Friday, April 17, 2020

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு முதல் ஆண்டு


பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர்பணிகள் 2:24-47
1பேதுரு 1:3-9
யோவான் 20:19-31


திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறும் இறைஇரக்கத்தின் ஞாயிறுமான இன்று உள்ளத்தில் எழும் ஐயங்கள் நீங்கி இறைமகன் இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இல்லங்களில் அமர்ந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய வாசகங்கள் இறைவனிடம் நம்பிக்கைக் கொள்ளவும், பகிர்ந்து வாழ்ந்திடவும் நம்மை அழைக்கின்றது. நம்பிக்கையில்லாக் கோழைகளாக இருந்த தம் சீடர்களைக் காண, அவர்களைத் தேற்ற, இயேசு அவர்கள் முன் தோன்றித் தன் சமாதானத்தை அளிக்கின்றார். தோமாவின் ஐயம் களையப்பட்டபோது உயிர்ப்புக்கு அடித்தளம் கிடைத்தது. அவர் அவரோடு தன்னை இணைத்துக்கொண்டார். இறுதி மூச்சுவரை அவருக்காகச் சாட்சிப் பகிர்ந்திடும் உறுதியான உள்ளத்தின் உந்துத்தால் நம் இந்திய நாட்டில் இறைசாட்சியாக மரிக்க முடிந்தது.

ஐயம் தவித்து நம்பிக்கைக் கொண்டவர்களாய், அச்சம் நீங்கி ஆனந்தம் அடைந்தவர்களாய், கண்டவர்களை விடக் காணாமல் நம்புகிறவர்களாய், பகிர்ந்துண்டு வாழும் நல்லெண்ணங்கள் கொண்டவர்களாய், இறைஇரக்கத்தைப் பெற்றவர்களாய் வாழ்ந்திடச் சமாதானத்தின் தேவனாம் உயிர்த்த ஆண்டவரிடம் தொற்றுநோய் முற்றிலும் விலகிட இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.


முதல் வாசக முன்னுரை


நம்மில் விசுவாசம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளத் திருத்தூதர்பணிகள் நூலிலிருந்து வரும் இன்றைய முதல் வாசகம் எடுத்துக்காட்டுகிறது. ஆதிகிறிஸ்தவர்கள் திருத்தூதர்களின் போதனைகளுக்குச் செவிமெடுத்தார்கள். கூடிச் செபித்தார்கள். அப்பத்தைப் பிட்பதிலும் இறை வேண்டலிலும் உறுதியாக இருந்தார்கள். பகிர்வதே கிறிஸ்துவ வாழ்வு என்று வலியுறுத்தும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை


உயிர்ப்பு அனுபவம் ஆதிக் கிறிஸ்தவர்களின் தனிநபர் அனுபவமாக மட்டும் இல்லாமல், அஃது அவர்களின் குழுவாழ்விலும் செயல்வடிவம் பெற்றது. ஆகையால் தான், 'திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் அவர்கள் உறுதியாய் நிலைத்திருந்தனர். நம்பிக்கைக் கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்தனர் என்று எடுத்துக்காட்டும் பேதுரு எழுதிய இன்றைய இரண்டாம் வாசகம் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பைப் பெறுக்கொள்ள அழைக்கின்றது.

பதிலுரைப்பாடல்


திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! பல்லவி

அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.  பல்லவி

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா! திருத்தந்தை, உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் முழுமையாகப் பெற்றுத் தோமாவைப் போல் துணிவுடன் இறையரசை அறிவிக்க, இணைந்து செயல்படத் தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.
மன்னிக்கும் மகத்துவமிக்க எம் இறைவா!  பாஸ்கா காலத்தில் எங்கள் குடும்பங்களுக்கு உமது உயிர்ப்பின் பலனான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பகிர்ந்து வாழும் நல்மனம் ஆகியவற்றை நிறைவாய் பொழிந்து, எங்கள் குடும்பங்களில் உமது துணையாளரின் அருளால் சாட்சிய வாழ்வு வாழவும் உமது இரக்கத்தை அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.கருணைக் கடலே எம் இறைவா!  வாழ்வில் நம்பிக்கை இழந்த எம் மக்களின் தொற்றுநோயிலிருந்து விடுபடவும், வாழ்வாதரங்கள்  சிறப்படையவும், அவர்கள் மனித நேயத்துடன் நடத்துப்படவும், விரைவில் குடும்பங்கள் ஒன்றிணைந்திடவும், மகிழ்ச்சியுடன் பாஸ்கா காலத்தைக் கொண்டாடத் தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.அன்புத் தந்தையே எம் இறைவா! பேரிடர்காலமான இவ்வேளையில் எம் ஆட்சியாளர்களுக்குத் தேவையான அரசியல் ஞானத்தைக் கொடுத்து, எழை எளிய மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டு அவர்களின் உடல்நலத்திலும், பொருளாதரநிலமைகளிலும் கவனம் செலுத்த தேவையான நல்ல மனதினைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5 இரக்கம் நிறைந்த எம் இறைவா! இன்று தொற்றுநோயால் மரித்த அனைத்து ஆன்மாகள் அனைவரையும் நினைவு கூர்கிறோம். அவர்கள் உமது நிறைவாழ்வைப் பெறவும், அவர்களின் குடும்பத்தார்கள் ஆறுதலும், தேற்றுதலும் பெறவும், அவர்களுக்காக உழைத்த எல்லா நல் உள்ளங்கள் நலமுடன் தம் பணிகளைத் தொடரவும்  தேவையான இறைஅருளைப் பொழிந்திட  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
                               
www.anbinmadal.org

No comments:

Post a Comment