Wednesday, July 3, 2019

பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 14ஆம் ஞாயிறு





இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எசாயா 66:10-14c
கலாத்தியர். 6:14-18
லூக்கா 10:1-12,17-20


முன்னுரை:



இறைஇயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! கடந்த இரண்டு வாரங்களாக இயேசு தரும் சீடத்துவத்தின் தத்துவத்தைச் சிந்தித்தோம். தன்னை மறுப்பதும், தன் சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவை நாள்தோறும் பின்பற்றுதலுமே சீடத்துவம் என்று கற்பித்த இயேசு இன்றும் நமக்கு எல்லாம் துறந்துச் சென்ற சீடர்களின் இழப்புகள் மகிழ்ச்சித் தரும் சிறப்பு நிகழ்வாகக் கூறுவது “உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன” என்பது பற்றியே மகிழுங்கள் என்பதே!

இன்றைய சூழலில் உலகப் பற்றுக்களைக் களைந்து எளிமையாக வாழமுடியுமா? என்ற கேள்வி நம்மில் எழுகிறது. காரணம் இறைவனைப் பற்றியும் பிறரைப் பற்றியும் மறந்துச் சுயசிந்தனையில் ஊறிப்போனதே ஆகும். எனவே தான் அறிவுப்புப் பணியை ஏற்போர் இறை நம்பிக்கை மிகுந்தவராகவும், விவேகமுடையவராகவும் செயல்பட வேண்டும் என்று இயேசு நினைவுட்டுகின்றார். பிறருடன் நலமாக உறவுடன் வாழும்போது இயேசுவின் சமாதானத்தில் வாழ்கின்றோம். இத்தகைய அமைதியைத் தான் இயேசு நமக்கு விட்டுச் செல்வதாகக் கூறினார். இதையே நாம் பிறருக்குத் தரவேண்டும் என்று நம்மையும் பணிக்கின்றார். எனவே திருப்பலியில் குருவும் ஆண்டவருடைய சமாதானம் உங்களோடு இருப்பதாக என்று வாழ்த்துகின்றார். கிறிஸ்துவின் சமாதானத்தூதுவராக வாழ ஒவ்வொரு திருப்பலியிலும் சிறப்பு அழைப்புத் தருகின்றார் இறைமகன் இயேசு. இதனை ஏற்று இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்படுவோம். வாரீர்.


 வாசகமுன்னுரை:

 

முதல் வாசக முன்னுரை:


'தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன். எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்' என்று கடவுளைத் தாயாக எசாயா உருவகிக்கின்றார். பேறுகால வேதனையுற்றுத் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய், புதிய உயிர் இந்த உலகிற்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் தன் வேதனையை மறந்துவிடுகின்றாள். பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டதும், அங்கே யூதா நாட்டினர் அனுபவத்தத் துயரங்கள், இழப்புகளும் பேறுகால வேதனைப் போன்றவைதாம். ஆனால் இன்று அவை மறைந்துவிட்டன. இறைவன் தரும் மீட்பு மற்றும் விடுதலை என்ற புதிய மகிழ்ச்சி அவர்களின் பழைய இழப்புக்களை மறக்கச் செய்கிறது. இந்நிகழ்வை விவரிக்கும் முதல் வாசகமான எசாயாவின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் முதல் வாசக முன்னுரை:



'என்னைப் பொறுத்தவரையில் உலகமும், உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்' என்கிறார் பவுல். உலகையும், பவுலையும் இணைப்பது சிலுவையும், அந்தச் சிலுவையில் தொங்கும் இயேசுவும். சிலுவையில் அறையப்பட்டிருப்பது வேதனையை, வலியைத் தந்தாலும், அந்த வலிதான் பவுலை இயேசுவோடும், உலகத்தோடும் இணைக்கிறது. தான் அறிவித்த நற்செய்தி, அந்த நற்செய்தியைத் தான் பெற்ற விதம், தன் பணி, தன் பணியால் கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டவர்கள் பெற்ற உரிமை வாழ்வு, அந்த உரிமை வாழ்வால் உந்தப் பெறும் தூய ஆவியானவரின் கனிகள் என எழுதி, கலாத்திய திருஅவையை நம்பிக்கையில் நிலைத்திருக்க அறிவுறுத்தும் திருத்தூதர் பவுல் தன் கடிதத்தை நிறைவுச் செய்யும் பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம்.

பதிலுரைப் பாடல்


திபா. 66: 1-3,4-5,6-7,16,20.

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!



அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சி யைப் புகழ்ந்து பாடுங்கள். அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை. என்று சொல்லுங்கள். பல்லவி


அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர். அவர்கள் உம் புகழ் பாடிடுவர். உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர். என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. பல்லவி


கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார். ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார் கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! பல்லவி


கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


கொலோ 3: 15அ,16அ

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:



1.அறுவடையின் நாயகனே! எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகியோர் இறை நம்பிக்கை மிகுந்தவராகவும், விவேகமுடையவராகவும் செயல்படவும், இழப்புகளே மகிழ்ச்சி என்று அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், அறுவடைக்காகச் சிறப்பாக உழைக்கத் தேவையான ஞானத்தையும் உடல் நலத்தையும் நிறைவாய் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



2.எங்களை வளமான உமது நிறைவாழ்வுக்கு இட்டுச் செல்லும் இறைவா! எங்கள் குடும்பங்கள் பவுலடியார் கூறிப்படித் இயேசுவின் சிலுவையிலன்றி வேறெதிலும் ஒரு காலும் பெருமை பாராட்டாமல் இயேசுவின் அடிமைகளாக வாழவும் இறையரசுப் பணிகளை ஆர்வமுடன் செய்யவும் வேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



3. எம்மைச் செயல்வீரராய் மாற்றும் அன்புத் தந்தையே! எம் இறைவா! இன்றைய உலகில் குழப்பங்களும் போராட்டங்களும், அமைதியின்மையும், சுயநலப் போக்குகளும் மலிந்தக் கிடக்கின்ற சூழலில் அமைதியின் தூதுவராய் எம் உலக அரசியல் தலைவர்கள் சமாதானப் போக்கைக் கையாண்டு மக்களுக்கு நன்மைகள் செய்து வளமான வாழ்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



4. எம்மைப் புதுபடைப்பாய் மாற்றும் எம் இறைவா! பணிவிடைப் பெறுவதற்கன்றுப் பணிவிடைப் புரியவே வந்தேன் என்ற இயேசுவின் வார்த்தைகளை மனதில் கொண்டு எம் இளையோர் சிறந்த பணியாளராக உம் திருத்தூதர் தோமாவைப் போல் தன்னலமற்ற சேவையால் உலகமாந்தர்களை உம் பக்கம் ஈர்க்க வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


5. என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா! எங்கள் பங்கிலுள்ள நோயாளிகள், கைவிடப்பட்டோர், முதியோர், வறுமையுற்றோர் ஆகியோர் நலம் பெறவும், வளமையோடு வாழவும் உமது கருணையைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment