Tuesday, November 24, 2020

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு


புதிய திருவழிப்பாட்டு ஆண்டின் முதல் ஞாயிறு

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு




இன்றைய நற்செய்தி வாசகங்கள்


எசாயா 63: 16-17, 64: 1,3-8
1 கொரிந்தியர் 1: 3-9
மாற்கு 13: 33-37

திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
தாய் திருச்சபை புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பித்துள்ள இவ்வேளையில் இத்திருப்பலிப் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறோம்.
இன்று தாய் திருச்சபை புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கிறது. நமது இறைவனைக் குழந்தை வடிவில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று உலகின் முடிவில் இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது. விழிப்பாயிருங்கள், பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள் என்பவை இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு.
நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த முடிவு வரும் என்பது நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு எப்போது வரும் என்பதில் நாம் நேரம், சக்தி இவைகளைச் செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அல்லது எப்படி இருக்க வேண்டும்  என்று சிந்தித்தால் பயனுண்டு. எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச் சந்திக்க, அந்த முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க இன்றைய நற்செய்தி நம்மைச் சிறப்பாக அழைக்கிறது.
உலகத்தின் முடிவு, நம் வாழ்வின் முடிவு, அந்த முடிவில் இறைவனைச் சந்திக்கும் வாய்ப்பு இவைகளை நாம் எவ்வகையில் பார்க்கிறோம் என்பதை ஆய்வு செய்வோம். தாயின், அல்லது, தந்தையின் அன்பு அணைப்பிற்குள் அமைதிக் காணும் குழந்தையைப் போல் வாழ்வின் இறுதியில் நாம் சந்திக்கும் நிரந்தர அமைதி அமையவேண்டும் என்று இன்றைய திருப்பலியில் சிறப்பாக வேண்டிக் கொள்வோம்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


இன்றைய வாசகம் கடவுள் நமது தந்தை என நினைவுபடுத்துகிறது. ஏனெனில் இஸ்ரயேல் மக்கள் தங்களின் உயிருள்ள கடவுளை மறந்து வாழ்ந்தபோது அவர்கள் தீட்டுப்பட்டவரைப் போலவும், அவர்களின் நேரியச் செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோலவும் இருந்தது. எனினும் கடவுளிடம் மன்னிப்பு வேண்டி “ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. “ என்று பாவம் புரிந்த மக்கள் மன்றாடுவதை எடுத்துரைக்கம் எசாயாவின் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்


திபா 80: 1அ,இ,2. 14-15. 17-18
பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.

இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!  உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! -பல்லவி
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!  உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! -பல்லவி
உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இரண்டாவது வாசகம், கடவுள் நமக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும், நன்றி கூறுகிறது. இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். எல்லா வகையிலும் நாம் செல்வந்தர்களாய் இருக்கிறோம். இறுதி நாளில் நாம் அனைவரும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் நம்மை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர் என்று உறுதிப்படுத்தும் திருத்தூதர் பவுல் அடியாரின் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா! திருச்சபை இன்று தொடங்கும் திருவழிபாட்டு ஆண்டில் எம் திருத்தந்தைத் தொடங்கிப் பொதுநிலையினர் வரை அனைவரும் வரும் நாட்களில் எதிர்நோக்கியிருக்கும் வருகையின் போது இறைவன் திருமுன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு எங்களை நாங்கள் தயாரித்துக் கொள்ள இந்தத் திருவருகைக் காலத்தைச் சரியாக முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டிய ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2 அன்பு இறைவா! வரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீகத் தயாரிப்புகளில் எங்களைப் புதுப்பித்துக் கொண்டு உமது பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.காலத்தில் அறிகுறிகளை அறிந்த எம் இறைவா! மனிதனை இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்தையும் நீ ஆண்டுக் கொள்வாயாக என்று கூறிப் படைப்பின் மேன்மையை உணர்த்தினீர். ஆனால் இன்று நாங்கள் இயற்கைக்கு எதிராகச் செய்த அனைத்துத் தவறுகளையும் மன்னித்து இயற்கையை நாங்கள் நேசிக்கவும், பாதுகாக்கவும் இன்றைய தலைமுறையினருக்கு நல்ல தேசத்தைக் கொடுக்கவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

4. நல்லாயனே எம் இறைவா! இந்தத் திருவருகைக் காலம் , எமக்குச் சரியான சந்தர்ப்பம், அவரை ஒவ்வொரு நொடிப்பொழுதும் எதிர்கொண்டு, அவர் பிறந்த நாளை கொண்டாட எம்மைத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், நாங்கள் விழிப்புணர்வுடன் இருந்து எதிர் கொள்ள வேண்டிய அருளைப். பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

5.அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா! இயற்தைச் சீற்றத்தாலும், தொற்று நோயினாலும் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், இழப்புகளிலிருந்தும் எங்களைக் காப்பற்றியருளும். உறவுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்போரை அரவணைத்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய இந்த திருவருகைக் காலத்தை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள எங்களுக்கு நல்மனதினைத் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்..
 
www.anbinmadal.org

 

1 comment:

  1. I want second week Sunday mass introduction and other details pls send to my mail

    ReplyDelete