினையாது, இரக்கத்தின் ஆற்றலை மழையாகப் பொழிந்த எம் தாகம் தீர்க்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.உலகின் ஒளியே இறைவா! நாட்டை ஆள்வோர் இனி தங்களுக்கென்று வாழாமல் நாட்டுமக்களின் தேவைகளை, அவர்களின் எண்ணங்களை உணர்ந்து உமது தூயஆவியின் ஆற்றலினால் உந்தப்பட்டவர்களாக அவர்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் சாட்சிய வாழ்வு வாழ உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.எல்லாம் வல்ல இறைவா! புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைத்துள்ள எம் பிள்ளைகளை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்களுக்குச் சாலமோன் ஞானத்தையும், தாவீதின் தைரியத்தையும், தூயஆவியாரின் கொடைகளையும் கொடுத்துத் தாங்கள் எதிர்நோக்கும் எல்லாவற்றையும் வென்றிடத் தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

1 comment: