Wednesday, December 2, 2020

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு


திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறுஇன்றைய வாசகங்கள்:


எசாயா 40:1-5; 9-11
2 பேதுரு 3:8-14
மாற்கு  1:1-8

திருப்பலி முன்னுரை:


இறைஇயேசுவின் நாமத்தில் இனிய வாழ்த்துக்கள்.
இன்றைய திருப்பலியில் மனம்மாற்றம் பெற்று நற்செய்தியாக மாறி வாழ்ந்திட வந்துள்ள இறைமக்களே உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று, மாற்கு நற்செய்தியின் தொடக்கம், நமது வழிபாட்டின் மையக்கருத்தாகத் தரப்பட்டுள்ளது. “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்” (மாற்கு 1:1) என்று இந்த நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள அறிமுக வார்த்தைகள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன.

இயேசு வாழ்ந்தக் காலத்திலும், பாலஸ்தீனம் உரோமைய ஆக்கிரமிப்பில் நொறுங்கிவந்த காலம். ஒவ்வொரு நாளும் அங்கு நிகழ்ந்த அக்கிரமங்களைக் கண்ட இயேசு, அச்செய்திகளின் பாரத்தால் நசுங்கிப்போகாமல், அச்செய்திகளுக்கு மாற்றாக, நம்பிக்கைத் தரும் செய்திகளை, தன் சொல்லாலும், செயலாலும் உருவாக்கினார் இயேசு.

நல்ல செய்திகளே நிரந்தரமானவை, ஏனைய மோசமான செய்திகள் நிரந்தரமற்றவை என்பதை மக்கள் மனதில் ஆழப்பதிக்க, தன் உயிரையே பணயம் வைத்து உழைத்தார். இறுதியில், தன் உயிரைப் பலியாகத் தந்து, இறந்து, உயிர்த்ததால், நல்ல செய்தி என்றும் வாழும் என்ற நம்பிக்கையைத் தந்தார் இயேசு.

கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக விளங்கும் இயேசுவையும், அவர் வாழ்வையும் ஒரு 'நற்செய்தி'யாக நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துள்ளோமா? அந்த நற்செய்தியாக நாம் வாழ முற்படுகிறோமா? மனமாற்றம் அடைவோம். விடைகள் தேடுவோம்! .... பயன்கள் பெறுவோம்! அமைதியின் இளவரசர் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தத் திருவருகைக் காலத்தில், அமைதியின் தூதர்களாக நாம் ஆண்டவரின் வழியை ஆயத்தப்படுத்தி மனந்திரும்பி தூயவாழ்வு வாழ வரமருள இத்திருப்பலியில் மனமுறுக வேண்டுவோம்.

வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


பாபிலோனிய அடிமைத்தளத்தில் இஸ்ரயேல் மக்கள் உட்பட்டிருந்தபோது இறைவாக்கினர் எசாயா அவர்களுக்குப் புதிய நம்பிக்கையூட்டிப் பேசுவதை முதல் வாசகம் காட்டுகிறது. “பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும். மலை குன்றுகள் தாழ்த்தப்படும்” என்ற கூறுகிறார். இங்கே பள்ளத்தாக்குகள் என்பது ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களையும், குன்றுகள் என்பத ஆணவம் மற்றும் மமதையின் மக்களையும் குறிக்கிறது. மக்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்களுக்கு ஆறுதலை வாக்களிக்கின்றார் இறைவன். தன்மக்களை எவ்வாறு பேரன்புடன் நடத்திச் செல்வார் என்பதை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனத்துடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல்: திபா: 85:8-13

நல்லதையே ஆண்டவர் அருள்வார்: நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்: அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.! பல்லவி

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்: தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்: அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி: நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்: நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்: விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு “ஆண்டவர் நமக்காய்க் காத்துக்கொண்டிருக்கிறார். நம் மனமாற்றத்தை எதிர் நோக்கிப் பொறுமையோடிருக்கிறார். அவரின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொடிருக்கும் நாம், அந்த நாளுக்காக நம்மைத் தயாரிப்பதற்கு நாம் புனிதம் உடையவர்களாக வாழ வேண்டும். இறைவனின் நாள் தாமதமின்றி உதயமாகும்” என்று நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார். அவரது அழைப்பை ஏற்று மனமாற இந்த வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :


அல்லேலூயா, அல்லேலூயா "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்." அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. மனமாற்றத்தை இன்று என்றுரைத்த எம் இறைவா! உம் திருஅவையில் உள்ள அனைவரும் இந்தத் திருவருகைக் காலத்தில் மனமாற்றம் பெற்றவும், இறைமகனின் இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு, சாட்சியவாழ்வு வாழ வேண்டிய அருளை உம் திருஅவைக்குப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கருணைக் கடலாகிய எம் இறைவா! கிறிஸ்து எமது நெஞ்சக்குடிலிலே பிறக்க, எங்கள் நெஞ்சக்குடில் தாழ்ச்சி என்னும் குடிலாக மாறவும், அவர் தரும் அமைதியில் எந்நாளும் எங்கள் குடும்பங்களிலும் அகமகிழ்ந்து, லீலிமலர் போலப் பூத்துக்குலுங்க, உம்மைப் போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் நல்ல மனப்பக்குவம் பெற்றிடவும் அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா, கடந்த வாரத்தில் நீவர் புயலால் நிகழ்ந்த இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காவும், அவர்கள் விரைவில் தங்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடரவும், தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் புனர்வாழ்வுப் பெற்றிட உமது இரக்கத்தை அவர்களில் மேல் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எதிர்பார்ப்பின் நம்பிக்கையான எம் இறைவா! இத்திருவருகைக்காலத்தில் பரபரப்பான, சந்தடி மிகுந்த உலகில் உமது உடனிருப்பையும், உமது கனிவானக் குரலையும் கேட்டு அமைதியான நிறைவான வாழ்வைப் பெற்றிட எங்கள் இளைய சமுதாயம் தங்கள் கரடுமுரடான, கோணலான வாழ்க்கை முறையை மாற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

No comments:

Post a Comment