Friday, April 24, 2020

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு


பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு


www.freebibleimages.org


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர் பணிகள் 2:14,22-33
1 பேதுரு 1:17-21
லூக்கா 24:13-35

திருப்பலி  முன்னுரை


அன்புடையீர்,
உயிர்ப்பின் காலம் மூன்றாம் ஞாயிறான இன்று எம்மாவுச் சீடர்களைப் போல உயிர்த்த இயேசுவுடன் வழி நடந்து இத்திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இயேசுவின் அன்புச்சீடர்களாகிய இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுயில் நம்பிக்கைக் கொள்ளவும், அவரின் சாட்சியாக இவ்வுலகில் வலம் வரவும் நம்மை அழைக்கின்றது. எம்மாவுச் சீடர்கள் போல் வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களாக வாழாமல், இறைநம்பிக்கையே நம் வாழ்வு என்பதை உணர்ந்திட வேண்டும். மனிதன் சுவாசிப்பதால் மட்டும் உயிர் வாழவதில்லை. மாறாக அவன் நம்பிக்கையைச் சுவாசிப்பதாலும் உயிர் வாழ்கிறான்.
எம்மாவுச் சீடர்களுடன் பந்தியமர்ந்தப் போது அங்கிருந்த அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்துப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் கண்டு கொண்டன. இயேசு எப்போதும் நம்மிடம் இருப்பதை ஆசீர்வதித்து நம்மைத் தன் நலன்களால் நிரப்பிக்கூடியவர். எனவே, குடும்பமாக இணைந்து இயேசுவிடம் “எங்களோடு தங்கும்” என அவரை மன்றாடி நம் வாழ்வில் எந்நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் இருக்கும் வரத்தை இத்திருப்பலியில் உயிர்த்த இயேசுவிடம் மன்றாடுவோம். வாரீர்.




வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இறைமகனால் திடப்பட்டுத்தப்பட்டுத் தூயஆவியால் அருட்பொழிவுசெய்யப்பட்ட சீடர்கள் உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாக எருசலேம் நகரத்தில் வாழும் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் இறைமகனின் உயிர்ப்பின் மகிமைக்கும் மகிழ்ச்சிக்கும் தாங்களே போதுமானச் சாட்சிகள் என்று ஆணித்தரமாகப் பதிவுச் செய்கின்றனர். பேதுருவின் வீறுக்கொண்ட இந்தச் சொற்பொழிவைக் கவனமுடன் கேட்டு உயிர்த்த இயேசுவின் மீது நமக்குள் விசுவாசத்தை உறுதிபடுத்திக்கொள்ள இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கின்றது. இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.



இரண்டாம் வாசக முன்னுரை
வானகத்தந்தை ஆளைப் பார்த்துத் தீர்ப்பு வழங்குவதில்லை மாறாக அவரவர் செயல்களின்படி தீர்ப்பு வழங்குவார். இறையச்சத்தோடு வாழ அழைக்கிறார். மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற இயேசுவின் விலையில்லாத இரத்ததால் நமக்கு மீட்பு கிடைத்தது. இறந்த அவரை உயிர்ப்பிக்கச் செய்து பெருமைப்படுத்தினார். இதனால் நாம் இயேசுகிறிஸ்துவை எதிர்நோக்கி இருக்க அழைப்பு விடுக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.



பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்
திருப்பாடல் 16:1-2, 5,  7-8, 9-10, 11

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். பல்லவி

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு. உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா அல்லேலூயா
 


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1 உம் வார்த்தைகளால் எம் உள்ளத்தைத் திறந்த எம் இறைவா! திருஅவை உள்ளத் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரின் உள்ளங்கள்  இறைவார்த்தையால் பற்றி எரியவும், திருப்பலி எனும் அருட்சாதனத்தால் இறைவனைக் கண்டு கொள்ளவும், அவரின் சாட்சிகளாக வளர வேண்டிய அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உம்மைக் கண்டு கொள்ள எம் இதயத்தைத் திறந்த எம் இறைவா! எம் வாழ்வில் உம் வார்த்தைகளாலும், நீர் செய்யும் அற்புதங்களாலும் எங்கள் குடும்பத்திலுள்ள நாங்கள் அனைவரும் இறைநம்பிக்கை மேன்மேலும் வளரவும், எம்மாவு சீடர்களை வழி நடத்தி அவர்களுடன் தங்கியது போல எம் இல்லங்களில் தங்தி எங்களுக்கும் உம் ஆசீர் வழங்கிட வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3.நலங்களினால் எங்களை நிரப்பும் எம் இறைவா! தொற்று நோயின் சீற்றத்தால்  அழிந்து வரும் உலகமக்களைக் கண்ணோக்கியருளும் . மன்னிக்கும் தெய்வமே மீண்டும் எங்களுக்கு நலமான வாழ்வையும் நற்சுகத்தையும் தந்திடவும்,  வாழ்வின் எல்லைக்கோட்டிற்குத் தள்ளப்பட்ட எம் ஏழை எளியமாந்தர்களின் வாழ்வாதாரங்கள் மேன்மைபடவும்,  தொற்று நோயின்  தாக்கத்திலிருந்து அனைவரையும் காத்திடவும் அருள்மாரிப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4 அன்பின் தந்தையே! எம் இறைவா! உலகம் முழுவதும் மருத்துவபணிகளில் தம்மையே அர்ப்பணித்து தன்னலம் துறந்த பிறர்நலம் பேணும் அனைத்து நல்ந உள்ளங்களுக்காக மன்றாடுகிறோம். இப்பணியை திறம்பட செய்ய தேவையான நற்சுகமும், பாதுகாப்பும் உமது ஆற்றலால் வழிநடத்தவேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகின்றோம்.
                                 
www.anbinmadal.org

No comments:

Post a Comment