Monday, February 10, 2020

பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு -முதல் ஆண்டு


பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு  -முதல் ஆண்டுஇன்றைய நற்செய்தி வாசகங்கள்


சீராக் 15:15-20
1கொரிந்தியர் 2:6-10
மத்தேயு 5:17-37

திருப்பலி முன்னுரை


பொதுக் காலத்தின் ஆறாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய வாசகங்கள் நமக்கு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அழைக்கின்றது. நல்லது- தீயது, நெருப்பு- நீர், வாழ்வு- சாவு. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது தான் நமது விருப்பத்தைப் பொறுத்தது.

இயேசு திருச்சட்டத்தின் வாக்குகளைப் பற்றி வெளிப்படுத்துகின்றார். திருச்சட்டத்திலிருந்து அனைத்தும் நிறைவேறாத வரை அச்சட்டத்தின் எழுத்தோ சிறுபுள்ளியோ ஒழியாது என்று பதிவு செய்கின்றார். இறைவாக்கு நமக்கு வழங்கும் அறநெறிகளின்படி நாம் வாழ அழைப்பு விடுக்கின்றார். இதனை மறந்து, மனம்போன போக்கில் வாழ்ந்து, அடுத்தவரின் வாழ்வாதரத்தை அழிக்கும் இழிச்செயல்களில் ஈடுபடுவோரையும் வன்மையாகக் கண்டிக்கின்றார்.

இயேசுவின் நெறியோ அகமனப் பக்குவத்தைச் சார்ந்தது. நற்சிந்தனைகளுக்கும் தூய எண்ணங்களுக்கும் முக்கிவத்துவம் கொடுப்பது. ஏனென்றால் அகமனப் பக்குவத்தைப் பொறுத்தே நம் வெளிச் செயல்பாடுகள் இருக்கும் என்பதை இங்கு நன்கு உணர்த்துகின்றார் இயேசு. சுயநலமற்ற, அன்புக் கலந்த அக்கறை உணர்வோடு உண்டாகும் கோபத்தைத் தான் ஆண்டவர் இயேசு பரிசேயரிடமும், ஆலயத்திலும் வெளிப்படுத்தினர். ஆகவே கோபம், பகை, வெறுப்பு இவைகளை அடியோடு ஒழிக்க முயல்வோம். மற்றவர்களைப் பற்றிய இனிமையான நினைவுகளை மட்டும் மனதில் கொண்டு இத்திருப்பலியில் கலந்து இறையருள் நாடிடுவோம் வாரீர்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


சீராக் நூலில் இருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களையும், வாழ்க்கை மரபு மற்றும் நெறிமுறைகளையும் தாங்கி வருகிறது. மாந்தர்கள் முன் வாழ்வும், சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். கடவுள் மனிதர்களின் அனைத்துச் செயல்களையும் காண்கின்றார். பழைய ஏற்பாடுகளில் ஞானத்தை வெளிப்படுதும் சிறந்த நூலாகிய சீராக் ஞானநூலின் வாசகத்தைக் கவனமுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை


நமது வாழ்வின் வழி எளிமையானதல்ல. அது மிகக் கடினமானது. இத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்க நமக்கு இறைஞானம் வேண்டும். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியாரின் வெளிப்படுத்துகின்றார். மாந்தருக்கு வேண்டியது உலக ஞானம் அல்ல. இறைஞானமே! நாம் மேன்மைப் பெற வேண்டும். வாழ்வுப் பெற வேண்டும் என்பதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டதே இறைஞானம். இறைஞானம் இறைவனை அன்புச் செய்வோருக்குத் தூய ஆவியார் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. இவற்றை விளக்கம் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல்: 119: 1-2, 4-5, 17-18, 33-34

மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.  அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். . பல்லவி

ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.  உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!. பல்லவி

உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன்.  உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். பல்லவி

ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன்.  உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.  பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:


 அல்லேலூயா,அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1 கருணைக் கடலாகிய எம் இறைவா! எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும், எம்மையும் நீதியும் நேர்மையும் நிறைந்த இதயங்களால் நிரப்பி இறைமகன் இயேசு கிறிஸ்துவின் சாட்சிகளாக உலகெங்கும் அன்பையும் நல்லுரவையும் மலரச் செய்ய உம் ஞானத்தையும் வல்லமையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

2. கருணைக் கடலாகிய எம் இறைவா! மாந்தரின் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு நன்மைச் செய்யும் விதமாய் அமையவும், சுயநலம் பாராமல் அடுத்திருக்கும் மாந்தரின் முன்னேற்றத்தில் தன்னலமற்ற சேவையின் மூலம் ஏற்றம் பெறச் செய்யவும். அனைவரும் இணைந்துச் செயல்பட்டு உம் அன்பின் ஆட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கருணைக் கடலாகிய எம் இறைவா! இன்றைய அரசியல் சூழலில் சிக்குண்டுத் தவிக்கும் எம் மக்களைக் கண்ணோகியருளும். தம் பயணிக்க வேண்டிய பாதைகளை நீதியுடனும் நேர்மையுடனும் தேர்வு செய்து நாட்டு மக்களைத் திறம்பட நடத்திட ஆள்பவர்களுக்கும், நடுநிலையுடன் மக்கள் சேவையில் சிறந்தது விளங்க அவர்களுக்கு . நல்ல ஞானத்தையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கருணைக் கடலாகிய எம் இறைவா! புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் எம் இளையோர்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் எதிர்பார்த்திருக்கும் வளமான வாழ்வு, சிறந்த வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான தேவையான தரமான கல்விகூடங்களில் அனுமதி, பொருளாதார உதவிகள் மற்றும் உள்ள உடல் உறுதியை வழங்கிடத் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

5. கருணைக் கடலாகிய எம் இறைவா! இன்று உலகில் எங்கள் குடும்பங்கள் சிறுவட்டத்திற்குள் சிக்கவிடாமல் உறவுகளை மதித்த அதனை வளர்க்கக் கோபம், பொறமை, பேராசை, தன்னலம் போன்ற குணங்களிலிருந்து விடப்பட்டுப் பெயரிவர் முதல் சிறியவர் வரை அனைவர் மீதும் அன்புப் பாராட்ட உம் அன்னை மரியாளைப் போலக் கரிசனை அன்புப் பெற்றிட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

www.anbinmadal.org

No comments:

Post a Comment